சூழலைக் கெடுக்கும் ஊழலர்கள்

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

ஜோதிர்லதா கிரிஜா


அக்கம் பக்கம் விழி சுழற்றி, அழுக்கு மொழுக்கு அசிங்கங்களை
அயல் வீட்டுச் சுவர்ப்பக்கம் அலட்சியமாய் அள்ளி வீசும்
அறிவுகெட்ட அயோக்கியர்கள்!

குப்பைத் தொட்டிகள் நாட்டிடுதல் யாருடைய வேலை ?
ரிப்பன் கட்டடமா, அப்பாலுள்ள ஒன்றியமா ? – என்று
தப்பாமல் வினா எழுப்பித் தப்பிக்கும் பணியகங்கள்!

தலை நனைக்கும் அளவுகூடத் தண்ணீரில்லா நிலையறிந்தும்
தொலைக்காட்சி வாயிலாகத் துப்புரவைப் போதிக்கும்
துப்புக்கெட்ட அரசாங்கம்!

தொட்டிகள் இருந்தாலும், துப்புரவு செய்யாமல்,
துட்டுக்காய்ப் பண்டிகை நாள்
மட்டும் வந்து பல்லிளித்து
எட்டுடம்புக் கோணலுடன் தலை சொறியும்
தோட்டித் தொழிலாளர்கள்! – இவர் தமைத்
தட்டிக் கேட்காத உயர்மட்ட ஊழியர்கள்!

ஊருக்கு ஒதுக்கமாய் நச்சு நீரை இறைக்காது
ஊருணிக்குள் ஊற்றி மக்கள் உடலுக்கே
ஊறு செய்யும் உயர்த் தொழிலதிபர்கள்!

எரிநீர்மக் கலப்படத்தால் ஊர்திகள் ஊருக்குள்
கரியமிலத் தீய காற்றை உமிழ்கின்ற ஊழல்தனைப்
புரிகின்ற புத்தியற்ற பெற்றோல் கிடங்காளர்கள்!

ஒட்டுப் பணி மட்டும் செய்து ஓடுபாதை முழுவதுமே
ஒக்கிட்டதாய் ஒப்பேற்றி
ஒட்டுமொத்தப் பணம் பறிக்கும்
ஒன்றியத்து அலுவலர்கள்!

குழிகளிலே நீர் தேங்க, கொசுக்களின் குரல் ஓங்க – அவற்றை
அழிப்பதற்காய் மருந்தடிக்க அடிக்கடி பொதுமக்கள்
அழைத்தபின்பே வந்து போகும்
ஆர்வமற்ற ஊழியர்கள்!

மழை நீர் பொழிவதற்கும் மாசுகள் நீங்குதற்கும்
மகத்தான உதவிசெய்யும் மரங்களையே வெட்டிவீழ்த்திப்
பிழை புரியும் – அத்தோடு பிழைக்கவும் அறியும் –
தழைப்பது தாம் மட்டும் ஆனாலே போதுமென
நினைத்திடும் – தன்னலம் பிடித்தவர்கள்!

ஆட்சியைத் தக்கவைத்து அடுத்தடுத்து வெற்றி பெற்று
மாட்சிமை பெறுதலே தம் நோக்கமாய்ப் பணிபுரியும் – மனச்
சாட்சியே சிறிதுமற்ற மாண்புமிகு மந்திரிகள்!

இன்னபிற எல்லாரும் தன்னலந் தவிர்த்திட்டால்,
வண்ணநாடாகிவிடும் வறுமைசூழ் நம் நாடு! – ஆனாலும்,
அழகு நாடாய் நம் நாடு ஆகாது போனாலும்.
‘அழுக்கு ‘ நாடாய் ஆகாதிருக்கவேனும்
அருள் புரிவாய் ஆண்டவனே!

(எரிநீர்மம் = petrol)

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா