39.1டிகிரி செல்ஸியஸ்

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


வானிலை அறிக்கை: சென்னை வெப்பநிலை நுங்கம்பாக்கம் அதிக அளவு 39.1டிகிரி செல்ஸியஸ் -குறைந்த அளவு 28.2 டிகிரி செல்ஸியஸ் -தினகரன் 12-07-2002

கிருபாவிற்கு, தன் அன்றாட வாழ்க்கையைத் தொலைத்து 604800 விநாடிகள் ஆகின்றன. இந்த வயதில் ஒரு இருபத்துமூன்று வயது இளைஞன் இப்படி ‘அய்யோபாவம் ‘னு இருப்பதற்கு ஆயிரத்தெட்டுக் காரணங்களா இருக்க முடியும். சாட்சாத் காதலேதான்.

கடந்த மார்ச் இருபத்துநான்காம் தேதி, தமிழ்க்காலண்டரில் போட்டிருந்ததுபோல கிருபாவுக்கும் வாணிக்கும் ஒரு சுப முகூர்த்ததினம். அன்றைக்கு, அகில இந்திய சென்னை வானொலி நிலையம் ஏற்பாடு செய்திருந்த இண்டர் காலேஜ் க்விஸ் புரோகிராம் ரிக்கார்டிங்குல இருவரும் சந்திக்க காதல், நம்ம தமிழ் சினிமா டைப்புல, உடனே வந்துடுச்சி.

அவர்கள் காதல் செய்ய ஆரம்பித்து சரியா ஆறுமாதம் ஆகுது. இந்த ஆறு மாதத்துல அறுபதுமுறை ஓட்டல்களிலும், இருபத்துநான்குமுறை சினிமா தியேட்டர்களிலும், சற்றுக் கூடுதல் எண்ணிக்கையில்

மெரீீனாவிலும், பன்னிரண்டு புதுக் கவிதைகளிலும், முடிந்த போதெல்லாம் போனிலும் தங்கள் காதலை வளர்த்து வந்திருக்கிறார்கள். கோடை விடுமுறைக்கென கிருபா அவனது சொந்த ஊரான ஊட்டியிலும், வாணி சென்னையிலும் தங்க நேரிட, காதல் ரிகர்சலுக்குத் தற்காலிக ஓய்வு. தகவல் பரிமாற்றத்துக்குக் காதலர்கள் நம்பி இருந்தது கிரகாம்பெல்லோட கண்டுபிடிப்பை. அது இப்படி வில்லத்தனம் செய்யும்னு கனவிலும் அவன் நினைச்சதில்லை. அவர்களுக்கிடையில் இப்படியொரு வெற்றிடம் பச். இல்லை..எப்போதும் ஏற்பட்டதில்லை.

கடந்த ஒரு வாரமாக வாணியை டெலிபோனில் தொடர்புகொள்ள முயற்சி செய்கிறான். அவள் வீட்டுக்கு ரிங் போகிறது ஆனால் எவரும் ரிஸீவரைத் தொடக் காணோம்.

சென்னையிலிருந்து கோடை விடுமுறைக்கு வந்த மறுநாளிலிருந்தே பிரச்சினை ஆரம்பித்துவிட்டது.

கிருபா வழக்கமாகச் செல்லும், எஸ்டிடி பூத்திற்குச் சென்று வாணி கொடுத்திருந்த எண்ணுக்கு அவள் கட்டைளைப்படி காலை பத்துமணிக்கு முயற்சிசெய்து பார்த்தான். ரிங் போவது தெளிவாகக் கேட்டது. ஆவலோடு காத்திருந்தான். மறுமுனையில் மயான அமைதி. ஏமாற்றத்துடன் அடுத்தமுறை அடுத்தமுறையென முயற்சித்ததுதான் மிச்சம். ‘ஷிட் ‘ என்று அலுத்துக் கொண்டான். ‘என்ன சார் காதலா ? நெம்பரக் குடுத்துட்டுப் போங்க. நான் வேண்டும்னா பிறகு ட்ரை பண்றேன் ‘ என்ற டெலிபோன் பூத் பெண்ணை முறைத்துவிட்டு வந்துவிட்டான்.

மதியம் வாணியின் எச்சரிக்கையையும் மீறி, ( ‘கிருபா, எனக்கு போன் செய்யணும்னா காலை பத்து மணிக்குச் செய்யுங்க.. நான் ஏதாவது செய்து டெலிபோன் பக்கத்துலே இருக்கறேன். மற்ற நேரத்துல வேண்டாம். எங்க குடும்பம் பெருசு. அப்பா அம்மா, அத்தை மாமா, தத்தா, பாட்டி தம்பி தங்கைனு எப்போதும் கூட்டம்தான்.. அவர்களுக்கு விளக்கம் சொல்லி இப்போதைக்கு என்னால ஆகாது. நேரம் வரும்போது சொல்லிக்கிறேன். ‘) நடப்பது நடக்கட்டும் என்று அதே பூத்திற்கு வந்து முயற்சி செய்தான். பெருசா ஒன்றும் நடக்கலை. காலையில் நடந்தது அப்படியே டிட்டோவாச்சு.

‘ஒருவேளை அவுட் ஆப் ஆர்டரா இருக்கலாம், எதற்கும் பி.எஸ்.என்.எல் சென்னை டெலிபோன்ஸ்க்குப் போன் போட்டுப் பார்க்கலாம் ? ‘ கேட்ட டெலிபோன் பூத் பெண்ணை இந்த முறை

நன்றியோடு பார்த்தான். என்கொயரியில் விசாரித்து,அண்ணாநகர் எக்சேஞ்சைப் பிடிக்க, ‘லைன்ல எதுவும் பிரச்சினை இல்லை சார். அந்த வீட்டைச் சேர்ந்தவங்கதான் எங்கேயாவது வீட்டைப் பூட்டிக்கிட்டுப் போயிருக்கணும் ‘ என்று பொறுப்பாகப் பதில் வந்தது.

கிருபாவுக்குப் பயம் சேர்ந்து கொண்டது. வாணியைப் பார்த்தாகணும்னு தீர்மானிச்சுட்டான். இரவோடு இரவாக, ஊட்டியிலிருந்து கோயம்புத்தூர் வந்து ஆம்னி பஸ் பிடித்து, தூக்கமின்றிப் பயணித்து எக்மோரில் இறங்கியபோது காலை மணி பத்து இருபது.

சென்னை வெய்யில் சுளீர் என்று முகத்தில் விழுந்தது.

கோடைவெப்பத்தில் சற்றுக் கூடுதலாகவே கறுத்துப் போன தமிழர்கள். நைந்துபோன ரூபாய் நோட்டுகளுக்காக கைமாறும் கதம்ப பானங்கள். ஈ மொய்க்கும் சர்பத் கடைகள், ஆவி பறக்க வியாபாரம் நடத்தும் டா ஸ்டால்கள், வியர்வையில் குளித்து தீ மிதித்ததுபோல் ஓட்டமும் நடையுமாய் பரபரக்கும் பாதசாரிரிகள். அவர்கள் கால்களில் கவனம் வைத்து போஸ்ட்டர் கூரையில் தொழில் நடத்தும் செருப்புத் தைப்பவர்கள், குடை நிழல் வியாபாரிகள், நுரை தள்ள பாரமிழுக்கும் கொம்பொடிந்த மாடுகள், கலப்பட பெற்றோல் வாகனங்கள், அந்த வாகன ஓட்டத்தில் எழுந்து அடங்கும் புழுதிகள், வாடிய கதம்ப மணம், மூத்திர நாற்றம் இவற்றோடு, கடும் வெப்பமும் சேர்ந்துகொண்டு சென்னை என்ற பெயரில் ‘ஹலோ ‘ என்றது. அலட்சியப்படுத்திவிட்டு, கொஞ்சம் வாணியை நினைத்துப் பார்த்தான். குளுகுளுவென்றிருந்தது.

வாணி வீட்டுக்குப் போவதற்கு முன்னால் ‘போன் போட்டுப் பார்க்கலாமா ? ‘ என்று யோசித்து அருகில் ஏதேனும் சிவப்புச் சாயம் தெரிகிறதா ? என்று பார்வையை ஓட்டியதற்குப் பலன் கிடைத்தது. இம்பாலாஓட்டலுக்குப் பக்கத்தில் ஒரு டெலிபோன் பூத், ‘வாவென்று ‘ அழைக்க ஓடிச்சென்று, வரிசையில் காத்திருந்து, பூத் நடத்துபவனிடம் ‘ஒரு லோக்கல் கால் ‘ என்று ஒப்பித்துவிட்டு, கேபினுக்குள் நுழைந்து எண்களை ஒத்திக் காத்திருக்க மறுபடியும் ஏமாற்றம்.

