வா கண்ணா

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

பவளமணி பிரகாசம்


ஒளிவும், மறைவும் நமக்குள் இல்லை, கண்ணா,
பரிவும், அறிவும் குறையாத பண்பு நிலை இதிலே
புரியும் பளிங்காய் அவரவர் எண்ணம் தானே.
சங்க காலமில்லை இது கண்ணா,
எவளை நினைத்தாய் என்றெந்நேரமும்
உனை நான் படுத்த மாட்டேன்.
என் தோழிகள் ஷீலா, மாலா, ஜமீலா
எல்லோர் மேலும் உன் பார்வை படிவதை
நான் பார்க்கவில்லை என்றெண்ணாதே.
உன் அன்பின் பவித்திரத்தை அது பாதிக்கவில்லை
என்றறிவேன் என் கண்ணா!

நம் அன்னையர் போல் மஞ்சளும், குங்குமமும்
நான் அணியேன், என் கண்ணா.
அவையெல்லாம் எனக்கு ஒவ்வாமையன்றோ.
தாலியைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளாமலே
பதிவிரதையாய் நானிருப்பேன், என் கண்ணா.
ஐயமின்றி இணைந்திருப்போம்,
அன்றில் போல வாழ்ந்திருப்போம்.

நம் காதல் கனிந்த கதையை
எண்ணிப் பார்க்கிறேன், கண்ணா.
கண்களால் கண்ட கணங்கள்
விலகிச் சென்ற பின்னும் மனதில்
கமகமவென மணக்கக் கண்டோம்.
உறங்கி விழித்தது போல் ஓர் உணர்விலே,
ஈருலகம் ஒன்றாய் கலந்தது போலே,
நினைவில் நிறைந்த பின்னே,
நிறைகுறை அறிந்த பின்னே,
பொருந்துமென்றுணர்ந்த பின்னே,
வெடித்து பறந்த பஞ்சாக,
உடைத்து வெளிவந்த குஞ்சாக
காதல் பிரகடனம் நடந்தது,
கரு போல் அன்பும் வளருது.
எண்ண எண்ண திகட்டவில்லை, கண்ணா,
என்ன என்று புரியவில்லை,
பிறவி பல தொடர்ந்து வரும்
பழைய பந்தம் போல நீயும் கண்ணா
பரிச்சயமாய் தெரிகிறாய்.

ஊரறிய ஒன்று சேர்வோம், கண்ணா,
உலகறிய கூடி வாழ்வோம்.
உரிமைப் பற்றி குழம்ப மாட்டேன், கண்ணா,
வேலியில்லா பயிரில்லை நானும்,
மலர் தாவும் வண்டில்லை நீயும்.
வாலறுந்த பட்டமாய் நீயோ, நானோ
இலக்கின்றி அலையப் போவதில்லை, கண்ணா.
குழந்தை குட்டியுடன் குடித்தனம் செய்வோம்,
குலம் தழைக்க நல்ல பயிர் வளர்ப்போம்.

தலைக்கு ஏறுது பித்தம்,
கிறங்கி நிற்குது சித்தம்.
காலந்தாழ்த்தாமல் கைப்பிடிக்க வா கண்ணா,
பாரறிய எனையுன் ராணியாய் பட்டம் சூட்ட
பரிவாரத்தோடு பரிசம் போட வா கண்ணா.

pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்