“தடம் மாறா வாழ்க்கையினை வாழ்வோம்…….!”

This entry is part [part not set] of 35 in the series 20110213_Issue

முனைவர் சி.சேதுராமன்



முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் .கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
தங்கமது பூமிதனில் புதையுண்டாலும்
தரணிக்கது வரும்போது தரம்மிகவும் குறைந்திடாது
வைரமது பூமியிலே புதையுண்டாலும்
தன்குணத்தை என்றும் அது இழந்திடாது
பாலும் அது தயிராகித் திரிந்தபோதும்
பாரிலுள்ளோர் அதைப் புசித்துப் பசியைக் கொல்வர்
தங்கத்தையும் வைரத்தையும் அணியும் மக்கள்
தம் குணத்தை இழக்கின்றார்
தரணியிலே தரங்கெட்டு நடக்கின்றாரே!

உதவுகின்ற பேரையெல்லாம்உதவிபெற்றோர்
உடன்மறந்து தீங்கவர்க்கே விளைவிக்கின்றார்
உழைக்காமல் உயரத்தான் நினைக்கின்றாரே!
பிழைப்பதற்குப் பலவழிகள் இருக்க இங்கே
பித்தரைப் போல்பிறர் பொருளைக் கவர்கின்றாரே!
உழைப்பதற்கு வேலையிலே சேர்ந்தபின்னர்
உழைக்காது பிற பணியைச் செய்கின்றாரே!
நீதிகளைப் பேசிடுவார் நிறையச் சொல்வார்
தம்மைத் தாம் அறிஞரென்று பிதற்றிக் கொள்வார்!
தாம் கூறும் கருத்திற்கு மாறுபட்டுத்
தரம் தாழ்ந்து நடந்திடுவார் சிறிதும் நாணார்!
பொதுவுடைமை பெரிதாகப் பேசினாலும்
பெருமுதலாளியாக அவர் நாளும் இருக்கின்றாரே!
இரக்கம் அன்பு கருணை எனப் பேசுகின்றார்
இரக்கமற்ற சகுனியாக வாழ்கின்றாரே!

சாதி என்ற பெயரை இங்கு சொல்லிச் சொல்லி
சகமனிதர் வாழ்வை இவர் குலைக்கின்றாரே!
சாதியினால் உயர்வு பெற்றோர் யாருமுண்டோ?
சாதிபேசி தமிழ் மக்கள் அழியலாமா?
சாதிக்கப் பிறந்தவர்கள் சாதி பேசார்!
சதிவேலை செய்வதற்கே சாதிபேசி
தரணியிலே தமிழ் மக்கள் பிரிகின்றாரே!
உலகினிலே உயர்ந்தாலும் எங்கும் எதிலும்
சாதிபார்க்கும் பண்பு இங்கு என்று மாயும்?

உயர்ந்தாலும் உயர்குணங்ள் பெற்றாரில்லை!
உருப்படாத வழியினிலே சென்று சென்று
உலகினையே கெடுக்கின்றார் நாளுமிங்கே
உறவென்று எப்போதும் சொல்லிக் கொண்டு
உயிருக்கு ஊறினையே விளைவிக்கின்றார்!
உயர்கல்வி கற்றேன் என்று உளறிக் கொண்டு
உன்மத்தம் பிடித்திங்கு அலைகின்றாரே!

பணியில்லை என்றிங்கே பரிதவித்து
பணியிலிங்கு சேர்ந்தபின்னர் பணியைச் செய்யார்!
பணிதவிர பிறவற்றை நன்கு செய்வார்
பண்பிலியாய் என்றுமவர் நடந்து கொள்வார்!
உள்ளொன்று புறத்தொன்று பேசிப்பேசி
உடனிருந்தே நாடகத்தைப் போடுகின்றார்!
ஒரு நாளில் சாயமது வெளுத்துப் போகும்
உணர்வார்கள் உலகோர்கள் அவரை நன்கு

பாம்பிற்குப் பல்லினிலே விடத்தை வைத்தான்
சாரைப் பாம்பிற்கு வாலினிலே விடத்தை வைத்தான்
தேனீக்குக் கொடுக்கினிலே விடத்தை வைத்தான்
உதட்டில் மட்டும் இனிமையினை வைத்திருக்கும்
உன்மத்தனாம் மனிதருக்கு இறைவன் நன்கு
உடம்பெல்லாம் விடத்தினையே வைத்துவிட்டான்!

தரணியிலே பொருள்கள் நிலை மாறினாலும்
தங்களின் குணத்தை அவை இழப்பதில்லை!
தரணியிலே தமிழ் மக்கள் உயர்ந்தால்மட்டும்
தடதடவெனத் தம் நிலையில் மாறுகின்றார்!
தடம் மாறி நடக்கின்றார் என்றும் எங்கும்
தடுமாறிப் பேசுகின்றார் தலைகீழாக!
தம் நிலையில் மாற்றம் இங்கு வந்தால் கூட
தடம் மாறா வாழ்க்கையினை வாழ்வோம் நன்று!

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.