சின்னக்கருப்பன்
மாலன் தான் எழுத என்று ‘வலைக்குறிப்புகள் ‘ வைத்திருக்கிறார்.
அதில் கீழ்க்கண்ட வரிகள் இருந்தன.
‘உலக சரித்திரத்தை நேரு இந்திராவிற்குக் கடிதங்களாக எழுதினார். அதில் அவர் எழுதுகிறார்: ‘ ராமாயணம் என்பது ஆரிய திராவிடப் போராட்டம் பற்றிய கதை. அது திராவிடர்களுக்கு எதிராக எழுதப்பட்ட கதை ‘
ராமர் சரித்திர நாயகன் என்று சொல்லும் வி.எச்.பி இன்னொருபுறம் அவர் மனிதகுலத்தின் மேலான குணங்களின் அடையாளமாகத் திகழ்ந்தவர், இந்தப் பிரபஞ்சம் எந்த தர்மத்தின் அடிப்படையில் இயங்குகிறதோ அந்த தர்மத்தின் வடிவம் ( மரியாத புருஷோத்தம்) என்றும் வாதிடுகிறது. ராமாயணம் அறிந்தவர்களுக்குத் தெரியும். தன் கணவன் அல்ல என்று தெரிந்த பின்னும் தானே விரும்பி உடலுறவு கொண்ட அகலியைக்கு சாப விமோசனம் அளித்த ராமர், தன் சொந்த மனைவியின் ஒழுக்கத்தின் மீது சந்தேகம் கொண்டு, அவளைத் தீக்குளிக்க செய்தார், அவர் அக்னி பிரவேசம் செய்து தான் கற்பின் கனலி என்று நிரூபித்த பின்னும், சில ஆண்டுகள் கழித்து, அவளை பட்டத்தரசியாக ஏற்றுக் கொண்டு, தாம்பத்தியம் நடத்தி, அவள் நிறைமாத கர்பிணியாக இருக்கும் போது யாரோ வீதியில் போகிறவன் சொன்னான் என்பதற்காக அவளைக் கொண்டு போய் காட்டில் விட்டு வந்தவர் உதாரண புருஷன். பேரழகியான சீதை தன் வசம் பல காலம் இருந்தும், தன்னிடம் தவ பலம், ஆள் பலம், ஆயுத பலம் எல்லாம் இருந்தும் அவள் மீது நகக் கண் கூட படாமல் வாழ்ந்த ராவணன் அயோக்கியன். இதுதானே ராமாயணம். ? ‘
இது மாலனின் கருத்து என்று மட்டும் நான் கருதவில்லை. இது போலவே பலரும் கருதி, எழுதி வந்திருக்கிறார்கள். திராவிட இயக்கத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இது ஒரு உண்மை என்ற அளவுக்கு பலரிடம் பரவி உள்ள கருத்து. மாலன் பல ஊடகங்களின் தலைமைப்பொறுப்பில் இருந்தவர்; இருப்பவர். ஆகவே, இதனை இப்படிப்பட்ட பொறுப்பில் இருப்பவர்களின் உதாரணச் சிந்தனையாகக்கூட எடுத்துக்கொள்ளலாம். ஆகவே இந்தக் கருத்துக்கு மட்டுமே என் எதிர்வினை.
ராமாயணம் ஆரிய திராவிடப் போராட்டம் என்ற கருத்தை முதலில் யார் சொன்னது என்பது என் கேள்வி. ராமாயணத்தில் அதற்கு ஏதேனும் சான்றுகள் உள்ளனவா ? வானரப்படையை திராவிடர்கள் என்று சொல்ல முடியுமா ? (அப்படியென்றால் ராமாயண காலத்தில் திராவிடர்களுக்கு வால் இருந்ததா ?) வானரப்படையை திராவிடர்கள் என்று குறித்து ராமாயணத்தில் (வால்மீகியிலிருந்து கம்பராமாயணம் வரை) எங்காவது வருகிறதா ? ஆரிய திராவிடப் போராட்டம் என்பதற்கு என்ன அத்தாட்சி ? வானரப்படையினர் திராவிடர்கள் என்றால் ராட்சசர்கள் யார் ? ராட்சசர்களும் திராவிடர்களா ? ராட்சசர்களின் தலைவனாக ராவணன் இருக்கிறான். அவனது தந்தை ஒரு ரிஷி. ராவணன் ஒரு பிராம்மணன் என்று வால்மீகி முழுவதும் வருகிறது. அப்படியென்றால் எல்லா பிராம்மணர்களும் ராட்சசர்களா ? ராட்சசன் என்பவன் யார் ? ராட்சசர்கள் அல்லது அரக்கர்கள் திராவிடர்கள் என்றால், ஈரானியர்கள் யார் ? ஈரானியர்களின் வரலாற்றில் தேவ அரக்கர்கள் சண்டை வருகிறது. அதில் தேவர்கள் கெட்டவர்கள், அரக்கர்கள் நல்லவர்கள். இந்தப்பக்கம் சொன்ன கதையில் தேவர்கள் நல்லவர்கள் அரக்கர்கள் கெட்டவர்கள். சரி ஈரானியர்கள் ராட்சசர்கள் என்றால், திராவிடர்கள் யார் ? திராவிடர்களும் ஈரானியர்களும் ஒன்றா ? வால்மீகி ராமாயணத்தில் பாண்டிய நாட்டைப் பற்றியும், அதன் பொற்கதவுகளைப் பற்றியும், கேரள நாட்டைப் பற்றியும் வருகிறது. பாண்டிய மண்டலத்தில் இருக்கும் மக்களும் அரக்கர்களா ? தமிழ் முனிவன் அகஸ்தியன் அங்கு அமர்ந்திருப்பான் என்று வருகிறது. அவர் அரக்கர்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தாரா ? மேலும் ஜாம்பவான் என்ற கரடி என்ன மனித இன உட்பிரிவின் குறியீடு என்று தெரியவில்லை.
மேலும் ராவணன் பிராம்மணன். ராமன் சத்திரியன். கருப்பன். (அவர் பெரிய கருப்பன்) திராவிட இயக்கத்து சுயசிந்தனை(!)யாளர்கள் பிராம்மணனான ராவணனுக்கு ஏன் துதி பாடினார்கள் என்று எனக்கு விளங்கவில்லை. கருப்பனான சத்திரிய ராமனை அல்லவா அவர்கள் துதி பாடியிருக்கவேண்டும் ? (என்ன பிரச்னை என்றால், வெள்ளைக்காரன் தனக்கு வசதியாக டி-கன்ஸ்ட்ரக்ட் பண்ணி சொல்லும் வரை அதைப் பற்றியே இவர்கள் சிந்திக்கவில்லை).
(ஆரிய திராவிட போராட்டம் என்பது வேறு, தேவ அரக்கர் சண்டை என்பது வேறு, இந்த இரண்டையும் வகையாகக் குழப்பி, ராட்சசன் என்பது திராவிடன் என்று சமப்படுத்திவிட்டார்கள். பேரரசு ஆசை பிடித்த ஒரே இந்திய மன்னர்கள் தமிழர்கள்தாம். ராஜராஜசோழனும் ராஜேந்திரச் சோழனும் அமைத்திருந்த பேரரசுகள் எந்த இந்தியப் பேரரசுகளைவிடவும் மிகப் பெரியவை என்பது வரலாற்றுப் பாலபாடம். வெள்ளைக்காரர்கள் காலத்துக்குப் பின்னால், தமிழர்களுக்கு ஒரே தாழ்வு மனப்பான்மை. சேட்டுக்களை ஆரியப்படையாக பார்த்து, 2000 வருட அடிமைத்தனத்தைக் கண்டுபிடித்துக்கொண்டு, வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று படித்துப் படித்து சொல்லி, சேட்டுக்களிடமிருந்து பாதுகாக்கப்படாவிட்டால் நாம் அழிந்து விடுவோம் என்று புலம்பித்தள்ளிவிட்டார்கள். அவ்வளவு தன்னம்பிக்கை தங்கள் திறமை மீது. )
ராமன் கதை வெறும் கதை, வரலாறு அல்ல என்றால், அது எப்படி ஆரிய திராவிட போராட்டமாக ஆனது ? ஒரு பக்கம் அது வெறும் கதை இன்னொரு பக்கம் அது ஆரிய திராவிட போராட்டம் பற்றிய வரலாற்றுக் குறிப்பேடு என்று எப்படி இருக்க முடியும் ? ஆரிய திராவிட போர்களுக்கு ஏதேனும் வரலாற்று சான்றுகள் இருக்கின்றனவா ? ஆரியப்படை கடந்த பாண்டியன் பற்றிய குறிப்பு தன்னை திராவிடனாகப் பார்க்கிறதா ?
நேருவே சொல்லிவிட்டார், (அல்லது பெரியாரே சொல்லிவிட்டார், அல்லது அம்பேத்காரே சொல்லிவிட்டார்.. எல்லாவற்றையும்விட வெள்ளைக்காரனே சொல்லிவிட்டான்) என்ற எதுவேண்டுமானாலும் இருக்கட்டும். அப்படி பேசும் மக்கள் கொஞ்சம் ராமாயணத்தையும் படித்துவிட்டுச் சொன்னால் நன்றாக இருக்கும்.
