தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (3)

This entry is part [part not set] of 34 in the series 20090326_Issue

வெங்கட் சாமிநாதன்


(3)

கடந்த இருபதாண்டுகள் என நான் வேலி கட்டிக்கொண்டாலும், இப்போது மௌனமாகிவிட்ட தோபபில் முகம்மது மீரான் இவ்வேலிக்குள் தான். முஸ்லீம் சமுதாயத்தினுள்ளிருந்து வெளிவந்த முதல் விமர்சனக் குரல் இது. என்னை ஆச்சரியப்படவைத்தது. இது எப்படி எழுந்தது, எப்படி இக்குரல் அனுமதிக்கப்பட்டது என. ஆனால் மீரான் நிகழ் காலத்தில் கால் பதிக்க வரும்போது மௌனமாகிவிட்டார். அதை முன்னெடுத்துச் சென்றுள்ளது, அந்த சமுதாயத்தில் ஒரு அடக்கப்பட்டுள்ள குரலாக நாம் நினைக்கக்கூடும் சல்மா. அவரது இரண்டாம் ஜாமங்களின் கதை இன்றைய தமிழ் நாவல் வளர்ச்சியில் ஒரு முக்கிய நிகழ்வு. எத்தகைய தயக்கமோ, ஒளிவு மறைவோ, சுற்றி வளைத்த கதையளப்போ இல்லாத நேரான வெளிப்படையான சமூக சித்திரம். இதுவும் ஒரு சுய விமரிசனம் தான், தெரிந்தோ தெரியாமலோ. இவரது ஒன்றிரண்டு கவிதைகளில் கையாண்ட சொற்களைப்பற்றி எனக்கு கேள்விகள் உண்டு. வடமொழிப் பிரயோகங்கள் ஏன்? என்று. அதே விஷயங்கள் பொருட்கள் அவற்றின் தமிழ்ப் பேச்சுருவில் நாவலில் நிறைய வெகு ஆக்கிரோஷமாக வெளிப்படும்போது, நாவலில் அது மனிதர்களின் மொழியாக அது நியாயம் பெறுகிறது. அதற்கு நான் மாறு சொல்லவில்லை. ஆனால் கவிதை மொழி கவிஞரது. இங்கு கவிதையில் பழகு சொற்களை விடுத்து கவிஞர், அவரது மற்றக் கூட்டாளிகளைப் போல வட மொழிச் சொற்களைத் தேடிப் போவானேன்? என்று அதற்கு என் மறுப்பு. பாவனைகளின்றி கூச்சமின்றி தன் உணர்வுகளையும், தான் அறிந்த அனுபவங்களையும் வெளியிடும் சல்மா, தம் கவிதைகளில் பாவனைகளில் சரணடைவானேன்? ஆனால் மிகுந்த கட்டுப்பாடுகள் நிறைந்த, எத்தகைய விமர்சனத்தையும் அனுமதிக்கும் கருத்து சுதந்திரம் அற்ற முஸ்லீம் சமுதாயத்தில் சல்மா பாக்கியவதி என்று தான் சொல்லவேண்டும். தஸ்லீமா நஸ்ரீனுக்கும், ஹெச் ஜி ரசூலுக்கும் கிடைக்காத சுதந்திரம் அவருக்குக் கிடைத்துள்ளது எனக்குப் புதிராகவே உள்ளது. இந்த கருத்து சுதந்திரம் அவருக்குக் கட்சியில் கிடைக்காது என்பது நிச்சயம்.

இன்னொரு பயங்கர முரண், இப்பெண்ணிய கவிஞர்களின் ஆணாதிக்கச் சீற்றம் உண்மைதானா அல்லது வெறும் பாவனையா, என்று சந்தேகப்படும் காரணங்கள் முன்னெழுகின்றன, இவர்கள் பிராபல்யம் நாடி, பதவி நாடி, அரசியல் கட்சியில் தம்மை இணைத்துக் கொள்ளுவதைப் பார்த்தால். இது ஒன்றும் இயக்கமல்ல, சுதந்திரப் போராட்ட காலத்து கட்சிகள் போல. அவரவர் தம் தனித்வத்தோடு தனி மனிதர்களாக ஒரு போராட்டத்தில் ஒன்று சேர்ந்தது போன்றதல்ல இது. அது ஒரு காலத்தில் இயக்கமாக, போராட்டமாக இருந்தது. அது பற்றிய என் விமர்சனம் என்னவாக இருந்தாலும், இப்போது அது ஒரு அரசியல் கட்சி. ஒரு தலைவனின் சுய தேவைகள் கட்சியின் கொள்கையாக ஆன கட்சி. அதன் ஆரம்ப காலத்திலிருந்தே அது பெண்களை வெகு அநாகரீகமாகத்தான் பேசி வந்தது. பெண்களைப் பற்றி கொச்சையாக, ஆபாசமாக சப்புக்கொட்டிக்கொண்டு பேசி கூட்டத்தில் கிளுகிளுப்பு ஏற்படுத்துவதில் அதன் தலைவரையும் சேர்த்து அதன் பேச்சாளர்களுக்கு தனி உற்சாகமே உண்டு. இதை நான் என் பள்ளிநாட்களிலிருந்தே அறிவேன். அவர்கள் பேச்சில் கண்ணகி நினைத்த போதெல்லாம் வந்து போனாலும், பெண் என்றாலே அவர்களிடம் காண்பது ஆணாதிக்கமும் கொச்சையான பேச்சும் தான். அத்தகைய கட்சியில் தான் இந்த பெண்ணீய வாதிகள் தம்மை ஐக்கியப்படுத்திக்கொண்டுள்ளார்கள். இவர்கள் பேசும் பெண்ணியம் எத்தகைய பெண்ணியம்?

