மத்தளராயன்
வருடா வருடம் ஆயிரக் கணக்கான பிரிட்டாஷ் பிரஜைகளுக்கு மாட்சிமை தாங்கிய எலிசபெத் மகாராணி தேநீர் விருந்து தருவது வழக்கம். பக்கிங்ஹாம் அரண்மனை பிக்காடல்லி தெருவிலிருந்து அரை மீட்டர் உயரத்தில் மிதந்து கொண்டிருக்கவில்லை என்பதை சாமானியர்களுக்கு நிரூபிக்க நடத்தப்படும் இந்தச் சடங்கு ஒரு அன்னதானம் மாதிரி. எல்லோரையும் பந்தி விசாரிக்க முடியாவிட்டாலும், மரியாதை நிமித்தம் அவ்வப்போது அரசியாரும் அவருடைய கணவரும் காலே அரைக்கால் மில்லி மீட்டர் புன்னகை காட்டி யாரையாவது எங்கேயாவது அன்போடு நலம் விசாரிப்பதும், மற்றவர்கள் வரிசையில் நின்று கேக் தின்று, தேநீர் குடித்து, அரண்மனை வளாகத்தில் அரச போஜனம் செய்த திருப்தியோடு வெளியே நடப்பதுமாகப் போகிற இந்தத் தோட்டத் தேநீர் விருந்து போன வாரம் நிகழ்ந்தபோது, அரச தம்பதியரும் மற்ற விருந்தாளிகளும் பார்த்துக் கொண்டிருக்க, விருந்துக்கு அழைக்கப்பட்ட ஓர் இளைஞன் உடுதுணி எல்லாம் நொடியில் அவிழ்த்துப் போட்டு பிறந்த மேனிக்குச் சபையில் ஓட ஆரம்பித்தான். அரண்மனைப் பாதுகாப்பு வீரர்கள் வேறு என்னத்துக்கு இருக்கிறார்கள் ? விடாதே பிடி. கோழி அமுக்குகிற மாதிரி அமுக்கி, வெளியே கொண்டு போய் விடு.
அலுப்புத் தட்டுகிற அரண்மனைத் தேனீர் விருந்துக்கு நாலாவது பக்கத்து ஈசானிய மூலையில் நாலு வரி ஒதுக்கும் பத்திரிகைகள் முதல் பக்கம் கட்டம் கட்டிச் செய்தி வெளியிட ஒத்தாசை செய்த அந்த திகம்பர இளைஞனை பக்கிங்ஹாம் அரண்மனை வட்டாரம் உள்ளூற வாழ்த்தியிருக்கும்.
பொது இடங்களில் துணி துறந்து ஓடுகிற ஸ்ட்ரீக்கிங்க் என்ற இந்த விபரீத விளையாட்டு இங்கிலாந்து விளையாட்டு மைதானங்களில் கொஞ்சம் அதிகம். கால்பந்து, டென்னிஸ் சர்வதேசப் போட்டிகள் நடக்கும் உலகின் எல்லா நகர மைதானங்களிலும், அரங்குகளிலும் துணி துறந்து ஓடுவதையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்ட ஒருத்தரை கர்ம சிரத்தையாக தொலைக்காட்சிப் பேட்டி எடுத்ததைச் சில மாதம் முன்னால் பார்க்க நேர்ந்தது.
ஆடை அணிவது குறைந்த பட்ச சமூக நாகரீகம் சார்ந்த ஒரு தேவையாக உள்ளதால், எக்ஸிபிஷனிஸம் என்ற மன வக்கிரம் காரணமாக நிகழும் இப்படிப்பட்ட ஆடை அவிழ்ப்பு ஒரு கண அதிர்ச்சியையாவது முதலில் உண்டாக்குகிறது. அது நகைப்புக்கிடமான செயலாக மனதில் படிவது அடுத்த கணத்தில்.
ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவோ, பிறரால் அவமானப்படுத்தப்பட்டோ ஆடை துறந்தவர்களின் அடுத்த கணங்கள், சமூக வரலாற்றுப் பக்கங்களில் உறைந்து போயிருக்கின்றன. வியத்னாமில் அமெரிக்கா நாபாம் குண்டு வீசிக் கிராமங்களை எரித்தபோது அழுது கொண்டே ஓடி வரும் நிர்வாணச் சிறுமியும், 1983-ல் சிங்களவர்கள் ஈழத்தில் இனப்படுகொலையில் ஈடுபட்டபோது, தன் சமவயது சிங்கள இளைஞர்களால் நிர்வாணமாக்கப்பட்டு அடுத்த நிமிடம் சுட்டுக் கொல்லப்படுவதை எதிர்பார்த்து அவமானமும் பயமும் முகத்தில் அழுந்தப் பதிந்திருக்கக் குந்தியிருக்கும் தமிழ் இளைஞனும் புகைப்படங்களாக, நம் போன்ற உலகின் எத்தனையோ கோடி சாமானியர்களை இன்னும் பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். நம்மை என்றென்றைக்கும் தலை குனியச் செய்யும், சக மனிதனுக்கு மனிதன் இழைத்த கொடுமையின் நிழற் பதிவுகள் இவை.
இதன் இன்னொரு பரிமாணம், மற்றவர்கள் எப்படி உடுக்க வேண்டும், உடுக்கக் கூடாது என்ற ஆதிக்க மனப்பான்மை. பதினெட்டாம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை, மலையாள நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்கள், அவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மேலுடை உடுக்க அனுமதி கிடையாது. 1820-களில் தொடங்கிய தோள் சீலைப் போராட்டங்கள் இந்த அநீதியை எதிர்த்துச் சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி அது ஒழிய வகை வகுத்தன.
மேல் சாதியினரின் தெருவில் தலையில் முண்டாசு, தோளில் துண்டு, காலில் செருப்பு அணிந்து மற்றவர்கள் நடக்கக் கூடாது என்று திருவிதாங்கூரின் பகுதியான தமிழ் புழங்கும் நாஞ்சில் நாட்டிலும் அப்போது கட்டுப்பாடு
நிலவியது. செருப்பைக் கையில் எடுத்துப் பிடித்துக் கொண்டு, முண்டாசை அவிழ்த்து, மேல் துண்டை அகற்றிக் கம்புக்கூட்டில் செருகிக் கொண்டு தரையைப் பார்க்கக் குனிந்து யார்மேலும் மோதிக் கொள்ளாமல் விலங்கு போல் இவர்கள் போக வேண்டிய கட்டாயம்.
அப்போது தான் வள்ளிநாயகத் தேவர் வந்தார். ‘ முண்டாசை எடுக்கணுமா, சரி. துண்டை எடுக்கணுமா, சரிதான். இந்த வேட்டி என்ன பாவம் செஞ்சது ? அதுவும் வேண்டாமே ‘
சமூக அநீதிக்கு எதிர்ப்பாகத் துணி துறந்து நக்னமாக மேல்சாதித் தெருவில் கம்பீரமாக நடந்துபோன அந்தத் தமிழன் தான் வரலாற்றின் முதல் பெருமைக்குரிய ஸ்ட்ரீக்கராக இருக்க வேண்டும்.
த்ிருவல்லிக்கேணி பகுதியில் தமிழோடு கலந்து உருது பேசப்படும் ஸ்டைல் குறித்து என் துபாய் வாழ் நண்பர் சாபு குறிப்பிட்டது –
‘கொளத்து மே மாடு கிர்கயா. தோ ஆத்மி கொம்பு பகடோ தோ ஆத்மி வால் பக்டோ ‘
( ‘குளத்துலே மாடு விழுந்துடுச்சு. ரெண்டு பேர் கொம்பைப் பிடிச்சு இழுங்கப்பா.. இன்னும் ரெண்டு பேர் வாலைப் பிடிங்க ‘)
கேரளத்தில் குடை ரிப்பேர் செய்கிறவர்களில் பலரின் பேச்சுமொழியும் இது போல்தான். பல ஆண்டுகளுக்கு முன் கருணாகரன் மந்திரிசபை, பள்ளிகளில் உருது சொல்லிக் கொடுக்க முன்கை எடுத்து உருது ஆசிரியர்களைத் தேடினார்கள். ‘ஊரில் இந்த வருஷம் குடை ரிப்பேர் செய்பவர்கள் காணாமல் போய்விட்டார்கள் ‘ என்று மலையாள எழுத்தாளர் வைக்கம் முஹம்மது பஷீர் சொன்னதாக நினைவு.
வாழ்வதற்காக எங்கோ எப்போதோ குடிபெயர்ந்து, மொழியைத் தொலைத்துவிட்டு வருவதும் போன இடத்தில் ஐக்கியமாவதும் சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் நடைபெறுகிறது.
அநபாய சோழன் வைணவர்களைத் துன்புறுத்தியபோது அந்தக் ‘கிருமி கண்டான் ‘ கையில் அகப்படாமல் தப்பி, உடையவர் ராமானுஜரோடு நூற்றுக் கணக்கான வைணவர்கள் பிட்டதேவன் அரசாண்ட கர்னாடகத்தில் (மைசூர் – மாண்டியா பகுதிகளில்) புகுந்தார்கள்.
உடையவர் திரும்பி விட்டாலும், அங்கேயே தங்கிய ஐயங்கார்கள் ‘மாண்டியா ஐயங்கார்கள் ‘ ஆகி விட்டார்கள். இவர்கள் தமிழ், கன்னட உச்சரிப்பில் இருக்கும்.
‘பல் கழுவி, தலைலே எண்ணெய் தொட்ச்சு, வண்டி பண்ண்ன்டு ஃபோட்டோ வாங்ன்ண்டு வந்து மாடியிலே ஓத்ன்ண்டு இருக்கேன் ‘ (பல் தேய்த்து, தலையில் எண்ணெய் தடவி, வண்டி பிடித்துப் போய் ஃபோட்டோ எடுத்து வந்து, மாடியில் படித்துக் கொண்டிருக்கிறேன்)
போன தலைமுறையின் குறிப்பிடத் தகுந்த கன்னட எழுத்தாளரான ‘சிக்க வீர ராஜேந்திரன் ‘ போன்ற சரித்திரப் புதினங்களை எழுதிய மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் மாண்டியா தமிழர் தான்.
மலையாளத் தமிழர்களான மகாகவி உள்ளூர் பரமேஸ்வர ஐயரும், சில வருடங்கள் முன் காலமான எழுத்தாளர் மலையாத்தூர் ராமகிருஷ்ணனும் போல் மாஸ்தி தன் தமிழ்ப் பின்னணியைப் பெருமையோடு ஒருபோதும் தன் படைப்புகளிலோ, செயல்பாட்டிலோ அடையாளம் காட்டியதில்லை என்பது குறிப்பிடப் படவேண்டியது.
அது இருக்கட்டும் ..
அலக்சாண்டர் இந்தியாவுக்குப் படை நடத்தி வந்தபோது நாடு முழுவதையும் பிடிக்கத் திட்டம் போட்டிருந்தானாம். ஆனாலும், பாதி தூரம் வந்த பின் உடல் நலக்குறைவு காரணமாகத் திரும்ப வேண்டிப் போயிற்றாம். அவனோடு கூட வந்த வீரர்களில் சிலர் இங்கேயே தங்கியிருக்க உத்தரவு கொடுத்து விட்டுப் போனவன் போனவன் தான். அவர்கள் இங்கே சமர்த்தாக, குடகுப் பகுதியில் தங்கி, குடியும் குடித்தனமுமாக செட்டில் ஆகி விட்டார்களாம்.
ஜெனரல் திம்மப்பா, கரியப்பா போல் புகழ் பெற்ற குடகுக் காரர்களைக் கவனித்தால் கிரேக்கச் சாயல் – முக்கியமாக மூக்கு – தெரியும்!
ஐஸ்வர்யா ராய்க்குள் பத்து மில்லியாவது கிரேக்க ரத்தம் ஓடுகிறது.
‘1937-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் இரண்டாந்தேதி. நியூயார்க்கிலிருந்து டப்ளினுக்கு (அயர்லாந்து) ‘சமரியா ‘ என்னும் கப்பலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். அந்தத் தினம் இந்தியாவிலுள்ள சிறு குழந்தைகளுக்கும் தெரிந்த புனிதத் தினம் – மகாத்மாவின் பிறந்த நாள்.
மகாத்மாவின் வாழ்க்கையை, அவருடைய வாழ்க்கையின் அனுபவங்களை, ஓர் உண்மையான சரித்திரப் படமாக ஏன் தயாரிக்கலாகாது என்ற எண்ணம் இரவு முழுவதும் என்னை ஆட்கொண்டது.
காந்திஜியைப் பற்றி ஒரு சிறு படம் தயாரிப்பதற்குச் சாத்தியமாகலாம். ஆனால் ஒரு முழு நீளப்படம் தயாரிக்க வேண்டுமே ? அதற்கு வேண்டிய விஷயங்களை ஒருவர் சேகரிக்க வேண்டுமே ? சாத்தியமா என்று கேட்டார் நண்பர் ஒருவர்.
நான் சொன்னேன் – ‘உலகம் முழுதும் அதற்காக அலைவேன். ஒவ்வொரு செய்திப்படக் கம்பெனிக்கும் செல்வேன். உலகத்தின் பல்வேறு பாகங்களில் உள்ள படக் குவியல்களில் தேடுவேன். சினிமாப்பட லைப்ரரிகள் ஒன்று விடாமல் பார்ப்பேன். எப்படியும் சேகரிப்பேன். ‘
சென்னையிலுள்ள சில முதலாளிகள் எனது திட்டத்தைப் பார்த்து நகைத்தனர். சிலரால் அதை அறிந்து கொள்ளக் கூட முடியவில்லை. ஒரு பிரபல பிலிம் கம்பெனி மானேஜர் என் எதிரிலேயே தன் முதலாளியிடம், ‘வாழ்க்கைச் சித்திரப்படம் (டாக்குமெண்டரி பிலிம்) இலவசமாகக் காண்பித்தால் கூட ஜனங்கள் பார்க்க வரமாட்டார்கள் ‘ என்று கூறினார்.
லண்டனுக்குச் சென்றபொழுது மகாத்மாவின் நண்பர் ஸ்ரீ போலக்கைப் பார்க்கச் சென்றேன். என்னுடைய திட்டத்தை அவருக்கு விளக்கிக் கூறியபொழுது, அவர் சாவதானமாக ஒரு பழைய தகர டப்பாவை எடுத்து, 200 அடி கொண்ட மிகப் பழைய சினிமாப் படம் ஒன்றின் ‘பாசிட்டிவ் ‘ காப்பியைக் காண்பித்தார்! அது ஒரு சரித்திரப் பிரசித்தி பெற்ற படம் என்றும், சென்ற 27 வருடங்களாக அதனைத் தான் பாதுகாத்து வருவதாகவும் அவர் சொன்னார்.அதற்கு ஒரு காப்பி எடுத்துத் திரையில் போட்டுப் பார்த்தபொழுது, ‘இது காலஞ் சென்ற அருந்தலைவர் கோபாலகிருஷ்ண கோகலே தென்னாப்பிரிக்கா விஜயம் செய்தபோது எடுத்த படம். அதில் மகாத்மா காந்தியை ஐரோப்பிய உடையில் பார் ‘ என்று ஸ்ரீ போலக் கூறினார்.
நமது தேசத்தின் அருமையான சரித்திரச் சின்னங்களில் இது ஒன்று என்று துணிந்து கூறலாம். 1912-ஆம் வருஷத்தில், முன்னேற்றம் அதிகமடையாத ஆப்பிரிக்காக் கண்டத்தில், அதுவும் கோகலேயையும் காந்திஜியையும் சினிமாப் படம் எடுத்திருப்பார்கள் என்று யாராவது எதிர்பார்க்க முடியுமா ? இவ்வருந்தனத்தைக் காப்பாற்றி இந்தியருக்கு அளித்த ஸ்ரீ போலக்குக்கு நாம் என்றென்றும் கடமைப் பட்டிருக்கிறோம். ‘
மேலே தரப்பட்டது 1937-ல் தமிழில் தயாரிக்கப்பட்ட ஓர் ஆவணப்படம் பற்றிய கட்டுரையின் பகுதிகள். படத் தயாரிப்பாளரே கட்டுரையாளரும் ஆவார்.
நினைத்துப் பாருங்கள். இந்துஸ்தானி சினிமாவும், தமிழ் சினிமாவும் ஐம்பது பாட்டு, நூறு பாட்டு என்று பாடியே நேரத்தை ஓட்டி, பாட்டுக்கு நடுவே கொஞ்சம் போல் வசனம் பேசிக் கொண்டிருந்த 1930-களில் ஓர் ஆவணப் படம்! அதுவும் பிரிட்டிஷ் அரசு ஆட்சி செலுத்திய அடிமை இந்தியாவில், இந்த நாட்டின் மகத்தான மக்கள் தலைவரைப் பற்றித் துணிந்து எடுக்கப்பட்ட படம்!
படத்தின் சில காட்சிகள் படம் தயாரிக்கப்படுவதற்கு இருபத்தைந்து வருடம் முன்னால், 1912-ல் தென்னாப்பிரிக்காவில் எடுத்துச் சேர்க்கப் பட்டவை!
எல்லாவற்றுக்கும் மேலாக, என்றென்றும் எமக்குப் பெருமை அளிப்பது – அது ஒரு தமிழனால் எடுக்கப்பட்ட, மகாத்மா காந்தி பற்றி உலகிலேயே முதல் முதலில் வெளியான, ஒரு தமிழ்ப் படம்.
சினிமாத் துறையில் தமிழுக்குக் கிடைத்த இந்தப் பெருமை ஒன்றே போதும் தமிழரைத் தலை நிமிர்ந்து நடக்க வைக்க. ஆயிரம் குப்பைப் படங்கள் இப்போது வந்தாலும், அழிக்க முடியாத பெருமை அது.
உலகம் சுற்றும் தமிழன் என்று புகழ் பெற்ற காலம் சென்ற ‘குமரி மலர் ‘ ஏ.கே.செட்டியார் தான் மகாத்மா காந்தி பற்றிய ஆவணப் படத்தைத் தயாரித்து இப்படி வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றவர்.
இந்தக் கட்டுரையும், சினிமா குறித்து ஏ.கே.செட்டியாரின் பிற கட்டுரைகளும் இடம் பெற்றுள்ள சிறு நூல் – ‘சினிமா சிந்தனைகள் ‘. வெளியிட்டவர்கள் சந்தியா பதிப்பகம், சென்னை ‘ . email id piththan@yahoo.com
***
eramurug@yahoo.com
- குறிப்புகள் சில- 31 ஜூலை 2003- காட்கில்,வோல்வோ பரிசு-மறைமலையடிகள் நூலகம்-மேரி கல்டோர் -உலக சிவில் சமூகம்
- வாழ்க்கையும் கனவுகளும்
- அறிவியல் மேதைகள் – சர் ஹம்ப்ரி டேவி (Sir Humphry Davy)
- அகில உலகில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?
- தவிக்கிறாள் தமிழ் அன்னை !
- தமிழாக்கம் 1
- தாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல் ‘
- விமரிசன விபரீதங்கள்
- கலையும் படைப்பு மனமும்
- கஷ்டமான பத்து கட்டளைகள்.
- உணர்வும் உப்பும்
- விசுவரூப தரிசனம்.
- குப்பைத் தொட்டியில் ஓர் அனார்க்கலி!
- நெஞ்சினிலே….
- ஒரு தலைப்பு இரு கவிதை
- உழவன்
- மொய்
- அந்த(காந்தி) -நாளும் வந்திடாதோ.. ?
- ஹைக்கூ
- கம்பனும் கட்டுத்தறியும்
- கூடு விட்டு கூடு…
- பிரம்மமாகும் ஏசு கிறிஸ்து – நூல் பகிர்தல்: ஆலன் வாட்ஸின் ‘ Beyond Theology – The Art of Godmanship ‘
- 39.1டிகிரி செல்ஸியஸ்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினேழு
- விடியும்! நாவல் – (7)
- கோயில் விளையாட்டு
- கேட்டுக்கிட்டே இருங்க!
- கடிதங்கள்
- புலிச்சவத்தில் கால்பதிக்கும் வேட்டைக்காரர்கள்
- வாரபலன் – ஜூலை 26, 2003, (ஸ்ட்ரீக்கர், தமிழுருது, மகாத்மா விவரணப்படம்)
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள்
- இறையியல் பன்மையும் உயிரிப்பன்மையும்-3
- நேற்று இல்லாத மாற்றம்….
- கேள்வி -2 தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் ?
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 11
- அன்னை
- ஊனம்
- வாழ்க்கை
- மனமா ? மத்தளமா ?
- முற்றுமென்றொரு ஆசை
- சந்தோஷமான முட்டாளாய்…
- ஒற்றுப்பிழை