ஜனனம்

This entry is part of 39 in the series 20031016_Issue

வேதா மஹாலக்ஷ்மி


தொலைபேசி அலறிக்கொண்டே இருந்தது. அதை அவன் கேட்காதது போல இருந்தான். ‘ அத்தனை கோபம்…. அத்தனையும் முன்கோபம்! ‘ அவள் மனதுக்குள் முனகிக்கொண்டாள். இனி பேச முயற்சி செய்து பயன் இல்லை என்று தோன்றியது. ‘எத்தனை கேவலமாக நினைத்துவிட்டாய் ? இதற்கா இத்தனை காலம் உன் காலடியிலேயே கிடந்தேன் ? ‘ ஆத்திரம் எல்லாம் ஒரேயடியாக அடங்கிப் போய் , இனி என்ன செய்வது ? என்ற வழியே அறியாமல் கொஞ்ச நேரம் பித்துப் பிடித்தது போல் பேருந்து நிறுத்தத்திலேயே நின்றிருந்தாள்.

சாலையில் போக்குவரத்து அதிகமாக இருந்தது. இப்போதைக்கு கடந்துபோவது இயலாததுபோல் தோன்றியது. ‘தப்பு… நான் செய்தது எல்லாமே தப்பு! உன்னைச் சந்தித்தது , முதன்முதலில் உன்னைக் கவிதை செய்தது, உனக்கு என்னைப் பிடித்திருப்பது தெரிந்து சந்தோஷப்பட்டது, என் ஐம்புலன்கள் அறிய அறியவே உன்னை எனக்குள் செலுத்தி, செதுக்கிக் கொண்டது… எல்லாமே தப்பு! உன் ஆண்மையும் ஈகோவும் என்னை என்ன பாடுபடுத்தி விட்டது ? ‘ தொட்டுப் பேசறதுக்கும் தொழில் செய்றதுக்கும் உங்க கணிப்பொறி அகராதியில் என்ன பெயர் ? சகஜமா ? ‘ நீ கேட்டது கூட ஒருவிதத்தில் சரிதான்! ஆனால், இத்தனை நாட்கள் இதையெல்லாம் ஏன் மனதுக்குள்ளேயே வைத்திருந்தாய் ? சின்ன விஷ விதை விதைத்து இன்று செடியாகி , மரமாகி .. தேவையா இதெல்லாம் ? ‘ …. என்னைப் போய் எப்படியெல்லாம் நினைத்துவிட்டாய் ? ‘…. ‘ நீ என்னை விட்டுப் போயிட்டியோ ? ‘ ‘பார்த்துப் போம்மா… ‘ சைக்கிள் ஒன்று சத்தம் போட்டது.

‘எவ்வளவு தடவை கெஞ்சினேன் ? என்ன பிரச்சினை, சொல்லேன் என்று! இனிமேல் என்னிடம் இயல்பாக உன்னால் பேச முடியாதோ ? கண் பட்டது போல் ஒரேயடியாக என்னவெல்லாமோ நடந்து விட்டது. நீதானே எனக்கு எல்லாமும் ? ‘ தூக்கம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் மறந்து ஒரு வாரம் ஆகி இருந்தது. தலை வேறு அடிக்கடி வலிக்கிறது… தினமும் அழுகைதான். எப்படி சடாரென்று என்னைத் தூக்கி வீசினாய் ? உன்னாலும் அது முடிந்திருக்கிறதே… ஆச்சரியம் தான். என்னை உனக்கு ரொம்பப் பிடிக்குமே ? ஏன் இப்படியெல்லாம் செய்தாய் ? என் மேல் என்ன சந்தேகம் என்றாலும், என்ன வேறுபாடிருந்தாலும் நேரில் தெளிவு படுத்திக் கொள்ளாமல் இப்படி நம் உறவை மண் தோண்டிப் புதைத்து விட்டாயே…. எத்தனை ஆண்கள் மத்தியில் இருந்தாலும் ‘இவள் என்னுடையவள் ‘ என்ற உன் நம்பிக்கை தளரக் கூடாதல்லவா ? ‘எது நடக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் ‘ நீ அடிக்கடி சொல்லும் வார்த்தை…. ஆனால் , எது நம் இருவருக்குமிடையே நடந்துவிடவே கூடாதோ அது நடந்திருக்கிறது… தேவையே இல்லாமல், உன்னையும் காயப்படுத்திக்கொண்டு நம் உணர்வையும் சிதைத்திருக்கிறாய்…. உன்னிடம் எதையும் மறைத்துப் பேசத் தெரியாத என் குணம் தான் தவறா ? எல்லாமே செத்துப் போய்விட்டது, உன்னைப் பற்றிய என் நினைவுகளைத் தவிர…. ‘ ‘ நிஜமாவே, நீ என்னை விட்டுப் போயிட்டியோ ? ‘

அழுகை முட்டிக் கொண்டு திரண்டது. எனக்கு எதும் பிரச்சினைன்னா நீயா வந்து எல்லாம் செய்யணும், அனிச்சை செயல் மாதிரி.. அடிக்கடி சொல்வேனே… இனிமேல் வர மாட்டாயோ ? எனக்கு எதாவது நேர்ந்துவிட்டால் கூட , மனசைக் கல்லாக்கிக் கொண்டு அழக்கூட மாட்டாயோ ? என்ன சங்கடமாக இருந்தாலும் உன்னிடம் சொல்லியபின் எல்லாமே கரைந்து விடுமே… இப்போது இந்த சங்கடத்தை சொல்வதற்குக் கூட எனக்கு வேறு யாரும் இல்லையே ? ஒருவேளை நான் தான் உன்னிடம் நிறைய எதிர்பார்த்து விட்டேனோ ? இல்லை… நாம் பழக ஆரம்பித்த ஆரம்ப கட்டத்திலேயே நீ என்னிடம் நிறைய எதிர்பார்த்திருக்கிறாய்… ஏதோ திரைப்படம் பார்த்து விட்டு வந்ததை முதலில் உன்னிடம் சொல்லாததற்குத் தான் முதன்முதலில் என்னிடம் கோபித்திருக்கிறாய்… உனக்கு நினைவு இருக்கும் , நிச்சயமாய்! எதிர்பாராத விதமாக நீ ஏதோ தொலைத்துவிட்ட அந்த தருணத்தில் கூட, ஏதேதோ உணர்வுகளைக் கொட்டி எழுதிய மின்னஞ்சலை , ‘வந்து உன் முகம் பார்க்கிறேன் ‘ என்று முடித்திருந்தாயே…. ஆனால், இப்போது, மாதங்களாக என் முகம் பார்க்காமல் உன்னால் இருக்க முடிந்திருக்கிறதே… என் மேல் ஏன் அத்தனை கோபம் ? என் வாதங்களை கேட்காமல் நீயே ஒரு மூட்டை முன்கோபத்தை உன் மனதில் சுருட்டி வைத்ததால் தான், இன்று நான் என்ன விளக்கம் சொல்லும்போதும் உன்னால் அவை எதையும் அழிக்க முடியவில்லை. என்னைப் போய் எப்படியெல்லாம் நினைத்துவிட்டாய் ? ‘…. ‘ நீ என்னை விட்டுப் போயிட்டியோ ? ‘

முன்னெல்லாம் உன் பெயரைச் சொல்லும்போது ஒரு சுகம் இருக்கும் , மனசுக்குள்! இப்போது கூடவே வலியும்….. எதுவாக இருந்தாலும் உன்னிடம் தானே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன் ? இது வரையில் அப்படித் தானே நடந்தும் கொண்டேன் ? நான் செய்த தவறாக நீ சொல்லும் அத்தனையும் பூச்சிக் காரணங்கள்… உண்மையான கோபத்தின் அடித்தளம் வேறு ஏதோ.. அதை நீ இன்னும் சொல்லவே இல்லை…எத்தனை முறை கெஞ்சி இருப்பேன் ? ஏன் என்னை இவ்வளவு கஷ்டப்படுத்துகிறாய் ? என்னைப் பற்றி உனக்கு என்ன சந்தேகம் ? இப்படி தப்புப் பண்ணாமலேயே என்னை தண்டிப்பது சரியா….நம் இருவருக்குமே ஒருத்தரைப் பற்றி ஒருத்தர் எதிர்பார்ப்பு இருக்கிறது, நிறைய! அதில் கொஞ்சம் நழுவிப்போனாலும் இரண்டு பேராலும் தாங்க முடிவதில்லை…அதுதான்! உன் மனதில் சந்தேகத்தோடு என்னிடம் உன்னால் சுத்தமாக தெளிவாகப் பழக முடியாதே ? எனக்கும் அது பிடிக்கவில்லைதான்….. மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருக்கிறேன், உன் வார்த்தைக் காயங்களால்….என்னைப் போய் எப்படியெல்லாம் நினைத்துவிட்டாய் ? ‘…. ‘ நீ என்னை விட்டுப் போயிட்டியோ ? ‘

