பைத்தியம்

This entry is part of 46 in the series 20030822_Issue

எம்.வி.


என்னை நானே இதப்படுத்திக் கொள்ள
நான் எப்போதும் நியாயமாகவே நடந்துக் கொண்டிருக்கிறேன்
என்று நம்ப
எதற்கும் பொறுப்பல்ல என்று விடுதலைக் கொள்ள,
என் தோல்வியின் ரகசியங்களை மறைத்துக் கொள்ள,
கையிலிருக்கும் ரத்தக் கறைகளை கழுவ,
நான் பாதியில் கைவிட்டவர்கள்
எனக்கு எதிரான சாட்சி சொல்லாதிருக்க,
என் வக்கிரமான ஏற்பாடுகளை இன்னும் பலப்படுத்திக் கொள்ள,
நாய் விற்ற காசு குறைக்குமா என்று என்னை யாரும் கேட்காதிருக்க,
பிறரின் குற்ற உணர்வுகளை மீட்டும் என் விரல்களை பாதுகாக்க,
பணத்தின், புகழின் காம்புகளை எப்போதும் சப்பிக் கொண்டேயிருக்க,
என் அம்மணத்தை என்னிடமிருந்தே மறைத்துக் கொள்ள,
என்னை பைத்தியம் என்றே அழையுங்கள்.

எம்.வி.
mv97@rediffmail.com

Series Navigation