மெளனவெளி

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

ப மதியழகன்


இடைவெளி
உடல்களுக்கு
மெளனம் ஆயுதமா
பேசாமல் பேசுவது
எதனால்? எப்படி?
வார்த்தைகளுக்கு ஒரு பொருள்
பேசாததற்கு பல பொருள்
பேச்சு வேண்டாம்
மெளனம் போதும்
எவ்வளவு அர்த்தங்களை
தாங்கி நிற்கிறது
இந்த நிசப்தம்
அச்சமயத்தில் ஒரு பூனை
கண்ணாடி தம்ளரை
தள்ளிவிட்டு
நிசப்தத்தைக் களைத்தது
சப்தம் இடியோசை போல
எங்களிருவரையும் தாக்கியது
மெளனவெளி – இனி அங்கு
செல்லக்கூடுமோ
எங்களது ஆன்மாக்கள்
காத்திருப்போம் காதலில்
கரைவதற்கு
மெளனத்தில் இணைவதற்கு.

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்

மெளனவெளி

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

செல்வநாயகி.


****
அண்டைவீடென்ற உரிமையில்
நாளிதழுக்கோ தொலைபேசிக்கோ
நம் அழைப்புமணி அழுத்த ஆளில்லை
வாங்கியேதீரவேண்டுமென்ற வற்புறுத்தலோடு
கதவுதட்டுவதில்லை கீரைக்காரி

சந்திப்பிள்ளையாரின் பதினொருமணிப்பூசைக்கு
கோயில்மணியெதுவும் அடிக்கும்வாய்ப்பில்லை
யாரையோ பார்க்கவந்தகையோடு
முன்னறிவிப்பின்றி வாயிலில்நிற்கும்
உறவினர்வருகை இல்லவேஇல்லை

பால்காரர் சைக்கிள்மணி
பூக்காரி கத்தல்மொழி
எதிர்வீட்டுமுன் ஆட்டோஒலி
எதுவுமில்லாத மெளனவெளி

இணையம்,புத்தகம்,தொலைக்காட்சி
எல்லாம்சலித்து எழுந்துவிடநேர்ந்தால்
தன் வெட்டப்படாத நகங்கள்கொண்டு
யாரின்குறுக்கீடுகளுமின்றி என்னை
தயவுதாட்சண்யமற்றுக் கீறத்தயாராகின்றன
நம் அமெரிக்கவாழ்வுப் பகற்பொழுதுகள்
நீவேலைக்கும் குழந்தை பள்ளிக்கும்
போய்விட்டதைத் தெரிந்துகொண்டு.
—-
snayaki@yahoo.com

Series Navigation

செல்வநாயகி.

செல்வநாயகி.