நேற்று இல்லாத மாற்றம்….

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

நம்பி.


அழகப்பா எழில் விடுதியில் வெள்ளிக்கிழமை என்றாலே கொண்டாட்டம்தான். இரவு சாப்பாட்டுக்கு புரோட்டா, கோழி குருமா. முருகப்பா மண்டபத்தில் சினிமா. தொடர்ந்து இரண்டு நாள் விடுமுறை. அன்று இருக்கும் ஒரே சோகம் ‘ஒலியும் ஒளி ‘யும்தான். பார்க்காமல் இருக்கவும் முடியாது.

ராமனாதன் ஹாக்கி விளையாடிவிட்டு உற்சாகமாய் வந்தான். அவன் படிகளில் துள்ளி ஏறும்பொழுது சிம்பன்சி போல இருக்கும். உடம்பெல்லாம் முடி வேறு.

‘டேய் மாவு பணியாரம், குளிக்கிற சோப்பு இருக்காடா ? ‘ எதிர்பட்ட ஆல்வாவிடம் கேட்டான்.

‘நக்கீரன கேளு. போன வாரம்தான் ரின் வாங்கினான் ‘

வெறுப்பேற்றிய ஆல்வாவை அர்ச்சனை செய்தபடியே குளித்தான். ‘நீ போடா கூஜா. நான் தாண்டா ராஜா ‘ என்று சத்தமாகப் பாடினான் ( ?).

‘என்னடா ஒரே ஜாலியா இருக்க. மரணவிலாஸ்ல சர்பத் அடிச்சிட்டு காசு கொடுக்காம வந்திட்டியா ? ‘ அறைக்குள் வந்ததும் அருண் கேட்டான். ‘போடா சோடாபுட்டி. இன்னக்கி அன்னபூர்னால பிரேமாகூட சாப்பிடப் போறேன் ‘ அட்டகாசமாய் உடுத்திக்கொண்டு ஓடினான்.

பிரேமா, ராமனாதன் இருவரும் கணனி இறுதியாண்டு. பிரேமாவுடன் நிறைய கடலை போடுவான். அவளைப் பற்றி அடிக்கடி பேசுவான். அருண் எந்திரவியல். ராமனாதனுடன் பள்ளியில் தொடங்கி இன்றுவரை வளரும் நட்பு.

இரவு சாப்பாடு, சினிமா எல்லாம் முடித்து நிலைகொள்ளாமல் வந்து சேர்ந்தான் ராமனாதன். தூங்கிக்கொண்டிருந்த அருணை எழுப்பினான். போர்வையை விலக்கி வாயில் இனிப்பைத் திணித்தான்.

‘என்ன விஷயம் ? ‘ தூக்கம்கலையாமல் கேட்டான் அருண்.

‘நானும் பிரேமாவும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம் ‘

‘உளறாம தூங்கு ‘ அருண் புரண்டு படுத்துக்கொண்டான்.

‘நான் எவ்வளவு முக்கியமான சேதி சொல்றன். நீ பாட்டுக்கு தூங்குற ‘

அருணை வலுக்கட்டாயமாய் தூக்கி உட்கார வைத்தான். என்னன்னவோ பேசினான். கடைசியில் கேட்டான் ‘வீட்ல எதும் பிரச்சனையின்னா நீதான் சாட்சி கையெழுத்து போட்டு கல்யாணத்த நடத்தி வைக்கணும் ‘

‘நீ அமெரிக்கா போய் படிச்சி முடிச்ச அப்புறம்தானே இதெல்லாம் ‘ ராமனாதனின் தீவிரத்தை உணர்ந்து அருண் கேட்டான்.

‘நான் படிப்பு முடிஞ்சி திரும்ப வர்ற வரைக்கும் காத்திருப்பா ‘. இரவு முழுவதும் பேசிக்கொண்டெயிருந்தான். தூங்கவிடவில்லை. கொசுக்கடியுடன் இவனும் சேர்ந்துகொண்டான்.

இப்பொழுதெல்லாம் ராமனாதன் ஹாக்கி ஆடுவதை தவிர்த்து பிரேமாவுடன் சுற்றினான். தனியாக சிரித்தான். பியர் அடிக்காமலே ‘டபக்கு டப்பா ‘ என்று ஆடினான்.

நாட்கள் நகர்ந்து இறுதித் தேர்வு நெருங்கியிருந்தது.

நூலகத்திலிருந்து வெளிப்பட்ட அருணை கோபமாய் இழுத்துப் போன ராமனாதன் கேட்டான். ‘உனக்கு அறிவு இருக்காடா ?. ஏன் இப்படி காட்டுமிராண்டியா நடந்துக்குற ‘

‘நானா ? என்ன சொல்ற

‘ நேத்து நளினிகூட சண்டை போட்டியா ? ‘

‘அவதான் எங்கிட்ட வம்புக்கு வரா ‘

‘ஏன் உங்கிட்ட மட்டும் அப்படிப் பண்றா ? ‘

‘கொழுப்பு ‘

‘இடியட். உனக்கு அயர்ன் ராண்ட் மட்டும்தான் படிக்கத் தெரியும். நீ திட்டுனத பிரேமாகிட்ட சொல்லி அழுதிருக்கா ‘

‘இங்க பாரு, பரிட்சை வந்துட்டுது. லீவுல பிரேமாவ வீட்ல போய் படிக்கச் சொல்லு. அப்பதான் நீயும் படிப்ப. என்னையும் படிக்க விடுவ ‘ என்ற அருணை ஜடத்தைப் போல் பார்த்தான். பின்னர் ஏதோ முனுமுனுத்தபடி போனான்.

