வேர்கள்

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)


(தெள்ளூதமிழ்க்குதவு சீலன் எனத்தொடங்கும் காவடிச்சிந்து)
மூச்சடக்கி முக்குளிக்கும் கூட்டம் – மூழ்கி
முத்தெடுக்கும் பெரும்பணியே தேட்டம்- தேடிச்
சேர்த்ததெல்லாம் வேறிடத்தில்
தேடியவர் ஓரிடத்தில்
இருப்பார்–சுகம்
துறப்பார்

கண்குளிரும் பூவழகு ஈர்க்கும்– மொட்டு
கண்விழிக்க வேர்களுக்கு வேர்க்கும்-கெட்டி
மண்ணிருக்கும் மலையிருக்கும்
மனமிருக்கும் வலிமையான
இரும்பாய்–செல்லும்
நரம்பாய்

பூப்பூத்துக் காயாகிக் கனியும்–வேர்கள்
பூமிக்குள் நீரெடுத்து நனையும்–மண்ணில்
கோப்பாகத் தாவரங்கள்
தோப்பாகிக் கண்குளிரப்
பாடும்-வேர்கள்
தேடும்

காற்றுவந்து கைகுலுக்கும் கிளையை–கொஞ்சிக்
காதலிக்கும் கிளிப்பச்சை இலையை–நெஞ்சில்
போற்றுதற்கும் சூட்டுதற்கும்
புகழ்மாலை தொடுப்பார்
பூவை-வேர்கள்
தேவை

பொதுநலமே உயர்நோக்கம் ஆச்சு–கிட்டும்
பொழுதெல்லாம் நற்பணியே மூச்சு–கெட்ட
சூதகற்றி சுனைதேடி
நீரெடுத்து வேர்கள்
வழங்கும்–பயிர்
குலுங்கும்

அரும்புவரும் இதழ்விரியும் மணக்கும்–வாழ்வும்
அங்ஙனமே புகழெய்திக் கனக்கும்—நாமும்
விரும்புகிற உயர்வாழ்வு
விளைந்திடவே விழைவார்
யாரே ?-பெற்றோர்
வேரே

இருக்கும் இடந்தனையே மறைத்து–என்றும்
இருளில் இருந்துவிட நினைத்து–மூலம்
இருக்கும் இடம்தேடி
இடர்கள் எதிர்கொள்ளும்
ஞானி-வேர்கள்
தேனீ

***
ilango@stamford.com.sg

Series Navigation

பிச்சினிக்காடு இளங்கோ

பிச்சினிக்காடு இளங்கோ

வேர்கள்

This entry is part [part not set] of 29 in the series 20030112_Issue

ஆனந்த் ராகவ்


**

ஆப்பரேஷன் டோபாக் என்பது ஆறு அங்கங்கள் கொண்ட, இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தானின் பதினைந்து வருடத் திட்டம். பங்களாதேஷ் போருக்கு பழி வாங்க தயாரான ப்ளூ பிரிண்ட் தான் ஆபரேஷன் டோபாக். டொபெக் என்ற அரசன் ஸ்பெயின் நாட்டு மன்னர்களை முறியடிக்க நூதனமாய் போரிட்டவன். மறைமுகப் போராலும் கொரில்லா தாக்குதலாலும் மெல்ல மெல்ல எதிரியின் நம்பிக்கையைத் தகர்த்து அதன் பின் படையெடுக்கும் அவன் பெயரால் உருவானது அந்த ரகசியத் திட்டம். ஸ்ரீநகரை இந்தியாவுடன் இணைக்கும் ஜவஹர் சாலையைத் தகர்ப்பது, காஷ்மீரின் ஒரு பகுதியில் சீனா வை புக விடுவது, அணு ஆயுதம் தயாரிப்பது, எல்லை ஓரப் பகுதிகளில் ஊடுறுவி ஆக்ரமிப்பது , தீவிரவாதிகளை பயிற்சித்து, இந்தியாவுக்குள் நாசவேலைகள் செய்வது, நேர்முகத் தாக்குதல் என்று ஆறு அங்கங்கள் கொண்ட திட்டம்.

**

ராவல்பிண்டியில் பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தின் ஒரு ப்ரத்யேக அறையில் நீண்ட மேஜையைச் சுற்றி அமர்ந்திருந்த ராணுவ உடை தரித்த கணவான்கள், மேஜையின் மூலையில் அமர்ந்திருந்த பாகிஸ்தானின் ஜனாதிபதி ஜெனரல் ரியாஸ் அஹமத் கையிலிருந்த அறிக்கையைப் படித்து முடிக்கக் காத்திருந்தார்கள். ஜெனரல் ரியாஸ் அஹ்மத் அவர்களின் அறிக்கையை தீவிரமாய் படித்துக்கொண்டிருந்தார். நெற்றிச் சுருக்கங்களும் தலைமயிர் உதிர்ந்த வழுக்கைத் தலையும் அவரது எழுபது வயதை அறிவித்தாலும், உக்கிரம் பொங்கும் கண்களும் லேசான முறுக்கு மீசையையும் அந்த வயதிலும் இன்னும் எதையோ துரத்திக் கொண்டிருந்த வேட்கையைக் காட்டியது. படித்து முடித்து ஒரு கையால் தன் மூக்குக்கண்ணாடியை கழற்றியபடி அந்த அறிக்கையை அலட்சியமாய் விட்டெறிந்தார் ..

‘இந்தியப் பிரதமர் இன்றைக்கும் காஷ்மீர் அவர்களது உள்நாட்டுப் பிரச்சனை என்று பேசியிருக்கிறார் ஜென்ரல் சாஹேப். ‘

‘பேசட்டும். கிழக்குப் பாகிஸ்தான் கூட நம் உள்நாட்டுப் பிரச்சனையாகத் தானே இருந்தது. அதில் மூக்கை நுழைத்து நம் உள்நாட்டுப் பிரச்சனையில் அவர்கள் தலையிடவில்லையா.. நாம் அதையே செய்வோம். ‘

‘சயி பாத் ஹே ஜி ‘

‘காஷ்மீர் தான் நம் பிரதான கோரிக்கை. அதில் அவர்கள் நிலை மாறாமல் இருக்கும் வரை பேசிப் பிரயோஜனமே இல்லை. காஷ்மீருக்கு விடுதலை வேண்டும். பங்களாதேஷை நம்மிடமிருந்து பறித்ததற்கு அதுதான் சரியான பதிலடி. அந்தப் பன்றிகளுக்கு அது புரியாமல் இல்லை. வேண்டுமென்றே தந்திரம் செய்கிறார்கள். புரிய வைப்போம். அவர்கள் நமக்கு செய்தது மாதிரி ஆயுதம் கொண்டு புரிய வைப்போம். ‘

‘ஜரூர் ‘

‘ ‘ இனி நேருக்கு நேர் மோதல்தான். இம்முறை கெளரி டில்லியைத் தொட வேண்டும். ‘

ராணுத் தளபதி எழுந்து மேஜையை ஒட்டினார்ப் போல் இருந்த காஷ்மீரை அரவணைத்த பாகிஸ்தான் வரை படத்தில் சில இடங்களில் சிவப்பு ஊசிகளை செருகினார். ‘ஒன்பது கார்ப்ஸில் ஏழு இப்போது இந்திய எல்லைப் பக்கமாய்த்தான் நிறுத்தப் பட்டிருக்கிறது. சண்டை மூண்டால், இதர நாடுகள் தலையிடும் முன் நமக்கு இருப்பது 3 அல்லது 4 வாரங்கள்தான். நம் உத்தி என்னவென்றால் இரண்டு அல்லது நான்கு ஸ்டிரைக் கார்ப்ஸ் இந்தியப் பகுதிகளில் அதிரடியாய் ஊடுறுவி நாற்பது அல்லது ஐம்பது கிலோ மீட்டர் முன்னேறி அக்ரமிப்பு செய்ய வேண்டும்..அதற்குப் பிறகு சமாதானம் பேசுவோம். உங்களுக்கு ஆக்கிரமித்த பகுதி வேணுமா காஷ்மீர் வேணுமா என்று கேட்போம் அந்த நாய்களை ‘

‘பதினைந்து ஸ்குவாட்ரன்கள் தயார் நிலையில் இருக்கின்றன ஜெனரல். அவை துருப்புக்களுக்கு ஏர் கவர் அளிக்கும். மஸ்ரூர் விமான தளத்திலிருந்து ஒரு ஸ்குவாட்ரன் F16 குஜராத்தின் கட்ச் பகுதியை அவர்கள் விழித்துக் கொள்ளும் முன் தாக்கலாம். நம் எல்லையிலிருந்து பத்து நிமிடப் பறக்கும் நேரம்தான். ஐந்து துறை முகங்கள் , இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, சலயா- மதுரா எண்ணை பைப் லைன் என்று இலக்குகள் குவிந்திருக்கின்றன. இது இந்தியாவின் ‘பியர்ல் ஹார்பர் ‘ ஜெனரல் ‘ என்றார் விமானப் படை தளபதி.

‘கண்ட்லா துறை முகத்தில் ஒரு கப்பலைத் தாக்கி கவிழ்த்தால் போதும் குறுகலான அந்த பிரதேசமே போக்குவரத்து தடைபட்டு ஸ்தம்பித்து விடும். ‘ என்றார் கப்பல் படைத் தளபதி.

‘நேரடித் தாக்குதலை எல்லாம் நான் பரிந்துரைக்கமாட்டேன் ஜென்ரல் சாஹேப். ஆபரேஷன் டோபாக்கின் முக்கிய அங்கமான கொரில்லா படையினரின் ஊடுருவலை இன்னும் தீவிரமாய் கையாளுவதே பயணளிக்கும் என்பது என் எண்ணம். ஆசாத் காஷ்மீரில் எல்லையில் புக ஒரு பெரிய குழு தயாராய் இருக்கிறது . நீங்கள் நாள் குறித்தால் குப்வாரா எல்லைப் பகுதி வழியாய் ஊடுறுவி விடலாம். காஷ்மீரில் கொஞ்சம் ரத்தம் சிந்தவைத்தால் வழிக்கு வருவார்கள். ‘ என்றார் ஐ. எஸ்.ஐ

‘இந்த நேரத்தில் இந்தியப் பிரதமர் உங்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கிறார். அது ஒன்றுதான் சின்ன இடைஞ்சல் . பதிலுக்கு நீங்கள் அவர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைக்கும் நிர்பந்தத்தில் சிக்கிக்கொள்ளாதிர்கள் ஜென்ரல் ‘

‘ இவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த நான் என்ன முட்டாளா….. இதுவும் நல்லதுக்குத்தான். இந்தியர்களை மெத்தனமாக இருக்கச் செய்ய இது ஒரு சந்தர்ப்பம். நாம் சமாதானம் பேசும் மகிழ்ச்சியில் கொஞ்சம் இளைப்பாருவார்கள். உணர்ச்சிவசப்படும் முட்டாள்கள். அப்போது தாக்குவோம். சீனா அதைத்தான் செய்தது. இந்த தடவை நாம் செய்யப் போகிறோம். இந்த ஊடுறுவல் திட்டத்தை கொஞ்ச நாள் முடக்கி வையுங்கள். பேச்சு வார்த்தை முடிந்து திரும்பி வந்து ஒன்றிரண்டு மாதங்கள் போகட்டும்… ‘ என்று எழுந்தார்.

‘ மறைமுகத் தாக்குதலுக்கு நீங்கள் நாள் குறிக்க வேண்டியதுதான் பாக்கி.. சாஹேப் ‘

‘ ‘அக்டோபர் பதினைந்து… ‘ என்றார் ரியாஸ் அஹமத் கண்களில் வெறி தாண்டவமாட..

ரியாஸ் அஹமத் வருகையில் இந்தியா ஏராளமான எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தது. வருகைக்கு முன் ரியாஸ் அஹமத் அற்புத கணவானாய் காட்சி தந்தார். காஷ்மீர் விடுதலைக்காக வன்முறையைக் கட்டவிழ்த்திருந்த சிறு சிறு தீவிரவாதக் குழுக்களின் நடவடிக்கைகள் நின்றன. எல்லையோரம் பீரங்கிகள் ஓய்வெடுத்துக்கொண்டன. இந்தியப் பத்திரிகைகள் அத்தனையும் அவர் வருகையின் தீவிர எதிர்பார்ப்பில் கொட்டை எழுத்து உற்சாகத்திலிருந்தன.

ரியாஸ் அஹமத் தன் படைத் தளபதிகளோடு புது தில்லி வந்து இறங்கி ஆரவாரமான வறவேற்பும் , சம்பிரதாய அணைப்புகளும் சிரிப்புகளும் மனதில் பதியாமல் பழகினார். பார்க்கும் இடமெல்லாம் மானசீகமாய் ஏவுகனைப் பாய்ந்து தரைமட்டமானது. ராஷ்ட்ரபதி பவன், பார்லிமெண்ட் கட்டடம் என்று ஒவ்வொன்றையும் பார்க்கும் போதும் அவை நொறுங்கி விழும் வக்கிர காட்சி மனதில் வெடித்தது.

பேச்சு வார்தைகள் எதிர்பார்த்தபடி மேலோட்டமாகத்தான் இருந்தது. இருபக்கமும் பரஸ்பர நம்பிக்கையில்லாமல் விட்டுக்கொடுக்காமல் பேரம் நடந்தது. பற்றியெறியும் உணர்ச்சிகளை இனிப்பு தடவிய வார்த்தைகளால் வெளியிடும் ஜாலத்தில் பேச்சு வார்த்தை நகர்ந்தது. ஜென்ரல் ரியாஸ் அஹமத் நல்லெண்ணத்துடன் பேசுவது போல காட்சியளித்தாலும் பட்டும் படாமலே பதில் சொன்னார். பத்திரிகைக் கூட்டத்தில் தொலைகாட்சியினரும் பத்திரிகைக்காரர்களும் சரமாரியாக காமெரா ஓளிவீச்சின் இடையே ஏராளமாய் கேட்க, அத்தனைக்கும் புன்சிரிப்பு மாறாமல் பதிலளிக்கப் பழகினார்.

‘ஜென்ரல், எங்கள் பிரதமர் அளித்த விருந்தில் காஷ்மீரி புலாவ் ரொம்ப விரும்பிக் கேட்டு சாப்பிட்டார்களாமே ‘ என்று ஒரு நிருபர் கேட்க அவையில் சிரிப்பு மிதந்தது.

‘ஆமாம்.. உங்கள் பிரதமர் பாதி பரிமாறி விட்டு பிடுங்கிக் கொண்டு போய் விட்டார் ‘ என்றதும் சிரிப்பு பெரிதாகி கைத்தட்டல் சேர்ந்து கொண்டது.– ‘–துண்டாகப் போவது இந்தியா. காஷ்மீர் அல்ல தோஸ்த்–

‘ஜென்ரல், காஷ்மீரத்தில் பயங்கரவாதத்தை வளர்த்து ரத்த களறியாக்கிவிட்டு இங்கே பேச்சு வார்த்தை நடத்துவதின் அர்த்தம் என்ன ? ‘

‘காஷ்மீரில் நாங்கள் தீவிர வாதம் வளர்க்கிறோம் என்பதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. காஷ்மீர் நம் இரு நாடுகளுக்குள்ளே இருக்கும் ஒரு தீர்க்கப்படாத பிரச்சனை. இதில் காஷ்மீர் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்தியா கவனிக்கவேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை ‘ –இனி எங்கள் தாக்குதலுக்கு பதில் சொல்லுங்கள் பன்றிகளே–

‘அடுத்தச் சுற்று பேச்சுவார்த்தை எப்போது ஜெனரல் ? ‘

‘இன்னும் முடிவு செய்யவில்லை ‘ ‘ — இனி பேச்சு வார்தைகள் தேவையிருக்காது நண்பா. —

அரசு விருந்து,கலை நிகழ்ச்சிகள்,இவைகளுக்கிடையே மூன்று நாட்கள் பேச்சுவார்த்தை நடந்து முடிந்து ரியாஸ் அஹமத் திரும்பிப்போவதற்கு ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன. கிளம்புவதற்கு முன் நாள் பாகிஸ்தான் தூதர் சாயீத் மொஹமத் கான் வீட்டில் ஏற்பாடாயிருந்த விருந்து ஒன்று தான் பாக்கியிருந்தது. மாலை விருந்திற்குப் பிறகு அடுத்த நாள் இஸ்லாமாபாத் திரும்ப வேண்டும். ரியாஸ் அஹமத் அந்த மூன்று நாள் நாடகத்தில் லேசாகக் களைப்புற்றிருந்தார். அவர் காரின் முன் மோட்டார் சைக்கிள் பைலட், இரண்டு போலீஸ் கார்கள், சகப் பிரயாணிகள் , அவரது கப்பல் கார், அதற்குப்பிறகு போலீஸ் வால் என்று ஆரவாரமாய் பவனி கிளம்பியது. டில்லி சாலைகள் பல ரியாஸ் அஹமதின் சிறுவயது நினைவுகளைக் கிளறின. பதினாறாவது வயது வரை பிளவு படாத இந்தியாவில் டில்லியில் வாழ்ந்த நினைவில் செங்கோட்டையும், சாந்தினி சவுக் இரண்டையும் பார்த்ததும் பழைய நினைவுகளில் மூழ்கினார். அவர் இளமைப் பருவத்து நினைவுகளெல்லாம் அலை மோத மெளனமாய் டில்லி சாலைகளில் தன்னைத் தேடினார்.

‘சாயீத் நாங்கள் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் வரும்முன் எங்கள் வீடு டில்லியில் தான் இருந்தது ‘

‘ எந்த இடத்தில்…. ஜெனரல் ‘

‘ இந்த இடத்தில் தான். ஜாமா மஸ்ஜீத் பக்கத்தில்தான். …. ‘

‘அச்சா ‘

கோல்சா சினிமா தாண்டி கார் விரைய சட்டென்று அவருக்கு அந்த ஆசை உதித்தது. வீட்டைப் போய் பார்த்தால் என்ன ? சிறிது யோசனைக்குப் பிறகு தீர்மானித்து……பெரோஷா கோட்லா கடந்து போகும் போது………….

‘சாயீத்.. எனக்கு அங்கே போக வேண்டும்.. விருந்துக்கு இன்னும் நேரம் இருக்கிறதே ‘

‘ஜென்ரல் அங்கே போவதில் செக்யூரிட்டி பிரச்சனை வரும். முதலிலேயே இந்திய அரசிடம் சொல்லி ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். இப்போது அங்கே போவது சாத்தியமில்லை ஜென்ரல் ‘

அவர் சொன்னதை கவனியாமல் ரியாஸ் அஹமத் வெளியிலேயே உற்றுப் பார்த்து…… ‘சாயீத் நான் அங்கு போகணும்.. இந்தாப்பா டிரைவர் ‘

‘ஹுசூர் ‘

‘வண்டியைத் திருப்பு.. ஜாமா மஸ்ஜித் பக்கம் போ.. நான் வழி சொல்கிறேன் ‘

‘ஜென்ரல் இருங்கள். தகவல் சொல்கிறேன். எஸ்கார்ட் வரட்டும் ‘

‘ நீ போப்பா ‘

ஜென்ரல் ரியாஸ் அஹமத் ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு.. நேரா போ..ரைட் லெப்ட் என்று உத்தரவிட்டுக்கொண்டிருக்க, தூதுவர் கைத் தொலைபேசியில் பதட்டத்துடன் பேசிக்கொண்டிருக்க, முன்னும் பின்னும் வாக்கி டாக்கியில் தகவல் பறந்தது. அந்த ப்ரதேசம் எதிர்பார்க்காமல் அந்தப் பெரிய கார் யோசித்து நின்று.. மறுபடி உருண்டு..ஜென்ரல் சொன்ன இடத்தில் நின்றது. அவர் காரின் பின் வந்த பாதுகாப்புப் படை கார்கள் எல்லாம் திடார் திருப்பத்தில் குழம்பி.. தொடர்ந்து துரத்தி வந்து சரமாரியாய் நின்று புழுதி கிளப்பி நின்றன. முன் சீட்டில் அமர்ந்திருந்த அவர் பாதுகாப்பாளர் இறங்கி கதவைத் திறக்கும் முன் அவர் காரை விட்டு இறங்கினார். கிரிக்கெட் சிறுவர்கள் விளையாட்டை நிராகரித்து காரை சூழ்ந்து கொள்ள, ஜெனரல் தன்னைச் சுற்றி இருக்கும் எதையும் கவனியாமல் ‘அதோ அங்கேதான் பஷீரின் கடை இருந்தது.. ‘ என்று யாருக்கோ சொல்லுவது போல் தனக்குத் தானே பேசிக் கொண்டு வேகமாய் நடந்தார். மெய்க்காப்பாளன் அவர் பின்னே என்ன செய்வதென்று தெரியாமல் விரைய..

‘ஜென்ரல் வெயிட்.. யாராவது முதலில் போய் தகவல் சொல்லட்டும் ‘ என்று தொப்பை குலுங்க சாயீத் ஓடி வருவதைப் பொருட்படுத்தாமல் ரியாஸ் அஹமத் கண்கள் நேர்ப்பார்வையில் நிலை குத்தியிருக்க தரை பார்க்காமல் நடந்தார். இரும்புக் கடை ஒட்டிய சந்தில் நுழைந்து பின்னால் அவர் பட்டாளம் அவரைப் பின் தொடர அந்த தெருவில் நுழைந்து சந்தேகமாய்த் தேடினார். வழிப் போக்கர்கள் சில பேர் நின்று அவரை அன்னியமாய் பார்த்தார்கள். ஐம்பது வருஷ ஒப்பனையில் உருமாறிப் போன அந்த பிரதேசத்தின் அஸ்திவாரத்தை நினைவில் தேடி நடந்தார். சட்டென்று நின்றார். முகப்பில் நாலைந்து தென்னை மரங்கள் வெளிச்சம் தேடி காம்பெளண்டு மேல் மூக்கை நீட்டியபடி இருக்க, ஒரு இரும்பு கேட் பாதி மூடியும் மூடாமல் நிற்க, பின்னால் சோகையாக லேசாக காரை பெயர்ந்து ஒரு ஓரத்தில் விரிசல் கண்டிருந்த.. அந்த வீட்டைப் பார்த்து ‘ மாஷா அல்லா… இதுதான். ‘ என்றார் கண்கள் விரிந்து பரவசத்துடன் .

பைஜாமா குர்த்தா தொப்பி அணிந்த ஒருவர் வந்து கேட்டைப் பிடித்தபடி நின்றார். விறைப்பான கணவான்களும் காக்கி உடைகளும் நிறைய ஜனங்களும் கும்பலாய் நின்றிருக்க, பயந்து போய் ‘யாரு வேணும் ஹுசூர் ‘ என்றார்.

மெய்காப்பாளன் அவரிடம் சென்று அவரைச் சுட்டிக் காட்டிப் பேச அவர் ‘ ஜரூர் ஆயியே ‘ என்று அவசரமாய் கதவைத் திறந்தார். ‘அஸ்ஸலாமு அலைக்கும் ‘.

ரியாஸ் அஹமத் ‘வாலைக்கும் சலாம் ‘ என்றார் வீட்டைப் பார்த்தபடி. ‘நான் அவருடன் சென்று பார்த்துவிட்டு வருகிறேன். கூட யாரும் வரவேண்டாம். என்னை தனியே விடுங்கள் ப்ளீஸ் ‘ என்று நடந்தார்.

முன்பக்கத் தோட்டம் கடந்து வீட்டை நோக்கி நடக்கையில் ரியாஸ் அஹமத் வீட்டில் தன் குடும்பத்தினர் யாரோ இருப்பது போல உணர்ந்தார். வாயில் கதவு திறந்தவுடன் அம்மி ஜான் — ‘ரியாஸ் ஏன்னடா இவ்வள நேரம் கழிச்சு வர ‘-

‘என்னை உங்கள் வீட்டுற்குள் அனுமதிப்பதற்கு நன்றி…… ‘

‘. இது உங்கள் வீடு கூட சாப். ஆயியே..ஆயியே ‘

ரியாஸ் அஹமத் வீட்டின் முகப்பில் வந்து நின்றார். நின்று வீட்டை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தார். இடது பக்கம் கம்பிகள் போட்ட சின்ன முகப்பு அறை. அதை ஒட்டினார்ப் போல் முன்பக்கம் சின்ன வராந்தா. கம்பிக்கு மேல் தட்டி சுருட்டிக் கட்டியிருந்தது. வலது பக்கம் பச்சை பெயிண்ட் அடித்து நீள நீள கம்பு வைத்த ஜன்னலோடு அறை. நடுவில் வீட்டின் கதவு. வெளிப் பூச்சு மாறியிருந்தாலும் கட்டட அமைப்பு மாறாமல் அப்படியேதான் இருந்தது.

