சரஸ்வதி சகாப்தத்தின் நாயகர்.

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

வே.சபாநாயகம்


11.2.2011 காலை ‘யுகமாயினி’ ஆசிரியர் திரு. சித்தன் அவர்களிடமிருந்து வந்த
துயரமான செய்தி நெஞ்சைக் கனக்க வைத்தது. சமீபத்தில் இலக்கிய உலகம் பிரசுரத்
துறையில் முத்திரை பதித்த ‘கலைஞன் – மாசிலாமணி’ அவர்களை இழந்த துயரம் இன்னும்
மறையவில்லை. அதற்குள் அடுத்த சோகமாக சிற்றிழ்த் துறையில் சாதனை படைத்த இலக்கிய
ஏடான ‘சரஸ்வதி’யின் நிறுவனரும் ஆசிரியருமான தி.ரு வ.விஜயபாஸ்கரன் அவர்களது
மறைவும் சேர்ந்து கொண்டுள்ளது. இலக்கியப் பிரக்ஞை மிக்க அனைவரும் பெரும் இழப்பாகக்
கொள்ள வேண்டிய துயரம் அது. தமிழ் நாட்டில் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக ஒரு இலக்கியப்
பத்திரிகையை விடாப்பிடியாக வெற்றிகரமாக நடத்தி அதன் மூலம் பெருத்த பொருள் இழப்பும்
வலியும் ஏற்பட்டாலும் அவற்றை ஆகுதியாக்கிக் கொண்டு தீவிர அர்ப்பணிப்புடன் ஒரு வேள்வியாக ‘சரஸ்வதி’ எனும் இலக்கிய ஏட்டை நடத்திச் சாதனை புரிந்தவர் என்பதால்தான் அவரது இழப்பு
ஈடுகட்ட முடியாததாகிறது.

‘சரஸ்வதி’யை இன்றும் நாம் போற்றுவது, தனித்தன்மையுடன் – முற்போக்கு இலக்கிய
வளர்ச்சியை முக்கிய நோக்கமாகக் கொண்டு கட்சி, குழு, இச பேதமற்று தரத்தை மட்டுமே
கருதி, படைப்புகளைத் தேர்வு செய்து வெளியிட்ட விஜயபாஸ்கரன் அவர்களது இலக்கிய நேர்மை கருதித்தான். ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களையும் அவர்களுக்குப் பிந்தைய தலைமுறையினரையும் சரஸ்வதியில் அவர் எழுதவைத்தார். தமிழ்ச்சிறுகதை வளர்ச்சிக்கும் வளத்துக்கும் சரஸ்வதி ஆற்றிய
தொண்டு மகத்தானது.

இலக்கியத் தன்மையுடைய ஜெயகாந்தன், சுந்தரராமசாமி போன்றோரின் கதைகளை
வெளியிட்டதோடு இதரவகைச் சோதனைகளுக்கும். ஆழமும் சிந்தனை வீச்சும் கொண்ட அரிய
கட்டுரைகளுக்கும் சரஸ்வதிஇடம் தந்தது. இதில் வெளியான இலக்கியச் சந்திப்புகள், இலக்கிய விமர்சனங்கள், மொழி பெயர்ப்புகள்,’புத்தகச் சுருக்கம்’ மூலம் உலக இலக்கியங்களின் அறிமுகம்,
நூல் மதிப்புரைகள் எல்லாமே இன்றும், என்றும் ரசிக்கத் தக்கவை. ஆரோக்கியமான விவாதங்கள், ‘தமிழ்ஒளி’ போன்றோரின் மரபுரீதியான அற்புதமான கவிதைகள், ரகுநாதன் போன்றோரின்
பட்டிமன்றக் கவிதைகள், ‘சென்னைக்கு வந்தேன்’ போன்ற புதிய ரீதிக் கட்டுரைகள் போன்ற
எல்லாமே சிந்தனைக்கும் ரசனைக்கும் விருந்தளிப்பவையாக இருந்தன.

இன்று ‘யுகமாயினி’ மட்டுமே அக்கறை காட்டுகிற இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின்
படைப்புகளை சரஸ்வதி அந்நாட்களில் அறிமுகம் செய்ததோடு டொமினிக்ஜீவா போன்றோரது
படங்களை அட்டையில் வெளியிட்டு கௌரவிக்கவும் செய்தது.

சரஸ்வதியின் சாதனைகளை முழுமையாய் அறிய வல்லிக்கண்ணன் அவர்கள் ‘தீபம்’
ஏட்டில் தொடராக எழுதி, பின் நூலாக வந்துள்ள ‘சரஸ்வதி காலம்’ என்ற நூலைப் படிக்க
வேண்டும்.

காங்கிஸ்காரரான தகப்பனாரின் தாக்கத்தால் காங்கிரஸ் தொண்டராக இருந்த
விஜயபாஸ்கரன் கல்லூரிப் படிப்பின் போது தீவிர கம்யூனிஸ்டாக ஆனவர். கட்சியின்
போராட்டங்களிலில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றவர். சரஸ்வதிக்கு முன்பு,’ஹனுமான்’,
பிறகு ‘சமரன்’ போன்ற இதழ்களுக்கும் ஆசிரியராக இருந்து அவற்றின் விற்பனையை உயர்த்தியவர்.
5000 முதல் 6000 பிரதிகள் என்று விற்பனையிலும் சாதனை படைத்த சரஸ்வதிக்கு
விஜயபாஸ்கரன் பெரிதும் மதித்த தலைவர் ஜீவா அவர்களால் முடிவு ஏற்பட்டது துர்அதிர்ஷ்ட
வசமானது. வழக்கமாக பல்வேறு காரணங்களால் நின்று போகிற சிறுபத்திரிகளைப் போல
அல்லாமல், உச்சத்தை எட்டிய நிலையில் அதன் வளர்ச்சியையும் செல்வாக்கையும் பொறுக்காமல்
தன் அழிவுக்குக் காரணமாக சிறந்த பண்பாளரும் பத்திகையாளரும் எல்லோராலும் மதிக்கப்பட்ட
வருமான தோழர் ஜீவா அவர்கள் காரணமாகஇருந்தது நம்ப முடியாத உண்மை. சரஸ்வதியின்
வெளிப்பாட்டை நிறுத்த முடிந்த அவரால் இன்றளவும் இலக்கிய அன்பர்களின் இதயத்தில் அது
நிலைத்து நின்றிருப்பதை அழிக்க முடியவில்லை. விஜயபாஸ்கரன் மறைந்திருக்கலாம். ஆனால்
அவரது ‘சரஸ்வதி’ இலக்கிய உலகில் நீடூழி நிலைத்திருக்கும். அதைப் போற்றவதே நாம்
அவருக்குச் செய்யும் அஞ்சலி ஆகும் 0

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்