திருநெவேலி மாமாவும் அல்வாவும்

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

கே ஆர் மணி

மாமா பேசிக்கொண்டே வந்தார். திட்டிக்கொண்டே வந்தார் என்று சொல்வதே சரியான பொருள்தரும். வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. மும்பையிலும் வெயில்தான். ஆனாலும் ஏனோ இத்தனை காத்திரமாய் இருப்பதாய் படவில்லை.

கையில் நாலுகிலோ திருநெவேலி அலுவா.. இருட்டைக்கடை அல்வா.. முடிந்தது ஒரு முக்கியபணி. ஒரு கிலோ அல்வா ரொம்ப கிட்டத்து இரத்த சொந்தத்திற்கு, அரைக்கிலோ கொஞ்சம் தூரத்து சொந்தத்திற்கு, கால்கிலோ பாக்கெட் அலுவல சொந்தங்களுக்கு, குறிப்பாய் மனைவி அலுவலக பிராண்டல்களுக்கு.

இன்னும் கொஞ்ச நாளுக்கு அவளின் அலுவலகத்தில் இதுதான் பிரசாதம் என்று சொல்லி கண்டமேனிக்கு இந்தியில் கதைவிட்டுக்கொண்டிருப்பாள்.

மாமா அந்த பெரிய பையில் ஓன்றை வாங்கிக்கொண்டார். மறுபடியும் திட்டலை தொடர்ந்தார்.

“ஏலா.. மனுசன் சாப்பிடுவானாடே இதை.. சக்கரப்பீடே.. “ நான் அமைதியாயிருந்தேன்.

“அதிகமா திங்காதடே.. உடம்பு புழு வச்சு போகும் சாக்கிரதை.. “

“ நான் சொல்லேன் கேட்டுக்க.. இந்த வயசில நாக்கடக்காம போன நாசமாத்தான் போகணும்.. உன் நாக்கையும், உன் பெண்டாட்டி நாக்கையும்.. “

”சாப்பாடு மருந்தில்லடே.. நம்ப மனுச அதெல்லாம் கொடுத்துப்பூட்டான்ல..”

“ தாயளி.. இந்த இருட்டுக்கடையை பாம் போட்டு ஒருநாள் மூடனும்டே. எல்லா பயக்களும் இந்த இழவுல என்னதான் இருக்குன்னு.. விழுதாங்களோ.. “

சுடலைமாடன் தெருவிலிருந்து நடந்தே ஜானகிராமன் ஹோட்டலுக்கு வந்திருந்தார். அங்கிருந்து அவரோடு இருட்டுக்கடை போய்விட்டு வரும் வழியில்தான் மேற்கண்ட அர்ச்சனைகள்.

“சம்முவம் பிள்ளை, அதாம்டே மருமான் வந்திருக்காம்ல.. அதான் டவுன் வரைக்கும்..” மாமாவிற்கு ஏதாவது காரணம் வீட்டை விட்டு இறங்குவதற்கு.

முன்னால்லாம் திருநெல்வேலி வந்தால் மாமாவீட்டில்தான் வாசம். இப்போது மனைவி மக்கள் அவர்களின் தேவைகள் பெருக, ஏதோதோ பொய் சொல்லி ஜானகி ஹோட்டலின் வாசம். கழிக்க, படுக்க மட்டும்தான் ஹோட்டலே ஓழிய மற்றவையெல்லாம் மாமா வீட்டில்தான். அங்கிருந்துதான் கோயில், குளம், குற்றாலாம் எல்லாம்.

” ஏலே. பெரியவனாயிட்டயோடே.. “ ஹோட்டலில் தங்குவதற்கு மாமா கேட்க,
“மாமா.. பொண்டாட்டி நொள்ள தாங்க முடியாது பாத்துகிடுங்க..” மெல்ல சொன்னபோது , உடனே புரிந்து கொண்டு,

“ அதுல.. என்னடே ஒரு பிழையுமில்ல..” சொன்னாலும் அவரின் வார்த்தையின் கனம், மாமியின் கண்ணில் சின்னதான வருத்தம் என்னை உறுத்திக்கொண்டேயிருந்தது. அப்புறமான சில வருடங்களில் அதுவும் பழகிற்று.

” ஏ.. என்னடே.. கடை வைக்கப்போரியாடே.. “ மாமா என் அல்வாபேக்கின் அளவை பார்த்து ஆச்சரியப்பட்டார்.

“ இல்ல மாமா. எல்லாம் சவத்துக்கும் கொடுத்துட்டு நாமா.. தட்ட நக்கவேண்டியதான்.. “

“ அது சரிடா.. இவ்வளவையும் ஓத்தன் திண்ணா.. நாசமா போயிடுவான். கேட்டியா.. ஏலா.. என்ன இது. வெறும் சக்கரைடே. மனுச உடம்புக்க்கு ஒரு அளவு வேணாமா.. “

அப்படி சொல்கிற மாமாவை எனக்கு தெரியும்.. அவருக்கும் அல்வாவுக்குமான யுத்தம் குருசேத்திரத்தைவிட ஆழமான ஓன்று.

*
மாமா தனது 42 வயதில் ஏதோ பிரதி கழித்து கொள்ள நெல்லையப்பர் கோயிலுக்கு போனபோது மயங்கி விழுந்தார். காந்திமதியில் காதலோ நெல்லையப்பரின் ஆசியோ அல்ல. கடவுள் மீதான அதீத பக்தியுமில்லை. கோமாதி ஆச்சியின் பிலாக்கணம் சொல்லும் ‘ஊர்க்கொள்ளியுமில்லை’. டாக்டர் சேசன் ஐந்து ரூபாய் வாங்கிக்கொண்டு சொன்னபடி அது சுகர் பிரசருக்கான அறிகுறிதான். மாமாவுக்கும் ஓரளவு தெரிந்துவிட்டது. தனது அப்பாபோல தனக்கும் வருமென எதிர்பார்த்திருந்தார். பின்ன பரம்பரை சொத்தல்லவா.. ஆனால் நரைகூடி கிழப்பருவமெய்தியபின் தனக்கு துணையாக வருமென நினைத்திருந்தார். அது அப்பாயிண்மெண்ட் இல்லாமல் வருமென்பதில் அவருக்கு வருத்தம்தான்.

டாக்டர் சொன்ன சோதனைகளுக்கெல்லாம் ஆட்படாமல் நிறைய நாள் தள்ளிப்போட்டுக்க்கொண்டேயிருந்தார். இப்போதய ஒரு எயிட்ஸ் நோயாளியின் மனநிலையில் அவர் இருந்தார் என்று ஒருவாறு என்னால் யூகித்துக்கொள்ளமுடிகிறது.

*

அவர் தனது சக்கரைவியாதியோடு நடத்திய யுத்தங்களை அதாவது சர்க்கரை சரித்திரத்தை மூன்று பாகங்களாக பிரித்துக்கொள்வது டாக்டருக்கும் நமக்கும் ரொம்பவே வசதிப்படும்.

முதல்பாகம் :

மாமா நோயை ஏற்றுக்கொள்ள மறுத்தல் மற்றும் அநேகரின் ஆலோசனைகள் நிறைந்த பகுதி. வீட்டுக்கு வந்த புதிய மனைவியை மற்றவர்கள் எதிர்கொள்வதும், அதீத கவனம் கொண்டாடுவதும், அதனால் கணவன் அடைகிற அடிமன எரிச்சலும், கொஞ்சமாய் சந்தோசமும் கொள்கிற மனநிலையை மாமா பெற்றிருந்தார்.

“ சோறு வேண்டாண்டே..சப்பாத்தி சாப்பிடு..”
“ கோமதியம்மனுக்கு உறுப்பு செஞ்சு போடு.. அவ பாத்துகிடுவா..”
“ ஆர்யாங்காவுல போயி.. பாயிச அபிசேகம் பண்ணிடுங்க.. எல்லாம்
சேமமாயிடும்.. “
“அப்பா.. தினம் திங்கிற அல்வாவைத்தான் கொஞ்சம் குறையேன் “
“ என் கண்ணுல காட்டாமா.. மறைச்சு வைச்சு திம்பீகளே, அதுக்குதான் ஆண்டவன் கொடுத்திருக்கான் “
“ இதெல்லாம்.. நார்மல் வோய்.. ஆல் பார்ட் ஆப் லைப்..”

நிறைய கவனிப்புகள். கற்றாருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்போ இல்லையோ மாமாவின் சர்க்கரை வியாதிக்கு சென்ற இடமெலலாம் சிறப்பிருந்தது. மாமா – அதைப்பற்றி துக்கம் கேட்காதவர்க்ளை வைதாள்.
கொஞ்ச நாளுக்கு சர்க்கரை வியாதி புதுப்பெண்டாட்டி சீரும், சிறப்புமாக இருந்ததாகவே தெரிகிறது.

“என்ன மாப்பிள டாக்டர் என்ன சொல்லுதாவ.. “ என்று மாமானார் வந்து ஒரு நாள் கேட்டபோதுதான் மாமாவின் கோபம் கடல் கடந்தது.

” ஆமா.. நேத்துகூட படுத்து கிடக்கப்ப பாத்திகளா.. தொடைக்கிடையில கிடக்கிற கிழங்க நக்க எறும்புக ஊந்து. ஊந்து.. போயிட்டிருக்குன்னா பாத்துகிடுங்க.. அத்தன சக்கரை சத்துல்ல.. “

கேட்ட மாமானார் உண்மையில் கொஞ்சம் அரைக்கேனைதான். ஆனால் மாமிக்கு புரிந்தது.. அடுத்த இரண்டுநாள் கத்தி, அழுது ஆர்பாட்டம் பண்ணியபடியேயிருந்தார்.

” உம்மையும் மனிசனா மதிச்சு கேக்க வந்தா பாருவேய்.. அவர செருப்பால சமுட்டணும்.. ஒரு பெரிய மனுசான்னு மட்டு மரியாத வேணாம்.. பாருங்க மதினி.. எப்படி பேசுதாரு உம்ம அண்ணா..”

கண்ணை கசக்கிய மாமிய பார்த்து அம்மா கொஞ்சம் அவசரமாய் கருணைப்பட்டு “ ஏண்டா.. பெரிய மனுசாள பாத்து பேசற பேச்சடா இது.. வியாதி வரும் போகும்.. இதெக்கெல்லாம.. மனுசாளை வையறது.. “ என்று நீட்டி முழக்க, மாமா திருப்பி அடித்தார்.

“ அது சரி அக்கா.. அது வரட்டும்.. போகட்டும்.. நீ இனிமே இங்கிருந்து சக்கரை கொண்டு போகத கேட்டியா.. எம் பொண்டாட்டி அதை வைச்சு எனக்கு எக்ஸ்ட்ரா அல்வா கிண்டி கொடுக்கணும்ல.. அதுக்குத்தான்.. “

அம்மா வாயை பொத்திக்கொண்டாள். யார் யாரை சொன்னாலென்னா.. வர்றப்பெல்லாம் சக்கரையும், சாம்பா நெல்லும் கிடைக்கிற தமையனை எதுக்கு எதிர்த்துக்கொண்டு என்கிற ஒரு மெளன சமாதன உடன்படிக்கைக்கு வந்துவிட்டாள்.

டாக்டர் சேசனும் அந்த மாமாவின் சர்க்கரை சரித்திரத்தின் முதல் பகுதி காலங்களில் மிகுதியாகவே அவதிப்பட்ட ஜீவன்.

“ தா..ளி.. டாக்டருங்கதாண்டே இதெல்லாம் கிளப்பிவிட்டிருப்பாங்க.. சேசன் டாக்டர் உங்களை சொல்லல.. பொதுவா சொல்லுதேன் கேட்டிகளா.. “

“ நீங்க கொடுத்த மருந்தை குடிச்சுட்டு படுத்தேன்.. காலைல குளிச்சப்ப போன மூத்திரத்திலே வியாதி போயிடுச்சு டாக்டர்.. ஆமாம்.. போம்போது கூட உங்க பெயர சொல்லிட்டுதான் போச்சு.. “

“ அதே இழவு மாத்திரை பெனிசிலினு கொடுக்க என்னவே இவ்வளவு விழிய பிதுக்கிரூ.. பயமாயிருக்கு டாக்டர்.. கொஞ்சம் கண்ண உள்ள போடும்.“

“புண்ணுக்கும் சுகருக்கும் என்னவே சம்பந்தமிங்கிரே.. உம்ம மாட்டுப்பொண்ணு ஜயங்காரில்லைலலவே.. வடக்கத்தி ஆளுதான.. சம்பந்தமில்லாமதானயிருக்கு.. இதுக்கு மட்டும் சம்பந்தம் எப்படி டாக்டர்..”

இப்படி சம்பந்த சம்பந்தமில்லாது எரிந்த விழுந்ததால் டாக்டர் சேசன் தன்வாழ்நாளிலே இந்த பேசண்டை பார்க்க போவதில்லை என்று கத்திவிட்டு போன சம்பவங்களும் நடைபெற்றன. மாமி கைகூப்பி மறுபடி கூட்டி வருவாள். இல்லை மாமாவை கூட்டிப்போவாள்.

மாமாவின் நாக்கில் சனி, காளி, துர்க்கா மற்றும் பல துர்தேவதைகள் குடிகொண்டிருந்தன. கத்தியால் எல்லாரையும் ஆழமாய் கீறினார். முடியாத போது இலேசாய் குத்தினார். அதுவும் முடியாதபோது தன்னையே குத்திக்கொண்டார். ஆனால் எப்போதும் குத்தப்படுவதற்கு மாமி இருந்தாள்.

மாமாவின் சர்க்கரை சரித்திரத்தின் முதல்பகுதியில் மாமிக்கும், அவரது மாமானருக்கும் முறையே பிளட் பிரஸர் என்று அறிவிக்கப்பட்டது. அதில் மாமா கொஞ்சம் ஆசுவாசப்பட்டதுபோல தெரிந்தது.

மாமாவின் கத்தி எப்போதும், எல்லோர் மேலேயும் எந்த வித்தியாசமின்றியும் சுழன்று கொண்டிருந்தது.

“ என்ன மாமியாரே.. கால் தான.. உடைஞ்சுடுத்து.. ஏதோ சுகர் வந்தமாதிரி அலர்றியோக.. சவம் எலும்பு உடைஞ்சாத்தான் என்னவே.. இனிமே என்ன மாமா உங்களை கவட்டைய தூக்கவா சொல்லப்போறாரு.. “

அன்று மாமாவை அவரது மனைவி மற்றும் சகல குடும்பத்தினரும் இஸ்ட மித்திர பந்துக்களுடன் வார்த்தைகளால் குளிப்பாட்டி எடுத்தனர். ஏனோ இப்படிப்பட்ட திட்டுகளை மாமா பெனிசுலினுக்கு பதிலாக போட்டுக்கொண்டார்.

” என்ன மாப்பிள .. திருவாசகம் எதாவது நம்ம சுகருக்கு சொல்லுதா.. “ அப்பாவிடம் நக்கலாக கேட்டார்.

“மருந்திருக்கேப்பா.. “ அப்பா ஒதுவார் ஸ்டைலில் அமைதியா சொன்னார்.

“ என்ன..மாப்பிளை சொல்லுங்கோ.. அலோபதி, சீத்தா, ஆத்தா, ஆயுரு, மயிரு எல்லாம் அலுத்துடுத்து. கேட்டியளா.. அலோபதி சொல்லாதத பகவான் கைலாசபதி என்ன சொல்லுதாருன்னு கேட்கலாம்.. .. “

“ பாம்பை எடுத்து கழுத்துல போட்டுக்கப்பா.. எல்லாம் சரியாயிடும்.. “

அதற்குபின் அப்பாவிடம் மாமா வைத்து கொள்வதேயில்லை. எல்லாம் சேர்ந்து அம்மாவிடம் கருவினார். அம்மா அதை காதில் வாங்குவதேயில்லை. பொறந்த வீட்டு சீதனத்திற்கு அநாவசிய ஆப்பு எதற்கு என்று அதிகமாய் பேசுவதேயில்லை.

நிறைய தத்து பித்து மருத்துவ ஆராய்ச்சிகள், அதை எதிர்க்கும் நோக்கு, அதை பற்றியே பேச்சு, தனது அகண்ட ஞானத்தால் வியாதியை எதிர்க்கிற, அதன் மூலம் புரிந்துகொள்கிற மாமா மற்றவர்களலால் புரிந்து கொள்ளபட முடியாதவராய் இருந்தார்.

ஆனால், என்னால் மட்டும் மாமாவை மயக்கும் மகுடி கேள்விகளை கேட்க முடிந்தது. என் கேள்விகள் அவரை பிரகாசிக்க வைத்தன. அவை தனக்குள்ளே பேசிக்கொண்டிருந்ததை தாண்டி யோசிக்க வைத்தன. அவர் பேசுவதன் மூலமே யோசித்துக்கொண்டிருந்தார். அதெல்லாம் தெரியாமலே எனது கேள்வி அவரை கட்டிப்போட்டிற்று. சின்ன பையன் மருமான் மீது அவருக்கு பிடித்தம் அதிகமாயிற்று.

எனது முதல் கேள்வி அவரது சர்க்கரை சரித்திரத்தின் முதல்பாகத்தை முற்றும் என்று போட்ட வைத்ததாக அவர் இன்றும் நினைத்துக்கொண்டிருக்கிறார்.

“மாமா.. சர்க்கரை வியாதின்ன என்ன ? அது ஏன் வருது ? வந்த என்ன பண்றது.. ? எனக்கும் வருமா.. உங்கள மாதிரி..

*

அவரது இரண்டாவது பாகம் சுருக்கமானதும் எல்லாருக்கும் தெரிந்ததுமானதால் அதை வேகமாய் கடந்துவிடுதல் உசிதம். தனது நோயை ஏற்றுக்கொள்ளுதல், டாக்டர் சொல்படி கேட்டல், பதிவுபோல பயப்படுதல்,
கல்யாண வீட்டில் பாயசத்தை விளம்பிவிட்டு இரண்டு மாத்திரை கூட சேர்த்து போட்டு கொள்ளுதல், இராத்திரி மாமிக்கு கால்பிடித்து சேவை செய்துவிட்டு கொஞ்சமாய் சக்கரை பொங்கல் செய்யச்சொல்லி செத்துபோன சங்கரி போத்தியின் நினைவாக சாப்பிடல், கட்டுப்படுத்த முடியாத காமத்தை விட முட்டி நிற்கும் ஸ்வீட் தாபத்தை முறியடிக்க பல சத்திய சோதனைகள் செய்து தோற்றல் அதையே பிரஸ்தாபித்து, பின்னர் அதைபற்றி கவலைப்படாமல் முடிந்தளவு வியாதியை மறக்க முயற்சித்தல், திண்ணை ஐ நா சபைகளில் தானகவே சர்க்கரை நோயைப்பற்றிய விளக்கவுரை கொடுத்தல், [சர்க்கரைப்பிள்ளை] மற்றவரை தைரியப்படுத்துதல் மூலம் தன்னை தைரியப்படுத்திக்கொள்ளுதல், அதிகமாக சள்ளைத்தனமில்லாது தனது மாமானர் பரிவாரங்களின் உறவை மேம்படுத்துதல் போன்றவற்றின் மூலம் தனது இரண்டாவது பாகத்தை அவர் தாண்டிய போது நான் அவரை அதிகம் பார்க்கவில்லை.

முதல் பாகத்தை எனது கேள்வி முடித்துவைத்தது போல இரண்டாவது பாகத்தை சின்னதாய் வந்த இலேசான இதய அடைப்பு முடித்து வைத்தது. பிழைத்து கொண்டார். செய்தி வந்தது.பின்பு ஒரு நாள், மாமா எனக்கும் மட்டும் தனியாக ஒரு கடிதம் எழுதியிருந்தார். உடனே வந்து பார்க்கும்படி. அவரது வாழ்நாளில் இதுவரை யாருக்கும் அவர் கடிதம் எழுதியதில்லை அரசாங்க வேலை கடிதங்களை தவிர..

மாமா என்னுடன் பேசிய போது எனக்கு புரிந்தது, அவரது சர்க்கரை சரித்திரத்தின் மூன்றாம் பாகம் ஆரம்பமாயிற்று என்று.

*

”எலா.. கூறுகெட்ட குப்பா.. வீடு வந்தாச்சுடே இறங்கு.. “ நினைவு கலைத்து இறங்கினேன்.

என் மனைவி அடுத்தநாள் சென்னை போவதற்கான எல்லா ஆயுத்தங்களையும் செய்து கொண்டிருந்தாள். மாமாவே ஆசை ஆசையாய் கொண்டு போய் அல்வா பையை என் மனைவியிடம் கொடுத்தார். அதுவரை, ஜீப் போடாமல் வாய்திறந்து காத்திருந்த பேக், போத்திஸ் பைக்கு பக்கத்தில் இருட்டுக்கடை போனதும் மூடிக்கொண்டது.

“மாமா.. தேங்க்ஸ் மாமா.. “ மாமாவே வாங்கி கொடுத்ததாய் அவள் நினைத்துக்கொண்டிருக்க கூடும். மாமாவுக்கு ரொம்ப குசி..

“ஏ.. இழவு மறந்தே போயிட்டேடே.. கொஞ்சம் கராச்சேவு வாங்கியிருக்கலாம்ல.. இனிப்பு மட்டும் போரடிச்சுரும்ல.. “

“ சலேகா.. மாமா “ என் மனைவி.

“ எல்லா ஆபிசுகாரங்களுக்கும் கொடும்மா. திருநவேலி அல்வான்னா சும்மாவா.. இதுடோ ஸ்பெசல் யூ நோ வாட் ? “ என் குழந்தைகளை நோக்கி திரும்பினார். மாமா அது சர்க்கரை சரித்திரத்திற்கு முன்னான (ச.ச.மு) அவரின் பழைய சங்க காலத்திற்கு திரும்பினார்.

குழந்தைகள் வாயில் கண்டிப்பாய் நீர் சுரந்திருக்கும். உடனே,
“ எல்லாமே பெட்டிக்கா.. கொஞ்சம் குடும்மா.. ப்ளிஸ்” சின்னவ கெஞ்சினாள்.

“ சும்மா இருடி.. எல்லாம் பேக் பண்ணியாச்சு.. நாளைக்கு ப்ளைட்ல போயி அங்க போயி.. குட்டிக்கு புல்லா.. ஆல் பார் யூ.. ஓக்கே.. “ மனைவி ஏதோ சொல்லி வாய் பொத்தினாள்.

“ வே. கொஞ்சம் சும்மா கிடம்வே.. வாயிலேயே அல்வா கிண்டாதயும். “ மாமி சீற, “ சும்மா கிடடி.. இந்த தடவை காசிக்கு போயி இவளையும், அல்வாவையும் விட்டுரலாம்னு பாக்கேன். கேட்டியாடே.. “ சத்தமாய் சொல்லிவிட்டு.. “ இரண்டும் உடம்புக்கு சீக்கு … ஓர்மை வெச்சுக்கோடே. “
அதை மட்டும் மெல்ல சொன்னார்.

எனக்காக எவ்வளவு முறை அல்வா வாங்கி வாங்கி தந்திருப்பார். அவர் அல்வா தருவதாலே என்னுள் ஏராளமாய் கேள்விகள் உற்பத்தியாகிக் கொண்டேயிருக்கும். அதுவே அவரை முதல்பாகத்திலிருந்து இரண்டாம் பாகத்திற்கு நகர்த்தியது என்பதை முன்னமே பார்த்தோம்.

இப்போது என்னிடம் எந்த கேள்வியும் இல்லை. அவருக்கும் அவசியமில்லை. நாக்குகள் கழன்று அமைதியாய் எல்லாவற்றையும், ஏதோ ஒன்றையும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

“ காலா… உன்னை காலால் உதைத்து “ என சர்க்கரையிடம் அவர் மெளனமாய் பாடிக்கொண்டிருக்கலாம்.

சட்டை மாட்டிக்கொண்டு வேகவேகமாய் மறுபடியும் வெளியே கிளம்பினார். ச்சை இவ்வளவு வாங்கினேன், அவருக்கோ, மாமிக்கோ ஒரு கால் கிலோவாவது வாங்கி கொடுத்திருக்கலாம்தான்.

*

வண்டி புறப்பட சத்தமிட்டது. நான் வெளியே நின்றிருந்தேன். மாமா குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருந்தார். இரண்டாவது விசில் சத்தம் கேட்டபோது அவரை கீழறங்க சொல்லும் வேகத்தோடு உள்ளே நுழைந்தபோது
சின்னவளுக்கு மாமா அல்வா ஊட்டிக்கொண்டிருந்தார்.

“ கூறுகெட்ட குப்பா. குழந்தைல்லா.. இராத்திரி கேட்குது.. அதுவும் அல்வா கேட்டதுடே.. “

எனக்கு எதுவோ ஒரு மாதிரி..

“ பாத்துக்குடா.. உடம்பு முக்கியம் கேட்டியா.. அல்வா நிறைய சாப்பிடதடா.. சர்க்கரை சேக்கப்படாது.. கேட்டியாம்மா.. இவனுக்கு எல்லாம் குறைச்சுக்குடு என்ன.. “ சொல்லியபடியே இறங்கி போனார்.

காட்சி மங்கலாகிக்கொண்டே போனது எனக்கு.

*

Series Navigation