***
ராமர் ஒரு சாதாரண மனிதனாக இருக்கும்போது செய்யும் காரியங்களுக்கும் ராமன் ஒரு அரசனாக ஆன பின்னர் செய்யும் காரியங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்வது எளிது.
ராமன் ஒரு சாதாரண மனிதனாக இருக்கும்போது அவன் ஒரு குரங்கை தன் சகோதரனாக வரிக்கிறான். ஒரு படகோட்டியை தன் சகோதரனாக வரிக்கிறான். ஒரு ராட்சசனை தன் சகோதரனாக வரிக்கிறான். ஆனால், அரசனாக ஆன பின்னால், சம்புகன் தவம் செய்வது நாட்டுக்குக் கேடு என்பதனால் அவனைக் கொல்கிறான். ( அரசனாக இருப்பவன் அன்றைய சட்டத்தை காப்பாற்றவேண்டியவன். அந்தச் சட்டங்கள் சரியா இல்லையா என்பது 20ஆம் நூற்றாண்டு விவாதம்.) தவறு செய்த அகலிகையை உயிர்ப்பிக்கும் ராமன், சபரி தின்று கொடுத்த கனிகளை உண்ணும் ராமன், அரசனாக ஆனபின்னால் தன்னுடைய சொந்த சுக துக்கங்களையும், சொந்த விருப்பு வெறுப்புக்களையும், மக்களின் அரசு என்ற பாரத்துக்காக விட்டுக்கொடுக்கிறான். ஒரு குடிமகன் கூட தன் அரசு ஒழுக்கம் கெட்டது என்று சொல்லக்கூடாது என்பதற்காக, காதல் கொண்ட மனைவியையே தன்னை விட்டு பிரிய வைத்து காட்டுக்கு அனுப்புகிறான்.
ஒரு மனிதனின் பக்கங்கள் பல. அவன் தாய்க்கும் தந்தைக்கும் மகன். தன் சகோதரர்களுக்கு சகோதரன். தன் மனைவிக்கு கணவன். தன் குடிமக்களுக்கு அரசன்.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று தந்தை சொன்ன சொல்லைக் காப்பாற்ற காடு புகும் மகன் ஒரு மகன் எப்படி தன் தந்தையிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருக்கிறான். பரதனோ தன் சகோதரனிடம் நடந்து கொள்ளும் முறையில் ஒரு தம்பி எப்படி அண்ணனிடம் நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருக்கிறான். ஒரு மனைவியிடம் ஒரு கணவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இலக்கணமாக ராமன் தன் மனைவியிடம் நடந்து கொள்கிறான். ஒரு மனிதன் எல்லா மக்களையும் சகோதரர்களாக கருத வேண்டும் என்பதன் இலக்கணமாக ராமன், சுக்ரீவனையும், குகனையும் விபீடணனையும் சகோதரனாக வரிக்கிறான். ஆனால் அனைத்தையும் விட, ஒரு அரசனாக இருப்பவன் தன் சுக துக்கங்களையும் சொந்த விருப்பு வெறுப்புக்களையும் தாண்டி, மக்களுக்கு ‘ஒழுக்கமான அரசுதான் ‘ நடைபெறுகிறது என்ற நம்பிக்கை இருக்க வேண்டும் என்பதன் உதாரணமாக ராமன் இருக்கிறான்.
தனி ஒரு மனிதனாக இருக்கும்போது ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருந்த ராமன், அரசனாக இருக்கும்போது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் இலக்கணமாக இருக்கிறான். அதனால்தான் அவன் உதாரண மனிதன். தெய்வம் மனிதனாக தோன்றி, மனிதன் தெய்வமான கதை ராமனின் கதை.
பிறன் மனை நோக்கா பேராண்மை வேண்டும் என்பதுதான் ராமாயணத்தில் சொல்லப்படும் கருத்து. ராவணன் எல்லளவோ பெரிய சிவபக்தனாக இருந்தாலும், எவ்வளவோ பெரிய படிப்பாளியாகவும், தவம் புரிந்தவனாகவும், வேதங்கள் அறிந்த பிராம்மணனாகவும், இசைவாணனாகவும், மாபெரும் அரசனாக இருந்தாலும், அவனது ஒரு தவறு அவனை அழிப்பதை கதையாகச் சொன்னது. மேலும் ராவணன் தொட விரும்பாததால் தொடவில்லை. தன்னை விரும்பாத பெண்ணைத் தொட்டால் அவன் தலை வெடிக்கும் என்ற சாபத்தினால் தான் சீதையைத் தொடாமல் இருக்கிறான். சீதையை காட்டுக்கு அனுப்புவதன் மூலம் ராமன் உலகுக்கு விளக்கவேண்டியது இன்னும் இருக்கும் காரணத்தாலேயே ராவணனுக்கு அப்படி ஒரு சாபம்.
மேலும் சீதையின் அக்னி பிரவேசம் மேலும் ஒரு விஷயத்தைச் சொல்கிறது. போர் முடிந்ததும் ராமன் அரசனாகப் போகிறான். அரசனாக இருப்பவன் நீதி கொடுத்தால் மட்டும் போதாது, அது நீதிதான் வழங்கப்படுகிறது என்பதும் தெரியவேண்டும். ராமனுக்கு சீதை மீது சந்தேகம் ஏதும் இல்லை என்றாலும், அரசனாக இருப்பவன் தன் குடிமக்களுக்கு ஒழுக்கவானாகத் தெரியவேண்டும். அதுவே சீதைக்கு நேர்ந்த துயரம். அதுவே ராமனுக்கு ராஜபாரம். தன் மனையாள் மீது கொண்ட அன்பினால், அவள் மீது தனக்கு இருக்கும் கடமையால், ஒரு பெரும் பேரரசை அழித்து தன் மனைவியை மீட்ட ராமனுக்கு சீதை மீது என்ன சந்தேகம் ? ஆனால் அதுவரைதான் அவன் தனி மனிதன். அதற்குப் பின் அவன் எதிர்கால அரசன். அப்படி அன்புகொண்டிருந்த சீதையை அக்னி பிரவேசம் செய்யச் சொல்வதைப் போலவோ அல்லது காட்டுக்கு அனுப்புவதுபோல ஒரு துயரமோ ராமனுக்கு இருக்க முடியுமா ? செய்ய வேண்டியிருக்கிறது. அதுவே ராஜபாரம்.
***
ராமன் ‘பிறந்த ‘ இடத்தில் எப்படி கோவில் கட்ட முடியும் என்று கூட்டம் சிரிக்க கருணாநிதி பேசினார். அவரிடமிருந்து அதற்கு மேல் எதையும் எதிர்பார்க்க முடியாது. அவர் பெரியாரின் வாரிசு. இன்னும் பல பெரியாரின் வாரிசுகள் தமிழ்நாட்டில் உலவி வருகின்றன. கம்பரசம் எழுதிய அண்ணாவின் வாரிசுகளும், கம்பராமாயணத்தில் எங்கே முலை வருகிறது என்று தேடிப்பிடித்து படித்த விடலைகளும் வளர வேண்டியது நிறைய இருக்கிறது. விடலைத்தனமே அறிவுஜீவித்தனம் என்று இன்று ஆகிவிட்டது. (அது புதுக்கவிதையாக வேறு வந்து தொல்லை பண்ணும்)
சமூக அமைதி மதச்சார்பின்மை பொருளாதார முன்னேற்றம் ஆகியவைவிட ஒரு கோவில் முக்கியமா என்பதுதான் என் கேள்வியும். ஆனால் இந்தக் கேள்வியை கேட்பதற்காக ராமர் கோவணத்தைப் பற்றி பேசுகிறார் ஞாநி. தன்னுடைய மனைவியை வெளியேற்றிய ராமரை அயோக்கியனாகவும், பிறன் மனைவியை அவள் விருப்பத்துக்கு மாறாக கடத்திவந்து சிறைப்படுத்திய ராவணனை யோக்கியன் என்றும் மாலன் சொல்கிறார். பிறன் மனைவியை அவள் விருப்பமின்றி கடத்திச் சென்றால் தவறில்லை, அவள் மீது நகக்கண் படாமல் இருந்தால் போதும், அதுவே யோக்கியத்தனம் என்று மாலன் கருதுகிறாரா என்ன ?
***
நான் ராமர் கோவிலை அயோத்தியில் கட்டுவதற்கு ஆதரவாளன் அல்ல. அதன் காரணம் ராமர்தான். ஒரு குடிமகன் தன் அரசன் ஒழுக்கமானவன் இல்லை என்று நினைத்துவிடக்கூடாது என்பதற்காக, ராமர் தன் பிரியமான மனைவியையே காட்டுக்கு அனுப்பினார். அதைக் கருத்தில் கொண்டால், இன்றைய இந்தியாவில் இருக்கும் ஒரு குடிமகன், முக்கியமாக முஸ்லீம்கள், இந்த நாட்டில் தனக்கு உரிமை இல்லை என்ற எண்ணம் வரும்படி இந்த நாட்டை ஆளுவோர் ஒரு காரியம் செய்தால், அது ராமர் சொன்ன இலக்கணப்படி ராஜ தர்மம் ஆகாது.
