வாயு – அத்தியாயம் ஐந்து

This entry is part [part not set] of 33 in the series 20030317_Issue

இரா முருகன்


நாலு.

தாடிக்காரன் ஆசியளிப்பதுபோல் விரல்களை உயர்த்திக் காட்டிக் கொண்டு கூவினான்.

கடைசி வரிசைப்பெண் கூட்டத்துக்கு முதுகு காட்டி பறப்பதற்குத் தயாரனது போல் கைகளை விரித்து சிறிதே குனிந்தபடி நின்றாள்.

குளோரியா அம்மாளுக்கு இனியும் அடக்க முடியாது என்று தோன்ற மெல்ல எழுந்தாள். பின்னால் இருந்து மொட்டைத் தலையன் அவளை உட்காரச் சொன்னான்.

முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கணத்தை இழக்க விருப்பமில்லாதவனாக அவன் குரல் அவசரத்தைக் காட்டியது.

குளோரியா அம்மாள் ஒரு வினாடி தயங்கி உட்கார்ந்தாள். உடல் உபாதை பொறுக்க முடியாமல் போய்க் கொண்டிருந்தது.

ஐந்து.

தாடிக்கார ஹீவ்ஸ் முன்னிலும் பெரும் சத்தமாகக் கூவினான்.

சிரிப்புச் சத்தம்.

கடைசி வரிசைப் பெண் பலமாகச் சிரித்து தன்னால் முடியவில்லை என்று தெரிவித்தபடி தரையில் குந்தி உட்கார்ந்தாள்.

அவள் சிரிப்பு இன்னும் அடங்காமல் அதிகமாக அப்படியே கவிழ்ந்து படுத்து உடல் முழுக்கக் குலுங்கச் சிரிக்க ஆரம்பித்தபோது கூட்டம் முழுவதற்கும் அந்தச் சிரிப்பு தொற்றிக் கொண்டது.

நிறுத்தலாம்.

கண்ணாடித் தடுப்புக்குப் பின்னால் இருந்து கேட்ட குரல் குளோரியா அம்மாளுக்கு நற்செய்தியை அறிவிப்பதாக இருந்தது.

அவள் வரிசையாகப் போட்ட நாற்காலிகளைக் கடந்து கழிவறைகள் என்று அம்புக் குறி போட்ட இடம் நோக்கி நகர்ந்தாள்.

பின்னால் இருமல் சத்தம். அந்தக் கிழவராக இருக்கும்.

அவள் கழிவறையில் இருந்து வெளியே வந்தபோது உலகம் பெருந்துன்பங்கள் இன்றி சகித்துக் கொள்ளக் கூடியதாகத் தோன்றியது.

பக்கத்தில் ஆண்கள் பக்கத்துக் கழிவறை திறந்து மொட்டைத் தலையன் வெளிப்பட்டான்.

அவனைப் பார்ப்பதைக் குளோரியா அம்மாள் தவிர்த்தாள். கழிவறைக்குள் போகும், அங்கே இருந்து திரும்பி வரும் நபர்களை, முக்கியமாக ஆண்களைக் கண்ணில் நேராகப் பார்ப்பது அருவருப்பானது என்று அவளுக்குத் தோன்றியது இது முதல் முறை இல்லை.

குளோரியா அம்மாளின் வீட்டுக்காரன் இறந்த பிறகு அவளுக்குக் கிடைத்த வேலை பெரிய நிறுவனங்களில் கழிவறைகளைப் பராமரிக்கும் பணிதான்.

உடுப்புக்கு மேல் மஞ்சள் நிற ஓவர் கோட்டும், பெரிய பிளாஸ்டிக் பையும், கையுறையுமாக அவள் நுழைய வேண்டி இருந்த அலுவலகங்கள் தம் பிரம்மாண்டத்தால் அவளைப் பயமுறுத்தின.

ஓயாது ஒலிக்கும் தொலைபேசி மணிச்சத்தம், வரிசையாக இருந்த கம்ப்யூட்டர் திரைகள், வேலையில் மூழ்கி இருக்கும் கனவான்கள், சீமாட்டிகள், காப்பியும், மற்றதும் காசுபோட்டதும் வழங்கும் யந்திரம் என்று அவளோடு கொஞ்சமும் தொடர்பு இல்லாத உலகம்.

அவளுக்குக் கிடைக்கும் மாதாந்திரக் குடும்பப் பென்ஷன் கூட அம்மாதிரியான ஓர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படலாம் என்ற ஆசுவாசமான நினைவோடு அவள் பெண்கள் கழிவறைகளையும், ஆண்களுக்கானவற்றையும் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள்.

பெண்கள் கழிவறைகளில் பிரச்சனை ஏதும் இல்லை. யாராவது உபயோகித்துக் கொண்டிருக்கும்போதே மிச்ச இடத்தில் துப்புரவுத் திரவமும் தண்ணீருமாகப் பீய்ச்சி அடித்து மணக்க மணக்கத் தூய்மைப்படுத்தலாம். உபயோகித்துக் கொண்டிருந்த பெண் கடந்து போனதும் மிச்ச வேலையையும் முடித்துக் கொண்டு பிளாஸ்டிக் பையில், கை துடைத்துப் போட்ட காகிதங்களை வாரி எடுத்துக் கொண்டு கிளம்பி விடலாம்.

ஆண்கள் கழிவறைகள் வித்தியாசமானவை. நுழைவதற்கு முன் ஒரு தடவை கதவை மெல்லத் தட்ட வேண்டும். பலமாகத் தட்டினால் பொறுமையின்மையைக் காட்டுவதாகக் கொள்ளப்படும் என்று அவள் வேலையில் சேரும்போது சொன்னார்கள். ஆண்கள் கழிவறைகளையும் தான் சுத்தம் செய்ய வேண்டிவரும் என்று அவளுக்குத் தெரியவந்தது அப்போதுதான்.

உள்ளே இருந்து என்ன வேண்டும் என்ற சத்தம் வந்தால் உடனே கழிவறையை ஒட்டி இருக்கும் சின்னப் பொந்து போன்ற உள்ளறையில் குளோரியா அம்மாள் கரப்பான் பூச்சி போல் மறைந்தபடி நின்று கொள்வாள். காத்திருக்க வேண்டும். உள்ளே போனவன் வெளியே வரும் வரை.

வந்ததும் உடனே உள்ளறையில் இருந்து, ‘கழிவறை தூய்மைப்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது – சிரமத்துக்கு மன்னிக்க வேண்டும் ‘ என்று எழுதிய பலகையை நகர்ந்தி வந்து வாசலில் வைக்க வேண்டும்.

உள்ளே போய் மூத்திரப் புரைகளில் வாடை போக்கப் போடப்பட்ட சிறுநீர் நனைத்த அந்துருண்டைகளைப் பொறுக்கி எடுத்து பிளாஸ்டிக் பையில் போட வேண்டும்.

கழிவறைகளைக் கழுவி முடிக்கும் வரை அவளுடைய கண்கள் வாசலிலேயே இருக்கும். யாராவது அங்கே வைத்த அறிவிப்புப் பலகையைப் பார்க்காமல் அவசரமாக உள்ளே வந்து உபயோகிக்க ஆரம்பித்தால் அவளுக்குச் சங்கடமாகப் போகும்.

கண்பார்வை குறைந்த சில ஊழியர்கள் அப்படி உபயோகிக்க ஆரம்பிக்கும்போது அவள் சற்று உரக்கத் தனக்குள் பேச ஆரம்பிப்பாள். அவர்கள் வருத்தம் தெரிவித்து உடனே வெளியேறுவார்கள்.

கழுவி முடித்துப் புது அந்துருண்டைகளைக் கழுத்தில் மாட்டி இருந்த தோல்பையில் இருந்து எடுத்துப் போட்டு அறிவிப்புப் பலகையை உள்ளறைக்கு மறுபடியும் நகர்த்தி வைத்து..

நாள்முழுக்கக் கழிவறைகளில் கழிந்தாலும், வருமானம் தரக்கேடில்லாமல் கிடைத்தது குளோரியா அம்மாளுக்கு.

ஆனால் கழிவறை பராமரிப்பு நிறுவன உடமையாளர் திடாரென்று இறக்கவே அந்தக் கம்பெனி மூடப்பட்டது.

குளோரியா அம்மாள் அதற்கு அப்புறம் எந்த வேலைக்கும் போகவில்லை. உடலில் வலு குறைந்து வந்ததும் அதற்கு இன்னொரு காரணம்.

உள்ளே வாருங்கள். ஆரம்பித்து விட்டார்கள்.

முன்வரிசைக் கிழவர் குளோரியா அம்மாளை நெருங்கி நின்று பரிவோடு சொன்னார். அவளை ஆதரவாகப் பிடித்துக் கூட்டிப் போகக் கையை நீட்டினார்.

கழிவறை உபயோகித்தவர்கள் சுத்தம் செய்து காகிதத்தில் துடைத்துப் போட்டு வெளியேறும்போது ஈர மினுமினுப்போடு தெரியும் கைகளைக் குளோரியா அம்மாள் அறிவாள்.

கிழவரின் கைகளில் ஈரத்தின் சுவடே தெரியவில்லை. குளோரியா அம்மாள் தன்னிச்சையாகத் தன் கையைப் பின்னால் இழுத்துக் கொண்டு, நன்றி, நான் இதோ வருகிறேன் நீங்கள் உள்ளே போங்கள் என்று பணிவாகச் சொன்னாள்.

படுக்கையில் படுத்தபடி இடது கையில் உயர்த்திப் பிடித்துக் கோழி மாமிசம் சாப்பிட்டுக் கொண்டு, நடுவில் கழிப்பறை போய்க் கையை அலம்பாமலே மாமிசத்தைத் திரும்ப எடுத்துக் கடிக்க ஆரம்பிக்கும் குளோரியா அம்மாளின் கணவன் நினைவுக்கு வந்தான் அவளுக்கு.

குளோரியா அம்மாள் மறுபடி உள்ளே நுழைந்தபோது எல்லோருக்கும் பெரிய காகிதக் கோப்பைகளில் குளிர்பானம் வழங்கிக் கொண்டிருந்தார்கள். கூடவே உருளைக் கிழங்கு வறுவலும்.

பக்கத்து இருக்கைக் கறுப்பி பனிக்கட்டி அதிகம் மிதக்காத குளிர்பானக் கோப்பையாகக் கேட்டு வாங்கிக் கொண்டாள். குளோரியா அம்மாள் கையில் திணிக்கப்பட்ட கோப்பையில் கருப்புத் திரவம் ஒன்று சிறு குமிழ்களும், சில்லென்ற பனிக்கட்டியுமாக நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அவள் மடியில் உருளைக்கிழங்கு வறுவல் பொட்டலம் ஒன்றை வைத்துப் போனான் குளிர்பான நிறுவனத்தின் சீருடை உடுத்த ஒருவன்.

அடுத்து யார் ?

தாடிக்காரன் பக்கத்தில் நின்ற யுவதியைக் கேட்க அவள் வழக்கம் போல் ஒயிலாகச் சிரித்து குளிர்பான நிறுவனத்தின் பெயரைக் கொஞ்சும் குரலில் அறிவித்து, அவர்கள் நடத்தும் இந்தக் கலகலப்பான நிகழ்ச்சியில் அடுத்துப் பங்குபெறுகிறவர் என்று சொல்லி ஒரு வினாடி நிறுத்தினாள்.

குளோரியா அம்மாள் அந்தக் குளிர்பானத்தை ஒருவாய் குடித்தாள். லேசான உப்பும் இனிப்பும் உறைப்புமாக அது அவளுக்குக் கழிவறைகளை ஏனோ நினைவுபடுத்தியது.

அவள் ஜாக்கிரதையாகக் கோப்பையைத் தரையில் வைத்தபோது அறிவிப்புப் பெண் முன்வரிசைக் கிழவரைக் கைகாட்டி அழைத்தாள்.

யாரும் சொல்லாமலேயே எல்லோரும் கைதட்டினார்கள்.

ஹோவ்ஸ் முன்னால் வந்து நின்ற கிழவரைப் பார்த்து நீங்கள் கடைசியாகப் புணர்ந்தது எப்போது என்று சொல்ல முடியுமா என்று வினயத்தோடு கேட்டான்.

இங்கே வருவதற்கு ஒரு மணி நேரம் முன். இன்னும் உலரவில்லை. பார்க்கிறாயா ?

கிழவர் சொல்லி நிறுத்தும் முன் கடைசி வரிசை மொட்டைத்தலையன் புனித மலம் என்று உரக்கக் கத்தினான்.

பலமான சிரிப்பு.

அறிவிப்புப் பெண் அவசரமாகக் கிழவரைத் தவிர்த்துப் பின்வாங்குவதாக நடித்துக் கண்ணை விரித்துப் பார்க்க அடுத்த சிரிப்பு அலை.

குளோரியா அம்மாள் உருளைக்கிழங்கு வறுவலைப் பிரித்தபடி கிழவரின் கைகளைப் பார்த்தாள். சுருக்கம் விழுந்து சுக்காக உலர்ந்திருந்த அவை அருவருப்பை ஏற்படுத்தின.

அறிவிப்பாளிப் பெண் கிழவரின் கையைக் குலுக்கும்போது அவர் அவள் இடுப்பை அணைத்துக் கொள்ள முயன்றார். அவள் மெல்ல விலகும்போது அடுத்த சிரிப்பு.

கிழவர் இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் வாழ்நாள் முழுக்கக் கலந்து கொண்டவராகத் தெரிந்தார் குளோரியா அம்மாளுக்கு. அந்தக் கூட்டம் முழுவதுமே, தாடிக்காரன் உட்பட அவர் சொல்வதைக் கேட்கவும், செய்வதைப் பார்க்கவும் அவர் இயக்கியபடிக்குச் சிரிக்கவும் தயாராகிக் கொண்டிருப்பதாக அவளுக்குத் தோன்றியது.

தாத்தா நீ இங்கே வரும்போது பேருந்தில் தூங்கி வழிந்து ஈரக் கனவு கண்டிருப்பாய் என்று நினைக்கிறேன்.

இல்லை இல்லை என்று கையசைத்த கிழவரின் பின்புறமும் கூடவே பேச உச்சத்துக்குப் போன சிரிப்பு.

சரி, நீ புணர்ந்து கூட இருக்கலாம். ஆனால் இப்போது இங்கே செய்ய வேண்டியது புணர்வது போல் எளுப்பமான காரியம் இல்லை தெரியுமில்லையா ?

சிரிப்பு அடங்கியதும் தாடிக்காரன் சொன்னான். கிழவருக்குக் கிடைத்ததைவிட அதிக சிரிப்பை அவன் எதிர்பார்த்தது அவ்வளவாக நிறைவேறவில்லை.

தெரியுமே..

கிழவர் நடு மேடையில் கூட்டத்துக்கு முதுகு காட்டித் திரும்பி இன்னொரு முறை பர்ர்ர் என்று வெளிப்படுத்தினார்.

முன் எப்போதையும்விட அதிகமாக, கட்டிடமே இடிந்து விழுவதுபோல் சிரிப்பு. பல்மருத்துவக் கல்லூரி மானவர்கள் பிளாஸ்டிக் ஊதல்களைப் பலமாக ஊதி விழாக் கோலாகலத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். குளோரியா அம்மாளின் பக்கத்து இருக்கைக் கறுப்பி அழகான கிழவர் என்று ஆனந்தக் களிப்போடு சொன்னாள்.