ஸ்டடி லீவில் எல்லா விடுதியிலும் தீப்பறக்கும். மரண விலாஸில் விடிய விடிய டாயும் பீடியும் பறக்கும். பிரேமா வீட்டுக்குப் போயிருந்தாள். ராமனாதன் அவளைப் பற்றி புலம்பியபடியே படித்தான்.

எல்லோரும் ஹாய்யாக ஹாலை விட்டு வெளியே வந்தனர். கம்ப்யூட்டர் தேர்வுகள் எல்லாம் முடிந்துவிட்டன. மற்ற பிரிவுகளுக்கு ஒன்றிரண்டு பாக்கி. இன்னும் இரண்டு நாள் கழித்துதான் அடுத்த தேர்வு. பிரேமா அகல்யாவுடன் வேப்ப மரத்தடியில் காத்திருந்தாள்.

‘ராம், அங்க பாரு பிரேமா காத்திருக்கா. ஹனிமூன் எங்க போறதுன்னு அவ வாயால சொல்ல வெட்கம் போல இருக்கு. துணையோட காத்திருக்கா ‘ என்று சொல்லிவிட்டு அருண் இந்திய ‘குடி ‘மக்களின் கூட்டத்தில் ஐக்கியமானான்.

அதிகாலை மூன்று மணிக்கு நக்கீரன் அருண் அறைக் கதவை உடைத்தான்.

‘அருண் நாயே, கதவைத் திறடா ‘ அழுகையாய்க் கத்தினான்.

‘என்னாச்சு ‘

‘ஆக்ஸிடெண்ட். ராம ஆஸ்பத்தரில சேர்த்திருக்கு ‘

‘எங்க, எப்படி ‘ பரபரத்தான்.

‘ராத்திரி தனியாப் போய்க் குடிச்சிட்டு யாமாஹால வேகமா வர்றபோ… லாரி மோதி …. ‘

மருத்துவமணையில் கும்பலாய் மாணவர்கள். ராமனாதன் வீட்டுக்கு அசோக் போயிருந்தான். டாக்டர்கள் நம்பிக்கையில்லாமல் நம்பச் சொன்னார்கள். கலையில் மாணவர்கள் கூட்டம் ஈயாய் மொய்த்து பின் கலைந்து போனது. பிரேமாவும், அகல்யாவும் வந்திருந்தனர்.

‘நேத்து என்ன நடந்திச்சு ? ‘

‘பிரேமாவுக்கு அவ அத்த பையன் அமெரிக்கால இருக்கான். அவன்கூட நிச்சயம் ஆயிடிச்சு. நாங்க ராம ரொம்ப சமாதனப் படுதுனோம். ஆனா இப்படியெல்லாம் குடிப்பான்னு தெரியாது. ஒன்னும் சீரியஸ் இல்லையே ‘

‘கெட் லாஸ்ட். யூ ப்ளடி பிட்ச் ‘. ஆத்திரமாய் வெடித்த அருணை நளினி தடுத்தாள். பார்த்தசாரதி ஓடிவந்து கையைப் பிடித்துக் கொண்டான். விடவில்லை. ராமனாதன் கைப்பிடி சாம்பலகும் வரை.

தேர்வு முடிவுகள் வந்திருந்தது. எல்லோரும் ஏதோ ஒரு வேளையில் சேர இருந்தனர். தனியாக நின்ற அருணிடம் நளினி வந்தாள். சற்று பூசினாற் போலிருந்தாள். ‘என்ன செய்யப் போற ‘

‘ஒரு பேப்பர் எழுதல. ஆறு மாசம் கழிச்சுதான் யோசிக்கனும். நீ என்ன செய்யற ‘ ‘பெங்களூர் ‘பெல் ‘ல சேர்ந்திருக்கேன். நீயும் அங்க வாயேன். ஏதாச்சும் பார்ட்டைம் வேலை பார்க்கலாம். ஆறு மாசம்தானே சமாளிச்சிடலாம் ‘

ஆழமாய்ப் பார்த்த அருணின் கண்களில் வண்ணத்துப் பூச்சியாய் சிறகடித்தாள். மெளனமாய் நின்றவனின் கைகளைப் பற்றித் திடமாய் நடந்தாள். தூரத்திலிருந்து ஆல்வா வித்தியாசமாய்ப் பார்த்தான். ஆச்சரியமா, அனுதாபமா தெரியவில்லை.

***

ca_nambi@hotmail.com

Series Navigation

நம்பி

நம்பி