‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஆறு: வெளிக்கள ஆய்வுத் தகவல்கள்!

This entry is part of 57 in the series 20060317_Issue

வ.ந.கிரிதரன்


பழமையின் சின்னங்களைப் பாதுகாப்பதைப் பொறுத்தவரையில் தமிழர்கள் பொதுவாகப் பின்தங்கியவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆண்ட பெருமையை, பழைய வரலாற்றைப்பற்றி வாயளக்கின்ற அளவுக்குப் பழமையின் சின்னங்களைப் பாதுகாப்பதில் நம்மவர்கள் போதிய கவனம் செலுத்துவதில்லை என்பதற்கு நல்லூர் மட்டுமே போதுமானது. ஒரு காலத்தில் இராஜதானியாக விளங்கிய நகரில் இருக்கின்ற ஒரு சில வரலாற்றுச் சின்னங்கள் கூட பரிதாபகரமான நிலையில்தான் காணப்படுகின்றன. புதர்மண்டிக் கிடக்கும் யமுனாரி, கட்டடச் சிதைவுகளுடன் அமைதியிலாழ்ந்து கிடக்கும் பண்டாரக்குளம், தன்னகத்தே ஒரு காலகட்ட வரலாற்றைக் கூறிக்கொண்டிருக்கும் கோப்பாய்க்கோட்டையிருந்ததாகக் கருதப்படும் நிலப்பரப்பு,.. இவையெல்லாம் எத்தனையோ கதைகளைக் கூறி நிற்கின்றன. நல்லூர் இராஜதானியின் பெருமைகளை விளக்கக் கூடிய கட்டடச் சின்னங்கள் மிகச் சொற்ப அளவிலேயே காணக்கிடந்தாலும் தற்போதும் வழக்கிலிருந்து வரும் காணிப்பெயர்கள், வீதிப்பெயர்கள் மூலம் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றிய தகவல்களை ஓரளவிற்கு உய்த்துணர முடிகின்றது.

தற்போது காணப்படும் ஆலயங்களான சட்டநாதர் ஆலயம், வெயிலுகந்தத பிள்ளையார் கோயில், கைலாசநாதர் ஆலயம், வீரமாகாளியம்மன் மற்றும் நல்லைக் கந்தன் ஆலயம் யாவுமே போர்த்துக்கேயரால் இடித்தொழிக்கப்பட்டுப் பின்னர் கட்டப்பட்டவை. இவை நல்லூர் இராஜதானியாக இருந்தபோது உருவான கட்டடங்களாகவில்லாத போனாலும், இராஜதானியாக நல்லூர் நிலவிய போதிருந்த ஆலயங்களின் நகல்களே என்பதால் இவையும் மறைமுகமாக நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பை எடுத்துக் காட்டும் சின்னங்களாகவே திகழ்கின்றன. .

முத்திரைச் சந்தை!

நல்லூர் ஆலயத்திற்குக் கிழக்காகச் செல்லும் வீதியும், பருத்தித்துறை வீதியும் சந்திக்குமிடத்தை அண்டிய பகுதி முத்திரைச் சந்தை அழைக்கபப்டுகின்றது. தமிழர்சர்களின் இராஜதானியாக நல்லூர் இருந்த காலத்தில் இங்குதான் சந்தையிருந்திருக்க வேண்டும். இம்முத்திரைச் சந்தையென்னும் பகுதியினூடு பயணித்த பொழுது , ஒரு காலத்தில் அப்பகுதியில் நிலவியிருக்கக் கூடிய சந்தைக்குரிய ஆரவாரத்தையும், மாளிகையிலிருந்து அதன் நடைமுறைகளை அவதானித்துக் கொண்டிருந்த ஆரிய மன்னர்களையும் ஒருகணம் நினைக்காமலிருக்க முடியவில்லை.

தொழிலாளர்களுக்குரிய தென்கிழக்குப் பகுதி!

பொதுவாகச் சந்தை நகரின் மையத்திலேயே அமைந்திருப்பது வழக்கம். நல்லூர் இராஜதானியின் மையமாக இச்சந்தையிருந்திருக்கும் சாத்தியத்தை மனதிலெண்ணி, நகரினூடு வெளிக்கள ஆய்வை நடத்தியபொழுது பல ஆச்சரியம் தரக்கூடிய தகவல்களை அறிய முடிந்தது. இச்சந்தைக்குத்த்தென்கிழக்காக அமைந்துள்ள பகுதியில் காணப்பட்ட பெயர்கள் பொதுவாக தொழிலாளர்களையே குறிப்பதையறிய முடிந்தது. தட்டாதெரு, சாயாக்காரத்தெரு, ‘கொப்பர் ஸிமித் தெரு ‘, ‘டையர்ஸ் தெரு ‘ போன்ற வீதிப்பெயர்கள் அப்பகுதி ஒருகாலத்தில் தொழிலாளர்களுக்குரிய இருப்பிடமாகவிருந்திருக்கலாமென்பதைக் குறிப்பாகக் கூறி நிற்கின்றன.

