மைக்ரோ சாஃப்ட் நுழைந்த நாடு

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

கோ ராஜாராம்


மைக்ரோசாஃப்ட் இந்தியாவிற்கு பல மில்லியன் டாலர்கள் ‘உதவி ‘ செய்வதும், அது பில் கேட்ஸ் இந்தியா மீது கொண்டுள்ள அன்பின் விளைவு என்றும் பலர் நினைக்கலாம். இன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குறியீடுகளாய் இருப்பவை கோக், பெப்சி, ஃபோர்ட், மைக்ரோசாஃப்ட். இவற்றில் மற்ற கம்பெனிகளைக் காட்டிலும் நாம் மைக்ரோசாஃப்ட் பற்றித்தான் மிகவும் அஞ்சவேண்டும். ஏன் ? கோக், பெப்ஸி போன்றவை நம் உணவுப் பழக்கத்தை மாற்றிஅமைக்கின்றன. ஆனால் ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் போல யாரும் மனம் வைத்தால், கோக் – பெப்ஸி கம்பெனிகளை அரசு மேற்கொள்ளலாம். அல்லது மூடி சீல் வைத்துவிடலாம். சில வேலை வாய்ப்புகள் பறிபோகும். கோக்குக்குப் பதில் பெப்ஸிக்குப் பதிலாக கோலி சோடாவையும் கலரையும் சாப்பிட்டு நாம் சந்தோஷமாய் இருக்கலாம்.

ஆனால் மைக்ரோசாஃப்ட் அப்படியல்ல. மைக்ரோசாஃப் மென்பொருளை வாங்கும்போது மைக்ரோசாஃப்ட் மென்பொருள் உங்களுக்குச் சொந்தமல்ல. நீங்கள் தான் மைக்ரோசாஃப்ட் மென்பொருளுக்குச் சொந்தம். சமீபத்திய ஜன்னல்களில் வேவு பார்க்கும் மென்பொருள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

எக்ஸ்பி ஜன்னல் ஆபரேட்டிங் சிஸ்டம் எப்படி தனிமனித உபயோகிப்பாளர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து மைக்ரோசாஃப்ட் மையத்திற்கு தகவல் அனுப்புகிறது என்பது பற்றி பல புகார்கள் வந்தன. இன்று சொந்தக் கணிணிகளின் மென்பொருள் சந்தையில் 99.9999 சதவீதம் மைக்ரோசாஃப்ட் ஆக்கிரமித்துள்ளது. அதாவது மைக்ரோசாஃப்ட் நிர்ணயிக்கும் விலை, நியமிக்கும் நிபந்தனைகள் இவற்றை மறுப்பதற்கு நுகர்வோருக்கு வழியே இல்லை.

இன்று மைக்ரோசாஃப்ட் இந்தியச் சந்தையைமையப் படுத்த பல காரணங்கள் உள்ளன. இந்தியாவின் மத்தியதரவர்க்கம் ஏற்கனவே மிகவும் ஆங்கிலமயமாக்கப் பட்டுவிட்ட, மேற்கத்திய மோகம் நிரம்பிய மத்தியதரவர்க்கம் என்பது ஒரு காரணம். இரண்டாவது எண்ணிக்கையில் மிக அதிகமானது இந்திய மத்தியதர வர்க்கம். மூன்றாவது சீனா போலல்லாமல் ஓரளவு ‘சுதந்திர ‘த் தேர்வுக்குப் பழக்கப் பட்டது என்பதால் , இந்த மத்தியதரவர்க்கத்தின் தேர்வுகளையும் ரசனைகளையும் பாதிப்பது – விளம்பரங்கள் மற்றும் செய்திவடிவில் தரும் விளம்பரங்கள் மூலமாக – எளிது என்பது இன்னொரு காரணம்.

மைக்ரோசாஃப்ட் இதுவரையில் மேற்கொண்ட நியாயமற்ற வர்த்தக வழிமுறைகள் (unfair trade practices) ஏராளம்.

1995-ல் நெட்ஸ்கேப் முதன்முதலில் இணையத்தில் நீந்த எளிமையான ஒரு மென்பொருளை அறிமுகம் செய்தது. இணையத்தின் எதிர்காலம் பற்றிய தொலைநோக்குப் பார்வையைப் பெற்றிராத மைக்ரோசாஃப்ட் தன் உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டது. ஜன்னல்-95 தொடங்கி மைக்ரோசாஃப்ட் படைப்பான ‘எக்ஸ்ப்லோரர் ‘ ஜன்னலுடன் இணைத்து வழங்கலாம் என்றும் , மற்றவற்றில் நெட்ஸ்கேப் இயங்கலாம் என்று ஒரு ஒப்பந்தத்திற்கு நெட்ஸ்கேப்பை மைக்ரோசாஃப்ட் நிர்ப்பந்தித்தது. அதாவது, போட்டியினால் மக்கள் பெறும் பயன்களைத் தவிர்க்க , சந்தையைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தன்னுடைய மேலாண்மையைத் தக்க வைத்துக் கொள்ள மைக்ரோசாஃப்ட் முயன்றது. இந்த சமயத்தில் ‘எக்ஸ்ப்லோரர் ‘ மென் பொருள் தயார் நிலையில் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2001-ல் எக்ஸ்-பி ஆபரேட்டிங் சிஸ்டத்தில் உபயோகிப்பாளர்கள் பற்றிய தனிப்பட்ட தகவல்களை, உபயோகிப்பாளர் அறியாமலே சேகரிப்பது பற்றி தனிமை விரும்பும் குழுக்கள் புகார் செய்தன. ஃபெடரல் றேட் கமிZஅன் என்ற அமெரிக்க அரசாங்க மேற்பார்வை அமைப்பு மைக்ரோசாஃப்டைக் கண்டனம் செய்தது. ஐரோப்பிய யூனியனும் இது குறித்து புலன் விசாரணையைத் ஹொடங்கியது.