இந்துக்கள் தாங்கள் இழந்து போன ஒரு கோவிலுக்குப் போராடுவது எனக்குப் புரிகிறது. அந்த குறிப்பிட்ட இந்துக்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்கள் கூறும் காரணங்கள் கூட புரிந்து கொள்ளக்கூடியவை. ஆனால் அவர்கள் அரசுக் கட்டிலில் உட்கார்ந்துவிட்டால், அவர்களது பொறுப்பு இந்துக்கோவிலல்ல. இந்தியாவில் நீதி கிடைக்கும் என்று எல்லா இந்தியக்குடிமக்களும் கொண்டிருக்கும் நம்பிக்கை. இந்துத் தலைவர்களுக்கும் என்னதான் ராமர் கோவில் முக்கியமாக இருந்தாலும், அந்தக் கோவிலைக்கட்டுவதை விட்டுக்கொடுப்பதன் மூலமே முஸ்லீம்களிடம் இந்த நாட்டில் நீதி கிடைக்கும் என்ற எண்ணம் வருமெனில், அந்தக் கோவிலை கட்டாமல் விட்டுக்கொடுத்துத்தான் ஆகவேண்டும்.
அதுவே ராமர் காட்டிய ராமராஜ்யம்.
***
பார்க்க :
http://www.valmikiramayan.net
***
karuppanchinna@yahoo.com
***
- மரம்
- பாரத அறிவியலாளர் கண்டுபிடித்த நர்மதையின் டைனோசார்
- பயாஸ்கோப்பும் ஃபிலிமும்
- கூத்துப் பட்டறையின் படுகளம்
- ஓவியம் புரிதல்(பார்க்க,ரசிக்க)
- உடலின் மொழியும் மொழியின் உடலும் – குட்டி ரேவதியின் கவிதைகள் குறித்து
- தேடியதும் கிடைத்ததும் கரிச்சான் குஞ்சுவின் ‘நுாறுகள் ‘ (எனக்குப் பிடித்தக் கதைகள் – 73)
- கூத்துப் பட்டறையின் படுகளம்
- காபூல் திராட்சை
- வாரபலன் – புதுக்கவிதை, எம்.எஸ் திருப்புணித்துற, ஓவிய மரபு இன்னபிற ஆகஸ்ட் 16, 2003
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள் 4
- தமிழ்ச் சினிமா- சில குறிப்புகள்
- மின்சக்திக்காக மூச்சுத்திணறும் ஆசியா
- என் இனிய சிநேகிதனே !
- கடத்தப்பட்ட நகரங்கள்
- பி.கே. சிவகுமார் கவிதைகள்
- அறியும்
- அகதி
- ஆயிரம் தீவுகள்
- நட்பாய் எனக்கொரு நகல் எழுதேன்.
- உலக சுகாதார தினம்
- சிகரட்டில் புகை
- பைத்தியம்
- மின்சக்திக்காக மூச்சுத்திணறும் ஆசியா
- ஏன் ?
- குப்பைகள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபது
- விடியும்! நாவல் – (10)
- குறிப்புகள் சில ஆகஸ்ட் 21 2003 – ஈரான்:மதவாதிகளும் தாரளவாதிகளும்-ஜான் ஸ்டின்பெய்க்: ஒரு வித்தியாசமான கோணத்தில்- உயர்கல்வியும் உச
- இந்திவாலா மட்டும்தான் இந்தியனா ?
- கடிதங்கள்
- ராமர் காட்டும் ராமராஜ்யம்
- வினிதா வாழ்க! போலிஸ் அராஜகம் ஒழிக!!
- பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிக்கும்போது ஏன் அமெரிக்கா அதனைக் கண்டுகொள்ளவில்லை ?
- காமராசர் கலந்து கொண்ட போராட்டங்கள்
- சாமி- பெரிய சாமி
- வைரமுத்துக்களின் வானம்
- ‘நானும் ‘ மற்றும் ‘தானும் ‘
- துவாக்குடிக்கு போகும் பஸ்ஸில்
- நீ வருவாயென…
- தேடுகிறேன்…
- இயற்கையே இன்பம்
- இபின்னிப் பின்னே எறிந்தாள்!
- ஒரு விரல்
- பெயர் தெரியாத கவிதை! ?
- வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Astronomer, Giovanni Cassini (1625-1712)]