‘அந்தர் ஆயியே சாப். பேகம் கடைத்தெருவுக்குப் போயிருக்கிறாள். பசங்க விளையாடிகிட்டிருக்காங்க. அபு ஜான் மட்டும்தான் உள்ளேயிருக்கிறார். நீங்கள் நிதானமாய் பாருங்கள். ‘

— ரியாஸ் வீட்டிற்குள்ளாற வரும்போது செருப்பை கழற்றி வைத்து விட்டு வரணும் பேட்டா—

காலணிகளைக் கழற்றிவிட்டு நுழைந்தார். வராந்தாவில் நுழைந்து நீண்ட ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி வெளியே நோக்கினார். வலது புறத்தில் தோட்டம் தெரிந்தது. செடிகள் மாறிப்போய் விட்டன. ஜன்னல் கீழே தான் அடுக்குச் செம்பருத்திச் செடி இருக்கும். பர்சான் மட்டும்தான் பூப் பறிக்கலாம். தூரப் பறவை ஒன்று ‘உக்கூ..உக்கூ ‘ என்று யாரையோ தேடிக்கொண்டிருக்க.. கம்பிகளோடு கன்னம் தேய்த்து நின்றார். கம்பிகளின் சில்லிட்ட சிலிர்ப்பு மனதில் இறங்கியது.

–ரியாஸ் மழையை வேடிக்கை பார்த்தது போறும். சாப்பாடு ஆறுது வா..–

வரவேற்பறை….அகர்பத்தி வாசனை அவரை சூழ்ந்தது. எதிர்ச் சுவரில் புனித காபா , மஸ்ஜித் ஏ நபவ்வி அலங்கரித்தது. இடது புற மரஅலமாரியில் பிளாஸ்டிக் ஜாமா மஸ்ஜீத்தின் ஒரு பக்கம் ரியாஸ் , மன்சூர், மாஜித் மூவரும் நிற்கும் புகைப்படம். வலது பக்கம் பர்சானா தனியாக. மேல் தட்டில் அபு ஜானின் காலிப், சொடா கவிதைப் புத்தகங்கள். சாச்சா ஜான் எடுத்த குடும்பப் புகைப்படம். ஒரு கால்பந்தாட்ட குழு திரண்டு நிற்கிறார் போல். மூங்கில் நாற்காலிகள் வரிசை…ஓரத்தில் சாய்வு நாற்காலியில் படுத்தபடி புஸ்தகம் படித்துக் கொண்டு அபு ஜான் .

‘அபு ஜான் , இவர் நம் வீட்டைப் பார்க்க வந்திருக்கிறார்.. ‘

‘க்யா கஹா ‘

‘கொய் பாத் நை… நீங்க படிங்க ‘

–ரியாஸ் .. மன்சூர்.. எறங்குங்க சேர்லந்து.. அது விளையாடறத்துக்கு இல்ல.. போங்கடா. வெளியில போய் விளையாடுங்க போங்க— அபு ஜான் அலறினார்.

ரியாஸ் அஹமத் வரவேற்பறையிலிருந்து வீட்டிற்குள் நடந்தார். வலது புறம் நானி ஜான் அறை. அப்பா…எப்பிடி இருமுவாள். கதை சொல்கிறேன் என்று பாதி இருமலாய் போகும். பாதியிலும் விட மாட்டாள். இடது புறம் அம்மி ஜான் அறை. பழுப்பேறிய அந்த நிலைக் கண்ணாடியைத் தேடினார். இரட்டைக் கட்டில் போட்டு ஓரத்தில் தலையணைகளைஅடுக்கி வைத்து கம்பளம் போர்த்திய தற்காலிக சோபா. அதன் மேல் ஏறி ரியாஸ் குதித்துக்கொண்டிருக்க மாஜீத் கீழிருந்து தலையணையை உருவ.. ரியாஸ் கால் இடறி விழுந்தான். கட்டிலின் முனை கண்களுக்கு மேல் நெற்றியில் வெட்டி.. குபுக்கென்று ரத்தம் கொட்டியது. அவன் கையில் நெற்றியில்..எல்லாம் ரத்தம் பரவி..அம்மா வந்து பதறி சீலைத் துணி கிழித்து நனைத்து ஒற்றி.. ‘ மேரி குதா. இப்பிடி கொட்டுதே.. கை எடு பேட்டா கண்ல அடி பட்டிருக்கா பாக்கலாம் … ‘ என்று கண்கலங்கினாள். ‘மாஜீத் . என்னடா விளையாட்டு இது ‘ என்று அவனை இழுத்து முதுகில் அறைய.. மாஜித் பயத்திலும் குற்றவுணர்விலும் பெரிதாக அழ… ரியாஸ் அஹமத் தன் நெற்றித் தழும்பை லேசாகத் தடவி விட்டுக் கொண்டார்.

சமயலறை அப்படியேதான் இருந்தது…. ஜன்னலுக்கு பக்கத்தில் இது என் இடம் ..தண்ணீர் பானைக்கு அருகே மாஜிீத்..எதிர்ப்பக்காம் மன்சூர்.. என் அருகே பர்சானா..

.–அம்மி .. ரியாஸ் என் தட்டிலிருந்து எடுத்து சாப்படறான்..–

சமயற்கட்டை ஒட்டி படிகள் நீண்டன. படிகள் ஏறும்போது பின்னால் மாஜித் துரத்தினான். மொட்டை மாடியில் நின்று பார்க்க இன்னும் பரவசமாயிருந்தது. பஷீர் வீடு இரண்டு மாடி முளைத்து நீளமாயிருந்தது. ஜாமா மாஸ்ஜித் தலை தெரிந்தது. இரண்டு தெரு தள்ளி சச்சா ஜான் வீடு இருந்ததே. சுவடே தெரியாதபடிக்கு கட்டிடங்கள். எவ்வளவு விளையாடியிருக்கிறோம் இந்த மாடியில் –ரியாஸ் படியை அப்படி தாண்டி தாண்டி குதிக்காதே பேட்டா – அம்மி ஜான் அலறினாள்

வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் நின்று நினைவுகளைச் சுவாசித்தார். மனது நிச்சலனமாய் இருந்தது. தனக்குப் பின்னால் அம்மி ஜான் புகை மாதிரி நிற்கிற உணர்வு வந்தது. அந்தப் பரவசமான அனுபவம் அவரை ஒரு நிமிடம் ஆட்கொண்டு அந்த வீட்டில் மறுபடி ஜனனமெடுத்தது போல உணர்ந்தார். திடாரென்று ஞாபகத்துக்கு வந்தவராய் சமையலறைக்கு எதிரே சின்னக் கதவு வைத்த அந்த அறைக் கதவை லேசாகத் தள்ள ..

‘அது தட்டு முட்டு சாமான் போட்டு அடைச்சிருக்கற கச்சடா அறை.. சாப்.. உள்ளே சுத்தம் செய்யாமல் தூசா இருக்கும் சாஹேப் ‘

அவர் தாழ்ப்பாள் விலக்கி காலால் உந்த கதவு திறந்தது. கும்மிருட்டாக இருந்தது. விருட்டென்று ஏதோ ஓடி ஒளிந்தது.

‘இடது பக்கம் சுவிட்சு இருக்குது பாருங்க ‘

‘தெரியும் ‘ என்று விளக்கிட்டார். அறை முழுக்க காகிதமும்..டப்பாக்களும்.. உடைந்த மரச் சாமான்கள் சிலதும் சிதறியிருக்க.. உள்ளே புகுந்து எதையோ தேடினார். இடது பக்கம் திரும்பி.. பேப்பர் குவியலின் மேல் கால் வைத்து முன்னேறி சுவரோடமாய் கிடத்தியிருந்த அந்தப் பலகையை விலக்கி, எதிர்ப்பக்கம் வைத்தார். காற்றில்லாமல் புழுங்கி அவர் சட்டை நணைந்திருந்தது. மங்கிய வெளிச்சத்தில் இடது பக்கம் வந்து சுவரில் தடவினார். ‘இங்கேதான் இருந்தது ‘.

–ரியாஸ் .. நாந்தான் எல்லாரையும் விட உயரம்.. என் பேர் முதல்ல.. ..கோடு போட்டியா.. ‘

–ஹே காலை எக்கி நிக்காத..—

ஸ்கேலால் அளந்து கோடு போட்ட இடத்தில் மாஜீத் என்று ஆணியில் செதுக்கி….

–ரியாஸ் குள்ளா.. நீ எனக்கப்பறம் தான். அப்பறம் பர்சானா…–

— மன்சூர் பாத்துகிட்டே இரு . நான் உன்னை விட உயரமா ஆகப் போறேன்–

ரியாஸ் அஹமத் கண்களை இடுக்கித் தடவினார். சட்டென்று ஓரிடத்தில் உறுத்த.. கண்ணாடி அணிந்து உற்றுப் பார்க்க மாஜீத் என்று சுவர் நிரடியது. மாஜீத் இருக்கிறான்….ஐம்பது வருஷமாய் பூட்டி வைத்திருந்த உணர்வுகள் மனதைத் தாக்க, உற்சாகமாய் தேடினார். முதலில் மாஜீத் அப்பறம் மன்சூர்…மெல்லச் சரிந்து கீழே வர.. மறுபடி நிரடி.. சின்னக் கிறுக்கலாய் ரியாஸ் என்றது சுவர்…சற்று கீழே தரையில் மண்டியிட்டு தேடி… இதோ ….பர்சானா. மன்சூர் எங்கே.. என்று மறுபடி நிதானமாய் தடவி…. ரியாஸ் இருந்த இடத்துக்கு இடது புறம் சற்று விலகி மன்சூர் கைகளில் அகப்பட்டான். ரியாஸ் அஹமத் இன்னும் நெருங்கி சுவரின் அருகே உற்றுப் பார்த்து விரல் நுனையில் தடவி.. ‘ மன்சூர் ‘ என்றார் சன்னமாக..