வணிகர், வீரர் அரண்மனை ஊழியர்களுக்குரிய பகுதி!

தென்மேற்குப் பகுதியில் காணப்படும் வீதி, காணிப்பெயர்கள் பொதுவாக வணிகர்கள், அரண்மனை ஊழியர்கள், வீரர்கள் போன்றோர்க்குரிய பகுதியாக அப்ப்குதி அமைந்திருக்கலாமோவென்ற சந்தேகத்தினை எழுப்புகின்றன.

அரசர், அந்தணர், அரசவைப் புலவருக்குரிய பகுதி!

முத்திரைச் சந்தைக்கு வடமேற்காக அமைந்துள்ள பகுதி நல்லூர் இராஜதானியின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியென்பதை அப்பகுதியில் காணப்படும் காணி, வீதிப் பெயர்கள், பண்டாரக்குளம் போன்றவை அறிவித்து நிற்கின்றன. முக்கியமான பகுதிகளாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்:

1) சங்கிலித் தோப்பு (மந்திரிமனை அமைந்துள்ள பகுதியின் காணிப்பெயர் சங்கிலித் தோப்பென நில அளவை வரைபடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ‘கல்தோரண வாயில் ‘ எனும் முகப்புள்ள பகுதி சங்கிலித் தோப்பெனப் பொதுமக்களால் அழைக்கப்பட்டு வந்தாலும், அம்முகப்பு அமைந்துள்ள காணித்துண்டின் பெயர் பாண்டிமாளிகை வளவு என நில அளவை வரைபடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.)

2) சங்கிலியன் வீதி,

3) அரச வீதி,

4) பண்டார மாளிகை வளவு,

5) அரசகேசரி வளவு,

6) குருக்கள் வளவு,

7) அரச வெளி,

8) மந்திரிமனை

சங்கிலித் தோப்பு, சங்கிலியன் வீதி, அரச வீதி, அரசவெளி, பண்டாரமாளிகை வளவு, பண்டாரக்குளம் போன்ற பெயர்களே தமிழ் அரசுக்கும், அவற்றிற்குமிடையிலான தொடர்பினைக் கூறி நிற்கின்றன. பண்டார மாளிகை, பண்டாரக்குளம் போன்ற பெயர்களிலுள்ள ‘பண்டார ‘மென்பது தமிழ் அரசரைக் குறிக்குமென்பது பலரது கருத்து. முதலியார் குல சபாநாதன் இது ‘பரராசசேகர பண்டாரத்தைக் குறிக்கு ‘மென்பார். பண்டாரமென்ற பெயரில் முடியும் தமிழ் மன்னர்கள் பலர் இருந்திருக்கின்றார்கள். புவிராஜ பண்டாரம் அவர்களிலொருவன். பரராசசேகரனின் பட்டத்து மனைவியான இராசலக்குமியின் புத்திரர்களிலொருவனின் பெயரும் பண்டாரம். பண்டாரமாளிகை வளவு என்ற பெயரில் வழங்கப்படும், ஆறு ஏக்கர் விஸ்தீரணமுள்ள தென்னந்தோப்பு, தற்போதைய நல்லூர் முத்திரைச் சந்தையை அண்மித்த, பருத்தித்துறை வீதியை நோக்கிக் காணப்படுகிறது. இவ்வளவின் பருத்திதுறை வீதியை நோக்கிய பகுதியில் பண்டாரமாளிகை என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட தூணொன்று காணப்படுகின்றது. இதற்கண்மையில் சிறியதொரு முகப்புடன் கூடிய வயிரவர் சிலையொன்று காணப்படுகின்றது. அம்முகப்பில் பின்வரும் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.:

‘இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழ் மன்னர் வழி காத்துப் பூஜித்த நல்லை தேரடிப் பதியுரை பண்டாரமாளிகை வாசல் ஸ்ரீ பைரவர் ஆலயம் ஆதிமூலம் உள்ளே ‘

அரசகேசரி வளவு!

இப்பகுதியில் காணப்படும் காணித்துண்டொன்றின் பெயர் அரசகேசரி வளவு. காளிதாசனின் வடமொழி நூலான ‘இரகுவம்சத்தை ‘த் தமிழ்ப்படுத்திய தமிழ்க் கவிஞனான அரசகேசரியை ஞாபகமூட்டுவது இந்த வளவு. அரசகேசரியைப் பரராசசேகரனின் மருமகனாக மயில்வாகனப் புலவர் கூறுவார்:

‘… பரநிருபசிங்கனின் மைத்துனனும், பரராசசேகரனின் மருமகனுமாகிய அரசகேசரி என்பவன் இரகுவம்சம் என்னும் நூலை வடமொழியிலிருந்தும் மொழிபெயர்த்து பிராணநடையாகப் பாடித் திருவாரூரிலே கொண்டு போய் அடைந்தான் ‘ (யாழ்ப்பாண வைபவமாலை -50-51).

