நடுத்தர வர்க்கம்

This entry is part [part not set] of 23 in the series 20010902_Issue

பவளமணி பிரகாசம்


வழக்கமாக தெருவில் கேட்கும் கீரைக்காரி, கோலப்பொடிக்காரன் இவர்களின் ராகக்கூவல்கள்தான் என்னை திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்பும். இன்று அப்பா எதற்கோ காச்மூச்சென்று கத்துகின்ற சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்தேன். சரி, இன்று வீட்டில் மூடு சரியில்லாத போது மேலும் சோம்பலாய் படுத்துக்கிடப்பது உசிதமில்லை என்று தோன்றவே ஓசையின்றி எழுந்து பல் விளக்கி காப்பியை குடித்துக் கொண்டிருக்கும் போது ஹாலில் அப்பாவின் குரல் மறுபடியும் ஓங்கி ஒலித்தது. டிவியில் ஏரோபிக்ஸ் பார்த்துக்கொண்டிருந்த தங்கையிடம் இரைந்து கொண்டிருந்தார், ‘அம்மாவுக்கு கூடமாட ஒத்தாசையா வேல செஞ்சா, வீட்ட குனிஞ்சி கூட்டினா வேணுங்கற உடற்பயிற்சி கிடைக்காதோ ?ஏரொபிக்ஸ் என்ன வேண்டிக்கிடக்கு ?நான் சொல்றத கேட்டுக்கங்க, ஒட்டடை எடுக்க மட்டுந்தான் இனி வேக்குவம் கிளீனரை எடுக்கணும்,தெரியுதா ? அது எவ்வளவு கரண்டு சாப்பிடுது ?ஒழுங்கு மரியாதையா விளக்குமாறால வீடு கூட்டுற வழியப் பாருங்க.வேற ஒரு எக்ஸர்சைஸ் எழவும் தேவையில்ல. ‘

என்ன ஆயிற்று இவருக்கு ?செல்லமாய் பிள்ளைகளை கொஞ்சி விதவிதமாய் வீட்டுபயோக பொருட்களை கேட்ட உடனே வாங்கி கொடுத்தவர் தானே ?ஆபிஸில் என்ன டென்ஷனோ என்று எண்ணிக் கொண்டு மெல்ல தினசரியின் செய்திகளில் மூழ்க ஆரம்பித்தேன்.மறுபடியும் அப்பாவின் சத்தம். ‘டிவில தினசரி பலன் பாத்து நாளக் கழிச்சது போதும்.முதல்ல அந்த டிவிய ஆஃப் பண்ணு. நானும் பாக்குறேன், 24 மணி நேரமும் அது ஓடிக்கிட்டிருக்கு. அபத்தக்களஞ்சியமா புரோகிராம் நடக்குது. அதையும் உக்காந்து ஜடங்கள் மாதிரி பாக்க முடியுதே! கரண்ட் பில் எகிறுது. பாத்துகிட்டே இருங்க, டிவி பெட்டிய கழட்டி பரண் மேல போடப்போறேன். ‘

திரும்ப பேப்பருக்குள் மூழ்கப் போனேன், வாசலில் தம்பி பைக்கில் வந்து இறங்கியதை கண்டு அப்பா அவனிடம் விரைந்தார். ‘எங்கேடா போய்ட்டு வரே ? ‘ ‘அம்மா கருவேப்பில வாங்கிட்டு வரச்சொன்னாங்கப்பா. ‘ ‘ஓஹோ! கருவெப்பில வாங்க ஃபூயல செலவழிச்சி போய்ட்டு வர்றியா ? இனிமே அநாவசியமா பைக்க எடு சொல்றேன். மூலையில தூசியடைஞ்சி கிடக்கற சைக்கிள இன்னைக்கே எடுத்துட்டுப் போய் ஓவரால் பண்ண குடுத்துட்டு வா.5 கிலோமீட்டராவது போகறதுனா மட்டுந்தான் பைக்க எடுக்கணும். இல்லாட்டி சைக்கிளோ, ந்டையோ தான். இங்க ஒரு மனுஷன் சம்பாத்தியத்தில என்ன சொகுசு வேண்டிக்கிடக்கு உங்களுக்கு ? ‘

பெருமூச்சுடன் பேப்பரை மூடி வைத்தேன். சாப்பாட்டு மேஜையில் கூடினோம்.மறுபடியும் கோபமானார் அப்பா: ‘எதுக்குடி இத்தனை வித காய் செஞ்சிருக்கே ? வயிறு நிறயறதுக்கு ஒன்னு ரெண்டு சமைச்சி போடு போதும். மணிக்கணக்கா அடுப்ப எரிய விட்டு உன் சமையல் திறமையை ஒன்னும் இங்க காட்டி தாளிக்க வேண்டாம். ‘ யாருமே பேசவில்லை. வழக்கமான சாப்பாட்டு நேர கலகலப்பு ஓடி ஒளிந்து கொண்டது. அவசரமாய் சாப்பிட்டு முடிக்க நினைத்து தங்கை ஊறுகாய் பாட்டிலை எட்டி எடுத்தாள். உடனே பாய்ந்தார் அப்பா ‘அதென்ன புதுசா பாட்டில் ? ‘ ‘வாசலில் வந்ததுங்க.ஃப்ரீயா ஸ்பூன் கொடுத்தாங்க. ‘ அம்மாவின் பவ்யமான பதில். ‘அறிவிருக்காடி உனக்கு ?ஊறுகாய காசு போட்டு வாங்குவியா ? மாங்கா, எலுமிச்சங்காய அததது சீசன்ல வாங்கி மொத்தமா, பக்குவமா ஊற்காய் போட துப்பில்லாத பொம்பள எவனோ ஸ்பூன் தந்தான்னு காச கரியாக்கினியா ? என்ன பிச்சாண்டியா ஆக்குறதுன்னு முடிவே பண்ணிட்டியா ? உங்களுக்குத்தான் புத்தியே கிடையாதே. மட்ட ரக செண்ட தெளிச்சி நயம் கம்பெனி பேர்ல ஊதுபத்திய வித்தா வாங்கி ஏமாறுவீங்க.இப்படித்தான் நாங்க பாடுபட்டு சம்பாதிக்கிற பணமெல்லாம் வீணாப்போகுது. ‘

ஒரு வழியாக சாப்பாடு முடிந்து ஓடிப்போய் ஒரு வாரப் பத்திரிக்கையுடன் வெராண்டாவில் ஒதுன்கி இருக்க நினைக்கையில் அப்பா பின்னாலேயே வந்து விட்டார். ‘வீட்டில் தையல் மிஷின் கிடக்கே, தன் ஜாக்கெட்டுக்கள தானே தைக்க கத்துக்க உடம்ப வணங்குதா ?டெய்லருக்கு தண்டம் அழுதாத்தான் ஆச்சு. எந்நேரமும் ஏதாவது உதவாக்கரை புத்தகத்த தூக்கி வச்சிகிட்டு உட்காந்திர வேண்டியது. நியூஸ் பேப்பர் மட்டுந்தான் இனிமே காசு குடுத்து வாங்குவேன். வாய் கிழிய வம்பு பேசுறீங்களே, அக்கம்பக்கத்து பொம்பளைங்கெல்லாம் சேர்ந்து ஆளுக்கொரு புத்தகம் வாங்கி ஒரு சர்குலேஷன் நடத்தி சிக்கனமா இருப்போம்னு யாருக்காவது தோணுதா ? ‘அப்பா இப்படி ஒரு நாளும் பேசியதில்லை.

உர்ரென்று உள்ளே திரும்பியவர் தம்பியின் ரூமுக்குள் பாய்ந்து அலறிக்கொண்டிருந்த ஸ்டாரியோ செட்டை படக்கென்று ஆஃப் செய்தார். ‘துரைக்கு குளிக்கும் போது கூட பாட்டுக் கேட்குதோ ? இங்க பாட்டன் வீட்டு சொத்து சொத்து சிந்திக் கிடக்கு அள்ள ஆளில்லாம. ‘திரும்பியவர் கண்ணில் வெறும் ஹாலில் ஓடிக் கொண்டிருந்த மின் விசிறி கண்ணில் பட்டது. கோபம் தலைக் கேறியவராய் அம்மாவைத் தேடி சென்றார்.பாத்ரூமில் திறந்திருந்த குழாயிலிருந்து தண்ணீர் ஓட வாளி நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அம்மா வெளியே அயர்ன்காரனிடம் துணிகளை கொடுத்துக் கொண்டிருந்தாள்.

புஸ்புஸ்ஸென்று கோபத்துடன் உலாத்திக் கொண்டிருந்த அப்பா அம்மா உள்ளே வந்ததும் பிடித்துக் கொண்டார். ‘வீட்டில அயர்ன் பாக்ஸ் இருக்கும் போது வெளியே தேய்க்கக் கொடுத்து வெட்டிச் செலவு ? இங்க ஃபான் வெட்டியா ஓடுது, மோட்டார் போட்டு ஏத்தின தண்ணி அங்க பாத்ரூம்ல வீணா தரைல ஓடிக்கிட்டிருக்கு. எல்லோரும் மனசில என்னதான் நினைச்சிகிட்டிருக்கீங்க ?இப்படி அத்தன பேரும் பொறுப்பில்லாம கரைக்கிறதுக்கா சம்பாதிச்சிட்டு வரேன் ? என் கைல திருவோட்டை கொடுத்து தெருத் தெருவா அலைய விடறதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டிருக்கீங்களா ? ‘

படபடவென அவர் பொரிந்து முடிக்கும் போது வேலைக்காரி முனியம்மா வேகமாக உள்ளே நுழைந்தாள். ‘அம்மா, நான் அவசரமா ஊருக்கு போறேன். அஞ்சு மினிட்ல அடுத்த வீட்ல முடிச்சிட்டு வர்றேன். பாத்திரங்கள எடுத்து போடு.துணி தோய்க்கறது, வீடு தொடைக்கிறதெல்லாம் நாளைக்கிதான், ‘என்று அவசரமாக கூறிக் கொண்டே வெளியேறினாள்.

உடனே அப்பாவுக்கு மறுபடியும் ஆத்திரம் வந்து விட்டது. ‘மகாராணிக்கு வேலைக்காரி இல்லாம முடியாது.அம்மில அரச்சி,உரல்ல ஆட்டி, அடிச்சி துவைச்சிகிட்டா இருக்கீங்க ?அத்தனைக்கும் மிஷின் வாங்கிக் கொடுத்தாச்சி. வீட்ல இத்தன பேரு இருக்கீங்க.ஆளுக்கொரு வேலய செஞ்சா வீடும் பளிச்சினு இருக்கும், வேலைக்காரிக்கு அழற தண்டமும் மிச்சம்.தானே வேலை செஞ்சா டிவில வர்ற திராபையான சீரியல் ஒன்னு ரெண்டு பாக்க விட்டுப்போகும்னு வேலைக்கு ஆள் வேண்டியிருக்கு.அதுல ஒரு ஜம்பம் போல. ‘

அவர் முடிக்குமுன்னரே வாசலில் புடவைக்காரன் குரல் கேட்டது. ‘புதுசா,லேட்டஸ்டா நல்ல நல்ல புடவைங்கெல்லாம் வந்திருக்கம்மா. பழய தவணை முடியாட்டியும் பரவால்ல. புதுகணக்க அப்புறம் கட்டிக்கலாம்மா. ‘என்றான். அம்மாவின் முகத்தை பார்க்க பரிதாபமாக இருந்தது.

‘இது அடுக்குமாடா ? ‘என்று அடிக்குரலில் பல்லைக் கடித்தார் அப்பா. ‘நம்ம தகுதிக்கு மீறி நம்ம செலவளிக்க தூண்டுற, நம்மள கடங்காரங்களா ஆக்குற இந்த தவணை முறை பிஸினஸ் எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியுமில்லியா ? ‘என்று உறுமினார். ‘சரிங்க. இனிமே வாங்கலீங்க. ‘என்று அவசரமாக கூறிவிட்டு அம்மா வாசலுக்கு விரைந்து புடவைக்காரனிடம் ஏதோ தணிவான குரலில் கூறி அனுப்பி விட்டு வந்தார்.

அடுத்து என்னாகுமோ என்று திக்திக்கென்றிருந்தது.அப்பா ஹாலில் வந்து உட்கார்ந்து கொண்டு சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டார். ஒரே நிசப்தமாய் இருந்தது வீடு. அங்கங்கே பதுங்கியிருக்கும் அத்தனை பேர் காதுகளும் கவனமாக கேட்டுக் கொண்டிருக்கும் என்று உறுதியாக தெரிந்து கொண்டார்.பிறகு, மிகவும் நொந்த, வேதனை நிறைந்த குரலில் கூறினார், ‘யாரையும் கஷ்டப் படுத்தணும்கறது என் நோக்கமில்ல. அதுல எனக்கு ஒரு சந்தோஷமுமில்ல. ஆனா, கெளரவமா குடும்பம் நடத்துறதுக்கு எல்லாருடைய ஒத்துழைப்பும் வேணும். விலைவாசி எப்படி ஏறிகிட்டே போகுதுன்னு உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும். இன்னும் ரொம்ப பொறுப்பா, சிக்கனமா இருந்தாத்தான் இனிமே சமாளிக்க முடியும். ‘

சூறாவளி ஓய்ந்தது.கழுவி விட்ட வானம் போல எல்லோர் மனமும் ஒரு தெளிவான நிலைக்கு வந்தது.

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்