–மன்சூர்!…. மேரா பேட்டா.!. என்று அம்மி ஜான் அலறினது வீடு முழுக்கக் கேட்டது.. அம்மி ஜான் முகத்திலறைந்து கொண்டு அழ.. அபு ஜான் சுவர் ஓரமாய் மெளனமாய் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார். மன்சூர் கைகள் சேர்த்துக் வயிற்றில் வைத்து ‘கிப்லா ‘ எதிரில் தலை வைத்து ,வெள்ளைக் ‘கபன் ‘ துணியால் மூடி.. வாய் லேசாகத் திறந்தபடி.. நடுக் கூடத்தில் கிடக்க, அம்மி ஜான் அவன் மேல் விழுந்து அழுதாள்.. ‘மேரா முன்னா.. மேரா பேட்டா..அதுக்குள்ள அல்லா கிட்ட போயிட்டயா ‘ என்று அம்மி ஜான் அவனைக் கட்டிக் கொண்டு அழ அழ, மன்சூர் உடம்பு அதிர்வில் லேசாக குலுங்க…–

மன்சூர் தெரியாமல் கண்கள் கலங்கியது. சுவரில் கன்னம் வைத்து எழுத்துக்கள் மேல் உரசி ‘நான் உன்னை விட உயரமாயிட்டன் மன்சூர்.. ‘ என்றார். அரவம் கேட்டு சட்டென்று திரும்பிப் பார்க்க.. கதவருகில் பாதி இருட்டில் மன்சூர் நின்றிருந்தான்.

‘மன்சூர் இங்கதான் இருக்கியா ‘ ….

‘அஹமத்.. சாஹேப் நம் வீட்டைப் பாக்க வந்திருக்கார் அவரை தொந்தரவு செய்யாதே பேட்டா ‘ ..

மன்சூர் ஓடினான்.

ரியாஸ் அஹ்மத் வெளியே வந்தார். சட்டை தொப்பலாய் நனைந்திருந்தது. கண்கள் கலங்கி சிவந்திருந்தது. தன்னை ஆட்கொண்ட உணர்ச்சிப் பிரவாகத்தில் இன்னும் கொஞ்ச நேரம் அந்த வீட்டில் வாழலாம் என்று தோன்றியது. வீட்டு நினைவுகளின் தாலாட்டில் ஒரு குழந்தை போலத்தான் உணர்ந்தார். மனது கனத்துப் போயிருந்தது. அந்த சூழலிலிருந்து விடுபட சட்டென்று திரும்பி நடந்தார்.

–வானத்திலிருந்து ஒரு ஏவுகனை இரைச்சலுடன் சீறியபடி விரைந்து வந்து வீட்டின் மேல் இறங்கி வெடித்தது. தீ ஜ்வாலைகள் வானத்தை நோக்கி உயர, அந்த வீடு தகர்ந்து போய் சுக்கல் சுக்கலாகி நாலாப்புறமும் சிதறி.. புழுதி கிளம்பி உயர்ந்து ….தீயின் உக்கிரம் மெல்ல அடங்கி புகை விலகியவுடன் வீடு மண்ணோடு மண்ணாகி.. ‘ரியாஸ் ‘ என்று மன்சூரின் பாதாள அலறல் அவனை எட்டியது.–

ரஷீதிடம் ‘ஷுக்ரியா ‘ என்றார். நடந்து வந்து வாசல் படிகளில் கீழே இறங்க..

‘சாஹேப்……. ‘

‘சாஹேப்… நம்முது ரெண்டுமே ஒரே தேசம்தான் சாஹேப். ஏதோ போதாத காலம் அண்ணன் தம்பிங்களுக்குள்ளே சண்டையாயி பிரிஞ்சிடுச்சு.. மேலும் சண்டை வேணாம்.. பேசித் தீத்துக்குங்க சாஹேப்.. ‘

ரியாஸ் அஹ்மத் கைகளை கூப்பி மன்றாடும் அந்தப் பெரியவரை ஆழமாய் பார்த்தார். அவரைத் தழுவி ‘குதா ஹாபிஸ் ‘ என்று விடைபெற்று வெளியேறினார்… வாக்கி டாக்கியில் உத்தரவு பிறக்க.. மெய்காப்பாளர்களும்.. காவலர்களும் அவனைச் சூழ்ந்து ..காரில் அவரை அடைத்தவுடன் கார் விரைந்தது.

ஜென்ரல் ரியாஸ் அஹ்மத் பாகிஸ்தான் போய்ச் சேர்ந்த ஒரு வாரத்தில் இந்தியப் பிரதமரின் அலுவலகத்திற்கு வந்த கடிதத்தில் இந்தியப் பிரமரை அடுத்தச் சுற்று பேச்சு வார்த்தைக்கு பாகிஸ்தான் வரச் சொல்லி அழைப்பு இருந்தது.

— அக்டோபர் பதினைந்தாம் தேதி–

***

anandraghav@yahoo.com

Series Navigation

ஆனந்த் ராகவ்

ஆனந்த் ராகவ்