2003-ல் ஐரோப்பிய யூனியன் மைக்ரோசாஃப்டிற்கு எதிராக புகார்களைப் பெற்றது ரியல் ஆடியோ, ஆப்பிள் போன்ற கம்பெனிகளின் மென்பொருளை பாதிக்கும் வண்ணம் ஜன்னல் மீடியா ப்ளேயர் என்ற மென்பொருளை ஜன்னல் ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் ஒன்றாய்க் கட்டி விற்பனை செய்தது பற்றியது இந்தப் புகார். இதன் மீது விசாரணை நடந்து 2004 மார்ச்சில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு 700 மில்லியன் டாலருக்குமேல் அபராதம் விதிக்கப் பட்டது.

ஜன்னல் மென்பொருளின் மூல ப்ரோகிராம்களை மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் இட்ட உத்தரவு இன்னமும் மைக்ரோசாஃப்டால் பின்பற்றப் படாமல் இருக்கிறது.

சன் மைக்ரோசிஸ்டம் கம்பெனிக்கு இப்போது மைக்ரோசாஃப்ட் கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர்களை வழங்கி அதன் வாயை அடைத்திருக்கிறது.

****

மைக்ரோசாஃப்ட் மேலாண்மையை இந்தியா தவிர்க்க என்ன வழிகள் உண்டு ?முதலாவதாக அரசு நிறுவனங்களில் திறந்த மென்பொருள் தரத்தில் வெளீயாகும் லினக்ஸ் போன்ற ஆபரேட்டிங் சிஸ்டம் புழங்கப் படவேண்டும். மைக்ரோசாஃப்ட் மென்பொருள்களுக்கு அரசாங்கம் தடை விதிக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைக்கு அமெரிக்க வரலாற்றிலேயே உதாரணம் உண்டு. ஐ பி எம் அறுபது எழுபதுகளில் மிக வலிமை வாய்ந்த விதமாய் பெரும் கம்ப்யூட்டர்கள் சந்தையை ஆக்கிரமித்தபோது, அமெரிக்க அரசே முன்வந்து பரோஸ் என்ற கம்ப்யூட்டர் கம்பெனிக்கு ஆதரவு அளித்தது. இதனால் ஐ பி எம்மிம் மேலாண்மை ஒரு கட்டுக்குள் வந்தது.இன்று இந்தியா மைக்ரோசாஃப்டின் மேலாண்மையை வீழ்த்த பல விதங்களில் தகுதி கொண்ட நாடும். மென்பொருள் அமைப்பில் மிகத் திறமை வாய்ந்த பொறியாளர்களைக் கொண்டது இந்தியா. அரசாங்க ரகசியங்களில் மைக்ரோசாஃப்ட் கையை வைப்பதைத் தவிர்க்க இது தவிர வேறு வழியில்லை.

இரண்டாவதாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மைக்ரோசாஃப்டிலிருந்து விலகிய தொழில் நுட்பம் செயல்படுத்தப் படவேண்டும். பெரும் கம்ப்யூட்டர் கம்பெனிகள் முதலில் கையை வைப்பதே பள்ளி மற்றும் கல்லூரிகளில் தான். இது ஒரு வியாபாரத் தந்திரம் . கல்லூரி முடிந்து வேலைக்குப் போகும் – முக்கியமாய் மேலாளர் பணிக்குப் போகும் – ஆட்கள் ஏற்கனவே அவர்கள் கல்லூரியில் அறிந்திருந்த கம்பெனியின் ஆக்கங்களுக்கு முதல் முன்னுரிமை அளிப்பார்கள் என்பது இந்தக் கம்பெனிகளின் கணக்கீடு. எனவே லினக்ஸ் பள்ளி-கல்லூரிகளில் நடைமுறைப் படுத்தப் பட்டால் மைக்ரோசாஃப்ட் வலுவிழக்கும் என்பதைவிடவும் முக்கியம் – பெரும் பணச் சேமிப்புக்கு இது வழி வகுக்கும்.

****

மைக்ரோசாஃப்ட் ஜன்னலுக்கு மாற்றாக ஆசியாவில் மேற்கொள்ளப் படும் மற்ற முயற்சிகளுக்கு சீனா, கொரியா, ஜப்பான் இணைந்து செயல்படுகின்றன.

http://news.com.au/common/story_page/0,4057,9166246%255E15322,00.html

http://zdnet.com.com/2100-1104-5185601.html

இந்தியா இந்த நாடுகளின் கூட்டுச் சேர்ந்து மாற்று முயற்சிகளை உருவாக்கலாம். அல்லது இந்திய அரசே தன் சார்பில் ஒரு மலிவான மாற்றை உருவாக்கலாம்.

****

gorajaram@yahoo.com

Series Navigation

கோ ராஜாராம்

கோ ராஜாராம்