போராடாதே … பிச்சையெடு

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

வானவன்


என்ன தான் நடக்கிறது
என் நாட்டில் ?

உரிமைக்குப் போராடும்
முயல்களைப் பிடித்து
முதலை வாயில் போட
யாரிவர்க்கு
அதிகாரம் அளித்தது.

சுதந்திரம் எதற்கு வந்தது ?
எழுந்து கேட்கவா
எலும்பு உடைக்கவா ?

பதவி இருக்கையின்
கால்கள் கொண்டு
இரக்கத்தின் கழுத்தை நெரித்து
நம்பிக்கைப் படுகொலை
செய்வதற்காகவா ?

போராட்டம் என்ன
தீண்டாமையா ?
வெறுப்போடு நொறுக்க ?

விரலில் காயம் என்று
விண்ணப்பம் அனுப்பியவனுடைய
கையைக் கொய்து சென்றது
ஜனநாயக நாகரீகமா ?

செத்துப் போனவர்களின்
புள்ளி விவரங்களை
பொறுக்கிச் சொல்வது தான்
பத்திரிகைகளின் பணியா ?

தேசம் எங்கே போகிறது
சுதந்திரத்தின் தெருக்களை
எரித்து விட்டு
மீண்டும் அடிமையின் குகைகளுக்கா ?

மனித நேயத்தின்
நீர் வளையங்களை நிறுத்தி
மரணத்தின்
மலர்வளையங்கள் வாங்கவா ?

அவசரச் சட்டங்கள்
அரசவையில் கொட்டுகின்றன.

போராடுகிறானா
கூட்டை மட்டுமல்ல
காட்டையும் சேர்த்தே வெட்டு.

வந்தனை செய்தால் பாராட்டு
சிந்தனை செய்தால்
சிறையில் தள்ளு,

பாதம் பணிந்தால்
பதவியில் அமர்த்து,
இது பாவம் என்பவனை
பாடையில் கிடத்து,

தலை நீட்டும் ஒட்டகங்களை
நாடுகடத்து
தலையாட்டும் ஓணான்களை
பட்டியலில் இருத்து.

சட்டங்கள்
ஹிட்லரின் கல்லறைகளிலிருந்து
இரத்தமும் சதையுமாய்
எழுந்து வருகின்றன.

பாவம் மக்கள்,
உள்ளே எரியும் நெருப்பை
வெளியே காட்டினால்
மரத்தை எரிக்கிறான் என்று
மரண தண்டனை விதிக்கப்படலாம்
என்று
சாம்பல் கூட்டுக்குள்
கூடு கட்ட ஆயத்தமாகிறார்கள்.

வருந்தாதீர்கள்
வரலாறு
இதைவிடப் பெரிய வல்லூறுகளை
சந்தித்திருக்கிறது.

துக்கப்படாதீர்கள்.
வேண்டுமானால்
இந்த விரலில் ஒருமுறை
நம்பிக்கை
வாக்கு-மை வைத்துக் கொண்டதற்காய்
வெட்கப்படுங்கள்

***
tamil400@yahoo.com

Series Navigation

வானவன்

வானவன்