குறிப்புகள் சில- 31 ஜூலை 2003- காட்கில்,வோல்வோ பரிசு-மறைமலையடிகள் நூலகம்-மேரி கல்டோர் -உலக சிவில் சமூகம்

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


பேராசிரியர் மாதவ் காட்கில் 2003ம் ஆண்டுக்கான வோல்வோ சுற்றுச்சூழல் பரிசிற்காக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்தியாவைச் சேர்ந்த அமுல்ய குமார் ரெட்டி, எம்.எஸ்.சுவாமிநாதன் இதற்கு முன் இப்பரிசைப் பெற்றுள்ளனர். காட்கில் ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பல பல்கலைகழகங்களில் பணியாற்றியுள்ளார். பெங்களூரிலுள்ள Indian Institute of Science (IIsc) ல் பேராசிரியர்.தனது ஆய்வுகள் மூலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் சூழல் குறித்து பல உண்மைகளை கண்டறிந்தவர்.

புனிதக் காடுகள் உட்பட பலவற்றை ஆராய்ந்து காடுகள்/சூழல் பாதுகாப்பில் வெகுஜன பங்கேற்பு அவசியம் என வலியுறுத்தியவர். பொது மூலவளங்கள்(common property resources) குறித்து ஆய்வுகள் செய்துள்ளார். அறிவியல், சூழல் குறித்து பலரும் அறியும் வண்ணம் ஊடகங்களிலும் எழுதுபவர்.

தன் நூல்கள்/கட்டுரைகள் மூலம் இந்தியாவில் வளர்ச்சி என்பது சமத்துவம், சூழல் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு எதிராக உள்ளது என்பதை வலியுறுத்தியவர். இவர் இவ்வாறு பல வழிகளில் பங்களிப்பு செய்திருந்தாலும், அவர் சூழல்துறை ஆய்வுகள் குறித்து செய்தவை முக்கியமானவை. 1983 ல் அவர் ஏறப்டுத்திய Center For Ecological Sciences இன்று உலகப்புகழ் பெற்ற ஒரு ஆய்வு நிறுவனம். அவர் உறுப்பினராக இருந்த/இருக்கும் குழுக்கள்/ஆய்வு அமைப்புகள் பல. அமைதிப்பள்ளதாக்கு திட்ட ஆய்வுக்குழுவில் அவர் உறுப்பினர்.இன்று சர்வதேச அளவில் GLOBAL ENVIRONMENT FACILITY, THE COVENTION ON BIOLOGICAL DIVERSITY உட்பட பல அமைப்புகளின் அறிவியல் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுக்களில் இவர் உள்ளார். மக்கள் பங்கேற்ப்பு மூலமே இந்தியாவில் உயிரின பன்வகைத்த்ன்மை பாதுகாக்கப்பட முடியும் என வலியுறுத்தும் காட்கில் மக்கள் அறிவை பதிவேடுகள் மூலம் பாரம்பரிய அறிவினை பிறர் முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்க முடியும் என பரிந்துரைத்தார்.இந்தியாவில் சூழல் துறையில் அவர் செய்த பங்களிப்புகள் அவர் ஒரு முன்னோடி என்பதை நிரூபிப்பவை. அது குறித்து ஒரு தனிக்கட்டுரை தேவைப்படும்


சென்னையிலுள்ள மறைமலையடிகள் நூலகம் குறித்து பேரா. நாச்சிமுத்து தினமணியில் எழுதிய கட்டுரை அதிர்ச்சி தருகிறது. இப்படி எத்தனை நூலகங்களில் உள்ள அரிய நூல்களும், ஒலைச்சுவடிகளும், கையெழுத்துப் பிரதிகளும் மெதுவாக அழிந்து கொண்டிருகக்கின்றன என்பது கூட நமக்குத் தெரியாது.

இவற்றை திரட்டி பாதுகாத்து, பதிப்பிக்க, தொழில்நுட்பங்களைக் கொண்டு கணிணி மூலம் தொகுப்புகள் ஏற்படுத்த ஒரு அமைப்பினை ஏற்படுத்த வேண்டும். ரோஜா முத்தையாவின் சேகரிப்புகள் கவனமாக பாதுகாக்கப்பட்டு ஆராய்ச்சிக்கு பயன்படும் வகையில் பாதுகாக்கப்பட்டுள்ளன.தமிழரின் பாரம்பரியம் குறித்து அக்கறையுடையவர்கள் இதனை ஒரு மாதிரியாகக் கொண்டு மறைமலையடிகள் நூலகம் போன்றவற்றிலுள்ளவற்றை பாதுகாக்க, தொகுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தீவிரமாக யோசிக்க வேண்டும்.

தேவைப்பட்டால் UNESCO போன்ற அமைப்புகள் உதவியுடன் தமிழகத்தில் ஒரிடத்தில் இதற்கென தனி நூலகம்-ஆய்வு மையம் அமைக்க வேண்டும்.


மேரி கல்டோர் எழுதிய Global Civil Society An Answer To War என்ற நூலை சமீபத்தில் படித்தேன். கல்டோரின் நூல் சிவில் சமூகம் என்பதின் வரலாற்றையும், இன்று சிவில் சமூகம் என்ன செய்கிறது, என்ன செய்ய முடியும் என்பதை ஆராய்கிறது. தேசிய அரசுகள் வலுவாக இருந்த காலத்தில் சிவில் சமூகம் என்பது தேசிய எல்லைக்குற்பட்ட ஒன்றாக கருதப்பட்டது

ஆனால் இன்று சிவில் சமூகம் என்ற கருத்து உலகாளாவிய அளவில் பொருந்தக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது.

பனிப்போர் நிலவிய போது ஐரோப்பாவில் பசுமை இயக்கங்கள்,மனித உரிமை இயக்கங்கள்,அமைதி இயக்கங்கள், சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பாவிலுள்ள தனி நபர்கள், இய்க்கங்கள் உதவியுடன் பொதுவான லட்சியங்கள்,கருத்துக்கள் குறித்து தொடர்ந்து உரையாடியன. இரு தரப்பிலும் அரசுகள் இது குறித்து சந்தேகம், அதிருப்பதி தெரிவித்தாலும் அரசுக்களுக்கு அப்பால் இவற்றின் பணி தொடர்ந்தது. கிழக்கு ஐரோப்பாவில் சிவில் சமூகத்தில் சில முன்னோடி முயற்சிகளுக்கு பிற நாடுகளிலிருந்து கிடைத்த ஆதரவு காரணமாக அவை அரசுகளை எதிர்க்க முடிந்த்தது.

அதே சமயம் மேற்கு ஐரோப்பிய அரசுகள் பசுமை இயக்கங்கள்,மனித உரிமை இயக்கங்கள்,அமைதி இயக்கங்கள் போன்றவற்றின் முயற்சிகளை சந்தேகித்த்தன. ஆனால் கோர்ப்சேவ் பதவி ஏற்ற பின் சோவியத் யூனியன்,கிழக்கு ஐரோப்பாவில் சிவில் சமூகம் ஒரு புதிய பாய்ச்சலுடன் அடுத்த கட்டதினை நோக்கி நகர்ந்தது. இந்தப் பிண்ணணியை விரிவாக எழுதும் கல்டோர் E.P.தாம்ப்சன் 1989ல் ஏற்பட்டது போன்ற ஒரு மாறுதல் வரும் என பல ஆண்டுகள் முன்னரே, தெளிவாக எழுதியிருந்த்தை சுட்டிக்காட்டுகிறார். சிவில் சமூகம் குறித்து பார்த்தா சாட்டர்ஜி, நீரா சாண்டோக் உட்பட பலர் எழுதியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். சிவில் சமூகம் குறித்த ஒரு தெளிவான பார்வையை நம் முன் வைக்கிறார் கல்டோர். கிடைத்தால் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்


Series Navigation