உன்னைப் பொறுத்த வரை என் இடத்தை நிரப்ப யாரும் இல்லை என்ற இறுமாப்பில் இருந்தேன்.. அதெல்லாம் பொய்யாகி விட்டது…. இல்லாவிட்டால் என்னை இப்படி சந்தேகத்தால் குத்திக் கிழித்திருக்க மாட்டாய்! ஆனால் எனக்கு அப்படி இல்லை… இன்னும் நீதான் ,.. நீ மட்டும் தான் எனக்கு எல்லாமும்…. பார்க்க எல்லாருடனும் பேசினாலும் நான் எந்த ஆணையும் அத்தனை நெருங்க விடும் ரகம் இல்லை…ஆனால், உன்னை ‘ஏன் ? ‘ என்ற மனதின் கேள்விக்கு பதில் தேட முயற்சிக்காமலேயே என் மனதில் செலுத்தினேன்…. இப்போதும் உன் கோபம் பற்றி எனக்கு வருத்தம் இல்லை… அதைத் தெளிவு படுத்த எனக்கு சந்தர்ப்பம் கொடுக்காமலேயே என்னை தண்டிக்க நினைத்திருப்பது பற்றி தான் என் ஆற்றாமையே! நீதான் என்னை, என்னைவிட அதிகமாகப் புரிந்து வைத்திருப்பதாக நினைத்துப் பெருமைப் பட்டேன்… அந்தப் புரிதல் இதுதானா ? எது எப்படி ஆனாலும் சரி, நீ நினைத்தது போல், நான் தப்பானவள் இல்லை என்பதை உனக்குப் புரிய வைக்க கடைசி வரை முயற்சிப்பேன்…

என் ஒரே கடைசி ஆறுதலாக உன்னை நினைத்திருந்தேன். இப்போது அந்த அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிடும் ஒரு சூழலில் நான் விட்டுக்கொடுக்க முன்வருகிறேன். என் பார்வைக்கு இயல்பாகத் தெரியும் சில விஷயங்களை மாற்றிக் கொள்ள சம்மதிக்கிறேன் , என்று நான் சொல்லியும் உன்னால் இறங்கி வர முடியவில்லையே… இதன் பெயர் ஈகோ இல்லாமல் வேறு என்ன ? இப்போது கூட மற்றவர்கள் சொன்னதும் சொல்வதும் என்னைப் பாதிக்கவில்லை.. நீ சொல்லியது தான் திரும்பத் திரும்ப ஒலிக்கிறது. சகஜ நிலைக்கு நான் திரும்ப முடியுமா என்று தெரியவில்லை.. ஒருவேளை இருக்கலாம்… ஆனால் காலம் பிடிக்கும். ‘

அவளுக்கு சாலையின் நடுவில் சென்றதும் தான் தெரிந்தது, அந்தக் கார் வருவதற்குள் கடந்து போவது அத்தனை சுலபமில்லை என்பது! மீண்டும் வேகமாகத் திரும்ப நினைத்து பின்னே கிட்டத்தட்ட நெருங்கிக் கொண்டிருந்த லாரிக்கு சைகை செய்தாள். அதை அவன் கவனிப்பதற்குள்ளாக அவள் கையில் இருந்த செல்போன் சாலையின் ஒரு முனையிலும் அவள் மற்றொரு திசையிலும் தூக்கி எறியப் பட…….. போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஏதோ உள்ளுணர்வால் செலுத்தப்பட்டவனாய் மறுமுனையில் , அவளிடம் பேச நினைத்து அவன் தொலைபேசியைத் தூக்குவதற்கும், கடைசியாக அவள் ஏதோ முனகுவதற்கும் சரியாக இருந்தது.

சென்னையின் பிரதான சாலை என்பதால் வெகு விரைவிலேயே எல்லாம் சரி செய்யப்பட்டது. விஷயம் அறிந்து அவன் அங்கு வந்து சேர்ந்தபோது, அவள் உடல் முழுதும் வெளிளைத் துணியில் சமாதானமாக சிரித்துக் கொண்டிருந்தாள். கீழ் வீட்டுப் பையன் சொன்னான், ‘நானும் அதே பஸ்ல தான் இறங்கினேன்… ரொம்ப நேரம் கிராஸ் பண்ணாம நின்னுட்டே இருந்தாங்க…. ஏதோ அவங்களுக்குள்ளயே பேசிக்கிட்டே இருந்தாங்க…. ‘ அவளைப் பார்க்கப் பார்க்க, அவனால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை…. தலை முதல் கால் வரை அவளை முத்தமிட வேண்டும் போல் இருந்தது, அவனுக்கு! முன்கோபத்தையும் அவசர புத்தியையும் அடியோடு வேரறுக்க முடிவு செய்து அவன் அவளை நெருங்க, ஏதோ ஒரு நிம்மதியில் அவள் உயிராக மனதுக்குள் ஜனித்திருப்பது போல் பட்டது. இனி சண்டை போட அவள் இருக்கப்போவதில்லை என்று புரியத் தொடங்கியபோது……… ‘அய்யோ….இப்படி ஆயிடுச்சே! ‘ அவன் தலையில் அடித்துக் கொண்டு அலறியது, நிஜமாகவே அவளுக்குக் கேட்கவில்லை….!!!

Series Navigation