எஸ். ஜெயலட்சுமி
நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
என்று மன்னனைச் சிறப்பித்துச் சொல்கிறது புறநாநூறு
முறை செய்து காப்பற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப்படும்
என்கிறார் வள்ளுவர்.
திருவுடைய மன்னரைக் காணில்
திருமாலையே காண்கிறார்
நம்மாழ்வார். இப்படி நம் நாட்டில் மன்னர்களை இறைவ னாகவே கண்டிருக்கிறார்கள்.
அறுபதினாயிரம் ஆண்டுகள் அரசாண்ட மன்னன் தசரதன் தன் மகன் இராமனுக்கு முடி சூட்டி விட்டுத் தான் ஓய்வு பெற்று வானப்பிரஸ்தம் செல்ல விழைகிறான். குடிமக்கள் இராமனை இறைவனாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறான். முடிசூட்டிக் கொள்ளப்போகும் தன் மகனுக்குத் தக்க அறிவுரைகள் வழி முறைகள் எல்லாம் தேவை என்று நினைத்துக் குலகுருவான வசிஷ்டரிடம், ”ராமனுக்கு விசேஷ அறிவுரைகள் ராஜநீதி பற்றிய விவரங்களை யெல்லாம் சொல்லி அவனைத் தயார் செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொள்கிறார்.
தசரதன் கேட்டுக் கொண்ட படி வசிஷ்டர் ராமன் இருக்கும் இட்த்திற்குச் செல்கிறார். ராமன் வந்து அவரை வணங்கி வரவேற்கிறான். “ராமா நாளை உனக்கு முடிசூட்டு விழா” என்கிறார் வசிஷ்டர். ராமனோ காய்தலும் உவத்தலுமின்றிக் காணப்படுகிறான்’. ராமன் முடுசூட்டிக் கொள்ளபோவதைக் கேட்டு துள்ளிக் குதிக்க வுமில்லை. பொறுப்புகள் அதிகரிக்குமே யென்று பதறவும் இல்லை.
வசிஷ்டர் தம் உபதேசத்தை ஆரம்பிக்கிறார். ராமா, “படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்கின்ற மும்மூர்த்திகளை விட வும், சத்தியத்தை விடவும் மேம்பட்டவர்கள் அந்தணர்கள். எனவே அவர்களுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் அளித்து அவர்களைப் பேண வேண்டும்.
’ஆவதற்கும் அழிவதற்கும் அவர்
ஏவ, நிற்கும் விதியும் என்றால்’
அவர்கள் பெருமையை உணர்ந்து அவர்களைப் பேணிக் காப்பாயாக.
மக்களே உயிர்
குடிமக்களே நிலையான உயிர், அரசாங்கம் உடல் மாத்திரமே. மன்னர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் குடிமக்களே நிலை பெற்றவர்கள். மக்களுக்காகவே அரசாங்கம். அரசாங்கத்திற்காக மக்கள் இல்லை. அறம் கடவாது, அருள் மெய்யில் நின்றால் யாகங்களோ யஞ்ஞங்களோ கூடத் தேவையில்லை தானே? என்று ராமனை வினவுகிறார்.
வையம் மன்னுயிர் ஆக, அம்மன்னுயிர்
உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னனுக்(கு)
ஐயம் இன்றி அறம் கடவா(து) அருள்
மெய்யில் நின்ற பின் வேள்வியும்
வேண்டுமோ?
அரசர்கள் அசுவமேத யாகம், ராஜசூய யாகம் போன்ற யாகங் களைச் செய்யலாம். ஆனால் அதைவிட அறம், அருள், சத்தியம் என்ற மூன்றையும் கடைப்பிடிப்பவனுக்கு வேறு யாகங்கள் எதுவும் செய்யத் தேவை யில்லை என்பது வசிஷ்டர் கருத்து.
நாட்டின் அமைதி.
”ராமா! யாரோடும் பகைமையோ விரோதமோ கொள்ளாமல் இருந்தால் நாட்டில் அமைதி நிலவும். அனாவசியமாகப் படை வீர்ர்களைப் போரில் இழக்க நேரிடாது மக்களும் சந்தோஷமடைவார்கள். படைகளும் அழி யாமலும் குறையாமலும் இருக்கும். அப்படிப் பகை கொள் ளாமல் யாரையும் அன்பால் அரவணைத்தால் அது ஆக்கம் தரும். பகை ஒழியும். அப்படிச் செய்யாமல் ‘ஊருடன் பகைக்கின் வேரொடும் கெடும்’
’யாரொடும் பகை கொள்ளலன் என்றபின்
போரொடுங்கும் புகழ் ஒடுங்காது.
அரசன் தவம்
”மகனே! அரசுக்கு வரும் வருமா னத்தை நன்கு ஆராய்ந்து பார்த்து, பகைவர்களும் இவனைக் கண்டு அச்சமடையும்படி வலிமையோடு ஆட்சி செய்கிற அந்த அரசாட்சியே நல்ல அரசாகும் அப்படி அரசு செய்வ தைக் கூர்மையான வாளின் முனையிலே நின்று செய்யும் கடுமையான தவம் என்றே சொல்லாம்.
பொருள்
நாளும் கண்டு, நடுக்குறு நோன்மையின்
ஆளும் அவ் அரசே அரசு அன்னது
வாளின் மேல் வரு மாதவம்.
என்று உணர்வாயாக.
நன் மந்திரி
மந்திரிக்கழகு வரும் பொருள் உரைத்தல் என்பதற்கேற்ப அறிவிலும் அனுபவத்திலும் சிறந்த அமைச்சர்கள், இன்னது செய்தால் இன்னது விளை யும் என்று அனுபவத்தால் உணர்ந்திருப்பார்கள். எனவே அவர்களுடைய அறிவுரைகளைக் கேட்க வேண்டும்.
அமைச்சர் சொல்வழி ஆற்றுதல் ஆற்றலே’
என்று அறிவுறுத்துகிறார்.
ஒழுக்கம்
எவ்வளவு படைபலம் இருந்தாலும் ஒழுக்கம்
இல்லாவிட்டால் அந்த வலிமை பயந்தராது. மும்மூர்த்தி களேயானாலும் அவர்களுக்கும் ஒழுக்கமே உயர்வு தரும்.
வல்லவர் மூவர்க்கும்
தெருளும், நல்லறமும், மனச்செம்மையும்
அருளும் நீத்த பின் ஆவதுண்டாகுமோ?
நல்ல மன்னன் என்பவன் எப்படி யெல்லாம் இருக்க வேண்டும் என்பதை
இனிய சொல்லினன், ஈகையன், எண்ணின
வினையன், தூயன், விழுமியன். வென்றியன்
நினையும் நீதி நெறி கடவான்.
இனிமையான சொற்களைப் பேசு
பவனாகவும் நல்ல கொடைத்திறம் உள்ளவனாகவும், ஆராய்ச் சியும், முயற்சியும் உடையவனாகவும் மன்னன் விளங்க வேண்டும். நேர்மையிலிருந்து விலகாதவனாகவும் சிறந்த பண்புகளை உடையனாகவும் இருந்தான் என்றால் அப்படிப் பட்ட அரசனுக்கு அழிவு உண்டாகுமோ (உண்டாகாது)
வலியுறுத்துகிறார்
சூதும் வாதும் வேதனை செய்யும்
இவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும் அவையெல்லாம் சூதாடுதல், பெண்கள் பால் பித்துக் கொள்ளுதல், கள் குடித்தல், கூத்தாடுதல் போன்ற தீய செயல்களில் ஈடுபட்டால் ஒருவன் அழிந்து போவதற்கு அவையே காரணமாகி விடும்.
சூது முந்துறச் சொல்லிய மாத்துயர்
ஏதம் என்பன யாவையும் எய்துதற்கு
ஓதும் மூலம் அவை என ஓர்தியே.
இப்படி பல நீதிகளை யெல்லாம்
ராமனுக்கு உபதேசிக்கிறார் வசிஷ்டர். ராமனும் அவற்றை யெல்லாம் ஆர்வமாகக் கேட்டுக் கொள்கிறான். ஆனால் வசிஷ்டர் சொன்னபடி அரசு செய்ய ராமனுக்குப் பதினான்கு
ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. கைகேயி கேட்ட வரத்தின் படி அவன் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து நாடு திரும்பிய பின்னரே அவற்றை யெல்லாம் கடைப்பிடிக்க முடிந்தது. ஆனால் அவன் மனதில் வசிஷ்டர் செய்த அறி வுரைகள் எல்லாம் அப்படியே பசுமரத்தாணி போல் பதிந்திருந்தது.
வாலிவதம் முடிந்தபின் சுக்கிரீவனுக்கு முடி சூட்டுகிறார்கள். ராஜ்ய பாரத்தை ஏற்றுக் கொள்ளப் போகும் சுக்கிரீவனுக்கு இப்போது ராமன் அறி வுரை சொல்கிறான். வசிஷ்டர் தனக்குச் சொன்ன அறிவுரை களையும் மனதில் கொண்டு சுக்கிரீவனுக்குச் சொல்கிறான்.
இனிய முகம், சொல்
”சுக்கிரீவா!
”பகையுடைச் சிந்தையர்க்கும்
பயன் உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை ஆகி,
இன் உரை நல்கு நாவால்
உன்னிடம் பகைமை கொண்டவர்களிடமும் நீ சிரித்த முகத் துடன் பழக வேண்டும். எப்பொழுதும் இன்முகத்துடன் இனிய
சொற்களையே பேச வேண்டும்.
பழகும் விதம்
வாய்மை நிரம்பிய, அறிவில் சிறந்த அமைச்சர்கள், குழுக்களோடும் நல்லொழுக்கம் நிறைந்த வீரகளோடும் சேர்ந்து பழக வேண்டும். அதே சமயம் அவர்களோடு மிகவும் நெருங்காமலும், மிகவும் விலகாமலும் மற்றவர்கள் உன்னைத் தேவர்கள் போல எண்ணும்படி நிற்க வேண்டும்.
’வாய்மைசால் அறிவின் வாய்த்த
மந்திர மாந்தரோடும்
தீமைதீர் ஒழுக்கின் வந்த
திறத்தொழில் மறவரோடும்
தூய்மைசால் புணர்ச்சி பேணி,
துகள் அறு தொழிலை ஆகி,
சேய்மையோடு அணிமை இன்றி
தேவரின் தெரிய நிற்றி’
அனுபவம் பேசுகிறது.
அடுத்து ராமன் தன் வாழ்வில் அடைந்த அனுபவத்தைச் சொல்கிறான். ”நம்மைவிடச் சிறிய வர் என்று எவரையும் இகழ்ச்சியாக நினைத்து, துன்பம் தரும் செயல்களை ஒரு போதும் செய்யாதே. இந்த நல்ல விஷயத் தைப் புரிந்து கொள்ளாமல் நான் செய்த ஒரு தீமையான செய
லால் பகைமை வளர்ந்து கூனல் முதுகை உடைய கூனியால் பல துன்பங்களை அடைந்து துயரக் கடலில் விழுந்திருக்கி றேன்’ என்று கூனியால் தான் இழந்த இன்பங்களைச் சொல்கிறான்.
சிறியர் என்று இகழ்ந்து நோவு
செய்வன செய்யல் மற்று இந்
நெறி இகழ்ந்து, யான் ஓர் தீமை
இழைத்தலால் உணர்ச்சி நீண்டு
குறியது ஆம் மேனி ஆய கூனியால்
குவவுத் தோளாய்
வெறியன எய்தி, நொய்தின்
வெந்துயர்க் கடலின் வீழ்ந்தேன்.
பெண்களால் வரும் துன்பம்
கூனியைப் பற்றிச் சொன்னதுமே ராமனுக்குப் பெண்களால் விளைந்த துன்பங்கள் ஒவ்வொன் றாக நினைவுக்கு வருகிறது. வசிஷ்டர் சொன்ன,
தூமகேது புவிக்கு எனத் தோன்றிய
வாம மேகலை மங்கையரால் வரும்
காமம் இல்லை எனின் கடுங்கேடு எனும்
நாமம் இல்லை நரகமும் இல்லை.
என்ற வாசகம் நினைவில் தோன்றுகிறது. அதையே சுக்கிரீவனுக்கும் உபதேசிக்கிறான்.
மங்கையர் பொருட்டால் எய்தும்
மாந்தர்க்கு மரணம் என்ற
சங்கை இன்று உணர்தி, வாலி
செய்கையால் சாலும் இன்றும்
அங்கு அவர் திறத்தினானே!
அல்லலும் பழியும் ஆதல்
எங்களின் காண்டி அன்றே
இதற்கு வேறு உவமை உண்டோ?
பிறன் மனையை விரும்பினால்
மரனம் தான் ஏற்படும் என்பதை, உன் மனைவியை அப கரித்த வாலி மூலமாகத் தெரிந்து கொள். இனி இராவண னும் அழியப் போகிறான். பெண்களால் அல்லலும் பழியும் வரும் என்பதற்கு நாங்களே உதாரணம்.
கூனியின் துர்ப்போதனையால்
தூய தேவியான கைகேயியின் சிந்தை திரிந்தது. கைகேயி கேட்ட வரங்களால் என் தந்தை விண்ணுலகடைந்தார். நான் வனவாசம் மேற்கொண்டிருக்கிறேன். சீதை மாயமான் வேண்டு மென்று பிடிவாதம் செய்ததால் நான் மாயமான் பின் சென்றேன். சீதை சொன்ன தகாத வார்த்தைகளைக் கேட்ட இலக்குவன் என்னைத் தேடி வந்தான். இவை யெல் லாம் பெண்களால் விளைந்த அல்லல்கள். அதனால் அவர் கள் விஷயத்தில் எச்சரிக்கையாய் இரு.” என்கிறான் ராமன்.
தாயென இருத்தி.
அதே ராமன் தாயைப்போல் நடந்து கொள்ள வேண்டு மென்றும் சுக்கிரீவனுக்கு அறிவுறுத்துகிறான். குடி மக்க ளைப் பேணும் போது இவன் நமக்கு அரசன் அல்ல. நம் மைப் பெற்ற தாய் என்று போற்றும் படி பாதுகாப்பாய். அதே சமயம் அவர்கள் தவறு செய்தால் குற்றத்திற்கேற்றபடி தண்டிப்பதும் மன்னன் கடமையாகும்.
கொலையில் கொடியாரை வேதொறுத்தல்
பைங்கூழ்
களை கட்டதனொடு நேர்.
என்ற குறளின் சாரத்தைப் பேசுகிறான் ராமன்.
நாயகன் அல்லன் நம்மை
நனி பயந்து எடுத்து நல்கும்
தாய் என, இனிது பேணி
தாங்குதி தாங்குவாரை
ஆயது தன்மை யேனும்
அறவரம்பு இகவா வன்ணம்
தீயன வந்த போது
சுடுதியால் தீமையோரை.
அறத்தின் மாண்பு
”சுக்கிரீவா! உயிர்கள் செய்யும் பாவ புண்ணியங்களுக்கேற்ப செல்வமும் அதன் அழிவும் ஏற்படும். எனவே நன்மையைத் தரும் நல்ல செயல்களைச் செய்யாமல் தீமையைத் தரும் பாவகாரியங்களைச் செய் யாதே. தாமரை மேல் இருக்கும் பிரும்மாவே என்றாலும் அற நெறியிலிருந்து தவறினால் அது அவருடைய ஆயுள் முடிவுக்குக் காரணமாகி விடும்.
பூவின் மேல் புனிதற்கேனும்
அறத்தினது இறுதி, வாழ்நாட்கு இறுதி
அஃது உறுதி அன்ப!
அறமே ஆக்கத்திற்குக் காரணம். பாவம் அழிவிற்குக் காரண மாகும். நீ தீமையைத் தவிர்த்து அறத்தையே மேற்கொள்ள வேண்டும்.
தன் குலகுருவான வசிஷ்டரிடம் கேட்டு அறிந்து கொண்ட ராஜநீதி நெறி முறைகளையும், தன் வாழ்க்கை அனுபவங்களையும் சேர்த்து சுக்கிரீவனுக்கு உபதேசம் செய்கிறான் ராமன். வாலி ஏற்கெனவே ராமனிடம் தன் தம்பி பற்றிச் சொலியிருக்கிறான்.
”பூவியல் நறவம் மாந்தி
புந்தி வேருற்ற போது
தீவினை இயற்றுமேனும்
என்மேல்
ஏவிய’
அம்பை அவன் மேல் ஏவி விடாதே” என்று வரம் கேட்டி ருக்கிறான். இதையும் மனதில் கொண்ட ராமன் சுக்கிரீவ னுக்கு ராஜநீதிகளை யெல்லாம் எடுத்துச் சொல்லுகிறான்.
*************************************************************
- பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் (1889-1953)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 25
- புத்தனின் இரண்டாம்வருகை
- ஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை வெளிப்பாடு: ஒரு நோக்கு
- நீங்கதான் சாவி..:-
- தோள்சீலைக் கலகம் புத்தக வெளியீட்டு விழா
- நேற்றைய நள்ளிரவு என்பது..
- அறிவோர் கூடல் – பொ. கருணாகரமூர்த்தியுடனான இலக்கியச் சந்திப்பு
- ராஜநீதி.
- ” மண் புதிது “ சுப்ரபாரதிமணியனின் பயண நூல்
- தமிழ் நூல்.காம் வழங்கும் புதிய வெளியீடுகள்
- உடைகிறக் கோப்பைக்குள்
- கணினி மேகம் Cloud Computing – Part 3
- தொலைந்த நான் …
- கண்ணாமூச்சி
- நட்ட நடு இரவு!
- இருந்து
- பயணி கவனிக்கிறாள்.
- வாழ்வு
- வாழ்க்கைச் சக்கரம்
- பறவைகளைப் போல வாழ்வோம்
- ஒரு குழந்தை மழை.
- ஆனந்தக் கூண்டு
- கேமராவிலிருந்து….
- அவள்..அவன்..அது..
- பூதம் பிடிப்பவர் (சீன பழங்கதை)
- வேண்டுதல்
- விதுரநீதி விளக்கங்கள் – 3 மூன்றாம் (3) பகுதி:
- இந்தியாவின் 50 அடி பிளவு
- சோனியாஜி அவர்களே! – நீங்கள் யார்? என தயவு செய்து சொல்லுங்கள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -14
- அந்த முத்துக்களை
- வலியொன்று…!
- நிலவும் அந்த நினைவும் மட்டும்..
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -1)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -2)
- ராஜா கவிதைகள்
- ஒரு சோகம்…..!