மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 5

This entry is part [part not set] of 45 in the series 20081009_Issue

அருணகிரி



“In pursuit of their manic dream Nazis, communists, Maoists, followers of Pol Pot, have slaughtered hundreds of millions, half of them their own kith and kin, for not being extreme enough. Think of Stalin and Mao’s purges- all fellow communists, but butchered for being backsliders.”
– From ‘The Afgan” by Frederick Forsyth
மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பின் விளைவுகள்
1. கார்ட்டர் கொள்கை
மசூதி ஆக்கிரமிப்பும் அதனைத் தொடர்ந்த அமெரிக்க தூதரகங்களின் மீதான தாக்குதல்களும் மத்திய கிழக்கில் உருவாகியிருந்த அமெரிக்க எதிர்ப்பு அலையை அமெரிக்க கார்ட்டர் அரசுக்கு துல்லியமாகக் காட்டின. இந்த விஷயத்தில் கார்ட்டர் அரசின் பலவீனமான எதிர்வினை பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. பனிப்போர் உச்சத்தில் இருந்த அந்த நாட்களில், மத்திய கிழக்கில் அமெரிக்க நட்பு நாடுகளான ஜோர்டான், சவுதி ஆகியவற்றின் அரசாங்கங்களுக்கு அமெரிக்க அரசின் உறுதியற்ற நிலைப்பாடு மிகப்பெரும் கேடாக முடியும் என்று எடுத்துக்காட்டப்பட்டது. மத்திய கிழக்கில் எழுந்துள்ள அமெரிக்க எதிர்ப்பு அலையை சோவியத் உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்று கண்டு கொண்ட கார்ட்டர் அரசு -இன்றும் அமெரிக்க வெளியுறவுக்கொள்கையில் முக்கிய அம்சமாகக் கருதப்படும்- “கார்ட்டர் கொள்கை”யை 1980 ஜனவரியில் பிரகடனப்படுத்தியது. பெர்ஷிய வளைகுடாப்பகுதியை முக்கியப்பிரதேசமாக அடையாளம் கண்ட இக்கொள்கை இந்தப் பிரதேசங்களின் மீதான எவ்வகைத் தாக்குதலும் அமெரிக்காவின் முக்கிய முதலீட்டுப் பிரதேசங்களின் மீதான தாக்குதலாகக் கருதப்பட்டு, அத்தகைய தாக்குதல்கள் எந்த வழிமுறையின் மூலமாக வேண்டுமானாலும் – தேவைப்பட்டால் அமெரிக்க ராணுவத்தின் மூலம் கூட- முறியடிக்கப்படும் என்று அறிவித்தது. பதினோரு வருடங்களுக்குப்பின் இந்த கொள்கையின் அடிப்படையில் சதாமின் ஆக்கிரமிப்பை முறியடிக்க குவைத்துக்கு ஆதரவாக அன்றைய அதிபர் புஷ் சதாமின் அரசு மீது போர் தொடுத்தார். பேரழிவு ஆயுதங்களை சதாம் குவிப்பதாகச் சொன்ன இன்றைய புஷ் அரசும் ஈராக்கின் மீதான அமெரிக்கப் படையெடுப்பை டெமக்ரடிக் அரசின் “கார்ட்டர் கொள்கை” மூலம் நியாயப்படுத்தியது. கார்ட்டர் கொள்கையின் அறிவிப்பைத் தொடர்ந்து அன்றைய கார்ட்டர் அரசு ஓமான் மற்றும் சவுதி மன்னர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது; அதன் அடிப்படையில் அந்நாடுகளில் அமெரிக்கப்படைகளின் அளவு பெரும் அளவில் அதிகரிக்கப்பட்டது. இஸ்லாத்தின் புனித நிலங்கள் அந்நியரால் களங்கப்படுவதாக ஏற்கனவே சொல்லிக்கொண்டிருந்த அடிப்படைவாத ஜிஹாதிகளை இது மேலும் உசுப்பி விட்டது.
2. சோவியத் சிதைவு
இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றைப்புரட்டிய முக்கிய நிகழ்வான கம்யுனிஸ சோவியத்தின் வீழ்ச்சிக்கு மெக்கா மசூதி ஆக்கிரமிப்பும் அதனைத்தொடர்ந்த சம்பவங்களும் முக்கியக் காரணமாய் அமைந்தன. சவுதியைக் காக்க கார்ட்டர் அரசு போர்க்கப்பலை அனுப்பியதை உன்னிப்பாகக் கவனித்த சோவியத் அரசு, ஆப்கானிஸ்தான் விஷயத்தில் அதே அணுகுமுறையைச் செயலாக்கியது. இந்தியப்பெருங்கடலில் தனது ஆதிக்கத்தைக் கொண்டு வருவது சோவியத்தின் தொலைகாலத் திட்டமாக இருந்தது. ரஷ்யாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையே நடைபெற்ற பல காலனீய காலப் போர்கள் ஆப்கானிஸ்தானின் மீதான ஆதிக்கத்தையும் அதன் மூலம் இந்தியப் பெருங்கடலில் தத்தம் மேலாண்மையை நிலைநாட்டுவதையும் அடிப்படையாகக் கொண்டவையே. மட்டுமன்றி இந்தியப்பெருங்கடலில் உள்ள டியகோ கார்ஷியா தீவில் அமெரிக்கா கடற்படைத்தளம் வேறு அமைத்திருந்தது. இவற்றைக்கண்ட சோவியத் ரஷ்யா , நேரடியாக இந்தியப்பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்துவதே அதன் கடல் வழிப்பாதைகளை தன் கட்டுக்குள் கொண்டு வர சரியான வழி என்று முடிவெடுத்தது; இதனைச் செயல்படுத்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய பிரதேசங்களைத் “தாண்ட” வேண்டும். ஆனால், ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே சோவியத்தின் பொம்மை அரசாங்கம் இயங்கி வந்தது. இந்த அரசு உள்நாட்டுப்போரை சமாளிக்க சோவியத் ராணுவத்தின் உதவியைப் பலமுறை கோரி வந்தது. இந்நிலையில், மெக்கா மசூதி விஷயத்தில் பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகம் கொளுத்தப்பட்டதையும் பாகிஸ்தானியரின் கடுமையான அமெரிக்க எதிர்ப்பையும் கண்ட சோவியத் ரஷ்யா, அதனை தனக்கு சாதகமாக உபயோகப்படுத்திக்கொண்டு விட முடியும் என்று கணக்குப்போட்டது. மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு முடிந்த ஒரு மாதத்திற்குள் டிசம்பர் 25, 1979-இல் ஆஃப்கனுக்குள் சோவியத் படை நுழைந்தது. 9 ஆண்டுகள் தொடர்ந்த இந்த ஆப்கன் போரில் சோவியத்தின் செல்வங்கள் கரைந்து பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அமெரிக்கா-சவுதி-பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ஆப்கானிஸ்தானில் ஒருசேர நடத்திய மறைமுகப்போரைச் சமாளிக்க முடியாமல், சோவியத் தன் ராணுவத்தளவாடங்கள் பலவற்றை இழந்தது. ஆப்கன் போர் சோவியத்தின் வியட்நாம் போராகிப் போனது. இந்தப் போரின் முடிவில் சோவியத் யூனியன் என்ற செயற்கையான கட்டமைப்பின் அரசியல் பலவீனங்கள் பலவும் வெளிச்சத்திற்கு வந்தன. ஆப்கன் போரில் விளைந்த பொருளாதார சரிவைத் தாங்க இயலாமல் 1991-இல் சோவியத் யூனியன் உடைந்து பல நாடுகளாகச் சிதறியது. கம்யூனிஸக் களிமண்ணால் எழுப்பப்பட்ட சோவியத் கோட்டை அறுபத்தொன்பதே ஆண்டுகளில், தொடர்ந்ததொரு ஆதிக்கப் போர்மழையில் சரிந்து சிதறிக் கரைந்து போனது.
ஜிஹாதி உற்பத்திக்கூடம்
அதே சமயம், ஆப்கானிஸ்தானின் மீதான சோவியத்தின் ஆக்கிரமிப்பு, ‘இஸ்லாமிய உலகின் காவலாளி’ என்று தன்னை நிறுவ சவுதி அரசுக்கு அருமையான சந்தர்ப்பமாக அமைந்தது. வஹாபிய மூளைச்சலவையை வலுப்படுத்தவும் உலகளாவிய உம்மாவை நிறுவவும், தேச எல்லைகள் தாண்டி ஜிஹாதி கொலையாளிகளை உருவாக்கவும் சவுதி அரசு இந்தப்போரை உபயோகப்படுத்திக்கொண்டது. முல்லா பின்-பாஜ் ஆஃப்கானிஸ்தான் போரில் இறங்குவது தேச எல்லைகளுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு முஸ்லீமின் கடமை என்று ஃபாத்வா அறிவித்தார். இதனைத் தொடர்ந்து உலகத்தின் பல இஸ்லாமிய பகுதிளிலிருந்தும் ஆப்கானியப்போருக்காக ஜிஹாதிகள் சவுதி அரேபியாவின் மதராஸாக்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அடிப்படைவாத வஹாபியக்கல்வியும், ஆயுதப்பயிற்சியும் அளிக்கப்பட்டன. சகாய விலையில் சுவனக்கனவில் தற்கொலைப்படை ஒன்று தயார் செய்யப்பட்டது.
காஷ்மீர் கோரம்
கார்ட்டருக்குப்பின் வந்த ரீகன் அரசு சோவியத்துக்கு எதிரான நிழற்போராக ஆப்கன் போரை எடுத்துக் கொண்டு, பெருமளவில் நிதி உதவி செய்ய, அந்த நிதியை ஆப்கானியப் போராளிகளுக்கு விநியோகிக்கும் பொறுப்பு பாகிஸ்தானின் ஜியா-உல்-ஹக் அரசிடம் விடப்பட்டது. பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகளும் ஐ-எஸ்-ஐயும் இதில் பெருமளவு பணம் சுருட்டினர். அவ்வாறு கொட்டிய அமெரிக்கப் பணம் ஐ-எஸ்-ஐ வழியாக காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கும் புசிந்தது. நேரடிப்போரில் இந்தியாவை வெல்ல முடியாது என்று உணர்ந்து, பல வெட்டுகளால் இந்தியாவை ரத்தமிழக்கச்செய்ய முடிவு செய்த ஜியா-உல்-ஹக் பிரிவினைக்குழுக்களின் மூலம் காஷ்மீரில் ஒரு பயங்கரவாதப்போரை தொடங்கி வைத்தார். வன்முறை பயங்கரவாதம், கருத்தியல் பிரசாரம் என இரண்டு முனைகளில் இந்தப்போரை நடத்த முடிவுசெய்யப்பட்டது. காஷ்மீரில் இஸ்லாமியப் படைகொண்டு பயங்கரவாதப்போர் நிகழ்த்திய அதே நேரத்தில் இந்திய ஊடகங்களிலும் மேற்கு ஊடகங்களிலும் இருந்த இஸ்லாமிய நட்பு சக்திகளை முன்னிறுத்தி இந்திய அரசு அடக்குமுறை அரசு; காஷ்மீர் மக்கள் இந்தியாவிலிருந்து பிரிவதையே விரும்புகிறார்கள் என்று பிரசாரம் செய்வது என இருமுனைகளில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஜக்மோஹன் போன்ற வலிமையான ஆளுனர்கள் கடுமையான நடவடிக்கைகள் மூலம் அமைதியைக் கொண்டு வர முயன்றாலும், ஊடகம் மற்றும் அரசியல் அழுத்தங்களுக்கு வளைந்து கொடுத்த அன்றைய விபி.சிங் அரசு உடனடியாக அவரை இடம் மாற்றி, பலவீனமான மாநிலத்தலைமையை நியமித்தது; இது பாகிஸ்தானின் காஷ்மீர் திட்டத்திற்கு மிகவும் வசதியாகிப்போனது (4).
ஆப்கன் போருக்கு அமெரிக்கா அனுப்பி வைத்த நவீன ஆயுதங்களில் 30 சதவீதம் வரை இந்தியாவின் காஷ்மீர்ப் போருக்கு ஐ-எஸ்-ஐ-ஆல் திருப்பி விடப்பட்டது. சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக காஷ்மீர் இந்துக்கள் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஃபரூக் அப்துல்லாவின் வெளிப்படையான இந்திய எதிர்ப்பு நிலையும், ஜிஹாதி ஆதரவு நிலையும் இதற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கித் தந்தது. ஃபரூக் அப்துல்லாவின் அரசு காஷ்மீரை முஸ்லீம் மெஜாரிட்டி பிரதேசமாக மாற்றத் தீர்மானித்ததை வெளிப்படையாகவே காட்டிக்கொண்டது. பயங்கரவாதப்பயிற்சிக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு ட்ரக்குகளில் காஷ்மீர் முஸ்லீம்கள் வெகு சாதாரணமாகப் பயணித்துத் திரும்பினர். காஷ்மீர் மாநில அரசு கை கட்டிப் பார்த்துக் கொண்டிருக்க, இந்திய ராணுவ இருப்புகள் சக்தி வாய்ந்த குண்டுகள் மூலம் தாக்கப்பட்டன. பல காஷ்மீரி இந்துக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இஸ்லாமிய பயங்கரவாதிக்கு தண்டனை வழங்கிய நீதிபதி நீல காந்த் காஞ்ச் பொதுவீதியில் படுகொலை செய்யப்பட்டார். இதன் உச்சகட்டமாக 1990- ஜனவரி மாதம் காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஹிந்துக்கள் அனைவரும் காஷ்மீர் மண்ணிலிருந்து வெளியேற வேண்டும் என்று மசூதிகள் அனைத்திலிருந்தும் வெளிப்படையான மிரட்டல் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டது. 80 வயது முதிய கவி பண்டிட் சர்வானந்த் ப்ரேமியும் அவர் மகனும் கண்கள் தோண்டப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டனர். காஷ்மீர் பண்டிட் பெண்மணி கடத்திக் கற்பழித்துக் கொல்லப்பட்டு அவரது உடல், இயந்திரம் மூலம் சிறு துண்டுகளாக வெட்டி வீசப்பட்டது. தொடர்ந்த ஜிஹாதி வன்முறையில் ஆண்களும் பெண்களுமாக 300 காஷ்மீர் இந்துக்கள் வெட்டிக்கொல்லப்பட்டனர். அரசு இயந்திரம் அமைதியாய் இந்த அநியாயத்தைப் பார்த்துக்கொண்டிருக்க, மூன்று லட்சம் இந்துக்கள் 5000 வருடங்களாக தாங்கள் வாழ்ந்து வந்த சொந்த மண்ணையும், தொழிலையும் இழந்து, தங்கள் உயிரையும் மானத்தையும் வழிபாட்டு உரிமையையும் பாரம்பரியத்தையும் காத்துக்கொள்ள வேண்டி காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு அகதிகளாய் வெளியேறினர். இவர்களில் பெரும்பாலோர் இன்றுவரை காஷ்மீர் திரும்ப முடியாமல் கூடாரங்களில் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
வஹாபியப் பிடியில் தென்கிழக்காசியா
மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு, அதைத் தொடர்ந்த ஆப்கன் போர் ஆகியவற்றிற்குப்பிறகு வஹாபிய இஸ்லாமிய அடிப்படைவாதக் கல்வியை உலகெங்கும் பரப்புவது சவுதியின் முக்கியப்பணியாகி விட்டது. மெக்கா ஆக்கிரமிப்புக்குப்பின் மலேசியா, இந்தோனேசியா போன்ற மிதவாத தெற்காசிய இஸ்லாமிய நாடுகளில் இருந்து மதக்கல்விக்காக மவுல்விக்கள் சவுதிக்கு கூட்டி வரப்பட்டனர். இவர்களுக்கு வஹாபிய அடிப்படைவாதத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. மலேஷியாவும் இந்தோனேஷியாவும் மெல்ல மெல்ல கடும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நோக்கி ஜிஹாதிப்பாதையில் சரியத்தொடங்கியது. வஹாபிய ஜிஹாத்தின் எதிரொலி இந்தோனேஷியாவில் பாலி தீவுகளின் குண்டு வெடிப்பில் கேட்டது. புராதான இந்துக்கோவில்கள் குறி வைத்து இடிக்கப்படுவதிலும், இந்துக்களின் பண்பாட்டு அழிப்பிலும் மலேஷியாவில் இது இன்றும் தொடர்கிறது.
ஜுஹைமானின் மசூதி ஆக்கிரமிப்பு இல்லாவிட்டால் கூட மேற்சொன்ன விளைவுகளில் பெரும்பாலானவை நடந்தேறியிருக்கும் என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் வஹாபிய அடிப்படைவாத வெறுப்பியலானது, வாழவும் வளரவும் தொடர்ந்து அதற்கு எதிரிகள் தேவையாக இருக்கிறது. மதவாதத்தின்மூலம் தன் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளும் சவுதி அரேபியா போன்ற அரசுகள் இருக்கும்வரை, இத்தகைய ஜிஹாதிகளின் உருவாக்கமும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனாலும், மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு, மேற்சொன்ன விளைவுகளை நோக்கி சம்பவங்களுக்கு உந்தம் தந்து விரைவுபடுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.
அல்-க்வைதாவின் அசுர வளர்ச்சி
அமெரிக்க சிஐஏவுடன் சேர்ந்து ஆப்கானியப் போருக்கான ஆள்சேர்ப்பை மேற்பார்வையிட்டவர் சவுதி இளவரசர் டர்க்கி என்பவர். இந்தப்பணிக்காக ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் அடிக்கடி அவர் பறந்தபோது அவருடன் தோளோடு தோள் நின்று அன்று பணியாற்றிய 22 வயது இளைஞனின் பெயர் ஒஸாமா பின் லாடன். ஆப்கானிஸ்தானத்திலிருந்து சோவியத் வெளியேறியதைத் தொடர்ந்து வஹாபிய தாலிபான்களின் ஆட்சி அங்கே நிறுவப்பட்டு சவுதியின் வஹாபிய சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்பட்டன. ஆனால் அதே சமயம் போதை மருந்து உற்பத்தி மூலம் அமோகமாய்ப் பணம் சேர்க்கப்பட்டது. இது போன்ற வீழ்ந்த அரசாங்கங்களின் வெற்றுக்கூடாய்க் கிடக்கும் ஏழை நாடுகள் பயங்கரவாத இயக்கங்களுக்கு மிகப்பெரியதொரு வரப்பிரசாதம். ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இருந்து கொண்டு ஒஸாமாவின் தலைமையில் அல்-க்வைதா அமோகமாக வளர்ந்தது. முந்தைய நண்பர்களான சவுதியும் அமெரிக்காவும் இன்றைய எதிரிகளாயினர். வஹாபிய ஜிஹாதுக்கு புதியதொரு இலக்கு கிடைத்து விட்டது. தாலிபானால் பாதுகாக்கப்பட்ட அல்-க்வைதா தலைமை, செப்டம்பர் 11-இல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்தது. தீனிபோட்ட அமெரிக்காவையே தீண்டியது ஜிஹாதிப்போர். பின்னர் அமெரிக்கப்படைகள் தாலிபானின் ஆப்கானிஸ்தானை சின்னாபின்னமாக்கி, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது என்றாலும், இன்றுவரை ஆப்கானிஸ்தான் மதவாதிகளின் கொடூரப்பிடியினாலும் தொடரும் குண்டு வெடிப்புகளாலும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறது. இப்போது பாகிஸ்தானே அல்-க்வைதா பயங்கரவாதத்தின் இலக்காகியும் இருக்கிறது. மதவாத வெறுப்பியல் என்ற காட்டுத்தீ குளிர்காய வந்தவர்களையும் கருக்கிப்போட்டு விட்டது.
ஜுஹைமானைப்பிடித்த சவுதி பாதுகாப்பு அதிகாரி அபு சுல்தான், இன்றுள்ள எல்லா பயங்கரவாதிகளும் ஜுஹைமானின் மிச்சங்களே என்கிறார். அவர் சொல்லாமல் விட்டது, அந்த மிச்சங்கள் எல்லாம் வளர்வது சவுதி அரசு போட்டுக்கொண்டிருக்கும் மதவாதத் தீனியால் என்பதை.
தீர்வுக்கு ஒரு வழி
அமெரிக்காவோ இன்றும் பல இஸ்லாமிய மத அடிப்படைவாத அரசுகளுக்கு முட்டுக்கொடுத்து வருகிறது. சுன்னி வஹாபிய அடிப்படைவாதம் உலகில் இன்று பெரும் பயங்கரவாத சவாலாக உருவாகி வரும் நிலையில், அமெரிக்காவோ எண்ணெய்க்காக ஜனநாயகமற்ற சுன்னி இஸ்லாமிய மன்னராட்சி நாடுகளோடு நட்பு பாராட்டி வருகிறது. அன்று போலவே இன்றும் சமூக அளவில் மத இறுக்கம் குறைந்த ஈரான் எதிரியாகப் பார்க்கப்படுகிறது. ஆனாலும் இஸ்லாமிய அடிப்படைவாத அரசுகளுக்கு முட்டுக்கொடுப்பது தனக்கு எதிராகவே திரும்பும் என்பதை 9/11 அமெரிக்காவை உலுக்கி உணர்த்தியது. விளைவாக மாற்று எரிபொருள் நோக்கி பல முனைப்புகள் இன்று மேற்கொள்ளப்படுகின்றன. இவை அமெரிக்காவின் மத்திய கிழக்கு மீதான எண்ணெய்சார்பைக் குறைக்கலாம். ஆனால் இது மட்டுமே முழுமையான தீர்வாகி விடாது. அமெரிக்கா விலகினால் எண்ணெய் வள இஸ்லாமிய நாடுகளுக்கு, ஜனநாயகம், மனித உரிமை ஆகியவை பற்றியெல்லாம் கொள்கை அளவில் கூட கவலைப்படாமல் நட்பு பாராட்ட ரஷ்யாவும் சீனாவும் தயாராக இருக்கின்றன.
ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாதம் அமெரிக்காவை மட்டுமல்ல, ரஷயாவையும் (செசியா), சீனாவையும் (உய்கூர்) கூட கவலை கொள்ளச்செய்யும் விஷயம்தான். எனவே சவுதி அரேபியா தனது வஹாபிய இறுக்கத்திலிருந்து விடுபடுவதே இதற்கு நீண்ட காலத்தீர்வாக இருக்க முடியும். துருக்கிக்கிடைத்த முஸ்தபா கெமல் பாஷா போல சவுதிக்கும் ஒரு சீர்திருத்தவாதி கிடைக்க வேண்டும். ‘மெக்கா, மெதீனா காப்பாளன்’ என்ற சுமை இருக்கும் வரை சவுதி மன்னரே நினைத்தாலும் ஜனநாயக மாற்றங்களையோ நவீன கல்வியையோ பெண் விடுதலையையோ கொண்டு வந்து விட முடியாது. அவ்வாறு செய்தால் குரானுக்கு எதிரானது என்று சொல்லி சவுதியின் வஹாபி மதத்தலைமை பெரும் கலவரத்தைக் கிளப்பி அரசையே கவிழ்த்து விடக்கூடும். சவுதி அரசின் ஒரு சில ஜனநாயக முயற்சிகள் கூட மதவாதிகளால் முறியடிக்கப்பட்டன என்பதைப் பார்த்தோம்.