இன்னொரு வேதனையான திருப்பத்தைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். சினிமா ஒரு வெகுஜன ஊடகம் என்பது தெரிந்தது தான். ஆனால் ஒரு காலத்தில், இந்த வெகுஜன, பாமர ஊடகத்தில் தான், எம்.எஸ் சுப்புலக்ஷ்மி, ஜி.என். பாலசுப்ரமண்யம், தண்டபாணி தேசிகர், ராஜரத்தினம் பிள்ளை, என்.சி. வஸந்தகோகிலம், பாபநாசம் சிவம் போன்றோர் தம் தடம் பதித்தனர். இந்த கூத்தாடிகள் கூட்டத்தில் சேர்ந்ததினால் அவர்கள் கூத்தாடிகளாக வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் தாமாகத்தான் இருந்தார்கள். அவர்கள் வெகுஜன ஊடகம் என்பதற்காக தம்மை மலினப் படுத்திக்கொள்ளவில்லை. தம் தனித்வத்தை இழந்தவர்கள் இல்லை. ஒரு வேளை அது ஒரு காலம், வேறு யுகம் போலும். அந்த யுகம் மறைந்தது. இடையில் தமிழ் சினிமா லக்ஷ்மி, அகிலன் போன்ற வர்களின் எழுத்துக்களை எடுத்தாண்டது. லக்ஷ்மியும் அகிலனும் தமிழ் சினிமாவானார்கள். அதனால் யாருக்கும் காயம் சேதம் ஏற்படவில்லை. ஆனால் தன்னை, தன் தனித்வத்தை தமிழ் சினிமாவுக்கு எடுத்துச் சென்ற தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒருவர் தான். உன்னைப் போல் ஒருவனில் நாம் காண்பது ஜெயகாந்தனைத் தான். இந்த நிகழ்வு தொடரவுமில்லை. எத்தகைய ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தவும் இல்லை. ஒரு நீர்க்குமிழியாக வந்தவண்ணமே மறைந்தும் விட்டது. இந்த பழைய விவரங்களையெல்லாம் அவை நிகழ்ந்த காலத்து அவற்றின் குணத்தைச் சொல்லத்தான். வெகுஜன ஊடகமானாலும் தம்மை இழப்பவர்கள் இழப்பார்கள். தம்மை இழக்க மறுப்பவர்கள் தம் தனித்வத்தின் மூர்த்திகரத்தின் முத்திரையை எங்கும் பதித்துத்தான் செல்வார்கள் என்பதை வலியுறுத்தத்தான். இப்போது எழுதும் கடந்த இருபது வருட கால நிகழ்வுகள் என்ற சந்தர்ப்பத்தில், சமீப காலமாக, இன்றைய பாமரத்தனமான தமிழ் சினிமா கூட ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், சுஜாதா போன்றவர்களை – (இவர்களுக்கு சினிமா என்றால் என்ன என்று தெரியும். அதிலும் எஸ் ராமகிருஷ்ணன் உலக சினிமா முழுதுக்கும் தன் தளத்தை விரித்து ஒரு பெரிய தலையணை மொத்த புத்தகமும் எழுதியிருக்கிறார். இவ்வளவு பிரம்மாண்டத்திற்கு விஷயம் தெரிந்தவர்கள் உலகில் வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இது தமிழ் நாடு செய்த பாக்கியம்) அரவணைத்துக் கொண்டுள்ளது. சந்தோஷமான விஷயம். மார்வாடி கடை கணக்கப்பிள்ளை போல தமிழ் சினிமாவில் நடத்தப்பட்டு வந்தவர்கள் இன்று லக்ஷக்கணக்கில் சம்பாதிப்பவர்களாகவும் பிரபலங்களாகவும் ஆகியுள்ளதும் சந்தோஷமான விஷயம் தான். நம் சந்தோஷம் அத்தோடு தான் நிற்க வேண்டும். இவர்கள் கூலிக்கு கணக்கு எழுதுபவர்கள் இல்லை தான். அவரவர் ஆளுமை அவரவர்க்கு உண்டு தான். ஆனால் அந்த ஆளுமையை இவர்கள் தாம் சம்பந்தப்பட்ட படங்களில் நாம் காணவில்லை. நாம் காண்பது ரஜனியையும் சங்கரையும் தான். இந்த சினிமா பிரபலங்களின் அவர்கள் படங்களின் அபத்தத்திலும் ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், சுஜாதா எல்லோருமே தம்மைக் கரைத்துக் கொண்டுவிட்டவர்கள் தான். இது அவர்களுக்கோ நமக்கோ பெருமை தருவதல்ல. ஜெயகாந்தனைச் சொன்னேன். சினிமா என்றால் இப்படி அபத்ததில் மூழ்க வேண்டும் என்று அர்த்தமில்லை. ஒரு படத்தில் ஜெயமோகனின் எழுத்து பேசப்படுகிறதென்றால் அதில் அவர் முத்திரையை நாம் காணவேண்டும். விஜய் டெண்டுல்கர் என்னும் மராத்தி நாடகாசிரியர் ஐந்தாறு ஹிந்தி படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். அது அவர் கூலிக்கமர்த்தப்பட்ட காரியமில்லை. எனக்குத் தெரிந்து நிஷாந்த், மந்த்தன், ஆக்ரோஷ், அர்த் சத்யா என நான்கு படங்கள் இப்படங்கள் ஒவ்வொன்றும் நம் முன் விரிக்கும் உலகோடு டெண்டுல்கர் உலகும் ஒன்றிணைவது. மாறுபட்டதோ, முரண்பட்டதோ இல்லை. அவரது வசனங்கள் சின்ன சின்ன வாக்கியங்களால் ஆனவை. நறுக்குத் தெறித்தாற்போல என்பார்களே அது போல. சக்தி வாய்ந்தவை. கூரிய தாக்கு வலு கொண்டவை. அவர் சம்பந்தப்பட்ட படங்கள் ஒவ்வொன்றிலும் டெண்டுல்கரே வியாபித்திருப்பார். டெண்டுல்கர் பற்றி எனக்கு சில விமர்சனங்கள் உண்டு. அது வேறு விஷயம். ஆனால் அவர் இந்திய நாடக உலகில் பெரும் மாற்றத்தைக் கொணர்ந்த ஒரு சிலரில் ஒருவர். அது போல அவர் சம்பந்தப்பட்டுள்ள இப்படங்களும் இந்திய திரைப்பட வரலாற்றில் அர்த்தமுள்ள, சமூக உணர்வுள்ள படங்களாக இடம் பெற்றுள்ளவை. டெண்டுல்கர் எப்படியோ அப்படி. வெற்று வசன கர்த்தாவாக அவர் இருந்ததில்லை. தமிழ் நாட்டு உதாரணங்களைச் சொல்ல வேண்டுமானால், கருணாநிதி அண்ணாதுரை போன்றோரைச் சொல்லலாம். அவர்களை எந்த சினிமாவுக்கு கதை வசனம் எழுதச் சொன்னாலும், தம் முத்திரையை அதில் பதிப்பிக்க அவர்கள் தவறியதில்லை. ஆனால் கடைசியில் அதை அவர்கள் அரசியல் மேடையாக்கி விடுகிறார்கள் என்பது வேறு விஷயம்.

இனி கடைசியாக தமிழ் இலக்கியம் பெற்றுள்ள தலித் குரல்கள். இமையம், சோ தர்மன் இருவரும் மிக முக்கிய குரல்கள். இவர்கள் அரசியல் வழி, சித்தாந்த குருக்கள் வழி செல்ல மறுக்கும் உண்மைக் குரல் கள். தன் சமூக விமர்சனக் குரல்கள். தலித்துகளின் வாழ்க்கை முழுதும் அரசியல் வாய்ப்பாடுகளில், சித்தாந்திகளின் பொய்களில் அடைபடுவன அல்ல. தலித் சமூகத்திலும் ‘பொட்டு கட்டுதல் உண்டு’ அங்கும் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ‘தாசிகள்'(செடல்) இருப்பதைக் கண்டு நாம் திகைப்படைகிறோம். அதற்கு அடிபணிய மறுக்கும், வாழ்நாள் முழுதும் போராடும் பெண்களும் தலித்துகளிடம் உண்டு என்பது ஆச்சரியம் தரும் புதிய செய்திகள். கிறிஸ்துவிடம் சரண் அடைந்தாலும், தலித்துகளின் அடிமை வாழ்க்கை தொடரத்தான் செய்யும்.(கோவேறு கழுதைகள்) பாதிரிமார்களோ, ஒரு சிறிய அரசு நாற்காலியோ, கொஞ்சம் பணமோ கிடைத்துவிட்ட காலனி வாழும் தலித்து களோ தம் கீழ் ஒரு சமூகம் வதை படுவதையே காண விரும்புவார்கள். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை இவர்கள் அறிந்தவர்களாதலால், ‘இவர்களை மன்னியுங்கள்’ என்று இயேசு கூட கர்த்தரிடம் பிரார்த்தித்துக் கொள்வதில்லை. சோ. தருமன் தன் இரண்டு நாவல்களிலும் (‘தூர்வை’, ‘கூகை’) நமக்குச் சொல்லப்படாத, மறைக்கப்பட்ட தலித் சமூக சித்திரங்களை பதிப்பிக்கிறார். காலந்தோறும் நசுக்கப் பட்ட வர்கள் தாம். நசுக்கப்படுபவர்கள் தாம். ஆனால், அது யாரால் என்பது தான் மறைக்கப்படுவது. தலித்துகளிலும் சௌகரியமாக, தம் நிலபுலன்களோடு வாழ்ந்தவர்கள் உண்டு. இவ்விருவரோடு கருக்கு எழுதிய பாமாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கடைசியாக இப்போது கனடாவிலிருந்து எழுதும் தேவகாந்தனைக் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். ஈழத் தமிழர்களின், அவர்கள் ஈழ வாழ்க்கையின், பின் புலம் பெயர்ந்த வாழ்க்கையின் சிதைவுகள் போராட்டங்களை, அதன் கடந்த 20 வருட வரலாற்றை அதன் நிகழ்வின் போதே இவ்வளவு உடனுக்குடன் சுமார் 1300 பக்கங்களுக்கு ஐந்து பாகங்களில் விரிந்துள்ள தேவகாந்தனது கனவுச் சிறை மிக முக்கிய ஆவணமுமாகும். அப்படி ஒரு ஆவணமாகும் நாவலை தமிழ் நாட்டு வரலாறு இது காறும் பெற்றதில்லை.

இது காறும் நான் சொன்னதெல்லாம் தமிழுக்குச் சேர்ந்துள்ள மிக வளமான பங்களிப்புகளை. ஆனால் இப்பங்களிப்புகள் ஏதும் ஒரு ஆரோக்கியமான சமூக, இலக்கிய சூழலில் பிறந்தவை அல்ல. தம் இருப்பை வலியுறுத்தும் தம் தனித்வத்தைச் சொல்லும் எதிர் குரல்கள் எத்தகைய இருளிலும் வானம் கண் சிமிட்டும். வழி காட்டும். சாயும் வாழையின் அடியில் கன்று முளை விட்டிருக்கும்.

வெங்கட் சாமிநாதன்

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்

தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (2)

This entry is part [part not set] of 28 in the series 20090319_Issue

வெங்கட் சாமிநாதன்


இது கடந்த சுமார் இருபது வருட அறுவடை. அப்படித்தான் ஒரு வட்டத்தை நான் கோடிட்டுக் கொண்டேன். வேறு எந்த இரண்டு பத்துக்களில் இத்தகைய வளம் வந்து சேர்ந்துள்ளதா எனத் தெரியவில்லை. இதில் தான் என்னும் தன் பிம்பத்தைப் பற்றிய பிரமை மேலிட்டு ஊர்வலம் வருபவர்களை யெல்லாம், ‘மகா ராஜாதி ராஜன்……… வந்தேனே, வந்தேனே,’ என்று மேடையைச் சுற்றி வருபவர்களை யெல்லாம் நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அது கூத்தடிப்பு. தெருக்கூத்தடிப்பு. ‘என்னைப்பார், நான் என்னென்ன பெயர்கள் எல்லாம் உதிர்க்கிறேன் பார். அத்தனையும் லத்தீன் அமெரிக்க ஒரிஜினலாக்கும். என்னைப் பார் என் அறிவைப் பார் என்னென்ன இஸமெல்லாம் எனக்குத் தெரியுது பார்” என்னும் கூத்தடிப்பு. அவர்கள் ராஜபார்ட்டுகளாக வலம் வந்தாலும் அவர்கள் தரித்திருக்கும் உடைகள் வாடகைக் கடைகளைச் சேர்ந்தவை. ஏனெனில், இணையத்தில் பெறும் தகவல்களை யெல்லாம் தொகுத்து அவற்றைத் தன்னதாக, தான் அறிந்ததாக, தன் அனுபவமாக சந்தையில் வைப்பவர்கள் இவர்கள். இன்றைய தார்மீக சரிவின் விளைச்சல்கள். இருப்பினும் வெட்க உணர்வற்ற படாடோபங்கள் இவர்கள். இவர்கள் பெயரையும் நான் சொல்லவில்லை. எவரைச் சொல்வது? யாரை விடுவது?

இக்கால கட்டத்திலே தான் மறுவிஜயம் செய்துள்ள அ.முத்துலிங்கம் என்னும் உலகத் தமிழ் பிரஜையையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். உலகம் முழுதிலும் தான் சென்றவிடமெல்லாம் நுண்ணிய மனித உறவுகளை, தன் மெல்லிய புன்னகையோடு அலட்டாமல், சத்தம் எழுப்பாமல், சவுக்க காலத்தில் மந்திர ஸ்தாயியில் வீணையின் நாதம் காற்றில் அலையாடி வருவது போல சொல்லிச் செல்லும் அவர் எழுத்தின் மாயம் எந்த வகைப்படுத்தலிலும் அடங்காது தனித்து நிற்பது. அவரது உலகமும் மொழியும் போல.

அன்று யாப்பு கவிதை அல்லாததையும் கவிதை என அடையாளம் காட்ட பயன் பட்டது. கவிதை இத்தகைய சட்டகங்களால் இனம் காணப்படுவதில்லை. இன்று இனம் காட்டப் பயன் படும் சட்டகம் வேறு. மறுபடியும் சட்டகம் தான். ஆனால் கவிதை அகமும் புறமும் மிக விஸ்தாரமான, ஆழ்மான தளத்தை ஆக்கிரமித்துள்ளது, கவிதையின் வளத்தைப் பெருக்கியுள்ளது. இன்றும் கவிதையை இனம் காணுவது அதன் இன்றைய சட்டகத்தையும் மீறித்தான். அவ்வாறு கவிதைகளையும் கவிஞர்களையும் இனம் கண்டு அன்று சங்கக் கவிதைகளைத் தொகுத்தது போல் இன்று வந்துள்ள தொகுப்பு ராஜமார்த்தாண்டனின் கொங்கு தேர் வாழ்க்கை என்ற ஒரு சிறப்பான தொகுப்பு. இதில் காணும் கவித்வ பெருக்கும் தள விஸ்தாரமும் அனுபவ பரப்பும் அதற்கு முந்தைய ஒரு நூற்றாண்டு தமிழ் கவிதை காணாதது. அதனால் தான் புதுக்கவிதையின் முந்தைய தமிழ்க் கவிதை வளத்தை கொங்கு தேர் வாழ்க்கையின் முதல் தொகுப்பில் தொகுத்த சிவகுமார், சங்க காலத்திலிருந்து இரண்டாயிர வருட காலத்திற்கு தன் வீச்சைப் பரப்பிக்கொள்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, பெண்ணிய குரல்கள் தமிழ் கவிதையில் வந்து சேர்ந்துள்ளது ஒரு புதிய நிகழ்வு. அவர்களிடம் காணும் சீற்றம் வெளிப்பாடு பெறுவது இயல்பானது. இன்றைய கவிதையும் அவர்கள் தம் ஆளுமையை சீற்றத்தின் உச்ச குரலில் வலியுறுத்துவதும் புரிந்து கொள்ளவேண்டியவையே. இப்பெண்ணிய வெளிப்பாட்டின் சீற்றைத்தைக் கண்டு சீறிய ஆண் கவிஞர்களின் குரல் நேர்மையற்ற ஆணாதிக்கக் குரல்கள் தான். ஆனால் இப்பெண்ணிய சீற்றம் ஏன் அதன் இயல்பான பழகு தமிழ் சொற்களை ஒதுக்கி, வலிந்து வழக்கில் இல்லாத வடமொழிச் சொற்களை திட்டமிட்டுத் தேடிக் கொணர்கிறது? பயமா? அல்லது தமக்கே அவை ஆபாசமாகத் தோன்றுகிறதோ என்னவோ. வடமொழியில் சொன்னால், அவை ஆபாசமாகத் தோன்றவில்லையோ என்னவோ. ஆக, அது உண்மையில் சீற்றம் இல்லை, பாவனையே என்றாகிறது. வார்த்தைகளைக் கொட்டுவதில் இல்லை இல்லை, வார்த்தைகளை உணர்வுகளை அடக்கி ஆள்வதில், குறிப்புணர்த்துவதில் தான் கவித்வம் இருக்கிறது என்பதை பெண்ணிய கவிஞர்கள் மறந்து விடுகிறார்கள். ஆனால் இவர்கள் கவித்வம் மிக்கவர்கள். அவர்கள் உணர்வுகள் உண்மையானவை. சல்மா, உமா மகேஸ்வரி, மாலதி மைத்ரி போன்றவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அதே சமயம் இப்பெண்ணிய கவிஞர்களின், பாணியில், மொழியில் அல்லாது, தம் பெண்மையை தன் மொழியில் பாணியில் வெளிப்படுத்தும் வேறுபட்ட ஒரு கவித்வம் திலக பாமாவினது. இவரின் பெண்ணிய சீற்றமும் தன் சுயத்துவத்தின் வலியுறுத்தலும் மற்றவர்களுக்கு கொஞ்சமும் குறைந்தல்ல. இருப்பினும் மற்றவர்கள் இவரைக் கண்டு கொள்வதே இல்லை. ஏனெனில் அவர்களது பாவனைகளை இவர் ஏற்றுக்கொண்டதில்லை. ஆக, பெண்ணீய வெளிப்பாட்டைவிட, பாவனைகளே முக்கியமாகப் படுகிறது பெண்ணிய கவிஞர்களுக்கு என்று தோன்றுகிறது.
.
இன்றைய தமிழ் இலக்கியத்தின் மிகப் பெரிய பாரிய பங்களிப்பு என்று நாவல் வளத்தைச் சொல்லவேண்டும். இதில் தான் எத்தனை வேறுபட்ட தனித்வமான திறன்கள், ஆளுமைகள்! இதில் ஜெயமோகன் போன்ற ஒரு இலக்கிய ஆளுமையை, புதுமைப் பித்தன் ஒருவரிடம் தான் தமிழ் கண்டிருக்கிறது. அதிலும் புதுமைப் பித்தன் அற்ப ஆயுளில் இறந்து விட்டதால், அந்த ஆளுமை தன் முழு விகாசத்தைக் காணமுடியாதே போய்விட்டது. அது செயல் பட்ட சொற்ப காலத்தில் அதன் வீச்சின் பரிமாணத்தை கோடி காட்டிச் சென்று விட்டது. பலத்தை சர்ச்சைகளை எதிர்கொண்ட அவரது விஷ்ணுபுரம், ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை நிகழ்ந்த வரலாறு, மதப் போராட்டங்கள், தத்துவ விசாரணைகள் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிய அதன் வீச்சும் ஆழமும், அது கையாண்ட மொழியும் திகைக்க வைக்கும். இத்தகைய வீச்சில் யாரும் வரலாற்றையும் கற்பனையையும் பரப்பியது கிடையாது. அதே வீச்சும் விமர்சனமும் தமிழகத்தில் மார்க்ஸீயம் என்று சொல்லப்படும் ஒன்றின் பின்னணியில் பின் தொடரும் நிழல் என்ற நாவலும் காயம் பட்டோரின் சீற்றத்திற்கு ஆளானது. பின்னும் அவரது தளமும் கையாளும் வாழ்க்கைக் கூறுகளும் ஏழாம் உலகம் நாவலில் மாறுகிறது. பிச்சைக்காரர்களின் உலகில் நாம் இதுகாறும் அறியாத கொடூரங்களும், சமயத்திற்கும் மனிதருக்கும் ஏற்ப மாறும் தர்மங்களும், பெண்கள் அந்த உலகில் கூட படும் வதையும், இந்த உலகை அவர் அறிந்தது எப்படி என்று திகைக்க வைக்கிறது. 40 வருடங்களுக்கு முன் நடந்த அகில இந்திய காவல் அதிகாரிகளின் மகாநாட்டில் பிச்சை எடுத்து தன் வயிறு நிரப்ப குழந்தைகளைத் திருடி, முடமாக்கும், குருடாக்கும் கொடுமைகளைத் தகவல்களாக பீஹார் காவல் அதிகாரி விவரிக்க நான் கேட்டிருக்கிறேன். அந்த உலக மனிதர்களும் அவர்கள் தர்மங்களும் இந்த நாவலில் அனுபவ உக்கிரங்களாக நம் முன் விரிகின்றன. இத்தகைய கொடுமைகளின், குரூரங்களின் வாழ்விடம் பீஹார் தான் என்று அன்று நான் நினைத்திருந்தேன். இல்லை, தமிழ் நாடு அப்படி ஒன்றும் ‘அமைதிப் பூங்கா’ இல்லை. குற்றங்களும், குரூரங்களும், வேறு பெயர்களில் இங்கு வாழ்கின்றன,

இது போல பலர் நாம் அறியாத உலகங்களை, தமிழ் இலக்கியம் பதித்திராத உலகங்களை பிரும்மாண்டமாக நம் முன் வைக்கிறார்கள். முன்னேற்றம் என்றும் செல்வக் கொழிப்பு என்று சொல்லப்படும் வெளிப்பகட்டின் பின் இருக்கும் மனித அவலங்கள். எம். கோபால கிருஷ்ணன் என்ற புதியவரிடமிருந்து வந்த மணல் கடிகை ஒரு புது உலகத்தை நம் முன் வைக்கிறது. எங்கிருந்தோ ஒரு இடத்திலிருந்து தொடங்கும் தேடல், ஒவ்வொருவரும் அவரவர் வழியில் ஒரே இடத்தில் தான் முடிகிறது. பின்னும் அதே போல தொடரும் தேடல் தான். தேடல் தானா அது? மீனவர் வாழ்க்கை அந்தந்த நிமிடம் செத்துப் பிழைக்கும் கடல் நடுவில். அந்த உலகின் உள்ளே கூட இத்தகைய பிருமாண்டம் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட வைக்கிறது ஆழி சூழ் உலகு. யார் கேட்டிருக்கிறார்கள் ஜோ டி க்ரூஸை?. இத்தனை திறன் இத்தனை நாள் எங்கு ஒளிந்திருந்தது? சம நீதி என்றும் ஜாதி ஒழிப்பு என்றும் அரசியல் பேசி வந்தாயிற்று முக்கால் நூற்றாண்டு காலமாக. அந்தந்த ஜாதியின் வெறி இந்த கோஷங்களுக்குள் மறைக்கப்பட்டு வந்துள்ளது எல்லோருக்கும் தெரியும். அதனால் தான் யாரிடமிருந்து சுயவிமரிசனம் வருவதில்லை. தமிழ் இலக்கியத்தில் தான், அரசியல் வாதிகளையும் சித்தாந்திகளையும் மீறி ஒரு சில இடங்களிலிருந்து சுய விமரிசனமாக அவரவர் உலகம் வெளிப்படத் தொடங்கியுள்ளது. பெருமாள் முருகனின் எழுத்து அத்தனையும் இத்தகைய விமரிசனமாகத்தான் நான் பார்க்கிறேன். கௌண்டர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே யான சமூக உறவுகளில் காணும் ஆதிக்க மேலாண்மையின் அடக்கு முறைகள். பெருமாள் முருகனுக்கு எந்த தயக்கமும் இருப்பதில்லை இந்த உலகை எழுத்தில் பதிவதில். முற்றிலும் ஒரு புதிய குரலாக, பி.ஏ.கிருஷ்ணனின் நாவல், புலி நகக் கொன்றை, கவனத்தை வேண்டுவது. ஒரு ஆசாரமான, வித்வத் நிறைந்த வைஷ்ணவ குடும்பத்தின் இரண்டு தலைமுறைக்கு நீளும் கதை அக்கால கட்டத்தில் அதைச் சுற்றி நிகழும் சமூக மாற்றங்களின், அரசியல் வரலாற்றின் நிழல் படிய சொல்லப்பட்டுள்ளது. இக்குரலைப் பதிய இன்றைய சூழலில் ஒரு தைரியம் வேண்டும். இன்னொரு குரல் மிக முக்கியமாகப் பேசப்படவேண்டும். கண்மணி குணசேகரன். அவரது அஞ்சலை நமக்கு அறிமுகப்படுத்தும் பெண்கள் வயிற்றுப் பிழைப்புக்கு ஆண்களை நம்பியிருப்பவர்கள் இல்லை. இருப்பினும் அவர்கள் ஆண்களின் ஆதிக்கத்தில் வதை படுபவர்கள். அவர்களுக்கு, ஏழை விவசாய கூலித் தொழில் செய்பவர்கள், ஏதும் பெரிய ஆசைகள், கனவுகள் கிடையாது. ஆனால் மனிதர்க்ளுக்குள்ள அடிப்படையான பசி, பாலியல் உறவுகள், உணர்ச்சிக் கொந்தளிப்புகள் எல்லாம் ஒரு அதீத அளவில் கொண்டவர்கள். அத்தோடு தன் முனைப்பும். ஆனாலும் அவர்கள் ஆண்களால் ஏமாற்றப்படுகிறார்கள், வஞ்சிக்கப்படுகிறார்கள். அதிலிருந்து அவர்களால் மீள முடிவதில்லை. திரும்பத் திரும்ப அதே சக்கரம், அதே சுழற்சி. தான் கண்ட பழகிய மனிதர்களை உலகை எவ்வித சித்தாந்தப் பூச்சும் இன்றி நம் முன் வைத்துள்ளார் கண்மணி குணசேகரன். ஒரு வித்தியாசமான படைப்பாளி. இன்னமும் ஒரு கிராமத்து விவசாயியின் பிரக்ஞையிலேயே வாழ்பவர். தன்னைச் சுற்று ஒரு ஒளி வட்டம் சுழல்வதாக எண்ணாத ஒரு தமிழ் படைப்பாளி. அதே போலத்தான் யூமா வாசுகியும். அவரும் நாவல்,சிறுகதை, கவிதை, சித்திரம் என பலதுறைகளில் தன்னை வெளிப்படுத்திக்கொள்பவர். அலட்டிக்கொள்ளாத ஒரு தமிழ் எழுத்தாளர். ரத்த உறவு என்னும் நாவலில் அந்த போர்வையில் தன் பால்ய கால வாழ்வைத்தான் எழுதியுள்ளார் என்று சொல்லவேண்டும். தந்தையும், பாட்டியும், இன்னும் மற்ற உறவுகளும் எவ்வளவு கொடூரமாக குழந்தைகளைக் கொடுமைப்படுத்தமுடியும், என்பது மனிதர்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு இரக்கமோ, அன்போ பாசமோ இல்லாது தன் தேவைகளே பெரிதாக எண்ணி, மற்றவர்களை வதைக்கமுடியும் என்பது யூமா வாசுகியின் நாவலை/சுயசரிதத்தைப் படிக்கும்போது இது சாத்தியமா என நினைக்கத் தோன்றும். சிறுவனும் அவன் அக்காவும் தான், இருவருமே சிறு வயதுக் குழந்தைகள் தான், ஒருவருக்கொருவர் பாதுகாப்பென வாழ்வைத் தொடர்பவர்கள். இரு படைப்பாளிகளுமே தம் இயல்பில் தமக்குத் தெரிந்த உலகை எவ்வித அலட்டலும் இல்லாமல் தந்துள்ளனர். அவர்கள் அறிந்த அந்த வாழ்க்கையின் இயல்பான வெளிப்பாடு தான் தமிழுக்கு நாம் அறியாத புது உலகங்களை தந்துள்ளது. தமிழுக்கு வளம் சேர்க்க, லத்தீன் அமெரிக்க, போஸ்ட் மாடர்னிஸ்ட், அதி யதார்த்த, மந்திர வாத அல்ட்டல்கள், முகமூடிகள், தோரணைகள், தேவையில்லை. ஒவ்வொரு தமிழ் வாழ்வும் அதன் இயல்பான வெளிப்பாட்டிலேயே இது காறும் காணாத தனித் தன்மையைத் தந்துவிடும் என்பதற்கு இம்மாதிரியான அலட்டல் இல்லாத படைப்புகள் நிரூபணங்களாகின்றன.


Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்

தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (1)

This entry is part [part not set] of 32 in the series 20090305_Issue

வெங்கட் சாமிநாதன்



இப்போது நினைத்துப் பார்க்கிறபோது, சுற்றியுள்ள பல விஷயங்கள் மனதுக்கு உவப்பாயில்லை என்று சொல்வது, பயந்து சொல்லும் மிதமான வார்த்தைகளாகப் படுகின்றன. உண்மையில். அவை கோரமானவை, கசப்பானவை. வாழ்க்கை மதிப்புகள் மிகப் பயங்கரமாக சரிந்துள்ளன. பொதுவாகச் சொல்வார்கள்: எக்காலத்திலும் மூத்த தலைமுறையினர், இளைய தலைமுறையைப் பார்த்து அலுத்துச் சொல்லும் வார்த்தைகள் தான் இவை என்று. அதுவும் உண்மைதான். எந்த சரிவையும் இப்படி நியாயப்படுத்தும் மனங்களுக்கு, நானே கூட ப்ளேட்டோவின் உரையாடல்களிலிருந்து மேற்கோள்களைச் சான்றாகத் தரலாம், நமக்குத் தெரிந்து 2500 வருஷங்களாக இதே கதை தான் என்று சொல்ல. அதுவும் சரிதான்.

உண்மையில் இதெல்லாம் சரிதானா? 70 வருடங்களுக்கு முன், ‘பணம், பணம், நிறையப் பணம்’ என்ற தேடலிலேயே வாழ்க்கையைக் கழித்த ஒரு பெரிய மனிதர், சாதனையாளர், பத்திரிகாசிரியராகவும் இருந்தார். அதிலும் வெற்றி பெற்றார். அவரிடம் ஒரு கட்டத்தில் ஒரு யோசனை முன் வைக்கப்பட்ட போது, “பத்திரிகை நடத்துவதிலும் சில தர்மங்கள் உண்டு. அதை எந்த லாபத்திற்காகவும் மீறக்கூடாது,” என்று சொல்லி அந்த யோசனையை மறுத்தார் என்று சொல்லப்பட்டது. வியாபார வெற்றியே குறிக்கோளாகக் கொண்டிருந்த அவரிடத்தும் சில தர்மங்கள் வழிகாட்டின. அது ஒரு காலம். எந்நிலையிலும் தர்மங்கள் கைவிடப்படக்கூடாது என்று நினைத்த காலம்.

இன்று புகழிலும், பண சம்பாத்தியத்திலும் வெற்றியின் உச்சியில் இருக்கும் ஒரு எழுத்தாளர், அவரது ரசனைக்கும் கலை உணர்வுகளுக்கும் விரோதமாக, வெகுஜன கவர்ச்சியில் மூழ்கிப் பணமும் பிராபல்யமும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அவரது மனைவிக்கே அது பிடிக்கவில்லை என்று ஒரு கட்டத்தில் தெரிந்தது. எனினும் அவர் அப்பாதையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார். தன் ரசனைக்கே விரோதமான இப்பாதையின் முதல் காலடி வைப்பின் போது, ‘ஏன் இப்படி?’ என்ற கேள்விக்கு, ‘நான் பிழைக்க வேண்டாமா?’ என்பது அவர் பதிலாக இருந்தது. அவர் என் தலைமுறையைச் சேர்ந்தவர். ஆகவே இதில் நாம் காண்பது இரண்டு தலைமுறைகளுக்கிடையே தோன்றிவிட்ட வாழ்க்கை முரண்களை அல்ல. மதிப்புகளின் பயங்கர சரிவை. ஒரு கால கட்டத்தில், அவர் பிராபல்யம் அடையாத ஆரம்ப வருடங்களில், இந்த பாமரத்தனங்களையும் ஆபாசங்களையும் கேலி செய்தவர் என்பது சொல்லப்பட வேண்டும். அந்தக் கேலிகளின் போது நான் உடனிருந்தவன். அன்று கேலி செய்த விஷங்களே இன்று அவரது வாழ்க்கையின் வெற்றிக்கான லட்சியங்களாகி விட்டன. பணத்துக்காக அவர் பாமரத்தனத்தை மட்டுமல்ல, ஆபாசத்தையும் கைக்கொள்ளும் நிலைக்கு அவர் தன் மனத்தைத் தயார் படுத்திக்கொண்டிருந்தார். அவர் பெயரை நான் சொல்லவில்லை. அவரைக் காப்பாற்ற அல்ல. அவரைத் தனித்து சாடுவது நியாயமல்ல. இன்னும் நநூறு ஆயிரம் அவர் போன்ற வெற்றிகள், சிறிது பெரிதுமாக தமிழ் நாட்டில் பெருமிதத்தோடு உலவுகின்றனர். அவர்களையெல்லாம் பெயர் சொல்லாமல் தப்பிக்க விட்டு, இவரை மாத்திரம் சாடுவானேன்?

நம் கண் முன் எல்லோரும் அறிய, எல்லோரும் அதற்கு ஆளாகி அவதிப்பட நடந்தேறியுள்ள ஒரு அராஜகத்தை இல்லையென சாதிக்கும் அதிகார பீடங்கள், அது நடக்காதது போல தலையங்கங்கள் எழுதும் முன்னணி பத்திரிகைகளை இன்று நாம் காண்கிறோம். இந்த பத்திரிகைகளில் ஒன்று, அதன் ராஜ கம்பீர தோரணைக்காக முப்பது நாற்பதுகளில் இந்தியத் தலைவர்களால் புகழப்பட்டது. இன்று அது சில கட்சிகளின் ·பாஸிஸ எதிர்வினைகளுக்கு பயந்து தான் பார்க்காதது போல் பாவனை செய்கிறது. சில ·பாஸிஸ நடப்புகளை நியாயப்படுத்தவும் செய்கிறது. தமிழ் நாட்டு பத்திரிகைகள் எல்லாமே இதே குணத்தைத் தான் கொண்டுள்ளன. மாறுவது சிறிய அளவில் தான். குணத்தில் அல்ல.

பத்திரிகை, இலக்கியம் என்று மாத்திரம் இல்லை. வாழ்க்கை முழுதிலுமே மதிப்புகள் சரிந்துள்ளன. ஒரு கலாச்சார சீரழிவு தொடர்ந்து சரிந்தே வந்துள்ளது. என் சிறு வயதில் என் வீட்டுக்கு எதிரில் குடி இருந்தவர் ஒரு தாசில்தார். ஒரு நாள் தாசிலதாரை சந்தோஷப்படுத்தி தனக்கு சாதகமாக காரியம் செய்துகொள்ள, தன் தோட்டத்தில் விளைந்த காய் கறிகளுடன் அவர் வீட்டு முன் நின்றவனிடம் தாசில்தார் சத்தம் போட்டது கேட்டது. ” நீ ஏன் இங்கே வந்தே? சட்டப்படி உன் பக்கம் தான் நியாயம் இருக்கு. அது நடக்கும். என்னை வந்து நீ பாக்கவும் வேண்டாம், இதெல்லாமும் வேண்டாம். எடுத்துண்டு போ முதல்லே.” இந்த வார்த்தைகளை இன்று எங்கும் கேட்க முடியாது. ஒரு பஞ்சாயத்து யூனியன் அடி மட்ட எழுத்தர் தொடங்கி, உச்ச அதிகார பீடம் வரை. எந்த துறையிலும், எந்த மட்டத்திலும். இலக்கியம் கலை எல்லாம் இந்த சமூகத்திலிருந்து எழுபவை தான். இந்த சமூகத்தின் காற்றை சுவாசித்து வாழ்பவை தான்.அரசியலிலிருந்தும் சினிமாவிலிருந்தும் ஆரம்பித்து, இன்று எல்லாத் துறைகளிலும் இது புற்று நோயாகப் பீடித்துள்ளது.

ஆனால் எல்லோரும் சுவாசிக்கும் காற்று, வாழும் சமூகம் ஒன்றே என்றாலும், வாழும் மனிதர்கள் எல்லோரும் ஒன்றல்ல. நாடு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், சுதந்திர ஜீவன்களாக வாழ்ந்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் இங்கு இருந்திருக்கிறார்கள். இன்றைய தமிழ் இலக்கியத்தின் தொடக்கமே, அன்று பிரிட்டீஷ் ஆதிக்கத்தை எதிராக குரல் எழுப்ப வந்த ஒரு பத்திரிகையில் தான் நிகழ்ந்தது. தமிழ் கவிதையின் புதிய சகாப்தமும் அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்து குரல் எழுப்பிய கவிஞனுடன் தான் தொடங்குகிறது. ஆனால், சுதந்திரம் அடைந்து அறுபது வருடங்களுக்குப் பின்னும், ஏதோ ஒரு அதிகார பீடத்தின் வாசலில் பல்லிளித்து நின்று காத்திருந்து எவ்வித வற்புறுத்தலும் இன்றி தாமே வலிந்து தம் எழுத்தையும் சிந்தையையும் அந்த பீடத்தின் பாதங்களில் சமர்ப்பிக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் இன்று நம்மைச் சுற்றிலும் நிறைய. ஐம்பது வருடங்களுக்கு முன் சிம்மமாக கர்ஜித்த ஒரு எழுத்தாளன் இன்று தானே வலியச் சென்று அதிகாரத்திற்கு தன் அடிபணிந்து மகிழ்ச்சியுடன் அது பற்றிப் பெருமையும் பட்டுக் கொள்கிறான்.

தான் அன்றாடம் வதைபடும் வறுமையின் கொடுமையிலும், ‘என்னை மதியாதவன் வீட்டுக்கு நான் ஏன் போகவேண்டும்?’ என்று தன் சுய கௌரவ வலியுறுத்தலை வெகு சாதாரணமாக, இயல்பாக அமைதியுடன் வெளியிட்ட எழுத்தாளர்களை நான் அறிவேன். எத்தகைய வீராவேச உரத்த அறைகூவல் ஏதுமன்றியே அவரது சுயகௌரவம் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது. அத்தைகைய தன் சுயத்துவத்தின் கௌரவத்தைக் கட்டிக் காப்பாற்றிய மனிதரின் செயல் பாட்டில் தான் (சி.சு. செல்லப்பா) தமிழ் தன் கவித்வத்தையும் விமர்சன பிரக்ஞையையும் திரும்பப் பெற்றது கடந்த நூற்றாண்டின் பின் பாதியில்.

இன்று பல திறனுள்ள எழுத்தாளர்கள், அரசியல் அதிகாரங்களை, சினிமா பிரபலங்களை, பத்திரிகை அதிபர்களை, நாடி அவர் தம் குடைக்கீழ் தம்மை பிரஜைகளாக்கிக் கொள்வதில் ஆசை காட்டுகிறார்கள். பிரஜைகளாகி விட்டதில் பெருமை கொள்கிறார்கள். எந்த கலைஞனும், தான் செயல்படும் எதிலும் தன் ஆளுமையை, தாக்கத்தை, பாதிப்பை பதிக்க இயலவில்லை என்றால், மாறாக ஒரு அதிகாரத்தின், பணபலத்தின் நிழலாகத் தன்னை ஆக்கிக் கொள்கிறான் என்றால் அவன் ஒரு சேவகனே, கலைஞன் இல்லை. என் நண்பர் ஒருவர், வெகு தொலைவில் இருப்பவர், தான் செல்லும் பாதையில் கண்ட ஒரு வாசகத்தைச் சொன்னார். ‘எது ஒன்றிற்காவது நீ தலை நிமிர்ந்து நிற்க வில்லையென்றால், பின் எதற்குமே நீ தலை குனிந்து கொண்டுதான் இருப்பாய், கடைசிவரை’ (If you don’t stand up for something in life, then you end up falling for anything)

காலம் மாறி விட்டது. நம் வசதிகள் பெருகி இருக்கின்றன. நம் வெளியீட்டுக் கருவிகள் எளிமைப்படுத்தப்பட்டு விட்டன. அன்று சிறு பத்திரிகைகள் தான் கதி என்று இருந்த நிலை போய் இடைநிலை பத்திரிகைகள் நிறைய தோன்றியுள்ளன. இருப்பினும் அவை தாமே தேர்ந்து கொண்ட ஏதோ ஒரு வகையில் குழுமனப்பான்மையோடு தான் செயல்படுகின்றன. தன் குழுவைச் சேராதவனை ஒழிக்க நினைக்கும் அல்லது நிராகரிக்கும். வெகுஜன பத்திரிகைகள் சிலருக்கு இடம் அளிப்பது போல் தோன்றினாலும் அவை தமக்கு ஒரு தனக்கு தகுதியில்லாத ஒரு உயர்ந்த பிம்பத்தை கொடுத்துக்கொள்ளவே அந்த ஒரு சிலரை பயன்படுத்திக்கொள்கின்றன. ஆனால் இவை எதுவும் அதிகாரத்திற்கும் ஆசைகளுக்கும் அடிபணியாதவை அல்ல. ஒரு லைப்ரரி ஆர்டர் கிடைத்தால் போதும், அதிகார பீடங்களின் புன்முறுவல் கிடைத்தால் போதும். அங்கு இட்டுச் செல்பவர்களுக்கு ப்ரீதியாக நடந்துகொள்வார்கள். இவை ஒவ்வொன்றும் தனித்தனி ஜமீன்கள். ஆனால் அதிகாரத்திற்கு சலாம் போடும் ஜமீன்கள்.

இது கணிணிகளின் காலமாகி விட்டது. இணைய தளங்களும் கட்டுப்பாடற்ற வெளியீட்டு சாதனங்களாகி உள்ளன. இணைய தளங்களில் எழுதியே தம் பெயரை தமிழ் பேசும் உலகம் பூராவும் தெரியச் செய்துள்ளவர்களும் உள்ளனர். பத்திரிகைகள் சார்ந்தே இருக்கவேண்டும் என்பது அவசியமில்லாது போயுள்ளது. இது இன்றைய நிகழ்வுகளில் ஒன்று. இணைய தளங்கள் நிறைய சுதந்திரம் தருகின்றன. பத்திரிகைகள் ஏற்க மறுப்பவற்றை இணைய தளங்கள் விரும்பி ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் இவற்றின் தாக்கம் விரிந்ததும், அதே சமயம் குறுகியதும் கூட.

இவை போக ஒவ்வொருவரும் தமக்கென ஒரு வலைப்பதிவை உருவாக்கிக் கொள்ளவும் முடிகிறது. ஆனால் இந்த வலைப்பதிவுகளின் உட்சென்று பார்த்தால், அவற்றின் பதிவாளர்களில் பலர் தம் அந்தரங்க ஆளுமையை வெளிப்படுத்திக்கொள்ளும் போது, எவ்வளவு அநாகரீக ஆபாசமும் நிறைந்த ஆளுமைகள் அவை என்று காண கஷ்டமாக இருக்கிறது. ‘நிர்வாணமாக தெருவில் நடக்க வெட்கப்படும் ஒருவன் தன்னை ஒரு தமிழ் எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுவதில்லை” என்று புதுமைப்பித்தன் அன்று சீற்றத்தில் சொன்னதை இன்று இப்பதிவாளர்களின் இயல்பென அலட்டிக்கொள்ளாமல் சொல்லலாம். இதைத் தான் மதிப்புகளின் சரிவு என்றேன். தொழில் நுட்பங்களும், வசதிகளும் மனித ஆளுமையை உருவாக்குவதில்லை. மனித ஆளுமைதான் அதன் குணத்தில் தொழில் நுட்பத்தையும் வசதிகளையும் பயன்படுத்திக் கொள்கிறது. ஒரு கலாச்சார சீரழிவு காலத்தில், தொழில் நுட்ப தேர்ச்சி மதிப்புகளின் சரிவோடு வந்து சேர்ந்துள்ளது. சுதந்திரமும் வசதிகளும் ஒருவனின் அதம குணத்தை வெளிப்படுத்தவே வழிசெய்கிறது.

நான் தடித்த கரிய வண்ணத்தில் சித்திரம் தீட்டுவதாகத் தோன்றக் கூடும். இவையெல்லாம் உண்மைதான் என்ற போதிலும், அன்று அந்நிய ஆதிக்கத்தின் அடக்குமுறையையும் மீறி சுதந்திர குரல்கள் எழுந்தது போல, என்றும் எதுவும் முழுதுமாக இருள் படிந்ததாக இருந்ததுமில்லை. மின்னும் தாரகைகள் எப்போதும் எந்நிலையிலும் காட்சி தரும். கொஞ்சம் பழகிவிட்டால் இருளிலும் கண்கள் பார்வை இழப்பதில்லை. முன்னர் வெகு ஜன சாம்ராட்டுகளாக இருந்தவர்களின் எழுத்தை, இன்று இருபது வயதேயான ஒரு இளம் எழுத்தாளன் கூட, எழுத்து என்று மதிக்க மாட்டான். அந்த சாம்ராட்டுகளுக்கு இல்லாத தேர்ச்சியும் எழுத்து வன்மையும் இன்று தன் முதல் காலடி எடுத்து வைப்பவனுக்குக்கூட இருப்பதைக் காண்கிறோம். அன்று சிறுகதையோ, நாவலோ அதன் மொழியும் உருவமும் எழுதும் திறனும் நம் முன்னோடிகள் பயிற்சியினால் பெற்றது இன்றைய எழுத்தாளனுக்கு பிதிரார்ஜிதமாக வந்தடைந்துள்ளது. இதன் சிறந்த பங்களிப்புகள் நிறைய பேரிடமிருந்து வந்துள்ளன. யூமா வாசுகி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், சுப்ர பாரதி மணியன், யுவன் சந்திரசேகர், சு.வேணுகோபால், உமா மகேஸ்வரி, இமையம், பெருமாள் முருகன், கண்மணி குணசேகரன், சோ.தருமன் என இப்படி நிறைய அவரவர் மொழியோடு, உலகங்களோடு, பார்வையோடு தமிழுக்கு வந்துள்ளனர். கடந்த இருபதாண்டுகளின் தமிழ்ச் சிறுகதையில் இருபது பேரைத் தொகுக்க நான் கேட்கப் பட்டபோது, இருபதுக்குள் அத்தொகுப்பை அடக்குவது எனக்கு சிரமமாக இருந்தது.


Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்