பெண் – குழந்தை … குமரி … அம்மா

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

விருட்சம்



ம்மா … பக்கத்துக்கு வீட்டு கன்றுக் குட்டி விடாமல் கத்தியது.
பாவடையை காலுக்குள் இடுக்கிக் கொண்டு ஒரு கல் மேல் காலை வைத்து உடலை வீட்டுச் சுற்று சுவர் மேல் சாய்த்து கழுத்தை சுவற்றின் மேல்புறம் வைத்து கொஞ்சம் எட்டி தலையை அடுத்த வீட்டுக் கொல்லையில் நீட்டி அங்கே இருக்கும் மாட்டுக் கொட்டிலை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள் வசந்தி.

அங்கே தாய்ப் பசுவின் மடியில் முட்டி பால் குடிக்க எத்தனித்த கன்றுக் குட்டியை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்துக் கொண்டு போய் கொட்டிலின் வேறு ஒரு தூணில் கட்டி விட்டு பசுவின் மடியில் இருந்து பால் கறக்கத் துவங்கினார் பால்காரக் கோனார். கன்றுக் குட்டி பசியில் பாலுக்காக விடாமல் தீனமாகக் கத்திக் கொண்டே இருந்தது. ஒன்றும் செய்ய இயலாமல் பாலை தாரைவார்த்துக் கொண்டிருந்த பசுவை பார்க்க பாவமாக இருந்தது.

பாலைக் கறந்து முடித்த பின் கன்றுக் குட்டி அவிழ்த்து விடப்பட்டது. கயிறு அவிழ்ந்தது தான் தாமதம் துள்ளி பாய்ந்து வந்து தாயின் மடியில் ஆர்வமுடன் முட்டிய கன்றுக் குட்டியை பார்க்க ஆனந்தமாக இருந்தது எட்டு வயது வசந்திக்கு. பால் இருக்குமா ? சந்தேகம் கூடவே எழுந்தது.

வாசந்தீ…. அமாவின் குரலை அவள் கவனத்தைக் கலைத்து வீட்டுக் குள்ளே இட்டுச் சென்றது. பள்ளிக்கு நேரமாச்சே.

என்னடி, உருளைக்கிழங்கு வறுவலா?
டப்பா நொடியில் காலியானது.
நீ என்ன சப்பாத்தியா?
இவ ஒருத்தி எப்போ பாரு தயிர் சாதம் . ஏய் மாவடு. குடுடி இப்படி.
அது கல்லூரி மதிய இடைவேளை நேரம். சத்தத்துக்கு குறைச்சலே இல்லை. வசந்தி & கோ வின் நட்பு வட்டம் களை கட்டியிருந்தது. அது நகர வாசனை அதிகம் படாத கிராமத்துக் கல்லூரி.

ஆச்சு. இதோ இன்னும் ஒரு செமஸ்டர். அப்புறம் என்ன செய்யறதா உத்தேசம்?

நான் மாமா பையனை கல்யாணம் பண்ணி குடும்பம் குழந்தைனு செட்டில் ஆகிடலாம்னு இருக்கேன் என்றாள் கீதா.
அடிப்பாவி சொல்லவே இல்லை. கோரசாக மற்றவர்கள்.
எனக்கு இரண்டு அக்கா கல்யாணத்துக்கு இருக்காங்க. ம்ம்… பெருமூச்சு விட்டாள் லதா.

மேல்படிப்பு படிக்கலாம்னு இருக்கேன். இது ஜோதி.

என்ன வசந்தி பதிலே காணோம்?

நான் ஒரு நல்ல வேலை தேடலாம்னு இருக்கேன்.

உங்க வீட்டுக்கு நீ ஒரே பொண்ணு. எப்போ படிப்பை முடிப்பே கல்யாணம் பண்ணலாம்னு வீட்டிலே ஏற்கனவே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. நீ என்னவோ வேலைக்குப் போறேன்னு சொல்ற.

எனக்கு வேலைக்குப் போகும் பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் நாமும் அது மாதிரி போகணும்னு ஆசையா இருக்கும்.நம்ம திறமைய பயன்படுத்திக் கொள்வதோடு குடும்பத்துக்கு தேவையான சம்பாத்தியமும் கிடைக்கும். அதனாலே என்னை வேலைக்கு அனுப்பத் தயாரா இருக்கும் ஒருவரை தான் கல்யாணம் செய்துப்பேன்.

தீர்மானமாகச் சொன்னாள் வசந்தி.

பரீட்சையும் முடிஞ்சாச்சு. வசந்தி தீவிரமாக வேலை தேடத் துவங்கினாள். அப்பா ஒரு புறம் கல்யாணத்துக்கு வரன் தேடிக் கொண்டு இருந்தார்.