கழிப்பறை போய்க் கை கழுவாமல் திரும்பி வருகிறவர் என்று இவளிடம் சொல்லலாமா என்று குளோரியா அம்மாளுக்கு ஒரு கணம் தோன்றியது.

அவள் ஹோவ்ஸ் முகத்தைப் பார்த்தபோது அவனும் கிழவரின் குறும்பை அவ்வளவாக ரசிக்கவில்லை என்று பட்டது. இந்தக் கூட்டத்தில் அவனும் குளோரியா அம்மாளும் ஒருபக்கமும் மற்றவர்கள் இன்னொரு பக்கமும் இருப்பதாக அவளுக்குத் தோன்றியபோது கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது.

தாத்தா நான் சொல்வதற்கு முன் பேசக்கூடாது என்று உன் குதவாய்க்குச் சொல்லு. .

அவன் வேடிக்கையான கண்டிப்போடு சொன்னான்

உங்கள் சித்தம் பிரபுவே.

தாத்தா அதே குரலில் சொல்லி விட்டு அவனைக் குனிந்து வணங்க மறுபடி பர்ர்ர்.

தாடிக்காரன் கைகாட்டி சிரிப்பை நிறுத்தினான்.

கிழிந்துவிடப் போகிறது. ஜாக்கிரதை. இங்கே தையல் ஊசி கூட இல்லை. போகட்டும். உனக்கு முதல் பரிசு கிடைக்குமானால் என்ன செய்ய உத்தேசம் ? உன் நனைந்த வாடையடிக்கும் உள்ளுடைகளை வீசியெறிந்துவிட்டுப் புதிதாக வாங்குவதோடு தொடங்கலாம்.

வடக்கு ஆப்பிரிக்காவில் அழிந்து கொண்டிருக்கும் மரநாய் இனம் விருத்தி அடைய அந்தத் தொகையைப் பயன்படுத்துவேன்.

கிழவர் குரலில் ஏற்ற இறக்கம் இல்லாமல் சொன்னார்.

வடக்கு ஆப்பிரிக்காவில் மரநாய்களைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் ?

அறிவிப்புப் பெண் கண்ணால் சிரித்தபடி விசாரித்தாள்.

பத்து வருடம் முன் அவற்றின் எண்ணிக்கை ஆயிரம் இருந்தது. அது ஐந்து வருடம் முன் எழுநூற்று முப்பதாகிப் போன மாதம் நூற்றுப் பதினேழாகக் குறைந்து விட்டது.

கிழவர் புள்ளிவிவரங்களை அரசாங்க அவையில் அறிவிக்கும் அமைச்சர் போல் பொறுப்பாக அறிவித்தார்.

வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் எத்தனையோ பேர் பட்டினியால் சாகிறார்களே. அவர்களுக்காக இந்தப் பணத்தைச் செலவிட வேண்டும் என்று உங்களுக்கு ஏன் தோன்றவில்லை ?

பல் மருத்துவ மாணவன் ஒருவன் எழுந்து நின்று கேட்டான்.

மனிதர்கள் மரித்தால் அதைப் புதிய பிறப்புக்கள் மூலம் ஈடுகட்டி விடலாம். இந்த நிமிடத்தில் உலகம் முழுவதும் உறை இல்லாமல் கலவி செய்து கொண்டிருப்பவர்கள் எண்ணிக்கை உனக்குத் தெரியுமா ?

கிழவர் பதில் கேள்வி கேட்க, தாடிக்காரன் கைக்கடியாரத்தைப் பார்த்தான்.

ஒன்று, இரண்டு, மூன்று.

அவன் எண்ணத் தொடங்கினான்.

அடுத்த வெளிப்பாடுக்குத் தயாராக, இதென்ன பெரிய விஷயம் என்பதுபோல் கிழவர் புன்சிரிப்போடு நிற்க அவன் ஐந்து என்றான் பெருங்குரலில்.

தடால் என்று சத்தம்.

கிழவர் தரையில் விழுந்து கிடந்தார்.

(தொடரும்)

eramurug@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்