ஆட்டோ பிடிக்க நினைத்து, எதிரே வரிசையில் கலைந்து நின்றிருந்த ஆட்டோக்களை குறிவைத்து நடந்தவனின் பக்கத்தில் பெரிதாக அலறிக்கொண்டு ஆட்டோவொன்று இடிப்பதுபோல் வந்து நிற்க, கிருபா பயந்து திரும்பினான்.

‘இன்னா சார் ? ஆட்டோவா ? எங்க போகணும் ? ஏறுங்க ‘

‘அண்ணா நகர் ஈஸ்ட் போகணும், நெ.10, கே.பிளாக் 8 வது அவென்யூ ‘ சொன்னவனை வாங்கிக் கொண்டு, சென்னை ட்ராஃபிக்கில் மூழ்கி எழுந்து, பின்னர் ஒற்றையாய் ஓடி, வாணி வீட்டை ஆட்டோ அடைந்தபோது, மனி பதிணொன்றரை ஆகிவிட்டிருந்தது.

கிருபா, வாணியின் வீட்டை முதல் முறையாகப் பார்க்கிறான். வீடு எதிர்பார்த்ததைப் விட பெரிசு. வெளியே செங்கல் பார்டர்களுக்குள் கார்டன். இடைக்கிடை இரண்டொரு தென்னை, வாழை.. கார்டன் மொத்தமும் தண்ணீரை எதிர்பார்த்துத் துவண்டிருந்தன. ‘வீட்டைக் பூட்டிக்கிட்டு அப்படி எங்க போயிருப்பாங்க ? இவ்வளவு பெரிய வீட்டுக்கு வேலைக்குண்ணு யாராவது இருக்கணுமே ‘ என்று யோசித்து குழம்பிப் போய் நின்றான்.

‘இன்னா சார், 10ம் நம்பர் வீட்டுக்கா ? உள்ளே போய்க் கதவைத் தட்டுங்க! ‘ என்று, எதிரே தள்ளுவண்டியில் துணிகளை அயர்ன் செய்து கொண்டிருந்த நபர் கிருபாவைப் பார்த்துவிட்டுச் சொன்னான். அவன் சொன்னவிதம் சரியில்லை, கிருபாவிற்கு ஏதோ நிழல் தட்டியது. பக்கத்தில் இருந்தவனிடம் தேவையில்லாமல் ஏதோ கிசுகிசுத்துவிட்டுச் சிரிக்கிறான்.

முதுகைத் தொட்ட அவர்கள் சிரிப்பை, ஒதுக்கிவிட்டு கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே சென்று வெளிக்கதவைத் அழுத்த, பெரியதொரு கொட்டாவி விட்டது. கதவைத் திறந்தவன் அதிர்ச்சியில் சிலையாகிவிட்டான். இப்படியொரு காட்சியை எதிர்பார்க்கவில்லை.

வாணி வேட்டியைமடித்துக் கட்டிக்கொண்டு, மும்தாஜ் போஸில் அதிகாரம் செய்ய சற்றுத் தள்ளி ஒரு வயதான பெண்மணி (அவளது அத்தையாக இருக்குமோ ?) ஒரு அப்பராணி மனிதர் மீது கன ஜோரா சவாரி செய்துகொண்டிருக்கிறாள். சற்றுத்தள்ளி இன்னொரு பெண்மணி ஒரு ட்ரைசைக்கிளில் தேமேவென்று வெள்ளோட்டம் நடத்திக் கொண்டிருக்கிறாள்(வாணியின் அம்மாவோ ?).

