வலிகளின் வரைவிலக்கணமானவள்…

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

லறீனா அப்துல் ஹக் (இலங்கை)-



மௌனத்தின் இடைவெளிகள்
நீளும் போதெல்லாம்….
நசிந்து போகின்றது உறவென்று
நினைத்துவிட்டாய், நீ.

உனக்கான வாழ்தலின்
நெருடல்களை நீவுதற்கும்
உறுத்தல்கள் எதுவுமின்றி
உத்தரவாதப்படுத்துதற்குமாய் – நீ
அறுத்துப் பலியிட்டதென்னவோ
என்னுடைய மனசையும் – அதன்
மெல்லுணர்வுகளையும் தான்,
எத்தனை சுயநலம் உனக்கு!

சிறகுகள் பற்றிய கனவுகளின் பரவசத்தில்
கால்களையும்கூட
இழந்து தவிக்கின்றேன், நான்…
நீ?
தொல்லையொன்று தொலைந்ததான
நிம்மதியில் துயில்கிறாயோ?
எனக்குத் தெரியவில்லை!

“வாரித் தருகிறேன்
வருக நீ” என்றாய்.
வந்து நின்றவளிடம் நீ
வாரியள்ளித் தந்தாய்தான்
உயிர்கசிந்து விசித்து அழும்
வலிகளை…
வேதனையை…
வாழ்வின் பெருந்துயரை…!

எடுத்தெறிந்து வீசப்பட்ட நேசம்
காற்றின் கரங்களையும்
காயப்படுத்திற்று,
நீ அதை உணரமாட்டாய்
அன்பனே!

உயிர் வலிக்க உயிர் வலிக்க
உதடுகள் முணுமுணுக்கின்றன:
“கால்களின் கீழே
விழுந்து கிடப்பவைக்கு
ஒரே மரியாதைதான்,
அது
செருப்பாக இருந்தாலும்
ஓர் ஏழைப் பெண்ணின்
இதயமாக இருந்தாலும்!”

– லறீனா அப்துல் ஹக் (இலங்கை)-

Series Navigation

லறீனா அப்துல் ஹக்- (இலங்கை)

லறீனா அப்துல் ஹக்- (இலங்கை)