வேதவனம் விருட்சம் 98

This entry is part [part not set] of 44 in the series 20100807_Issue

எஸ்ஸார்சி



இந்திரனே வா சோமம் பருகு
நின் குதிரைகளிரெண்டும்
நின்னைக்கொண்டு வரட்டுமிங்கு
சொல்லின் செல்வனே
எம் மொழியை அங்கீகரி
மாயாவிகளான தசுயுக்களை
வீழ்த்தியோன் நீ
ஆரிய வர்ணத்தின் காப்பு நீ
அழகுக்கணவனை ஒரு மனைவி
தழுவுவதுபோலே யாவரும்
காப்புக்கு நின்னைச்சூழ்கிறார்கள்
ஆடுகளத்தில் சூதாடி போலே
இந்திரனே வெற்றிகொள்கிறான்
நதி நீர் ஏரிக்குப்பாய்வதுபோலே
சோமம் இந்திரனுக்குப்பாய்கின்றது
உறங்குவோர்க்கு இந்திரன் செல்வம் தருவதில்லை
மனிதர்க்குத்தனம் அளிக்கும் அவன்
வெற்றுப்புகழ்ச்சியை விரும்புவதில்லை
நின் வச்சிராயுதம் இரும்பினால் ஆனது இந்திரனே
பொன் நிறத்தது அது
ததீசியின் எலும்புகொண்டு
வச்சிராயுதம் செய்த நீயே
விருத்திரர்கள் தொண்ணூற்று ஒன்பது பேரைக்கொன்றவன்
ததீசியின் அக்குதிரைத்தலையைச்
சரணாவதியிலே கண்டெடுத்தவன்.
பெண் புறா தன் பெடையை
அணுகுவதுபோலே சோமம் அருகே வருகிறாய் நீ
தசுயுக்களை அழித்து மானிடரைக்காப்போன் நீ
குதிரைத்தலைவன் நீ.
பசுகாப்போன் இந்திரன்
தேனினும் இனிய வாழ்த்துக்கள் இந்திரனுக்கு
காம எண்ணங்களுடன்
ஒருவரை ஒருவர் நோக்குவது முடிந்து
அவர்கள் நெடிது உறங்கட்டும்
எதிரிகள் உறங்கட்டும் இந்திரனே
குற்றப்புயல் எனும் சுழல்
தூரம் தொலையட்டும் எம்மிலிருந்து
களைப்புள்ள கழுதைகள் அகற்றப்படுக
மானிடச்செயல்கள் எல்லாமறியும் இந்திரன்
நீர் வழியை விடுதலை செய்தான்
மனிதர்கள் மலை பிளந்தார்கள்
அவை திறந்து நீர் வழங்கின
இங்கே நிறுவப்பட்டன கோசாலைகள்
ஒடும் நீர் தடுக்கும் விருத்திரனை
அவனே வீழ்த்தி முடித்தான்
அதிகம் அழைக்கப்ப்டுவோன் அவன்.
பசுவும் மெய்ப்பொருளும் அளிப்போன்
தசுயுவை முடிப்போன்
தந்தை மகனுக்கு அளிப்பதுபோலே
அறிவு எமக்குத்தா அழைக்கப்படுவோனே
சூரனே இடை பாயும் வெள்ளத்தை
உன்னாலே யாம் கடப்போமாக
எம் தீமை விலக்கிடு இந்திரனே
நூறு புவியும் நூறு விண்ணும் நினது
நூறு சூரியனுக்கு ச்சமமானோன் நீ
எமக்குப்பிதா மெய்யாய் நீ
பிதாவைத் தாண்டியோன் நீ
இவ்வேள்விகள் நின்னை விரும்புகின்றன
அறிவால் விழைந்து மேதமையால் பொழியும்
பிராமணன் சொல்லுக்கு இவண் வருக
குதிரையுடையோனே
சோம ரசம் திளைக்கலாம் வா
எல்லாப்புகழும் இந்திரன் ஒருவனுக்கே
இந்திரனைப்போற்றி ரசம் பிழியுங்கள்
எதிரிகள் செய்யும் தெரிந்த கானங்கள் ஒழியட்டும்
எம்மைக்காகும் பல வடிவுருக்கள் வலிமைகள்
கொண்டு தந்திடு இந்திரனே
குதிரைகள் நின் தேரில் பூட்டப்படுகின்றன
அறிவொடு ஆற்றலுடை நீ
சோமம் பருகிட உடன் வா
நிகரில்லாப் பசுத்தலைவனாகிச்
சூரியக்கண்ணாலே உலகம் பார்ப்பவனே வா. ( அதர்வ வேதம் காண்டம் 20ல் 675 சுலோகம் வரை )

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி