பனி

This entry is part of 26 in the series 20020210_Issue

அனந்த்


மேகப் பொதியல் மெதுவே பிரிந்து
…..மேலே யிருந்து விழுவதுவோ ?

நாகம் அணிவோன் உறையும் மலையின்
…..நலமே உரைக்கப் பொழிவதுவோ ?

தாகம் தணித்த மழைபின் புவிக்குச்
…..சாதம் கொடுக்க வருவதுவோ ?

காகம் தனக்கும் கருமை நீக்கிக்
…..கடிதே வெளுப்புத் தருவதுவோ ?

ஓடிக் களைத்த ஓடை நதிக்கும்
…..ஓய்வைக் கொடுக்க உதவிடுதோ ?

வாடித் தளர்ந்து வெறுமே கிடந்த
…..மரத்திற்(கு) ஆடை வனைந்திடுதோ ?

சாடிக் குதித்துச் சிறுவர் மகிழத்
…..தரையில் படிந்து குவிந்திடுதோ ?

பாடிக் களித்துப் புலவன் மகிழப்
…..பனியே! தொடர்ந்து பொழிந்திடுவாய்!

Series Navigation