கிழவி ஒருத்தி மிஸஸ் அப்புசாமி ஸ்டைலில் ஸ்கிப்பிங் விளையாட, மிஸ்டர் அப்புசாமி ஜாடை தாத்தா யோகா செய்துக் கொண்டிருக்கிறார் (வாணியோட தாத்தா பாட்டியாகவிருக்கலாம்).இன்னொருபக்கம் சிறுவன் ஒருவன் பிரிட்ஜில் உட்கார்ந்துகொண்டு காமிக்ஸில் மூழ்கியிருக்க, சிறுமி ஒருத்தி ஷக்கலக்க பேபி பாடிக்கொண்டு வாஷிங் மெஷினில் நுரைக்க நுரைக்க சோப்பைக் கரைத்துக் கொண்டிருக்கிறாள்.

கிருபாவிற்கு சுய நினைவு வரச் சிறிது நேரம் பிடித்தது.

‘வாணி.. வாணி.. ‘

சிறிதுநேரம் சென்று வாணி மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள். ம்.. அவளிடத்தில வேறு ரியாக்ஷனில்லை. பிறகு திடாரென்று சுவிட்சைப் போட்டது போல வசனம்.

‘கிருபா. இட் ‘ஸ் யூ.. உங்களை இங்க நான் எதிர்பார்க்கலை. ஐ கான்ட் பிலிவ் இட். ‘ சொல்லிவிட்டு அசாதரணமாகச் சிரிக்கிறாள். பிறகு மறுபடியும் மெளனம்.

‘யெஸ், ஐ யாம் கிருபா. உன்னோட கிருபா. ஊட்டியிலேர்ந்து வந்திருக்கன். வாட் ஹேப்பண்ட் டு யூ ? உங்கிட்டருந்து போன் வரலன்னதுமே நான் ரொம்ப பயந்துட்டேன். இங்க என்ன நடக்குது ? ஆர் யூ.. ? ‘ என்று சொல்ல வந்தவன் நாக்கைக் கடித்துக் கொண்டான்.

‘இன்னா சார் பண்றது. இப்படித்தான் போன திங்கட்கிழமையிலிருந்து இங்கே ஒரே கூத்தாயிருக்குது. இந்த வருஷம் மெட்ராஸ் வெய்யில் கொஞ்சம் அதிகமிண்ணுதான் சொல்றாங்க. அதனாலதான் இப்படி ஆயிப்போச்சுண்ணு நினைக்கிறேன். எலுமிச்சை பழம் வாங்கிவந்து தலையிலே தேச்சுக் குளிக்க வச்சேன். குற்றாலத்துக்கு போயிட்டு வந்தா எல்லாம் சரியாயிடும் ‘ என்று சொல்லிக்கொண்டு போனவரைத் தடுத்தி நிறுத்தி கிருபா ‘யார் நீீ ‘ ன்னு கேட்டான்.

‘ எம்பேரு ஆறுமுகம்ங்க, அரை நிஜார் போட்டதிலிருந்து ஐம்பது வருஷமா இங்கதான் வேலை செய்யறேன் ‘

‘இவங்க சொந்தக்காரங்க யாராவது உங்களுக்குத் தெரியுமா ? ‘

‘நிறையப் பேர் இருக்காங்க.. ஆனா ஆபத்துக்கு உதவறங்க இல்லைங்க.. ‘

‘சரி ஒண்ணு செய்.. கொஞ்சம் இவர்களைப் பார்த்துக்க. நான் பக்கத்துல ஏதாவது போலீஸ் ஸ்டேஷன் இருந்தா தகவல் சொல்லிட்டு. அப்படியே சைக்கியாட்றிஸ்ட்டு யாரையாவது பார்த்து என்னன்னு கேட்டுட்டு வறேன் ‘

அடுத்து வாணியைப் பார்த்து, ‘வாணி! . யூ நீட் ட்ரீட்மெண்ட். ப்ளீஸ் வெய்ட். ஐ ல் பி பேக் அகெய்ன் ‘ என்று சொன்ன கிருபா, வாணியின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அடுத்த முப்பத்தோராவது நிமிடம் அண்ணா நகர் காவல்நிலையத்தில் இருந்தான்.

வழக்கமான காவல் நிலையங்களுக்கே உள்ள பிரதான அடையாளங்களுடன் இருந்த அந்த ஸ்டேஷனில் கிருபா நுழைந்தபோது, ஒரு போலிஸ்க்காரர் காரணமின்றி இவனுக்குச் சல்யூட் அடித்தார். அவரிடம் இன்ஸ்பெக்டரை பார்க்கணும் என்றான்.

‘இன்ஸ்பெக்டர் அய்யா இல்லை. எலெக்ஷன் டூட்டிக்கு போயிருக்கார். ரைட்டர் ஐயா இருக்கார். போய் பாருங்க என்று அவர் கைகாட்டிய திசையில் நுழைந்து அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்தான்.

கொஞ்ச நேரம் கழித்து ரைட்டர் எனப்பட்டவர் வந்தார். ‘உள்ளே வாங்க.. என்ன சேதி ? ‘

கிருபா நடந்ததைச் சுருக்கமாச் சொன்னான். ‘அவங்களுக்கு நான் உறவு எதுவுமில்லை. நாளைக்குப் பிரச்சினைகள் வரக்கூடாது இல்லையா ? அதனால்தான் உங்கக் கிட்ட வந்தேன் ‘.

‘அப்படியே இதுல எழுதிக் கொடுத்திடு. வெய்யிலுக்கு என்ன குடிக்கிற ? கொக்கோகோலா.. பாண்டா லிம்கா ‘

கிருபாவால் நம்பமுடியலை. ‘நோ. தேங்க்ஸ். ‘ இதை நான் எதிர்பார்க்கலை. வெளியே காவல்துறையைப் பற்றி தவறான அபிப்ராயமிருக்குது. இங்கே அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷன் மிகவும் வித்தியாசமாயிருக்கு ‘

‘நீங்க நம்பலை இல்லை. இங்கே பாருங்க. இதைக்கூட எதிர்பார்த்திருக்கமாட்டாங்க. இது பப்ளிக் கிட்டருந்து எங்க ஸ்டேஷனுக்கு வந்த மாமூல்ப்பணம். இதுல எவ்வளவு வேண்டுமானாலும் செலவுக்கு வச்சுக்குங்க. ‘

கத்தையாக மேஜையின்மேல் வந்து விழுந்த ரூபாய் நோட்டுகளைப் பார்த்ததும், கிருபா சந்தேகப் பட்டு ரைட்டரைப் பார்த்தான். கண்களை விரித்து வீரப்பா பாணியில் ஹஹ் ஹா..என்றார். எங்கேயோ இடித்தது. எழுந்து கொண்டான்.

‘உட்கார். எம்பேர்ல நம்பிக்கை இல்லையா ? எங்க இன்ஸ்பெக்டரைக் கேளு, விவரமாச் சொல்வாரு ‘

‘இன்ஸ்பெக்டரா ? ஏதோ எலெக்ஷன் டூட்டியில இருக்கிறதா சொன்னாங்க ?

‘யோவ்! நாந்தான்யா அது.

‘அப்ப ரைட்டரு ? ‘

‘வெளியிலே நிக்கறாரே அவரு. ‘

‘இல்லைசார் நான் வறேன். ‘ எனக்கு குழப்பாமாயிருக்குது.

‘இதுக்கே குழம்பினா எப்படி ? இன்ஸ்பெக்டர் போகவேண்டிய எலெக்ஷன் டூ

ட்டிக்கு கான்ஸ்டபிள அனுப்பியிருக்கோமே ? ‘

‘வேண்டாம் சார் நீங்க ஏதாவது செஞ்சிக்குகுங்க, என்னை விடுங்க. நான் என்னோட வாணியைக் காப்பாற்றியாகணும். கிருபா ஓடத் துவங்கினான்.

பின்குறிப்பு: தமிழக அரசின் முதலமைச்சர் அலுவலகம் மாலை 4மணி

‘மேடம்!.. கலைஞர் லைன்ல இருக்கார் ‘. பவ்யமாகச் சொன்னவர் முதமைச்சரின் தனிச் செயலர்.

‘கொடுங்க ‘

‘குட் ஈவ்னிங் மிஸ்டர் கருணாநிதி. என்ன விஷயம் சொல்லுங்க ‘

‘வணக்கம்மா.சென்னையில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு எதிர்க்கட்சி என்ற வகையில

நாங்க உதவத் தயாராயிருக்கிறோம்.

‘தேங்க்ஸ் ‘ இரு பக்கமும் டொக்கென்று ரிஸீவர்கள் வைக்கப்படுகின்றன.

***

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா