அதிர்ஷ்டம்

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

விஜி மெய்யப்பன்


தன்னுடைய நீண்ட நாள் கனவாகிய மோட்டார்பைக்கை வாங்க அப்பாவை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று எண்ணியபடியே வீட்டிற்குள் நுழைந்தான் கதிர். டிவி பார்த்துக்கொண்டிருந்தவரிடம் தைரியத்தைத் திரட்டி ஒருவாறாக விஷயத்தைக் கூறி முடித்தான். அவன் பிராயத்துப் பிள்ளைகள் பைக்கை வைத்துக்கொண்டு செய்யும் சாகசங்களையும் அதனால் விளையும் ஆபத்துகளையும் எடுத்துரைத்தாலும் இறுதியில் மனமிறங்கி ஒப்புக் கொள்ளத்தான் செய்தார்.

அன்று மாலையே பைக்கை வாங்கியும் ஆகிவிட்டது. உடனே அதை ஓட்டிச் சென்று நண்பர்களிடம் காண்பித்து அவர்களின் பொறாமைக்கும் ஆளானான். பைக்கை வைத்துக்கொண்டு என்னென்ன வித்தைகள் செய்ய முடியுமோ அவ்வளவையும் குறுகிய காலகட்டத்திற்குள் கற்றுக்கொண்டான். சென்னை மாநகரில் பைக் ஒட்டுவதே ஒரு வித்தைதானே! எங்கும் வேகமாகச் சென்றடையத் துடிக்கும் இளமை, பொறுமையின்மை. அம்மா அப்பாவின் அறிவுரைகள் அவ்வப்போது ஞாபகத்திற்கு வந்தாலும் அவர்கள் அருகிலில்லாத சுதந்திரம்.

ஒரு நாள் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது மைல் தூரத்திற்கு வாகனங்களின் தேக்கம். நண்பனின் பதிவுத் திருமணத்திற்கு சாட்சியாகச் செல்ல வேண்டிய அவசரம். வண்டியை வளைத்தும் நெளித்தும் லாவகமாக ஓட்டிச் சென்று எப்படியோ முன் வரிசையை அடைந்துவிட்டான். மேலும் நிற்கப் பொறுமையின்றி மற்ற வாகனங்கள் எதற்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன என்பதை அறியவே முற்படாமல் நாற்சந்தியை விருட்டெனக் கடந்தான். அப்பொழுதுதான் குறுக்கே வேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தைக் கவனிக்க நேரிட்டது. மயிரிழையில் உயிர் தப்பியதை எண்ணி கடவுளுக்கு நன்றியுரைத்தபடியே பறந்து சென்றான்.

இரவு வீட்டில் அம்மாவிடம் தனிமையில் நடந்ததைக் கூறியபோது, “கடவுள் புண்ணியத்துல உனக்கு ஒன்னும் ஆகலை. ஆயுள் ஹோமம் ஒன்னு செஞ்சுடலாம்”, என்றாள். ஆயினும் எதையோ யோசித்தவாறாகவே இருந்தவளை, “எனக்குதான் ஒன்னும் ஆகலையே, அப்புறம் ஏன் முகத்தில் இவ்வளவு கவலை?”, என்று கேட்டான். “இல்ல, உன்னோட அதிர்ஷ்டத்துல கொஞ்சமாவது ஆண்டவன் அந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கக் கூடாதான்னு தோனுச்சு”, என்றாள். என்ன என்று மேற்கொண்டு விசாரித்ததில், “அன்று விபத்துக்குள்ளாகியிருந்த பள்ளிப் பேருந்திலிருந்து அடிபட்ட குழந்தைகள் சிலரை வேனில் ஏற்றி, எதிர்சாரி வாகனங்கள் அனைத்தையும் மக்கள் உதவியுடன் நிறுத்தி வைத்து, மருத்துவமனைக்கு விரைந்துகொண்டிருந்தபோது, திடீரென குறுக்கே பாய்ந்த மோட்டார்பைக்கால் தடம் மாறி அருகிலிருந்த மரத்தில் மோதி வேனில் சென்ற அனைவரும் பலி”, என்ற செய்தியைக் கேட்டு ஸ்தம்பித்து நின்றான் கதிர்.
iviji@yahoo.com

Series Navigation

விஜி மெய்யப்பன்

விஜி மெய்யப்பன்

அதிர்ஷ்டம்

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

சேவியர்


0

சுரண்டல் லாட்டரிகளை
சுரண்டிச் சுரண்டி
விரல் வீங்கியபோதும்,

மதிப்பெண் பட்டியல்
ஒற்றை எண்ணில்
என்
கனவு எல்லையில்
கண்ணிவெடி வெடித்தபோதும்,

ஆயிரம் நிறங்களோடு
எனக்குள்
பறந்த ஓர் அலுவல் பறவை
சிறகுகள் கருப்பாகிச்
சரிந்த போதும்,

தேடி நடந்த இடமாற்றம்
கடலில் விழுந்த
கடுகு மணியாய்,
கண்ணிமைக்கும் நேரத்தில்
களவாடப் பட்டபோதும்,

உயிர்த் தெப்பத்தில் மிதந்த
காதல் பூ
கால வெப்பத்தில்
கருகியபோதும்,

அகம் அடித்துக் கொண்டது
எனக்கு
அதிர்ஷ்டம் இல்லை.

சுற்றியிருப்போர் மட்டும்
சொல்கிறார்கள்,
அவனுக்கென்ன,
அவன் அத்தனையும் பெற்ற
அதிர்ஷ்டக்காரன்.

0

அன்புடன்
சேவியர்

Xavier.Dasaian@in.eFunds.com

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்