இதோ பெண் பார்க்கும் நிகழ்ச்சி.

மாப்பிள்ளை வீட்டார் கூடத்தில் அமர்ந்து இருக்க கூச்சத்தோடு கூடவே இவங்க வேலைக்கு போக அனுமதிப்பாங்களா என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டே வந்து நமஸ்கரித்து விட்டு அமர்ந்தாள்.

இவள் சந்தகேத்தை தீர்க்கும் முகமாக வேலைக்குப் போக உனக்கு விருப்பமா? நேரடியாகக் கேட்டாள் பையனின் தாய். ம்ம்.. என்று தலையாட்டிய வசந்திக்கு கூடவே சுறுக் என்ற ஒரு இனம் புரியாத உணர்வு.

இப்போ எல்லாம் இரண்டு பெரும் வேலைக்குப் போனால் தான் சௌகர்யமாக வாழ முடியும். விளக்கினாள் பையனின் தாய்.

வசந்தி மனதில் தொடர்ந்து உறுத்தல். நாம தானே வேலைக்குப் போக ரொம்ப ஆசைப்பட்டோம். அப்புறம் அவங்க அதையே கேட்ட போது நியாமாக சந்தோஷப்பட்டு இருக்க வேண்டிய மனது ஏன் இப்படி சுறுக் என்கிறது? புரியவில்லை வசந்திக்கு.

சரி. நாளைக்கே வேலை கிடைக்கும் போது சம்மதம் வாங்க போராட வேண்டி இருக்காது. அந்த மட்டிலே சந்தோசம் என்று மனதை தேத்திக் கொண்டாள்.

ஆச்சு. கல்யாணம் ஆகி புகுந்த வீடும் வந்தாயிற்று. வேலை கிடைத்து போகவும் துவங்கியாச்சு.

இதென்ன. தலை சுற்றுவது மாதிரி இருக்கே. கர்ப்பம் உறுதி செய்யப் பட, நாட்கள் ஓடுகின்றனவா இல்லை இறக்கை கட்டிக் கொண்டு தான் விட்டனவா?
உலகமே என் காலில் கீழ் தானோ . பிஞ்சு பஞ்சுக் குவியலாய் தன் மடியில் கிடக்கும் மகளைப் பார்த்து பார்த்து தீரவில்லை வசந்திக்கு.

குழந்தையை அணைத்து பால் கொடுக்கும் போது எதோ சாதித்து விட்டது மாதிரி தான் தோன்றியது. இவளுக்கு எல்லாமே நான் தான். இவளுக்கான உணவு கூட நானே தான். இது என்ன விந்தை. அவளுக்கு நம்ப முடியவில்லை. உலகின் எல்லா சந்தோஷங்களையும் கலந்து தன் மடியில் அந்தக் கடவுள் இருத்தி
விட்டானோ?

அதற்குள் இரண்டு மாதங்கள் ஆகி விட்டதா இவள் பிறந்து. பாரு எப்படி முகம் பார்த்து சிரிக்கிறா.

தூங்கும் குழந்தையை பூவைப் போல் தூக்கி தொட்டிலில் கிடத்தி விட்டு குளிக்கச் சென்றாள் வசந்தி.

திரும்பி வரும் போது அவள் கண்ட காட்சி. அம்மா கொஞ்சிக் கொண்டே அதென்ன குழந்தையின் வாயில் வைக்கிறாள்?
ஆ ஆ … பால் புட்டி.

அம்மா…. இவள் அலறிய அலறலில் அம்மா திடுக்கிட குழந்தை பயந்து விட்டது.

ஏண்டி கத்தறே?

குழந்தைக்கு ஏன் புட்டிப் பால் குடுக்கறே. நான் நல்லாத் தானே இருக்கேன்.
இவ்வளோ தானா? நான் என்னவோ ஏதோனு பதறிட்டேன்.
உனக்கு லீவு முடியப் போது மறந்துட்டியா?
புட்டிப் பால் பழக்கலைனா நீ எப்படி வேலைக்குப் போவே.

வசந்தியால் ஜீரணிக்க முடிய வில்லை. அவள் வேலை செய்வதோ தனியார் கம்பெனி. நல்ல சம்பளம் மற்றும் சலுகைகள். ஒரு மாதம் விடுப்பை அதிகப் படுத்தி கேட்கலாம். அதற்கு மேல் வாய்ப்பே இல்லை. இவள் இல்லை என்றால் அந்த வேலைக்கு ஆயிரம் வசந்திக்கள்.

வசந்தியால் தூங்க முடியவில்லை. சாப்பிட முடியவில்லை. ஆறு மாதம் வரை தாய்ப் பால் கொடுக்க வேண்டியதன் அவசியம் அவளுக்கு நன்றாகவே தெரியும். மேலும் அவளின் அரவணைப்பு. அதை யார் ஈடு செய்ய இயலும்.

மேலும் அம்மாவும் மாமியாரும் குழந்தையை பார்த்துக் கொள்ள அதிக நாள் தங்க இயலாது. ஊரில் இருந்து ஒரு பெண்ணை வேலைக்கு வரவழைப்பது பற்றி பெரியவர்கள் அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். நியாமாக அம்மாவும் மாமியாரும் ஒற்றுமையா இவளுக்கு உபகாரம் செய்வது குறித்து சந்தோஷப்படாமல் இவளுக்கு இருவர் மேலும் பற்றிக் கொண்டு வந்தது.

வேலைக்காரப் பெண் எப்படிப் பட்டவளோ? எப்படி பார்த்துப்பா தெரியலியே. குழந்தையை கவனிக்காமல் டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருப்பாளோ.
மனசு அலை பாய்ந்தது.

குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் பார்க்க தனக்கு குடுப்பினை இல்லாமல் போய் விடுமே. முதன் முதலில் அம்மான்னு அது கூப்பிடும் போது அதைக் கேக்க நான் அருகில் இல்லாது போய் விடுவேனோ? வேலைக்காரி தான் அம்மான்னு குழந்தை நினைக்க ஆரம்பிச்சுடுமோ? ஏதோதோ கற்பனைகள் வந்து அலைக்கழித்தது.

அதற்கு ஏற்றார் போல் அன்றைய பத்திரிக்கையில் வேலைக்குப் போகும் பெண்களும் தவிக்கும் குழந்தைகளும் என்ற தலைப்பில் பலரின் கருத்துக்களை போட்டு இவள் கலவரத்தை மேலும் தூண்ட

சொல்லவொணா தவிப்பில் ஆழ்ந்தாள் வசந்தி. வசந்திக்கு ஏனோ எட்டு வயது பாவாடை கட்டிய குட்டி வசந்தி பக்கத்துக்கு வீட்டில் ம் மா … என்று வேதனையோடு கத்திய கன்றுக் குட்டியை வேடிக்கை பார்த்த ஞாபகம் சட்டென்று வந்தது.

ஆச்சு பிரசவம் முடிந்து தன் வீடு வந்தாயாச்சு. இன்னும் சில நாட்களே விடுப்பு மிச்சம் இருக்கு.

ட்ரிங் ட்ரிங். …

அம்மா தான். குழந்தையை பார்க்க ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து இருக்கேன். இன்னும் பத்து நாளில் வந்துடுவா. நீ அவ கிட்டே …
அம்மா … இடை மரித்தாள் வசந்தி. வேண்டாம்மா. அவ வர வேண்டாம்.
என்ன சொல்றே நீ? அப்புறம் குழந்தையை யாரு …

இரும்மா. நான் வேலையை விட்டுடப் போறேன்.
என்ன சொல்றே நீ. இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன்னு முடிவு பண்ணாதே.
இல்லம்மா நல்லா யோசிச்சுட்டேன். நான் இப்போ வேலையை விடப் போறேன்னு தான் சொன்னேன். எப்பவுமே வேலைக்கு போக மாட்டேன்னு சொல்லலை.

குழந்தை கொஞ்சம் வளரும் வரை நான் வேலைக்குப் போக வேண்டாம்னு நினைக்கிறேன்.

அப்போ இந்த மாதிரி நல்ல வேலை கிடைக்குமா?

கிடைக்கும். இல்லைனா உருவாக்கிகலாம்.

ஆனா குழந்தையோட இந்த மழலைப் பருவம் எப்போவுமே திரும்பக் கிடைக்காதேம்மா. அவளும் நானுமா இருக்கக் கூடிய முழு நேர சந்தர்ப்பம் இப்போ மட்டும் தான் கிடைக்கும். அப்புறம் அவ பள்ளி , கல்லூரி என்று படிப்பில் மூழ்கிடுவா. நானும் அதைத் தான் விரும்புவேன். அப்புறம் வேலை, அவளுக்கென்று ஒரு வாழ்க்கை, இதற்கு இடையில் நான் எனது வேலை, எனது பொறுப்புகள் எனது முதுமைன்னு இரண்டு பேருக்குமான தனித் தனிப் பொறுப்புகள் பிரச்சனைகள் என்று பலவும் வந்து கொண்டே இருக்கும். எனக்கும் அவளுக்குமான எங்களுக்கு மட்டுமேயான இந்த நாட்களில் ஒரு நிமிடத்தைக் கூட நான் இழக்க விரும்பலேம்மா.

முடிவெடுத்து விட்டாள் வசந்தி.

Series Navigation

விருட்சம்

விருட்சம்