காதல் காதல் தான்

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

ருத்ரா.


காதல்

காட்டாறு தான்

‘பதினாறு ‘களின்

தேனாறுகள் தான்.

பிசாசு ரூபத்தில்

வந்தாலும்

அழகிய ராட்சசிகளாக

இருந்தாலும்

கானாப்பாட்டுகளின்

நசுங்கிய

அலுமினிய குவளைகளின்

சாராயங்களுக்குள்

இருந்தாலும்

ஜீன்ஸ்-சுடிதார்

கஸ்டியூம்களில்

கலக்கினாலும்

அவர்களின்

ஆடையில்லா

ஆடைகளுக்குள்ளும்

புகுந்து கொண்டு

கிளுகிளுக்கும்

பட்டாம்பூச்சிகளின்

கிச்சு-கிச்சு மூட்டல்களாக

இருந்தாலும்

இன்னும்

அந்த

ஆதாம்-ஏவாள்

பாம்பு-பழம்-சைத்தான்

ஒத்திகை

இந்த கம்பியூட்டர்

யுகத்தின்

‘நேனோ செகண்ட் ‘

கர்ப்பப் பைக்குள் கூட

நடந்து கொண்டிருந்தாலும்

மயில்பீலிகளில்

வருடிக்கொடுக்கும்

மகா காவிய

காளிதாச மூச்சுகளாக

இருந்தாலும்

உள்ளூர்

பழனிபாரதிகளின்

பேனாக்கழிச்சல்களாக

இருந்தாலும்

நுரைக்கோபுரங்கள்

கட்டும்

வைரமுத்துக்களின்

எழுத்து நமைச்சல்களாக

இருந்தாலும்

காதல்

காதல் தான்.

தீச்சுவாலைக்குள்

தீங்கரும்பு மூச்சுகளின்

தினவெடுத்த

காக்காய் வலிப்புக்குள்

காக்கா முட்களைக்கொண்டு

குயில் பாட்டெழுத

குத்தகை எடுத்துக்கொண்ட

மசாலாக்கவிஞர்களே!

காதலைப் பற்றி

எத்தனை எத்தனை

பேனாக்களில்

உமிழ்ந்திருப்பீர்கள்!

எத்தனை எத்தனை

காகிதங்களை

கசக்கியெறிந்திருப்பீர்கள்!

தமிழின்

உயிரெழுத்துக்களை

கற்பழிக்க

காதல் தான் கிடைத்ததா ?

சினிமா

காதலை காட்டியதை விட

காதலை தின்றதே அதிகம்.

காதலுக்கு

மத்தாப்பு காட்டியதைவிட

காதலை

கசாப்பு செய்ததே அதிகம்.

‘துள்ளுவதோ இளமை ‘ என்றும்

‘காதல் கொண்டேன் ‘ என்றும்

அது

பதினாலு பதினைஞ்சுகளின்

எலும்பு மஜ்ஜைக்குள்

எரிமலைக் குழம்பூற்றி

பால் சொட்டும்

எருக்கம் பூக்களைக்கூட

உருக்கமாகத்தான்

காட்டுகிறது.

அந்த கத்தாழைக்காம்பவுண்டுக்குள்

நுழைந்த உடனேயே

கடலைபோட துவங்கிவிடும்

கல்லூரி விடலைகளே!

அறிவுக்கடலை

எப்போது கடக்கப்போகிறீர்கள் ?

டாக்டர் ஸ்டாஃபன் ஹாக்கிங்கும்

டாக்டர் பென்ரோசும்

நம் நாட்டு

சந்திரசேகர்களும்

ஜெயவந்த் நர்லிக்கர்களும்

எப்போது

உங்கள் கதாநாயகர்கள்

ஆகப்போகிறார்கள் ?

‘கல்யாணம் தான்

கட்டிகிட்டு ஓடிப்போலாமா ? ‘

‘ஓடிப்போயி….. ‘

ஓ! உங்கள் ஓடிசி (Odyssey)

துவங்கி விட்டதா ?

‘குவாண்டம் மெகானிக்ஸ் ‘

வேண்டாம்.

இந்த ‘காண்டம் ‘ மெகானிக்ஸ்

போதும்

என்று ஆடத்துவங்கி விட்டார்களா ?

சினிமாச் சதையின்

நரம்பு விடைத்து

நாளம் உடைத்து

இதயங்களுக்குள்

திருப்பாச்சேத்தி

அரிவாள்களை

நாற்று நட்டு

இரத்த விவசாயம்

நடத்துவதற்கா

இந்தக் காதல் ?

பஞ்சுமிட்டாய் தீவுக்குள்

படுத்துக்கிடந்தது போதும்.

எழுந்து வாருங்கள் இளைஞர்களே

என்று

இந்த இருபத்தியொன்றாம்

நூற்றாண்டே

கன பொறுப்புடன்

தன் தலையில்

ஒரு ‘அட்லஸின் ‘

பூமிப்பாரம் போல்

ஏற்றப்பட்டதாய்

இந்த ‘ருத்ராக்கள் ‘

புலம்பல் ‘ஸிண்ட்ரோமில் ‘

பிதற்றிக்கொண்டிருந்த போதும்

காதல்

காதல் தான்.

ஆம் ..

காதல் காதல் தான்.

=ருத்ரா

epsi_van@hotmail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா