பாவண்ணன்
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டில்தான் அந்நிய ஆடைகள் எதிர்ப்புப் போராட்டம் நடந்தது என்பதையோ லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் தம் வீட்டில் வாங்கி வைத்திருந்த அந்நிய ஆடைகளையெல்லாம் குவியல்குவியலாகக் கொண்டுவந்து தெருவில் குவித்துக் கொளுத்தித் தம் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினர் என்பதையோ நுகர்வுக் கலாச்சாரத்தில் திளைத்துக்கொண்டிருக்கும் பலருக்கும் நம்புவது சிரமமாக இருக்கும். தமக்கு வேண்டிய ஆடைகளை நெய்யத் தேவையான நுாலைத் தானே ராட்டையில் நுாற்றுப் பயன்படுத்திக்கொண்டனர் என்பதுவும் ஆச்சரியப்படுத்துகிற சங்கதியாக இருக்கக் கூடும். குடும்பம் குடும்பமாகப் பலரும் அத்தகு கதராடைகளையே அணிந்து வாழ்ந்திருக்கிறார்கள். முரட்டுக் கதராடைகள் அவற்றின் அசெளகரியங்களையும் மீறி அப்போது அவர்களுக்கு எதிர்ப்புணர்வின் படிமமாக இருந்திருக்கிறது என்பதே இங்கே நாம் முக்கியமாகக் கவனிக்கவேண்டிய ஒன்றாகும்.
ஆடை என்பது மானத்தை மறைக்கத் தேவையான ஒன்றாகும். மனஉணர்வை வெளிப்படுத்தவும் அந்த ஆடையை ஒரு வழியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று கண்டறிந்த மனிதர்களின் நுண்ணுணர்வைப் பாராட்ட வேண்டும். எதிர்ப்புணர்வின் அடையாளமாக மாற்றிய முயற்சி கூடுதல் பாராட்டுக்குரியது.
ஆடையைப் போலவே பல விஷயங்கள் மனித உணர்வுகளை அடையாளப்படுத்துபவை. வீட்டுச் சுவர்களுக்கு வண்ணமடிப்பதிலிருந்து வாசலில் வைக்கிற செடிகள் வரை ஒவ்வொன்றிலும் வெளிப்படுபவை மனஉணர்வுகளே. சிலர் வாசலை அடைத்துப் பெரிய அளவில் கோலமிட்டு வண்ணப்பொடிகளால் அலங்காரப்படுத்தி வைக்கின்றனர். சிலர் வாசலைக்கூடப் பெருக்குவதில்லை. இரவு நேரங்களில் முற்றத்தைத் தாண்டி, வாசலைத்தாண்டி தெருவரைக்கும் நீளும் அளவுக்கு வெளிச்சம் படரும் வகையில் இரண்டு மூன்று விளக்குகளை இரவு பத்துமணிவரையிலும் எரிய வைப்பவர்களும் உண்டு. யாரேனும் வந்து கதவைத்தட்டும்போது விளக்கைப் போட்டுக்கொண்டால் சரிதான் என்று கன்னங்கரேலென்று இருள்சூழ வீட்டை வைத்திருப்பவர்களும் உண்டு. எல்லா நடவடிக்கைகளும் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துபவை.
நண்பர் ஒருவர் சொந்த ஊரில் ஒரு ஏக்கர் அளவுக்கு மலிவான விலைக்கு வாங்கினார். அவருக்கு அச்சந்தர்ப்பத்தில் அந்த நிலம் தேவையே இல்லை. கிராமத்துக்குத் திரும்பிவருவதைப் பற்றி அவரால் கற்பனைசெய்து கூடப் பார்க்க முடியாது. அந்த அளவு நகரத்தில் காலுான்றியவர். ஆனால் போன இடத்தில் விலை குறைவாகக் கிடைத்ததாலும் போதிய பணமும் கைவசம் இருந்ததாலும் யோசிக்காமல் வாங்கிவிட்டார். அதுவும் ஒரு முதலீடாக இருக்கட்டுமே என்று அவர் மனநிலை சொன்னதாம். வாங்கியபிறகு அந்த இடத்தை என்ன செய்வது என்று யோசித்தார். கூட இருந்தவர்கள் ஆளுக்கு ஒரு யோசனை சொல்லத் தொடங்கினர். அருகிலிருந்த நகரில் வசித்த மிராசுதாரருக்கு கோழிப்பண்னை வைக்க இடத்தை வாடகை¢குக் கொடுத்தால் இடத்துக்கும் பாதுகாப்பு, வருமானத்துக்கும் வழி என்று கிசுகிசுத்தார் ஒருவர். மற்றொருவர் இறால்பண்ணைதான் லட்சக்கணக்கில் தற்சமயம் சம்பாதித்துத் தரக்கூடிய தொழில் என்றும் அந்த இடத்தில் அவரே ஏன் அப்படி ஒரு பண்ணையைத் தொடங்கக்கூடாது என்று ஆசையைத் துாண்டினார். சுற்றிலும் வேலிகட்டிவிட்டு, தேக்குக் கன்றுகளை நட்டுவளர்த்தால் பத்தே ஆண்டுகளில் பணம்பணமாக அறுவடை செய்துவிடலாம் என்று கனவுகளை விதைத்தார் இன்னொருவர். தென்னந்தோப்பு வைக்கலாம் என்றார் ஒருவர். காய்ந்து கிடந்தாலும் பரவாயில்லை, நல்லவிலை போகிற சந்தர்ப்பத்தில் கூறுபோட்டு வீட்டுமனைகளாக விற்றால் பல லட்சங்களின் லாபம் நிச்சயம் என்று குலதெய்வத்தின் மீது சத்தியம் செய்தார் ஒருவர். ஊரிலேயே வேலையுமின்றி வசதியுமின்றி நிறைய குழந்தைகளோடு வசிக்கிற தம்பிக்காரன் ஒருவன் அந்த இடத்தில் தனக்கொரு குடிசை கட்டிக்கொள்ளும் யோசனையை விவரித்தான். கனகாம்பரத்துக்கும் டிசம்பர் பூக்களுக்கும் அந்த வட்டாரத்தில் கிராக்கி அதிகம் என்றும் நிலத்தில் அப்படி ஒரு பூந்தோட்டத்தை நிறுவிவிட்டால் தினசரியும் பணம்பார்க்கலாம் என்ற யோசனையை ஒருவர் முன்வைத்தார். எல்லா யோசனைகளையும் அமைதியாகக் கேட்ட நண்பர் இறுதியில் தேக்கங்கன்றுகளை நட்டபின்னர், ஓரமாகத் தம் தம்பிக்கு ஒரு குடிசையையும் கட்டித்தந்தார். தண்ணீர் பாய்ச்சிக் கன்றுகளைக் காப்பாற்றும் வேலைக்குச் சம்பளம் இல்லை, வீட்டுக்கு வாடகை எதுவும் இல்லை என்பது ஒப்பந்தமானது. இந்த நடவடிக்கை கூட ஒருவகையில் நண்பரின் உள்ள ஒட்டத்தைச் சுட்டிக்காட்டக் கூடிய ஒரு படிமம்தான்.
விருப்பங்கள்தாம் ஒருவர் உள்ளத்தைக் கட்டமைக்கின்றன. மனித ஆளுமையின் வலிமைக்கும் அல்லது வலிமையின்மைக்கும் கூட அத்தகு விருப்பங்களே காரணங்களாகும். சொந்தத் திறமை சார்ந்து வளர்த்துக்கொள்ளும் விருப்பங்கள் ஆளுமையை வளர்க்கின்றன. கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்து வளர்த்துக்கொள்கிற விருப்பங்களும் மோகங்களும் ஆளுமையைச் சிதைக்கின்றன.
த.நா.குமாரசாமியின் கதையில் அண்ணன் தம்பி என இருவர் இடம்பெற்றாலும் அவர்களைவிட முக்கிய இடம்வகிப்பது சீமைப்பூ. படித்த படிப்புக்குத் தக்கபடி தில்லியில் பெரிய வேலையில் அமர்ந்திருப்பவர் அண்ணன். பள்ளிப்படிப்புக்கு மேல் ஆர்வம் காட்டாத தம்பி கிராமத்தில் வயல்வேலைகளைப் பார்த்துக்கொண்டு குடும்பத்தைக் கவனித்துக்கொண்டிருக்கிறார். அண்ணன் செழுமையுடன் வாழும்போது வறுமையில் வாடுகிறார் தம்பி. யார்யாருக்கோ தில்லியில் அவரவர் தகுதிக்கு வேலைகளைத் தேடிப்பார்த்துத் தரும் அண்ணன் தன் சொந்தத்தம்பிக்கு எதுவும் செய்வதில்லை. மாறாக, தனக்கும் சொந்தமான கழனியில் பயிர் செய்து அனுபவிக்கும் உரிமையை மட்டும் விட்டுத்தருகிறார். செலவுக்கு மாதாமாதம் பணம் அனுப்புகிறார். ஓய்வுக்காலத்தில் ஊர்ப்பக்கம் சென்று தங்கநேரும்போது ஒரு வீடு தேவைப்படுமே என்கிற எண்ணத்தில் ஒரு வீடு கட்டினால் நன்றாக இருக்கும் என்று அண்ணனுக்குத் திடுமென ஞானம் பிறக்கிறது. தம்பியும் அண்ணன் கட்டளையைச் சிரமேற்கொண்டு கிராமத்தில் வீடுகட்டுகிறார். வீட்டின் முற்றத்தில் அழகுக்காக சம்பங்கிக்கொடி, பவளமல்லிகைக்கொடி, துளசி என மூலைக்கொன்றாக நட்டு வளர்க்கிறார்.
புதிய வீட்டில் தங்கிச்செல்ல வருகைபுரியும் அண்ணன் முற்றத்தில் வளர்க்கப்பட்டிருக்கும் செடிகளையெல்லாம் அசிங்கமாக உணர்கிறார். அவற்றை வளர்ப்பதை நாகரிகம் குறைந்த செயலாகக் கருதுகிறார். தம்பிக்குக் கட்டளையிட்டு உடனே அவையனைத்தையும் வெட்டி அப்புறப்படுத்தச் செய்கிறார். உள்ளூர விருப்பமில்லாவிட்டாலும் அண்ணன் கட்டளைக்கு தம்பி இணங்கவேண்டியதாக இருக்கிறது. மார்னிங் பியூட்டி என்கிற சீமைச்செடியைப்பற்றிப் பேச்சு வருகிறது. தில்லியில் பல அதிகாரிகளின் வீடுகளில் கண்டுகண்டு கனவுகள் உருவாகக் காரணமான செடி அது. அது முற்றத்தில் பூத்துக் குலுங்கினால் ஆயிரம் பூக்கள் பூத்ததற்குச் சமமென்று தம்பிக்கு எடுத்துரைக்கிறார். அந்தப்பூவைப் பற்றிய கனவு எல்லாருடைய மனங்களிலும் இடம்பெறுகிறது. உடனே கூனுார் நர்சரிக்கு இங்கிலீஷ் விதைகளுக்காக எழுதிப்போடுகிறார் அண்ணன். அவற்றுக்கு வேண்டிய உரத்தைத் தயாரிக்கும் முறைகளைச் சொல்லி தம்பியை விரட்டிவிரட்டி வேலை வாங்குகிறார். உரம் தயாரிக்கப் புறாப்புழுக்கையைத் தேடி அலைகிறார் தம்பி. வீட்டைச் சுற்றிலும் அண்ணன் சுட்டிக்காட்டிய இடங்களெங்கும் விதைகளை ஊன்றுவதற்காகக் கொத்தப்பட்டு உரம் கலக்கப்பட்டு பக்குவப்படுத்தப்படுகிறது. ஒருநாள் டாலியா, கிரஸாஸ்தம், பால்ஸம், பான்ஸி, பாக்ஸ்க்ளல், மார்னிங் பியூட்டி என்று பல விதைப்பாக்கெட்டுகள் வந்து இறங்குகின்றன. ஒவ்வொரு விதைப்பாக்கெட்டிலும் பூவின் படமும் விவரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மார்னிங் பியூட்டியின் படம் அனைவரையும் வசீகரிக்கிறது.
மார்னிங் பியூட்டி விதைகள் வேகவேகமாக முளைவிட்டாலும் விரைவாகக் கருகிவிடுகிறது. உரத்தின் கடுமை கூடிவிட்டது என்கிறார் பார்க்க வந்த ஒரு விவசாயி. அண்ணனும் தம்பியும் படுகிற பாட்டைப்பார்த்து மலர உள்ள சீமைச்செடியைப் பார்க்க ஊரே ஆவலாகக் காத்திருக்கிறது. உரத்தின் கடுமை குறைக்கப்பட்டு மறுபடியும் விதை ஊன்றப்படுகிறது. சில நாட்களிலேயே விதை முளைவிடத் தொடங்கிவிடுகிறது. அதன் வளர்ச்சிபை¢ பார்க்க ஆவல் கொண்ட கிராமத்துமக்கள் ஒவ்வொருவரும் காலையிலேயே வந்து பார்த்து விட்டுச் செல்கிறார்கள். விதை செடியாகி, உயர்ந்து வளர்ந்து கொம்புகளில் ஏறி வாசலில் படர்ந்து மொட்டுவிடுகிறது. மொட்டுகளில் நிறைந்திருக்கும் மெல்லிய ஊதாநிறக் கோடுகளைப் பார்த்து அனைவரும் பரவசம்கொள்கிறார்கள். பூ மலரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
அனைவரும் ஆவலோடு காத்திருந்த அந்த நாள் நெருங்கியது. ஒருநாள் காலை வாசலையொட்டிய பந்தலில் சீமைப்பூ பூத்துக் குலுங்குகிறது. அண்ணன் பார்த்துத் தம்பிக்குக் காட்டுகிறார். ஊராரும் ஓடிவந்து பார்த்துவிட்டுப் பாராட்டுகின்றனர். ஊரே திரண்டு வாசலில் நிற்கிற வேளையில் லட்சுமி விரதத்துக்காக பூசை செய்யவந்த சோமு தீட்சிதர் அந்தச் சீமைப்பூ உண்மையில் கடல்பாலைப்பூ என்றும் சாதாரணமாக குளம் குட்டைகளில் பூக்கிற பூவென்றும் அவை வீட்டுக்கு ஆகாதவையென்றும் சொல்கிறார். அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகிறார். அண்ணன் மனம் அலைபாய்கிறது. தப்பு செய்துவிட்டோமோ என்று குறுகுறுக்கிறார். உண்மையா உண்மையா என்று பலமுறை தீட்சிதரைப் பார்த்துக் கேட்கிறார். பூசையை முடித்துக்கொண்டு செல்லும்போது கூடவே வந்தால் ஆற்றங்கரையில் காட்டமுடியும் என்று சொல்கிறார் தீட்சிதர். அண்ணனால் நம்ப முடியவில்லை. ஆனால் ஆற்றங்கரைக்கு அழைத்துச் செல்லும் தீட்சிதர் அங்கே படர்ந்திருக்கும் அப்பூக்களைக் காட்டுகிறார். ஒப்பிட்டுப்பார்த்துப் புரிந்துகொள்ளும் அண்ணன் வெட்கத்துடனும் மனவருத்தத்துடனும் வீட்டுக்குத் திரும்புகிறார். எல்லாவற்றையும் வெட்டிப்போட்டுவிட்டு பழையபடியே ஏதாவது வைத்துக்கொள் என்று தம்பிக்குக் கட்டளையிடுகிாறர். விடுப்பு இருந்தும்கூட அச்சம்பவத்துக்கு மேலாக அங்கிருக்க விருப்பமில்லாமல் ரயிலுக்குச் சீட்டு வாங்கிக்கொண்டு புறப்படுகிறார்.
புனைவுத்தருக்கத்துடன் அழகாக எழுதப்பட்டிருக்கிற இக்கதையில் எண்ணிய விதங்களிலெல்லாம் மாற்றிப் பார்த்துப் பொருள்கொள்ளும் விதத்தில் சீமைப்பூ என்னும் படிமம் அமைந்திருப்பதை விசேஷ அம்சம் என்றே சொல்லவேண்டும். கதை எழுதப்பட்ட காலம் ஆங்கிலேயரிடம் நாடு அடிமைப்பட்டிருந்த காலம் என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். ஆங்கில மோகம், வெளிநாட்டு மோகம் எனப்பலவிதமாக விரித்து எண்ணிப்பார்க்கும் சாத்தியப்பாடுகளை இந்தப்படிமம் கொண்டிருப்பதைக் காணலாம். அறுபதாண்டுகளுக்குப் பிறகும் பொலிவு குன்றாததாக இருக்கிறது சீமைப்பூ
*
‘ஆரோக்கிய நிகேதனம் ‘ போன்ற முக்கியமான பல வங்கப் படைப்புகளைத் தமிழ்வாசகர்கள் அறியக் காரணமாக இருந்த குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பாளரான த.நா.குமாரசாமி சில சிறந்த கதைகளையும் எழுதியுள்ளார். ‘சீமைப்பூ ‘ என்னும் இக்கதை கலைமகள் இதழில் இடம்பெற்றது. 1932 முதல் 1957 வரை கலைமகள் இதழில் வெளிவந்த சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்டு வெள்ள்ிவிழா வெளியீடாக ‘கலைமகள் கதம்பம் ‘ என்கிற நுாலாக 1957 ஆம்ஆண்டில் கலைமகள் காரியாலயத்தின் பிரசுரமாக வெளியான நுாலில் இடம்பெற்றுள்ளது.
paavannan@hotmail.com
- புலிநகக் கொன்றையை முன்வைத்து ஓர் உரையாடல்
- ஒரு மடி தேடும் மனசு..
- ரூமி கவிதைகள்
- என் தாத்தாவுக்குத் தாத்தாகூட யானை வளர்த்தார்…..
- வான் முகில்
- விளையாடாத பிள்ளை – உரைவெண்பா
- அறிவியல் துளிகள்-18
- இருபது ஆண்டுகளில் அணுப் பிணைவு சக்தி ஆக்கத்தில் வளர்ச்சி [Nuclear Fusion Energy]
- அணு உலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து :2 நம் கிராம உலைகளுக்கான தொழில்நுட்பம்
- பைங்கணித எண் பை
- எம். எஸ். அவர்களின் நூல்கள் வெளியீடு, பாராட்டு விழா நிகழ்ச்சிக்காக நஞ்சுண்டன் வாழ்த்து
- மோகமும் வேகமும் (த.நா.குமாரசாமியின் ‘சீமைப்பூ ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 52)
- நினைத்தேன். சொல்கிறேன். தமிழர்களும், சினிமா நடிகர்களும் பற்றி…
- அன்பு நெஞ்சே !
- வாழ்க்கை
- ஒப்பனை நட்பு
- ஊமை நாதங்கள்
- மூன்று குருட்டு எலி
- ‘எத்தனை எத்தனை ஆசை! ‘
- இன்னும் கொஞ்சம் தூங்கவிடு!
- பித்து
- இந்த வாரம் இப்படி – மார்ச் 16 2003. (திருமாவளவன் -சர்ச், இளையபெருமாள், ஓசை சூழல் மாசு)
- பரதநாட்டியம் – சில குறிப்புகள் -2
- திசைகள் – உலகம் தழுவிய மின் இதழ்
- Europe Movies Festival London
- சேவை என்றானாலும் அங்கீகாரம் பெறும்[எம் எஸ் அவர்களுக்கு பாராட்டு விழா செய்திகள்]
- கடிதங்கள்
- தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கலந்துரையாடல்
- Federation of Tamil Sangams of North America
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 15 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- வாயு – அத்தியாயம் ஐந்து
- ஆட்டுக் குட்டி முட்டை இட்டு..!
- மானுட தருமம்