கலாச்சார மாற்றங்களும், கேலிச்சிந்தனைகளும்

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

பா.பூபதி


அனைத்து விசயங்களும் நவீணத்துவமாக மாறிவிட்ட இந்த காலகட்டத்தில், நாம் தவிர்த்திருக்க வேண்டிய பல விசயங்களும் நவீணத்துவம் பெற்று நம்மை விட்டு விலகாமல் இருப்பது வருத்தத்திற்குரியதே.

தமது நாட்டுக்கு பக்கத்தில் இன்னொரு நாடு இருக்கிறது அங்கேயும் மக்கள் இருக்கிறார்கள் என மக்கள் அறிந்துகொள்வதற்கு முற்பட்ட காலத்திலேயே ஒவ்வொரு பகுதி மக்களிடமும் கடவுள் பற்றிய எண்ணங்களும், வழிபாட்டு முறைகள் தோன்றியிருக்கிறது என்பது நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. தகவல் தொடர்பு சாதனங்கள் எதுமற்ற அந்தகாலத்திலேயே மக்கள் கடவுள் என்ற விசயத்தில் மட்டும் எப்படி ஒன்றுபட்டார்கள் என தெரியவில்லை. சொல்லிவைத்தது போல ஒவ்வொரு நாட்டு மக்களும் அவர்களின் கலாச்சாரத்திற்கு ஏற்ப கடவுள்களை பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டு மக்களும் மற்றொரு நாட்டு மக்களை தொடர்பு கொள்ள ஆரம்பித்த பிறகுதான் பலவிதமான மதங்கள், கலாச்சாரங்கள் இருப்பதே ஒருவருக்கொருவர் அறிந்துகொண்டிருக்கிறார்கள். அதற்கு பிறகு அவர்களுக்கிடையே ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள், கலவரங்கள் அனைத்தும் நாம் அறிந்ததே. அந்தகாலத்தில் நடந்தது கொண்டதுபோல தெருவில் இறங்கி இப்போது யாரும் சண்டையிடுக்கொள்வதில்லை கால மாற்றத்திற்கு ஏற்ப அவர்களும் நவீணத்துவம் பெற்றுவிட்டார்கள். அனைத்துவிதமான சண்டைகளும் இப்போதும் நடந்துகொண்டிருப்பது இணையதளத்தில்.

இணையத்தள விவாதங்கள்:

இணையத்தளத்தில் ஏதாவது ஒரு மதம் பற்றிய விபரங்களை தேடிப்பார்த்தீர்களானால். அந்த மதம் பற்றி விபரங்களைவீட, அந்த மதம் பற்றிய விமர்சனங்களும் அதைப் பற்றிய விவாதங்களும் தான் அதிகம் தென்படும். ஒருவர் மற்றொருவரின் மதம் சம்பந்தப்பட்ட புத்தகத்திலிருந்து சில விசயங்களை மேற்கோல் காட்டி அந்த மதத்தில் எவ்வளவு பிற்போக்கான சிந்தனைகள் இருக்கிறது, எவ்வளவு இழிவான செயல்கள் இருக்கிறது என விளக்கியிருப்பார். அந்த கட்டுரையையில் குறிப்பிட்டப்பட்டுள்ள மதத்தினர் அந்த கட்டுரையை படித்துப்பார்த்துவிட்டு நீங்கள் எழுதியது தவறு என விளக்கம் கொடுப்பார்கள், சிலர் கண்டனம் தெரிவிப்பார்கள், சிலர் முதலில் உங்கள் மதம் சரியாக உள்ளதா என கேள்வி கேட்டு, அந்த கட்டுரையை எழுதியவரின் மதத்தில் உள்ள குறைகளை பட்டியலிடுவார் இப்படியே விவாதம் அல்லது சண்டை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இணையதளத்தில் விவாதம் செய்வதில்லை ஒரு வசதி உள்ளது. கட்டுரையை எழுதுபவர்கள் யார் என்ற உண்மை விபரத்தை வெளியிடாமல் போலியான பெயர்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். இதனால் எந்தவித தயக்கமோ, பயமோ இல்லாமல், ஏற்படப்போகும் பின்விளைவுகளைப்பற்றி கவலைப்படாமல் அந்த கட்டுரையை வெளியிட முடிகிறது. ஒரு குறையை கண்டுபிடித்துவிட்டோம் என்ற சந்தோஷத்தில் மீண்டும் ஒரு கட்டுரையை எழுதிகிறார்கள். குறை சொல்லிவிட்டார்களே என்று ஆதங்கப்படுபவர்கள் உண்மை என்ன என்பதை விளக்க அவர்களும் ஒரு கட்டுரையை எழுதுகிறார்கள் இப்படியே அதிகரித்துக்கொண்டே வரும் இணையதள விவாதஙக்ள் மனதளவில் மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. வீதியில் நடக்கப்போகும் மதரீதியான சண்டைகளுக்கு இந்த விவாதங்கள் ஒருவகையில் காரணமானாலும் ஆகலாம்.

கலாச்சார மாற்றங்கள்:

ஒரு மதத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி எழுதப்படும் கட்டுரையை படித்தோமானால் ஒரு எளிய உண்மை தெரியவரும். கட்டுரை எழுதுபவர்கள் புதியதாக எந்த குறையையும் அந்த மதத்தில் கண்டுபிடித்திருக்க மாட்டார்கள். சம்பந்தப்பட்ட மத புத்தகத்தை படித்து அதில் அவர்களுக்கு தவறு என தோன்றிய விசயங்களை எழுதுகிறார்கள். யோசிக்க வேண்டிய இடம் இதுதான் சம்பந்தப்பட்ட மத புத்தகத்திலேயே அவர்கள் புனிதராக அல்லது கடவுளாக போற்றுபவர்களைப்பற்றி எப்படி தவறாக எழுதப்பட்டிருக்கும்…! அவர்கள் சரியாக, உயர்வாகத்தான் எழுதியுள்ளார்கள் ஆனால் நாம் படிக்கும் காலத்தில் அது நமக்கு தவறாகப்படுகிறது. இதற்கு காரணம் கலாச்சார மாற்றங்கள் தான். ஒரு காலகட்டத்தில் நாகரிகமாக கருதிய விசயங்கள் அடுத்த காலகட்டத்தில் அநாகரிகமாக மாறிவிடுகிறது. பழைய சினிமாவில் அணிந்திருந்த உடைகளை இப்போது யாராவது அணிந்திருந்தால் அவர்களை பார்த்து நாம் சிரிக்கிறோம், ஆனால் நாம் தற்போது அணிந்திருக்கும் உடை வரும் காலாத்தில் சிரிப்பிற்குள்ளாகும் என நாம் அறிந்துகொள்வதில்லை. அவர்கள் அந்த காலத்தில் நாகரிகமாக கருதிய உடையைத்தான் அணிந்திருக்கிறார்கள் நாம் தான் அடுத்தகட்ட நாகரீகத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு மக்களும் அவர்களுடைய புனிதர்களைப்பற்றி உயர்வாக எழுத்தத்தான் நினைப்பார்கள் ஆனால் அவர்களாலேயே நாம் தவறாக கருதும் ஒரு விசயம் அந்த புனிதரைப்பற்றி எழுதப்பட்டுள்ளது என்றால், அவர்கள் வாழ்ந்த காலத்தில் அதுதான் உயர்வான நாகரிகமாக இருந்திருக்கிறது நம்முடைய காலத்தில் அந்த விசயம் நமக்கு அநாகரீகமாக தெரிகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தவறுகளை ஏற்றுக்கொள்ளுதலும், உண்மையை உணர்ந்துகொள்ளுதலும்:

குற்றம் சொல்பவர்களும், இல்லை அது சரியாகத்தான் உள்ளது என்று குற்றத்தை நிராகரிப்பவர்களும் ஒரு விசயத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

குற்றம் சொல்பவர்கள் இப்போதைய கலாச்சாரத்தை அடிப்படையாக வைத்தே குற்றம் சொல்கிறார்கள். எனவே அவர்கள் குற்றம் சொல்லும் போது சம்பந்தப்பட்ட மதத்தை சார்ந்தவர்கள் “ஆம் அது இப்போதைய சூழ்நிலையில் தவறுதான் ஆனால் அந்த காலகட்டத்தில் அதுதான் சரியாக இருந்தது அதனால் அப்படி சொன்னார்கள்“ என்றால் பிரச்சனை அத்தோடு முடிந்தது. ஆனால் இப்போதைய காலகட்டத்திலும் அந்த விசயம் சரிதான் என நிருபிக்க முயற்சி செய்யும் போது ஏற்படும் விவாதம் மேலும் பிரச்சனையைத்தான் வளர்க்கும்.

குற்றம் சொல்பவர்கள் ஒரு விசயத்தை உணரவேண்டும் அடிப்படை உண்மையில்லாத எந்த மதமும் ஆண்டாண்டு காலமாக நிலைத்திருக்க வாய்பில்லை. அப்படியிருந்தும் நீங்கள் குறை சொல்லும் அந்த மதம் நிலைத்திருக்கிறது என்றால் அதில் காலம்கடந்தும் நிலைத்திருக்கும் உண்மைகள் அடங்கியிருக்கிறது என்றுதானே அர்த்தம். எனவே ”ஆம் உங்களுடைய மதத்திலும் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய உண்மைகள் இருக்கிறது” என்று ஒத்துக்கொள்ளக்கூடிய பரந்த மனப்பாண்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்படியில்லை அது முற்றிலும் தவறுதான் என வாதத்தை தொடர்ந்தாலும் முடிவில்லா பிரச்சனைதான் ஏற்படும்.

தூய்மையை தேடுதல்:

ஒரு முயற்சியாக முற்றிலும் ஏற்றுக்கொள்ள கூடிய தூய்மையான மதத்தை தேடிப்பாருங்கள். நிச்சயமாக உங்கள் முயற்சி தோல்வியில்தான் முடியும். அனைத்து மதங்களுமே அந்தந்த கால நிலைகளுக்கேற்ப, அந்ததந்த கலாச்சாரத்திற்கேற்ப உருவானது எனவே ஒருவருக்கு சரி எனப்படும் விசயம் மற்றவருக்கு தவறாகத்தான் தெரியும். எனவே வீன் விவாதங்களை தவிர்த்து அனைத்து மதங்களிலும் உள்ள அடிப்படை உண்மையை உணரத்தொடங்கினால் இப்படிப்பட்ட விவாதங்களும், பிரச்சனைகளும் ஏற்படாது.

saireader@gmail.com

Series Navigation

பா.பூபதி

பா.பூபதி