எஸ். ஷங்கரநாராயணன்
பட்டுப்புடவைகளை பீரோவில் வைத்துப் பூட்டினாற் போல அவன் உள்ளே கிடந்தன வார்த்தைகள்.
—
தலைமுறைப் பாவம் என்றெல்லாங் கூட ஜோசியர்கள் சொன்னதைக் கேட்டு கோவில் குளம் என்று ஏறியிறங்கினார்கள். என்ன இம்சை என்றால் எல்லா இடத்துக்கும் அவனையும் கூட்டிக்கொண்டு போய்வர வேண்டியிருந்தது. விஞ்ஞானத்துக்கும் ஆன்மிகத்துக்குமான பெரும் ஊசலாட்டமாய் இருந்தது வாழ்க்கை.
நல்லா சிரிக்கச் சிரிக்கப் பேசுகிறவன். காதல் கல்யாணம்தான். அவன் பெண்டாட்டி நல்ல அழகு. சிரிக்கும்போது வாயோடு கண்ணே சிரிக்கும். கிறுகிறுப்பாய் இருக்கும். பஸ்சில் ஓர ஜன்னல் என்று கேட்டு வாங்கிக் கொண்டாள் சௌதாமினி. வேடிக்கை பார்க்க அவளுக்குப் பிடிக்கும். விபத்து. ஊரே ஜனங்களே வேடிக்கை பார்த்தது. அவனுக்குத் தெரியாது. பக்கத்தில் மயங்கிக் கிடந்தான். அவனுக்கும் தலையில் அடி.
கடல் பார்க்க அப்படியே உட்கார்ந்திருந்தான். ஓ ஓவென்று கடலின் பேச்சு. வார்த்தைகளை விட ஒலிகள், ஒலிக்குறிப்புகள் சிலாக்கியம். சொற்கள் அல்ல சமிக்ஞைகளின் நேர்மை நல்ல விஷயம்.
சித்தம் போக்கு, சிவம் போக்கு… அவனை வற்புறுத்த முடியாது. ரொம்ப அழுத்தி அவன் கையைப் பிடித்து இழுத்தால் பளார். பல் பூகம்பம் கண்டு விடும். உள்ளுக்குள் பெரும் பிறழ்வுகள். கடல் பொங்கி நெஞ்சில் முட்டிமோதி நுரைத்துக் கொண்டிருக்கிறாப் போல. மூச்சுத் திணறத் திணற ஆவேசப் படுவான். ம்… ஹ்ரும்.. என உருமல்கள். சட்டென்று வயித்து வலிக்காரனாட்டம் படுத்துக் கொள்வதும் திரும்ப உடல் நடுங்க எழுந்து கொள்வதுமாய்த் திணறுவான். ரொம்ப முடியாமல் போனால் மருத்துவரை வரவழைத்து ஊசி போட்டுத் தூங்க வைப்பார்கள். அப்பாவுக்கே ஊசி போடப் பழகி விட்டது. ஒருமுறை ஊசி போட அவனைப் பிடித்துக் கொள்ள சரியா ஆள் கிடைக்காமல், சட்டென எட்டி முகத்தில் அவன் விட்ட அறை மறக்க முடியாதது. அவன்கிட்டத்தில் போனாலே அந்த ஞாபகம் அவருக்கு வந்து விடுகிறது.
மருத்துவர் அறை வாசல். இதில் யார் நோயாளி, யார் கூட வந்தது என்று தனக்குத் தானே யூகித்துக் கொண்டு சுவாரஸ்யமாக எல்லாரும் காத்திருந்தார்கள். ஒருத்தனுக்கு மத்தவன் வேடிக்கை. இந்தப் பைத்தியத்துக்கு அந்தப் பைத்தியம் சிரிப்பு. சிலாள் உள்ளே போய் ஜம்மென்று உட்கார்ந்து கொண்டு, ”எங்க அய்யாவுக்கு என்னவோ ஆயிட்டது டாக்டர். வெறி பிடிச்சாப்ல கத்தறாரு…” என்று பேப்பர்வெய்ட்டை உருட்டியபடியே ஆரம்பிக்கும்.
