அந்த காலத்தில் நடந்த கொலை – மானிஃபெஸ்டோ – 2

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

ரா.கிரிதரன்


The reward of sin is death. That’s hard.
If we say that we have no sin,
We deceive ourselves, and there’s no truth in us.
Why then belike we must sin,
And so consequently die.
Ay, we must die an everlasting death.
What doctrine call you this? Che sera,sera,
What will be , shall be? Divinity,adieu!

கிரிஸ்டோஃபர் மார்லோவை மற்ற புத்தகங்களைப் போல படித்து மூடிவிட முடியாது. சனி பகவானின் கருணைக் கொண்டவனாயிற்றே? தன் தந்தையைப் போல, சாகும் போதும் சனியுடன் விளையாடியே இறந்தவன்.

லூசிக்கு அவள் அப்பா கொடுத்த புத்தகம் கொஞ்சம் கொஞ்சமாய் கிழிந்து வருவதைப் பற்றிய கவலைப் போய்விட்டது. ஒரு சித்திரை மாதத்தின் அதிசய மழை நாளில் பாண்டிச்சேரிக்கு வந்து சேர்ந்த பிறகு அவள் அப்பா படித்த முதல் புத்தகம். பாரீஸ் சென் நதிக்கரையின் இடது புறத்தில் அழகான இடுப்புப் பகுதியாய் வளைந்திருந்தது அந்த கத்தீட்ரல். ஐல் டெலா சைட்டின் புனித நிலப் பகுதியாய் பதினெட்டாம் நூற்றாண்டு வரை பாதுகாக்கப்பட்ட மடோன்னாவின் ஆலயம்.

லூசியின் தந்தை ஆல்டர் சிறுவனாக வேலை பார்த்து, செல்வச் செழிப்பு தேய்ந்து மறைந்த ஒரு காலகட்டத்தில் வேலையிலிருந்து நீக்கப்பட்டவர். அதற்குப் பிறகு ஆலயத்திற்கு வெளியே நின்று மணியடிக்கும் வேலைதான்.

சுற்றுலாத் தளமாக இருந்த மடோனாவின் உறைவிடம், 1889களில் ஈஃபில் டவ்ர் தொடங்கப்பட்ட எக்ஸிபிஷனோடு முடிவுக்கு வந்தது.

அதற்குப் பிறகு மட அதிபர்களின் கண்ணுக்கு மறைந்து, மத அரசியலால் தகர்ந்த அந்த கத்தீட்ரலை பின்னர் மூடியே விட்டார்கள். லூசியின் தந்தைக்கு உயிரை உறிஞ்சியது போல் மனக் கலக்கமேற்பட, பல மாத பிதற்றல்களைத் தணிக்க,அவருடன் பாண்டிச்சேரிக்கு வந்து சேர்ந்தாள். அப்போது லூசி பதினெட்டு வயது ஏஞ்சல்.

தேவையில்லாத எண்ணங்களைப் போல் மடமடவென வெளியெ மழை பெய்து கொண்டிருந்தது. லூசியின் வீடு – கடற்கரை அருகே ரியூ பால் வீதியில் இரண்டு மாடிகள் மட்டும் கொண்டே ஒரே உலகம்.

பொதுவாகவே ஃபிரெஞ்சு மக்களும் ஆங்கிலேயர்களும் கீறி-பாம்பு வகைகளே. மிதமிஞ்சிய கஞ்சி போட்டதால் இறுக்கமாய் போனவர்கள் என ஆங்கிலேயர்களைப் பற்றியும், ஒழுங்கீனமற்றவர்கள் என ஃபிரெஞ்சுக்காரர்கள் பற்றியும் அபிப்ராயமுண்டு.

பாண்டிச்சேரிக்கு வந்த புதிதில் வேறொரு ஊருக்கு வந்த உணர்வே அவர்களுக்கு ஏற்படவில்லை. நாற்பதுகளின் இறுதிகள் – சரியாக 1948 . லூசியின் கணவன் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற `சொல்தா`. பாண்டிச்சேரியில் பல வருடமிருந்ததால் அதை விட்டுப் போக முடியவில்லை என சாக்கு சொன்னாலும், சொல்தாக்களின் வருமானத்தில் உலகத்தில் இந்த நிலப்பகுதியில் மட்டுமே வசிக்க முடியுமென்பதே உண்மை.

மடோனாவின் உருவச் சிலையைச் சுமந்தபடி கடைசி காலத்தைக் கழித்தாலும், அவள் தந்தை சாடனிடமும் பேசுகிறார் என ஜீன் சொல்லி வந்திருக்கிறான். அழுக்கு மூட்டையென அவரைக் கூப்பிடுவான்.லூசி இதை நம்பவில்லை, மார்லோவைப் படிக்கும் வரை.

ஹா, சனிப்பீடை – என தமிழில் சொல்லும்போது அதன் அர்த்தம் பிடிபடாமலே அவளுக்கு அந்த வார்த்தை பிடித்துவிட்டது. சாடன் என்பதைவிட கீழ்த்தரமாக இருப்பதாய் தன் தந்தையிடம் சொல்லியிருக்கிறாள்.

டாமில்ல நல்ல வேர்ஸ் கொஞ்ச கத்துக்கோ என ஜீன் அவளை தமிழ் படிக்க அனுப்பினான். சேதுகணபதி – எல்லா டாமில் மக்களைப் போல் நீண்ட பெயரை உடைய குள்ளமான `சேடு`.

பால் வீதியில் பல வருடங்கள் தங்கிவிட்டு, புதிதாய் வீடு கட்டி குடிபுகுந்த அன்று அழுக்கு மூட்டை இறந்துபோனார்.

தூங்கும்போது கழுத்து தொங்குவது, நடக்கும்போது இடறி விழுவது, வண்டியில் இடிபட்டு ஒப்பித்தாலுக்கு போகுமுன் மூச்சு நின்றுபோவது என்ற எந்த எளிய வழியிலும் அவர் இறக்கவில்லை.

வழக்கமாக மாலை வேளைகளில் பிஸியாக இருக்கும் டாவர்ன் பார்.

லூசியின் தந்தையை யாருக்குமே தெரியாது. பல ஃபிரெஞ்சு மக்கள் புழங்கும் டாவர்ன். பாண்டிச்சேரி டாமில் மக்களைப் பார்க்காமெலேயே பல வருடங்கள் உள்ளே இருக்கலாம். அவர்களுக்கு நின்று கொண்டு குடிப்பது அவ்வளவாக பிடிப்பதில்லை போலும். டாவர்னுக்கு தினமும் வந்துபோனாலும் அவர் பெயர் யாருக்குமே தெரியாது.

எழுபது வயது முதியவர், சந்தடியில்லாமல் ஒரு பீர் பாட்டிலையோ, போர்ட் ஒயினையோ குடித்தபடி ஓரமாக உட்கார்ந்து செல்லும் உருவம். பணத்தை கொடுத்து பாட்டிலை வாங்கும் பழக்கமுள்ளவர். மற்றவர்கள் அப்படிக் கிடையாது. டாவர்னில் தினமும் அடிதடிகளில் முடியாத நாட்கள் குறைவு. அப்படியாக மாலையில் தொடங்கி எல்லொரையும் போல் நடுநிசி வரை அங்கிருக்க லூசி அனுமதிப்பதில்லை.

அங்கு வரும்போதெல்லாம் சில வயதான ஃபிரெஞ்சு மக்கள் லூசியின் தந்தையைச் சீண்டிப் பார்ப்பார்கள். அவர் உருவத்தைப் பற்றியும், கையிலிருக்கும் மூட்டையைப் பற்றியும் ஹாஸ்யத்திற்கு குறையிருக்காது.

ஒரே ஒரு முறை லூசி டாவர்னில் நுழைந்துள்ளாள். ஃபிரெஞ்சு மாலுமிகள் மட்டுமிருந்ததால் தலைகள் திரும்பவில்லை, புருவங்கள் உயரவில்லை. முதல் முறை கடற்கரைச் சாலை வழி காரை ஓட்டியபோது, கேட்ட ஹாக்களும், எழுந்து நின்று, விலகி வழிவிட்ட டாமில் கூட்டங்கள் போலில்லை இவர்கள்.

டாவர்னில் வருபவர்களுக்கு அவரின் மூட்டை மேல் எப்போதும் ஒரு கண் உண்டு. அப்படி என்னதான் வைத்திருப்பான் `கிராண்ட்பேர்`? அவருடைய அழுக்கு மூட்டையென்ற பேர் பிரபலமாகாத சிநேக நாட்கள் அவை.

உண்மையில், அப்படி ஒன்றும் பெரிய கப்பல்கள் அந்த மூட்டையிலிருக்காது. ஒரு சில மடோனா படங்கள், சிலுவைகள், பழுப்பேரிப்போன மார்லோவின் நாடக காகிதங்கள், பைபிள் பழைய ஏற்பாடு, பூதக்கண்ணாடி, காந்தியின் இடுப்பிலிருப்பதுபோன்ற கடிகாரம்.

அன்றும் டாவர்ன் எப்போதையும் விட பிஸியாக இருந்தது.

சினாயிலிருந்து ஆறு மாத பயணத்தை முடித்து அதற்கு முந்தினம் `லே மாக்னிஃபிக்` எனும் கப்பல் வந்து சேர்ந்தது காரணம்.

சில பருப்பு, தானியங்கள், பீரங்கி வகைகளுடன் போரில் சாவதற்குத் தயாராக பல ஆயிர உயிர்களையும் நிரப்பி சில வாரங்களில் திரும்ப கிளம்பிவிடும்.

பாண்டிச்சேரி துறைமுகத்திலிருந்து ஒரு `நாட்டிஹ்ல்` தூரத்தில் அந்த கப்பலின் நங்கூரம் இறங்கியதும், ஒரு கொலைக்கான சாத்தியங்கள் உருவாகத்தொடங்கியது.

அந்த சாவு சனியன் எந்த ரூபத்தில் வந்தாலும் உபயோகமான மனித உயிர்களுக்கு வலை வீசாமல் விடமாட்டான். தண்டத்திற்கு இருக்கும் உயிர்கள் அவன் கண்ணுக்குத் தெரியாது.

`என்ன தாத்தா, எங்கிருந்து வர்ரீங்க` – பீரை மட்டும் குடிப்பதில் போதை தராததுபோல் பேச்சு அவலுக்கு அலைந்த பக்கத்து இருக்கைக்காரனின் கேள்வியால் மார்லோவிலிருந்து நிமிர்ந்துப் பார்த்தார்.

`இங்க, அங்க`

`அதிகமாக குடித்திட்டீரோ. மாண்டிகார்லோ பக்கத்து டாக்லாண்டுக்காரரோ?`

`இன்னும் சில வாரத்துல கிளம்பிடுவோம். உங்க சீக்ரெட்ட வித்துடமாட்டோம். சும்மா சொல்லுங்க` – கூட வந்தவனின் ஒத்து எரிச்சலைக் கிளப்பியது.

`நான் சில பறவைகளோட தெற்கு பிரான்சுலேர்ந்து பறந்து வர்ரேன்பா..`

`சரிதான்..கொஞ்சம் எண்ணெய் போட்டு நீவி விட்டா சரியாயிடும்..` – மேஜையிலிருந்த சிலுவையை தடவியபடி, கிண்டலுடன் முன்னகர்ந்து உட்கார்ந்தான்.

அந்த கணத்தில் கரிய உருவம் போன்ற சாவு சோம்பல் முறித்து, ரீங்காரத்துடன் தன் ஆசனத்திலிருந்து கிளம்பியது.

எழுபது சித்திரைகளைப் பார்த்த கிழவரின் போதையும் , ஒரு சில வாரங்களில் போருக்கு சென்று தூரத்தில் வரும் எதிரி கப்பலை குறுக்கியபடி பார்க்கும் வீரனின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்தன –

ஒரு கொலைக்கான சாத்தியக்கூறுகள் அங்கு அதிகரித்ததில் சாவுப்பீடைக்கு பரம திருப்தி.

If thou repent, devils shall tear thee in pieces.

Series Navigation

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

அந்த காலத்தில் நடந்த கொலை – 1

This entry is part [part not set] of 35 in the series 20090806_Issue

ரா.கிரிதரன்


நான் ஏப்ரல் மாதம் முதல் நாள் பிறந்ததால், என் பெயருடன் ஏடாகூடமாய் ஏதாவது சேர்த்தே கூப்பிடுவார்கள். முட்டாப் பசங்க கூட்டணி நடத்துவதுபோல், அன்று என் வீட்டில் பெரிய கூட்டமே கூடும். ` என் சித்தப்பா` – என அறிமுகப்படுத்தப்பட்ட நபரை இருபது வயது வரை பார்த்ததேகிடையாது. ஒரு முட்டாப் பசங்க கூட்டத்தில், என் அம்மா எனக்குக் காட்டிய அந்த மனிதர் வித்தியாசமாக இருந்தார். எனக்கு தெரிந்த எந்த சொந்தக்காரரும் இப்படி ஒரு சித்தப்பா எனக்கு இருந்ததாய் சொன்னதில்லை. அன்றும் என்னைப் போல் அவர்களுக்கும் வியப்பாகவே இருந்தது. என்னிடமிருந்த கிளாஸ் ஜூஸுக்கு பதில், ஒரு சிறு பொட்டலத்தை திணித்துவிட்டு சென்றுவிட்டதாய் ஞாபகம். கடைசி வரை அந்த பொட்டலத்தை பிரிக்கவேயில்லை.

அடுத்த நாள், ஆயி மண்டபத்து வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்த சித்தப்பாவைக் கடந்து போக முடியவில்லை. கத்தை கத்தையாக பேப்பரைக் கைகளில் வைத்தபடி, ஆயி மண்டபத்தைப் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த மண்டபம் ரோமான் ரோலாந்து நூலகத்துக்கு இடப்பகுதியில், ஆளுனர் மாளிகைக்கு எதிரில், வடிவான ஒரு பெண்ணின் இடுப்பைப் போல வளைந்திருந்தது. அந்த கால ராஜாவின் தொடுப்பாக இருந்தவள் நினைவாக இந்த தாஜ் மகால் என்பது கேள்விப்பட்ட கதை. பழைய களஞ்சியங்களின் விரச கற்பனையாக இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

சைக்கிளை சாவகாசமாக ப்ளாட்ஃபார்ம் கட்டைமேல் சாய்த்து நிறுத்தினேன். சும்மாவேனும் பேசத் தொடங்கி, கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். சித்தப்பா பழைய கதை சொல்லும் விதமே உடனடியாக என்னைக் கவர்ந்து விட்டது. தொண்டையில் ஒரு செருமல், டீ க்ளாசை நொடிக்கொரு முறை சுற்றிக்கொண்டு, மற்றொரு கைகளால் தன்னிடமிருந்த பேப்பரை மேய்ந்துகொண்டே பேசினார். அந்த பேப்பரிலிருந்து வந்த வார்த்தைகளா, அவர் கற்பனையிலிருந்து வந்தவையா எனத் தெரியவில்லை. ஆனால், கதை என்னவோ மந்திரமாகவே ஒலித்துக்கொண்டிருந்தது. அவர் கதையில் பெரிய மனிதர்களெல்லாம் கிடையாது, பெண்களும் குறைவானவர்களே, சிறுவர்கள் வந்த ஞாபகம் கிடையாது, பலரின் நடமாடும் ஒத்தை நிழல் போல் அதே ஆள் பல கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் கதைகள்.

அவர் கைகளில் இருந்தவை புதுவை காவல் நிலைய ஃப்.அய்.ஆர்கள். அதிலிருந்து சில கதைகளை அவிழ்த்துவிட்டார். பழைய கேஸ்களில் புது வார்த்தைகளும், புது கதைகளில் புராணக் கதை பாணியும் நிறைய இருந்தது. அடுத்த நாள் அதே இடத்தில் சந்தித்தபோது, பழைய ஃப்.அய்.ஆரிலிருந்து ஒரு கொலைக் கதை கூறப் போவதாக பெரிய பீடிகையுடன் ஆரம்பித்தார். இது அசல் ஃப்.அய்.ஆர் என்றும். கொலை நடந்ததற்கான சாட்சியங்கள் கூறியவற்றின் தொகுப்பு என்றும் கூறினார். நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. பழைய கதையில் புது சிகரெட் வாசனை, சுருட்டு/புகையிலை வந்தால் தானே பழைய வாசனை வரும்? என்னவோ போங்கள், உங்களுக்கும் அதைக் கூறுகிறேன் – காலம், பொருள், இடமெல்லாம் மாறிவிட்ட நிலையில் இது ஒரு கொலைக் கதையாகவும் இருக்கலாம், பல உருவங்களின் நிழக்களைப் போல ஒரே திணுசான ரத்தக் கதையாகவும் இருக்கலாம்.

FIR No:3529879/1/பொ.எண்
தேதி: மார்சு 17, 2007

என்ற கோப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. சில கதாசிரிய குறிப்புகளும், பத்திரிக்கை கத்திரிப்புகளும் அடங்கிய தடியான கேஸ்கட்டு.

….. உங்களையும் சுலபமாக யாராலும் கொலை செய்துவிட முடியும். என்னைக் கொன்றதுபோல்.

அடுத்த நாள் – ‘சதக், சதக்கென குத்தினான். இதை நேரில் பார்த்த சாட்சி’ – என பேப்பரில் வந்தால் சத்தியமாக நம்பாதீர்கள். ஒற்றைப் படை குத்துக்கள் மட்டுமே ஆளை காலி செய்ய முடியும். சரக்குடன் வரும்போதே போதை அதிகமாகத் தான் கொல்லவே வருவார்கள். அப்போதுதான் தைரியம் வருமென என் நண்பன் சொல்வான். சுருதி இறங்குவதுபோல் இருந்தால் ஒரே சதக்குதான். ஆனால், போதை ஏறுமுகத்தில் இருந்தாலோ ஒற்றைப் படை குத்துகளுக்கு கேரண்டி உண்டு. இரண்டு முறை குத்து வாங்கிய தப்பித்த நண்பன் சொன்னதுபோல் – ‘நிதானம் தவறிட்டாராம்பா..பாவம்.’

இத்தனைக்கும் என்னைக் கொலை செய்தவனுடன் நாளெல்லாம் சுற்றித் திரிந்திருக்கிறேன். பீச், ஒர்க்க்ஷாப், பாய் கடை, தம்மடிக்க ஆஸ்பிட்டல் பின்பக்கம் என நாங்கள் சுற்றாத இடமில்லை. அதுவும் பாண்டியை மத்தியான நேரத்தில் பார்க்க வேண்டும். அடூரின் படங்கள் தோற்றுவிடும் இழுவையான மத்தியானங்கள். அனல் பறக்கும் காலியான தெருக்கள். எல்லா கடைகளும் மதியம் ஒன்று முதல் நான்கு வரை மூடியிருப்பார்கள். பாழடைந்து சிதிலமடைந்த இடம்போல் ஊரே அமைதியாகக் காட்சிதரும். குறுக்குத்தெருக்கள் தான் இப்படி என்றால், மெய்ன் ரோடும் அதற்கு சவால் விடும் த்ராபை. கண் மண் தெரியாமல் வந்தால் அடுத்தடுத்து இருக்கும் சாராயக்கடைகளில் ஒன்றில் முட்டிக்கொள்வீர்கள். ஆனாலும் நூல் பிடித்தாற்போல் இருக்கும் தெருக்கள் ஒவ்வொன்றும் – ‘போய் சாகுங்கடா..’ என நேர் கோட்டில் பீச்சை சென்று அடையும். கடல் மட்டம் கொஞ்சம் கம்மியென்பதால், எந்த தெருவை சற்று நேரம் உற்றுப்பார்த்தால் அலையின் நுரைத் தெரியும்.

இப்படிப்பட்ட நுணுக்கமான ஆய்வுகளை என்னைக் கொலை செய்தவனுடன் மேற்கொண்டிருக்கிறேன். இதற்கு மேல் என்ன பீடிகை – அவன் என் நண்பன் சங்கர். தேவையில்லாத காரியங்களில் மூக்கையும் சேர்த்து எல்லாவற்றையும் நுழைப்பவன். அதில் இருக்கும் த்ரில்களில் பொழுதைக் கழிக்கிறான். அவன் வேலை பார்ப்பது, அட, அதெல்லாம் சும்மா – தினமும் வேலை என ஒரு வயதான பிரெஞ்சுப் பாட்டிக்கு உதவியாளனாக இருக்கிறான். அவளுக்கோ பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் எல்லாம் ஒரே மாதிரி தட்டையாகக் கேட்குமளவிற்கு கிழடு தட்டிவிட்டது. அவளிடம் என்ன கலெக்டருக்கு பி.ஏ போலவா வேலை செய்யப் போகிறான் சங்கர். ஏதோ எடுபிடி வேலை. நல்ல வருமானமுள்ள பிரெஞ்சுக்காரனை கல்யாணம் செய்து, குடித்தனம் நடத்தி, பரலோக ப்ராப்தியும் கொடுத்தவளுக்கு பணம் என்ன கம்மியாகவா இருக்கும்? தட்டைக் கழுவிவது, துணி துவைப்பதுதான் செய்வான் அந்த ரப்பர் வாயன் என எங்கள் நண்பர்களுக்குள் பேசிக் கொள்வோம். சங்கர் தான் ரப்பர் வாயன்.

நான் அங்கொன்று இங்கொன்று என அவ்வப்போது வேலை செய்து கொண்டிருந்தவன். ஊரிலிருந்த எல்லா வெட்டி பயல்களைப் போலவும், பீச்சில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதை வழக்கமாகக் கொண்டு, நல்ல முறையில் வாழ்வை ஓட்டிக்கொண்டிருந்தேன். ஒரே சாயங்காலத்தில் பீச்சில் நடப்பவர்களின் பேச்சைக் கேட்டால் தெரியும் நான் சொல்ல வருவது. ஓட்டைக் காலனாவிற்கு இப்போது மதிப்பு வந்துவிட்டது. அரசு உட்பட எல்லோரும் வாங்குகிறார்கள். ஆனால் கடையில் எவனாவது அதற்கு ஒரு கமர்கெட் மிட்டாய் கொடுப்பானா சொல்லுங்கள்? அப்படிப்பட்ட ஓட்டைக்காலனாவிற்குக்கூட ஒரு மதிப்பு உண்டு. ஆனால், இங்கு பேசும் எதற்கும் மதிப்பு கிடையாது. வெட்டி அரட்டை என்பதன் முழு அர்த்தத்தை உணர்வீர்கள்.

இப்படி தேவையேயில்லாத இரு நண்பர்கள் ஊர் சுற்றுவதில் என்ன குற்றம் நடந்துவிடப்போகிறது. குற்றம், கொலை, ரத்தம் போன்ற எந்த வார்த்தைகளும் எங்களுடன் ஒரே வரியில் தென்படவேபடாது. ஆனால் நேற்றோ அப்படிப்பட்ட குற்றாவாளியாகப்போகிறவனுடன் நடந்து கொண்டிருந்தேன். சங்கருக்கும் அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி தெரிந்திருந்தால் அப்போதே ‘ஸாரிடா மாம்ஸ்’ என சாஷடாங்கமாய் காலில் விழுந்திருப்பான். அப்படி ஒரு அப்பாவி. சந்தர்ப்பம் கிடைத்தால்..என்பதுபோல் நடக்கும் என எதிர்ப்பார்க்கவில்லை.

சங்கருக்கு வீட்டு புரோக்கர் வேலையும் சில சமயம் செய்வான். சமயத்தில் ஒரு வருட சம்பளம் கூட கமிஷனாக மட்டுமே கிடைத்திருக்கிறது. இதெல்லாம் ஒரே வாரத்தில் காலி செய்யும் அளவிற்கு கடன்களை எட்டு திசைகளிலும் வாங்கியிருக்கிறான். இருந்தாலும், கமிஷனிலேயே பல மாதங்கள் வரை ஓட்டியிருக்கிறான். எப்படி எப்படியோ பேசி வாங்குபவர்களை மடக்கிவிடுவான். வாயுள்ள பிள்ளை வீட்டை வாங்கி விற்று பிழைத்துக்கொண்டிருந்தான். மற்ற வேலைகளில் மந்தமாயிருந்தாலும் இதில் எப்படி சமாளிக்கிறானெனத் தெரியவில்லை. ஒரு வீட்டை விற்க ஒரு மாதம் வரை பிடிக்கும். அதுவரை பொறுமையுடன் இரு பார்ட்டிக்களிடமும் பேசி, சூட்டைத் தணியாமல் வைத்திருப்பது அவசியம். கொஞ்சம் கவனக் குறைவு ஏற்பட்டாலும், பார்ட்டி நம்மை விட்டு போய்விடும் என்பான். பல முறை இது நடந்தும் இருக்கிறது.

பாண்டிச்சேரி போன்ற சின்ன இடங்களிலெலாம் முறையான வீட்டு பத்திரங்கள் இருக்காது. பாதி ஆயுள் வரை தமிழில் எழுதியிருந்தாலும், மூதாதையர் கோப்புக்கள் பிரெஞ்சிலேயே இருக்கும். வான் தே யானுக்கும், வான் தே ஹுய்ட் யானுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பதற்குள் பிதுங்கிவிடும். இப்போதெல்லாம் பிரெஞ்சு தெரிந்த தமிழர்களே கம்மியாகிவிட்டார்கள். அதற்கெல்லாம் கண் டாக்டர் தோட்டம் பகுதியில் இருக்கும் ரிக்ஷாக்காரர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அதனாலேயே பத்திரங்கள் விவரத்தில் கராராக இருத்தல் அவசியம். சங்கருக்கு இந்த சூதெல்லாம் அத்துப்படி. எந்த வக்கீலிடம் பேசி எப்படி கோப்புகளை சரிபார்ப்பது, நிலங்களிருந்தால் அதன் அளவுகளை எப்படி நமக்கு சாதகமாகக் காட்டுவது எனத் தெளிவுள்ளவன். நான் எப்போதாவது இந்த மாதிரி டீலிங் நடக்கும்போது சென்று பார்ப்பதுண்டு. அது முடிந்த கையோடு டாவன் பாருக்குள் ஒரு ட்ரீட் உண்டு என்பதாலும் துணைக்குச் செல்வதுண்டு.

நேற்றும் அப்படித்தான் கொலைக்கான நோக்கம் எதுவுமில்லாமல் என் வீட்டுக்கு வந்து பிக அப்பினான் சங்கர். தான் வேலை செய்யும் இடத்திலிருந்து இரண்டு வீடு தள்ளி ஒரு வீடு விலைக்கு வருவதாகச் சொன்னான். சரிதான் சும்மா இருப்பதற்குப் பார்த்துவிட்டு வருவோம் என வெட்டிக் கூட்டணிக்கு வழிவகுத்தேன்.

இதற்கு முன் பாண்டிச்சேரியில் நடந்து வந்த பிரச்சனைப் பற்றி சொல்லவேண்டும். எங்கள் வேலையான வெட்டித்தனத்தை நாட்டுடமையாக்க கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் சில தொகுதி அரசியல் தலைவர்களும் இந்த புரொக்கர் வேலை செய்து வந்தனர். கண் டாக்டர் தோட்டம், மாஸ் ஹோட்டல் அருகிலிருந்து பஸ் ஸ்டாண்டு ஏரியா என சில வானிலை அறிக்கையைப் போல குறிப்பிட்ட இடங்களை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த கூட்டம். அங்கிருக்கும் வீடுகளை நோட்டம் விடுவது. ஓனர் இல்லாத சமயம் அந்த வீட்டு சாமான்களை விற்றுவிட்டோ, தூக்கிப்போட்டுவிட்டோ (அந்த தட்டு முட்டு சாமான்கள் எவனுக்கு வேண்டும்?), போலி வீட்டுப் பத்திரத்தை தயாரித்து விடுவர். ஓனர் திரும்ப வரும்போது அந்த வீடு அவர் பேரிலேயே இருக்காது. கொஞ்சம் முயற்சி செய்தால் அந்த கோல்மால்களைக் கண்டுபிடிக்கலாம் என்றாலும் தடியடி, கை பாம் எனப் பேர் போன பாண்டியில் இந்த முயற்சியெல்லாம் பல்லிலித்துவிடும்.

முக்கியமாக பிரெஞ்சு மக்கள் குடியிருப்புகளைத் தாக்கி வருவது லேட்டஸ்ட். இதற்கு ஒரு முக்கிய காரணம் – அவர்கள் பாதி நாட்கள் பிரான்ஸில் செண்ட், ஜிகினா சட்டை என வாங்கச் செல்வது. வருடம் முழுக்க குளிக்காமல் இருக்க எவ்வளவு செண்ட் பாட்டில்கள் வேண்டும். அதையெல்லாம் தரமான காலரி லாஃபெயத்தில் ஒரு பாட்டில் 50 யூரோ என வாங்க வேணாமா? பின்னர் பனிக் காலம் போல் இருக்கும் ஜூலை,செப்டம்பர் மாதங்கள் குளிர் காய்ந்துவிட்டு இந்தியாவுக்கு மூட்டை முடிச்சுகளோடு வருவார்கள். இங்கே போடுக்கொள்வதோ ஒரு அரைக்கால் பேண்டும், சட்டையைவிட பொத்தான்கள் அதிகமாயிருக்கும் மேலங்கி.அதற்கு இந்த பயணமும், மூட்டைகளும் அவசியம்தானா? நம்க்கென்ன..அவர்கள் திரும்ப வரும்போது வீடு இருக்காது என்பதே நம்க்கு தேவையானது. அதைச் செய்வது அரசியம் பலமுள்ள அடியாட்கள். அடியார்கள் போல், தங்கள் எஜமானருக்கு விசுவாசத்தின் உச்சத்தில் இருப்பவர்கள்.

சங்கரும் நானும் அந்த வீட்டுக்கு போய் சேரும் போது, அதன் வாசலில் இருந்த பால் நிறக்கார் ரோட்டையே அலங்கரித்துக்கொண்டிருந்தது.

– தொடரும்.

Series Navigation

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்