கஷ்டமான பத்து கட்டளைகள்.

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

கோமதி நடராஜன்


பெற்றோர்களின் நிழலில் இருக்கும் வரை,சகோதர சகோதரிகளுக்கிடையே நிலவி வந்த பாசம்,நேசம் எல்லாம்,அவரவர்கள் மனைவி குடும்பம் குழந்தைகள் என்று கிளை விட்டபின்,ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்ற வாக்கியத்தை உண்மையாக்குவது போல்,பாசத்தில் ஒரு கீறல்,பிணைப்பில் ஒரு பிரிவு,அணைப்பில் ஒரு பாசாங்கு,என்று நூலிழையாக நுழைந்து,உறவுக்குப் பாலம் கூடக் கட்ட முடியாத அகழியாகப் பள்ளம் விழுந்து விடுகிறது.இது எப்படி நிகழ்கிறது ?இதற்கு, முக்கியமான காரணம்,பெற்றோர் விட்டுச் சென்ற சொத்து . எப்படியும் போகட்டும் என்று உயில் எழுதப் படாமல் விடப்பட்ட சொத்து அல்லது ,பாரபட்சமாக எழுதப்பட்ட உயில்.இவைதான், உறவின் தரத்தை உரசிப் பார்க்கும்,உரைகல்.சொத்துப் பிரிவினை,பல வீடுகளில், உறவையும் சேர்த்தே பிரித்துவிடுகிறது.இது ஏற்படுத்தும் சல சலப்பு ,புற்று நோய் போல் அகத்தைப், பலகாலம் அரித்த பின் முகத்தில் கோபத்தையும்,விரோதத்தையும்,சந்தேகத்தையும்,அவநம்பிக்கையையும் அப்பட்டமாகக் காட்ட வைக்கிறது.

இவைகளை எப்படித் தவிர்க்கலாம் ?

முன்னோர்கள் விட்டுச் செல்லும் சொத்துக்களுக்கு,நாம் அடிமையாகி விடாமல், அவைகளை நமக்கு, அடிமைகளாக, ஆக்கிக் கொள்ளவேண்டும். கொஞ்சம் சிரமம்தான்,ஆனால் முயன்று பார்ப்பதில் தவறில்லையே ?நாம் சேர்த்த சொத்துக்கு நாம் அடிமையாவதே,வெட்கத்துக்குரிய விஷயம்.இதில் அடுத்தவர் சேமிப்புக்கு நாம் அடிமையாவது,அதை விடக் கேவலம். ஒரு நோய் நம்மை அணுகாமல் நம்மை நாம் எப்படி பாதுகாத்துக் கொள்கிறோமோ,அதைவிடக் கவனமாகச் சில கருத்துக்களைத் தெள்ளத் தெளிவாக உள்ளத்தில் இருத்திக் கொண்டால்,மன ஆரோக்கியம் நிச்சயம்.சில சமயம் சில மருந்துகள் கசக்கத்தான் செய்யும், கஷ்டமாகத்தான் இருக்கும்.விழுங்கித்தான் பார்ப்போமே.

1# அடுத்தவரைச் சேரவேண்டிய செல்வம், நம் இல்லத்தில் இருந்தால்,நம் வீடு தேடிவரும் லட்சுமி,நம் வீட்டினுள் நுழையாமல் வாசற்படியிலேயே நின்று விடுவாள்.ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டியவளை வாசலிலேயே நிறுத்தி விடலாமா ?

2# எல்லோருக்கும் தெரியும் ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள்.மூன்றாவது பக்கம் ஒன்று உண்டு, ‘நாம் யார் மனதையும், புண்படுத்தாமல்,ஏமாற்றாமல் ஈட்டிய நாணயம் இது ‘ என்று நம் மனசாட்சி, குத்திய முத்திரை பதிந்த பக்கம்தான்,நம்,அககண் மட்டுமே அறிந்த, அந்த மூன்றாவது பக்கம்.நாம் வைத்திருக்கும் நாணயம், நம்மிடம் தங்குவது, தவறிப் போவதும் ,அந்த மூன்றாவது முத்திரையைப் பொறுத்திருக்கிறது.

3# நாம் ஈட்டிய பொருள் நம் குழந்தைகள் கையில்தான் போய்ச்சேரும் என்று எத்தனை நம்பிக்கையுடன் பொருள் சேர்கிறோமோ அதே நம்பிக்கையை நம் பாவபுண்ணியங்களும் நம் குழந்தைகளைப் போய்ச் சேரும் என்பதிலும் வைக்க வேண்டும்.நாம் ஆயிரத்துக்கு அடுத்தவரை ஏமாற்றினால் நம் குழந்தைகள் லட்சத்தை,யாரிடமாவது இழந்து நிற்பார்கள்.அர்ஜுனனின் அம்பு கூடக் குறி தவறலாம்.நம் பாவ புண்ணியங்களின் பலன்கள்,சந்தேகத்துக்கு இடம் இல்லாமல்,அது நம் சந்ததியருக்குத்தான்.

4# சட்டப்படி நாம்,நம் முன்னோர்களின் சொத்துக்கு,நூறு சதவிகிதம் சொந்தக்காரர்களாகலாம், ஆனால்,தகுதிப்படி கணக்கிட்டால்,பத்து கூடத் தேறாது.இதை உணராமல், சொத்துப் பத்திரங்களைத் தொட்டால் மனசாட்சி பட படக்கும். உர்ந்து தொட்டால் நல்ல தீர்வு கிட்டும்.

5# அரியணையையும் ஆரண்ய வாசத்தையும் ஒன்றாக நினைத்து வாழ நாம் ராமர் இல்லைதான்.அதற்காக,கிடைத்ததைப் பகிர்ந்துண்ணும் ஒரு காகமாகக் கூடவா வாழமுடியாது ?பசிக்குத் தேவையானவற்றை எடுத்து விட்டு மீதியை விட்டு விடும் மிருகங்களாகக் கூட இருக்கலாம், தப்பில்லை.சமயத்தில் ஐந்தறிவு ஜீவன்கள் நமக்கு ஆசானாக உயர்ந்து நிற்கின்றன.

6# பணம் தேவையில்லை என்று சொல்ல நாம் முற்றும் துறந்த முனிவர் இல்லை அதற்காக அடுத்தவருக்கு உரிமையானதைத் தட்டிப் பறிக்கும் வழிப்பறிக் கொள்ளைக்காரனாகலாமா ?

7# ‘நாம் போகும் போது என்ன கொண்டு போகிறோம் ‘என்ற வேதாந்தத்தை, பலனை அனுபவிப்பவர்கள்,பாதிக்கப் பட்டவர்களுக்கு மட்டும் ஓதிக் கொண்டிருக்காமல்,தங்கள் மனதிலும் இருத்தினால்தான்,நல்ல தராசாக இயங்க இயலும்.

8#நம் சொந்த முயற்சியில் ஈட்டிய ஒரு கோடி நமக்கு அடிமை என்றால் ,அடுத்தவர் உரிமையைத் தட்டிப் பறித்து எடுத்த ஒற்றை ரூபாய் ஆயுளுக்கும் நம்மை ஆட்டி வைக்கும் சர்வாதிகாரி.கவனமாக இருப்போம்.

9#விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போகும் தயாள குணத்தை உங்களுக்கு ஆதாயமாக்கிக் கொள்ளாதீர்கள்.கை ஓங்குபவர்களை முடிந்தால் எதிர்த்து அடக்க நினைக்கலாம் தவறில்லை,கை கட்டி நிற்பவர்களைக் காயப் படுத்தாதீர்கள்.

10#சொத்துப் பத்திரம் கையெழுத்துப் போடப் பட்டு ஜாக்கிரதையாக வைத்திருக்க வேண்டும் என்பதால்தான் அதற்குப் பத்திரம் என்றானது மட்டுமல்ல,கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் பத்திரம் என்றும் அர்த்தமாகலாம்.

***

komal@ambalam.com

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்