முதலியார் இராசநாயகமோ சிங்கைப் பரராசசேகரனின்மைத்துனன் எனச்சொல்வார்:

‘..இன்ன காதையின்ற விரும்பொருட்

டுன்னு செஞ்சோற் றுகடபு தூய நூல்

பன்னு செஞ்சோற்பரராசசேகர

மன்ன னின்ப மனங்கொள வாய்ந்ததே.. ‘

சுவாமி ஞானப்பிரகாசரோ இரகுவம்சம் எதிர்மன்னசிங்க பரராசசேகரன் காலத்தில் இயற்றப்பட்டதென்பர். மேற்படி பரராசசேகரன் சிங்கைப் பரராசசேகரனா அல்லது எட்டாம் பரராசசேகரனா என்பதில் நிலவும் குழப்பத்தின் விளவுதான் மேற்படி முரண்பாட்டிற்குக் காரணம்.

குருக்கள் வளவு!

தற்போதுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயம் அமைந்துள்ள காணியின் பெயர் குருக்கள் வளவு. தமிழரசர் காலத்தில் அந்தணர்கள் வாழ்ந்த பகுதியானதால் இக்காணி குருக்கள் வளவு என அழைக்கப்பட்டது போலும்.

சங்கிலித் தோப்பும் மந்திரிமனையும்!

தற்போது மந்திரிமனையென அழைக்கப்படும் கட்டடம் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியைச் சேர்ந்ததாகக் கூறுவர். ஐரோப்பிய, திராவிடக் கட்டடக் கலையின் கூறுகளை இக்கட்டடத்தில் காணலாம். இந்த மந்திரிமனை அமைந்துள்ள காணியின் பெயர் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதுபோல் சங்கிலித்தோப்பென அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதி மன்னனுக்குரியதா அல்லது மந்திரிக்குரியதாவென்பதைத் தீர்மானிப்பது சிறிது சிக்கலானது. இருந்தாலும் இப்பகுதிகண்மையில் அரசவெளி, அரசவீதி, சங்கிலியன் வீதி, பண்டாரக்குளம், பண்டாரமாளிகை வளவு என அரசகுலத்தவர்களுக்கே அதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் அதிகமாக இருப்பதும், மேற்படி மந்திரிமனை அமைந்துள்ள காணித்துண்டு சங்கிலித்தோப்பென நிலஅளவை வரைபடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதும் சிந்தனைக்குரியது. தமிழரசருக்குச் சொந்தமான தோப்பொன்று இப்பகுதியில இருந்திருக்கலாம்; பின்னாளில் அன்னியர் ஆட்சிக்காலத்தில் அவர்கட்கடங்கி பெயருக்கு ஆட்சி புரிந்த தமிழ் மன்னரின் வம்சத்தவர்கள் காலகட்டத்தில் அல்லது அதற்குப் பின்னர் மந்திரியொருவனின் இருப்பிடமாக இத்தோப்பிருந்திருக்கலாமென்று நினைப்பதற்கும் சாத்தியங்கள் இல்லாமலில்லை. இவையெல்லாம் மேற்படி வடமேற்குப் பகுதியின் முக்கியத்துவத்தைக் கூறி நிற்கும் சின்னங்களாகும்.

அரசதெய்வ முக்கியத்துவம் வாய்ந்த வடகிழக்கு!

இந்த வடகிழக்குப் பகுதியில் காணப்படும் முக்கிய வரலாற்றுச் சின்னங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

1) யமுனாரி (யமுனா ஏரி)

2) தற்போது காணப்படும் கிறிஸ்தவ ஆலயமுள்ள பகுதி. இதுவே பழைய கந்தசுவாமி ஆலயம் அமைந்திருந்த பகுதி.

3) ஒல்லாந்துக் கட்டடக் கலையினைப் பிரதிபலிக்கும் மாளிகையொன்றின் முகப்பு. பொதுமக்களால் ‘சங்கிலித் தோப் ‘பென அழைக்கப்படும் இப்பகுதிக் காணித்துண்டின் பெயர் ‘பாண்டிமாளிகை வளவு ‘ என நில அளைவை வரைபடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி சரித்திரச் சின்னங்களே இப்பகுதி அரச, தெய்வ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியென்பதைப் புலப்படுத்தும்.

—-

Series Navigation