எல்லாத்தையும் பொறுமையாய்க் கேட்டுக்கொண்டு ”ஈஸ்வரோ ரட்சது…” என்று விபூதி தரும் சாமிகள். ”சுத்தமான பசும் பாலால ஆத்ல சிவலிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணுங்கோ” என்று புன்னகைத்தபடியே சாமிகள் ஒரு ஆப்பிளை எடுத்து அவனிடம் கொடுத்தார். விகல்பமில்லாமல் வாங்கி அங்கேயே கடித்துச் சாப்பிட ஆரம்பித்தான். இன்னொண்ணு கொடுத்தாலும் அவனுக்கு மறுப்பு இல்லை.
நிம்ஹன்ஸ் முதல் இந்தியாவின் மனநல மருத்துவமனைகளில் அனைவருக்கும் அவனைத் தெரியும். வேப்பிலை அடிக்கிறது, மை போட்டுப் பார்க்கிறது, மலையாள மாந்திரிகம், குத்தாலக் குளியல்… இப்படி நாட்டில் இத்தனை தினுசுகள் இருக்கின்றன என்பதே மலைப்பாய் இருக்கிறது. அத்தனைக்கும் இங்கே நல்ல மகசூல். இன்னும் ஆண்மைக்குறைவு, மூலம், பௌத்திரம்… என்றெல்லாம் பிளாட்பார லேகியங்களே படுபோடு போடுகின்றன.
அமாவாசை பௌர்ணமி என்றால் கடல் பொங்கும் தினங்களில் மனம் பொங்கப் பொங்க நடமாடினான். கண்ணெல்லாம் பளபளவென்று உணர்ச்சி மினுங்கித் தளும்பும். பயமாய் இருக்கும் பார்க்கவே. சோறு கொண்டுவந்து வைத்தால் ஒற்ற எத்து ஸ்வைங்கென்று வானத்துக்குப் பறக்கும் தட்டு. சில சமயம் அவனே கொண்டா கொண்டா என்று சாப்பிடுவான். உடம்பு முறுகி அத்தனை வலு சேர்ந்திருந்தது. தென்னைமட்டை மாதிரி கிண்ணித்துப் பளபளக்கும் மார்பு. வேலை என்று கிடையாது. பேச்சே கிடையாது. பட்டுப்புடவைகளை பீரோவில் வைத்துப் பூட்டினாற் போல அவன் உள்ளே கிடந்தன வார்த்தைகள். கிணற்றுக்குள் விழுந்த வாளியை முள்ளுக் கரண்டி வைத்து எடுக்கிறாப்போல அவனை யாராலாவது மீட்க முடியுமா?
அவனையிட்டு அழுகையெல்லாம் போச்சு. அவன் தூங்கினால்கூட எழுந்து என்ன கலாட்டா பண்ணுவான் தெரியாது. வாசல்பார்க்க திறந்த ஜன்னலுடன் அவன் அறை. விளக்கில்லாமல் படுத்துக் கிடப்பான். போய் விளக்கைப் போட்டால் பயந்து அலறுவான். ஜன்னல் வழியே ஒருதடவை பூனை ஒண்ணு புகுந்தது. ஊ… என வெளியே ஓடிவந்தான். சில சமயம் உள்ளே போய்ப் பார்க்க, அறை மூலையில் உட்சுருண்டு கூழைப் பாம்பாய்க் கிடப்பான்.
கோழைப் பாம்பு.
ஒண்ணு பயந்து வெலவெலத்திருப்பான். இல்லாவிட்டால் அசுர ஆவேசம். உலகில் அனைத்தையும் த்வம்சம் பண்ணுகிற வெறி. எப்படி இத்தனை கெட்ட வார்த்தைகள் அவனுக்குத் தெரிந்தது என்றே ஆச்சர்யமாய் இருந்தது. அந்நேரங்களில் அவனை அறைக்குள் வைத்துப் பூட்டி விடுவார்கள். அந்த ஜன்னல் கம்பிகளை அப்படியே பிடித்து ஆட்டு ஆட்டென்று ஆத்திரம் தீர பிடுங்க முயன்று கொண்டிருப்பான். அறைக்குள் கண்ணாடி ஒண்ணை உடைக்கப் போக கையில் ரத்தம் பார்த்து பயந்து ஊளையிட்டு அலறி மயங்கி விழுந்தான்.
பெண்டாட்டி துணிமணி, படம் என்று எதையும் அவன் கண்ணில் பட யாரும் விடவில்லை. கல்யாணத்துக்கு ஒரு தங்கை இருந்தாள். அப்பா. இவன் பெண்டாட்டி சௌதாமினி. உஷா மற்றும் அவன். நாலே பேர். அம்மா கிடையாது. பெண்டாட்டி கதையும்தான் முடிந்து விட்டது. மகா அழகு அவள். அபார அழகு வாழ்க்கைக்குச் சத்ரு என்பார்கள். உண்மையாச்சு. மண்டை வெள்ளரிக்காயாய்ப் பிளந்து மூளைச்சோறு வெளியே வந்ததைப் பார்த்ததில் அவன் புத்தி கலங்கிப்போனான்… நாலைந்து வருஷம் ஆகிவிட்டது. நல்ல வேலையில் இருந்தான். அப்படியே விருப்ப ஓய்வு என்று அவன் கையெழுத்தை அவரே போட்டார். ஒத்துக் கொண்டார்களே, என்னவோ நல்ல மனசு.
சிவசைலத்தின் சித்தப்பா ஒருத்தன், ரமணி. அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்தான். மெடிக்கல் ஸ்டோர் வைத்திருந்தான் நாலு ஊர் தள்ளி. டாக்டர் டாக்டராக அலைவதில் பாவம் கூட வந்தான். கிடைச்ச மருந்து கிடைக்காத மருந்து எல்லாம் வருத்தித் தந்தான்.
இருந்த வீட்டை இவன் வைத்தியத்துக்கு என்று விற்றாகி விட்டது. வாடகை வீடு என்று எங்கும் காலூன்ற முடியவில்லை. இவனை வைத்துக்கொண்டு எங்கும் நிலைப்பட முடியாதிருந்தது. வீட்டுக்காரர் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தால், அந்தவீட்டின் வயசுப் பெண்கள் அவனைப் பார்க்க பயந்தார்கள். அப்படியே மலைப்பாம்பு விழுங்கி விடுகிறாப் போல அவனது அழுத்தமான பார்வைக்கு அவர்கள் படபடத்தார்கள். சட்டென்று அவர்கள் வீட்டுக்குள் புகுந்து கட்டிலில் படுத்துக் கொண்டான்!
அவனை உள்ளே கட்டிப்போட்ட தினங்களில் சட்டையும் வேட்டியும் என்ன கதியில் இருக்குமோ. தலைகலைந்து கண் சிவக்க உள்ளே காட்டாறு புரட்டி உருட்டினாப்போல அவனைப் பார்க்க, அவன் கூச்சல்களைக் கேட்க படபடவென்று பக்கத்து எதிர்வீடுகள் நடுங்கி கதவைச் சாத்திக் கொண்டன.
ஊசி போட்டுத் தூங்க வைத்தால், எல்லாருக்கும் நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
உஷாவுக்கு வரன் பார்ப்பது தான் இப்போது பெரிய விஷயமாய் இருந்தது. பிளஸ் டூ தாண்டி அவள் ஒரு டிகிரி வாங்குமுன் இப்படி ஆகியிருந்தது. மன்னி இருந்தால் அவள் மேலும் படித்து இந்நேரம் கையில் ஒரு பிள்ளை இருக்கும் அவளுக்கு. இவனை விட்டுவிட்டு அவளைப் பெண்பார்க்க ஏற்பாடு செய்ய முடியாதிருந்தது. யாராவது வந்தாலும் வந்தவர்கள் இவனைப் பற்றி விசாரித்து விட்டு யோசனை பண்ணிச் சொல்வதாய்ப் போனார்கள். என்னா யோசனை, வேணான்னு அர்த்தம்.
திடுதிப்பென்று ஒரு கணக்கில் அவன் வீட்டில் தங்காமல் வெளியே திரியப் பிரியப் பட்டான். எதோ புண்ணியத்துக்கு என்று இடுப்பில் சுற்றிய வேட்டி. தாடியும் மீசையும். வாரம் ஒருமுறை, பத்துநாள் ஒருமுறை நாவிதனை வீட்டுக்கு வரவழைத்து சிச்ருஷை செய்ய வேண்டும். சட்டையையே துண்டாகத் தோளில் சார்த்தி நடப்பான். கோவில் பக்கம், சந்தைப் பக்கம் என்று சில சமயம் கூட்டங்களில் நடப்பான். வண்ணமயமான உலகத்தில் மௌனமாய் நடமாட விரும்பினான் போலும். எங்காவது மரத்தடியில், என்ன தோணுமோ, அப்படியே படுத்துக் கிடப்பான்.
நிறையப் பேர் இப்படிப் படுத்து மகான்கள் ஆகியிருக்கிறார்கள். சிலர் வயல் வேலைக்கும் போய் வந்தார்கள்.
ஒரு அருமையான வரன் வந்தது. பையன் துபாய். பரவாயில்லை. நாடு கடந்து கடல் தாண்டி அவளைக் கொடுத்து விட்டால் உஷா, சிவசைலத்தின் நிழல் கூட அண்டாமல் நிம்மதியாக இருப்பாள் என்றுகூடத் தோணியது. ஆனால் பெண் பார்க்க வந்தவர்களில் மாப்பிள்ளையின் தங்கை ரொம்ப அழகு. ரோஸ் வண்ணப் பட்டுப் புடவையில் தலைக்கு கனகாம்பரம் வைத்திருந்தாள். டிபன் சாப்பிட்டுக் கைகழுவப் போனவள். பின்னாடியே சிவசைலமும் போனான் போல. யாரும் கவனிக்கவில்லை.
திரும்பி வந்தவள் முகம் கலங்கியிருந்தது. ”வாண்ணா போலாம்…” என்றாள் படபடப்போடு. என்ன என்ன என்றார்கள். அவள் பதில் சொல்லவில்லை. மழையைக் காற்று கொண்டு போய்விட்டாப் போல இருந்தது.
யோசனை பண்ணிச் சொல்வதாகச் சொல்லிப் போனார்கள்.
அன்றைக்குத்தான் அப்பாவுக்குக் கோபம் வந்தது. உஷா உள்ளறையில் போய்ப் படுக்கையில் விழுந்து அழுது கொண்டிருந்தாள். சிவசைலம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சட்டென்று அப்பா பெல்ட்டை உருவினார்… ஐயோ ஐயோ என்று ஓடிவந்தான் ரமணி. அவர் கையைப் பிடித்துக் கொண்டு தடுத்தான். ”இந்த ஷனி இருக்கிற வரை இவ கல்யாணம் மண்ணுதான்… எழவெடுத்த பய…” என்று பெல்ட்டை வீசினார் அப்பா. சிவசைலத்துடன் பழகி அவருக்கும் சில கெட்ட வார்த்தைகள் பழகி யிருந்தன…
ரமணிதான் அநத் யோசனை சொன்னது. முதலில் கேட்க பதற்றமாய்த்தான் இருந்தது. அவரும் ஒரு ராத்திரி யோசனை பண்ணினார்…
வைத்தியம் என்று சொல்லாமல் வெளியூர் கூட்டிப் போனால் பேசாமல் வருவான். புது இடங்களை வேடிக்கை பார்க்க அவனுக்குப் பிடித்தது. மருத்துவமனை வரை வருவான். சட்டென்று முரண்டும் கன்றுக்குட்டி போல விரைத்து அப்படியே நிற்பான். தரதரவென்று தரையோடு இழுபடுவான். சில சமயம் கையைக் கடித்துவிடக் கூடும். கடல் பிடிக்கும். பெரிய சொளகில் புடைக்கிறாப் போல கடல் தண்ணி எப்பவும் தளும்பிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பான். அங்கேயே கதகதப்பான மணலில் முதுகு சுட மல்லாக்கக் கிடப்பது பிடிக்கும். திரும்ப பிடிவாதமாய் வீட்டுக்கு அழைத்துவர வேண்டியிருந்தது.
சரி, என்றார் அப்பா.
ஜீ.டி. எக்ஸ்பிரசில் தில்லி வரை டிக்கெட் எடுத்தார்கள். மூணு டிக்கெட். மூணு பேரில் ஒருத்தனுக்கும் ஹிந்தி தெரியாது. அதில் சிவசைலம் பாஷையே அற்றவன்… கூட வந்தவனில் யாரும் தமிழ் பேசுகிறவன் இல்லை. வடக்கத்தியான் எல்லாவனும் ரயல் நகர நகர தின்கிறான்கள், அப்படித் தின்கிறான்கள். கிளம்பும்போதே எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தார்கள். ரசிக்க முடியாமல் பாட்டும் கூச்சலும்…
ஆனால் இப்படி அடையாளமற்று இருப்பதை ரமணியும் அப்பாவும் விரும்பித்தான் கிளம்பியிருந்தார்கள். எங்கே போவது, எங்கே இறங்குவது ஒரு யோசனை கிடையாது. ஸ்டேஷன் ஸ்டேஷனாய் எது கிடைத்தாலும், ஸீட்லெஸ், வாழைப்பழம், முறுக்கு… அப்பா சிவசைலத்துக்கு வஞ்சனையில்லாமல் வாங்கிக் கொடுத்தார். ”சாப்பிடட்டும் சாப்பிடட்டும்” என்றார். ”கடைசிச் சாப்பாடு” என்று முடிக்குமுன் கண் கலங்கினார். ”ஷ்” என்றான் ரமணி அவர் கையை அழுத்தி.
ஒரு ராத்திரிப் போல தெரியாத ஊரில் நின்றது ரயில். மூவருக்குமே அந்த ஊர் தெரியாது. ஆனால் நாலைந்து ஊர் முன்னாலிருந்தே திபுதிபுவென்று கூட்டம் ஏறியமணியமாய் இருந்தது. எல்லாரும் சந்தோஷமாய் இருந்தார்கள். அந்த ஊரில் எல்லாரும் இறங்கிக் கொண்டதைப் பார்த்ததும் என்ன தோணியதோ ”ரமணி இங்க இறங்கிக்கலாம்…” என்றார் அப்பா. ஊரில் எதோ திருவிழா போலிருந்தது. அபாரமான கூட்டம். மேளா நாளைக்கு என்று தோணியது, ரயில் நிலையத்திலேயே எராளமான பேர் தங்கியிருந்தார்கள். இந்தச் சின்ன ஊரில் இத்தனை கூட்டமா… ஆயிரக் கணக்கில்… மனிதக் கடல்.
ரமணி அவரைப் பார்த்து பாராட்டும் புன்னகை செய்தான். சிவசைலமும் ஊரை ரசித்தாப் போலத்தான் இருந்தது. சின்ன ஊர். திருவிழா இல்லைன்னா அந்த ரயில் அங்கே நிற்குமா என்றே சந்தேகம். ஊருக்குள் இறங்கிப் போனார்கள். கூட்டங் கூட்டமாய் பக்தகோடிகள். மீசையும் தாடியும் கையில் கழியும். சாமிகள், ஆண்டிகள், பிச்சைக்காரர்கள்… எல்லாரும் ஒரே மாதிரிதான் தெரிந்தது. நெற்றி நிறைய விபூதி பூசி பம் பம் மகதேவ்… என்று அடிக்கடி உருமினார்கள். பயமாய் இருந்தது.
வெட்ட வெளிப் பொட்டல் எல்லாம் தாண்டி நாலைந்து கிலோ கடந்து ஊர்க்கோவில். சிவன் கோவில் போலிருந்தது. திருநாவுக்கரசர் இருந்தால், டியெம்மெஸ் குரலில் எதும் தேவாரம் பாடியிருக்கலாம்.
நெட்டித் தள்ளிக் கொண்டு கூட்டம். வா வா, என்கிறார் அப்பா. சிவசைலம் தயங்கி அங்கங்கே நின்றான். ரமணி கையைப் பிடித்துக்கொண்டு விறுவிறுவென்று முன்னால் போனார் அப்பா. நேர் எதிர்த் திசையில் இருவருமாய் வேகவேகமாய்ப் போனார்கள். மனிதக் கடலில் எங்கேயோ பின்தங்கி யிருந்தான் சிவசைலம்.
ஒருமணி நடந்திருப்பார்கள். நல்ல இருட்டு. எந்த ஊர் தெரியாது. திருவிழாக் கூட்டமெல்லாம் கடந்து வந்திருந்தார்கள். ஒருவித புது நாற்றம். ஆட்டுக் கொட்டில் நிறைய இருக்கிற ஊரோ தெரியாது. எல்லாம் கூரை வீடுகள். வந்த வழியே திரும்பப் போகக் கூட அவர்களுக்குத் தெரியாது.
ஆசுவாசமாய் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தார்கள். ரெண்டு பக்கமும் கோதுமை வயல். சிலுசிலுவென்று காற்று. கால் வலி கண்டிருந்தது. ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை. காலை நீட்டி உட்கார்ந்தார்கள். வந்த வழியே, சிவசைலம் இருந்த ஊர் வழியே, போகக் கூடாது, என்று ரெண்டுபேரும் நினைத்துக் கொண்டார்கள். பேசிக் கொள்ளவில்லை.
”அத்திம்பேர்…” என்றான் ரமணி பதறி.
”என்னடா?” என்று திரும்பிப் பார்த்தார்.
அவர்கள் பை கிழிந்திருந்தது. கைத்துட்டை அதில் பத்திரப்படுத்தி வைத்திருந்தது. திருவிழாக் கூட்டத்தில் எவனோ பிளேடு போட்டிருந்தான். தோடுடைய செவியனையே காதறுக்கிற ஆட்கள் சுற்றி வளையவரும் பிரதேசம் அது…
மரத்தடியிலும் திண்ணைகளிலும் சிவசைலம் எப்படி பொழுதைக் கழிப்பான் தெரியவில்லை. தெரியாத ஊர். யார் சாப்பாடு தருவார்கள் தெரியாது… அதைப் பற்றிக் கவலைப்பட முடியாது. எல்லாவற்றுக்கும் முடிவு வேண்டும்.
யாருக்கும் அவர்கள் பேசும் பாஷையே புரியவில்லை. ஆவ், என்றால் வா. ஜாவ், என்றால் போ. முதல்நாள் யாரிடமும் எதும் கேட்காமல் ஊரைச் சுற்றி வந்தார்கள். கிழிந்த பைவழியே வேட்டி துணிமணிகள் வெளியே பிதுங்கித் தெரிந்தன. யாராவது பெரிய மனிதன் போலிருந்தால் நின்று பேசுவார்கள். ஆவ், அல்ல – ஜாவ், என்றான் அவன். பத்து பேரைப் பார்த்து தயங்கி ஒருத்தனிடம் பேசினார்கள். ஒருநாள் பூராவும் அலைந்தார்கள். பசியானால் குடலைப் பிடுங்கியது. யாரிடமும் கையேந்த மனசில்லை. ஏந்தினாலும், ஜாவ்! –
சிவசைலம், நாம – ரெண்டு பேருக்கும் ஒரே நிலைமைதான், என்றிருந்தது.
ஒரு மரத்தடியில் வந்து படுத்துக் கொண்டார்கள். இருட்டில் தப்பித்தால் போதும் என்று ஓடிவந்தது. திரும்பும் வழி தெரியவில்லை. திருவிழா முடிந்திருக்கலாம். ரெண்டுநாளாய்க் குளிக்கவில்லை….
ஊர் திரும்பவும் வழி தெரியவில்லை. திருட்டு ரயில் ஏறலாம். எந்த ரயில் எந்த ஊர் போகும் தெரியவில்லை. நாம ஏறும் ரயில் நேர் எதிர்த்திசையில் போனால்?… மீசையும் தாடியுமாய் ஆகியிருந்தார்கள் மூணுநாளில். பம் பம் மகதேவ், என்று அதிராத குறை. சாமியாராக இருந்தால் கூட சோறு கிடைத்துவிடும்.
இன்ன கஷ்டம் என்றில்லை. ஒரே தத்தளிப்பாகி விட்டது. நாலைந்து நாள் சிரமப்பட்டு, யாரையோ பிடித்து ஆங்கிலம்பேசி, ஊருக்குப் போய்ப் பணம் அனுப்புகிறோம், என்று உறுதி தந்து, நீங்க பணம் தர வேணாம், டிக்கெட் எடுத்துக் குடுத்துருங்க, என்று பேசி…
வீடு திரும்ப ஒரு வாரம் ஆகி விட்டது
கதவைத் தட்டும்போது மலையை இறக்கி வைத்த ஆசுவாசம்.
கதவைத் திறந்தான் சிவசைலம்.
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -3)
- தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைக்கான அழைப்பு
- எச்.பீர்முஹம்மதின் “கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்” நூல் வெளியீடு
- மேகலை இலக்கிய கூடல்
- வானங்கள்
- குட்டிக்கதைகள்
- என்னவாயிற்று மல்லிகாவிற்கு
- ஒரு கவிதை உருவாகிறாள்
- என்னுள் ஒருவன்
- நம்பிக்கையோடு
- சில்லறை கவிஞர்கள்
- அசைவத் தீ?
- இவர்களது எழுத்துமுறை – 24 ஆர்வி
- கடற்கரை காதல்
- நாச்சியாதீவு பர்வீன் கவிதைகள் இரண்டு.
- தெரு பார்த்தல்
- சுயநலம் !
- 5 கவிதைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -2)
- இழந்த தருணங்கள்
- “பாராண்ட இனமென்று பகர்வோம் நன்கு…….!“
- உலகம் சுற்றும் குழந்தைகள்
- புளித்துப் போகிறது நாற்றம்
- ஒற்றைத் தகவலின் தூது..
- மூடிக்கோ
- குழந்தைமை..
- சமையல் யாகத்தின் பலியாடு
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -15
- யாதெனின்…யாதெனின்
- சிறகு முளைச்சுட்டா
- மேளா
- நினைவுகளின் சுவட்டில் – (61)
- விதுரநீதி விளக்கங்கள் – 4 இறுதிப் பகுதி:
- கடல் வற்றிய வேளை
- எல்லாம் மாயா
- செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
- சொல்பேச்சுக் கேளா பேனாக்கள்
- கரன்சிகளில் காந்தி சிரிப்பதற்கான காரணங்கள்
- நாதப்பிரம்மம்
- தேனம்மைலெக்ஷ்மணன் கவிதைகள்..
- ஹைக்கூ கொத்து
- காலமும் கடிகாரங்களும்
- வால்மீனின் போக்கை வகுத்த எட்மண்ட் ஹாலி [Edmond Halley] (1656-1742)
- சங்கமம் நானூறு
- வெகுசனத் தளத்தை நோக்கி சிறுபத்திரிக்கை