ஒரு வழி உள்ளது; ஐரோப்பாவில் இது போன்ற சூழல் முன்பு இருந்தது. ஐரோப்பிய நாடுகள் எல்லாம் வட்டிகனின் சொல்படி கேட்டு ஆட வேண்டிய நிலை அப்போது இருந்தது. மதத்தலைமையும் அரசுக்கும் பிணக்கம் அதிகரித்த சூழலில் ஒரு கட்டத்தில் வட்டிகன் மட்டும் தனி ஆளுமைப்பகுதியாக போப்பின் தலைமையில் பிரித்து வைக்கப்பட்டது. இது மற்ற அரசாங்கங்கள் மதத்தினைத் தள்ளி வைத்து நவீனக்கல்வி பரப்பவும் மதச்சார்பற்ற அரசு நடத்தவும் உதவின. சவுதியிலும் இந்த அணுகுமுறை கைகொடுக்கலாம். மெக்கா மெதீனா ஆகிய இரு புனித நகரங்களை மட்டும் இஸ்லாமிய மதத்தலைமையின் கையில் ஒப்படைத்து விடுவது சவுதிப்பகுதி (குறிப்பாக எண்ணெய் வளம் நிறைந்த பகுதிகள்) நவீன யுகத்துக்கு விரைவில் வர உதவும். இவ்வாறு சவுதியில் ஏற்படும் முன்னேற்றம், சுற்றியுள்ள பல இஸ்லாமிய நாடுகளிலும் நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தி ஜனநாயக மாறுதல்களைக் கொண்டு வரலாம். கிறித்துவ பிற்போக்குத்தனத்திலிருந்து இப்படித்தான் ஐரோப்பா படிப்படியாக விடுதலை பெற்றது. இது போன்ற ஒரு மாற்றம் ஏற்பட்டு மத்திய கிழக்கும், குறிப்பாக சவுதியும் மத அடிப்படைவாதம் என்ற மரணத்தழுவலில் இருந்து விடுபடாதவரை, இந்நாடுகளிலும் இவற்றால் பாதிக்கப்படும் பிற நாடுகளிலும் மத மோதல்களும் குண்டுச் சத்தங்களும் ஓயாது.
—————————————————————————————————————————————————————————————————–
பின்குறிப்புகள்:
(1) காபாவின் புனிதக்கல் 10-ஆம் நூற்றண்டிலேயே ஒருமுறை திருடப்பட்டது. கர்மெஷியன் என்ற ஒரு அரேபிய இஸ்லாமிய குழு மெக்காவைக் கைப்பற்றி காபாவின் புனித கல்லைத் திருடிச்சென்றனர்; ஆனால் இதன் மூலம் புனித யாத்திரை வருமானம் தம் நகருக்கு வந்து விடும் என்ற் அவர்களது எண்ணம் பொய்த்துப்போக, 20 ஆண்டுகள் கழித்து மெக்காவிற்கே காபா கல்லைத் திருப்பி அளித்தனர்.
2). மாஹ்டி என்ற கருத்தாக்கம் இஸ்லாமிய இறையியலில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இஸ்லாமிய ஷியாக்களில் அதிகமாகவும் பிற பிரிவுகளில் பரவலாகவும் இது நம்பப்படுகிறது. மாஹ்டி என்பவர் பழைய ஏற்பாட்டின் மிலிட்டரி மெசையா போல, ஆனால் மீட்பர் கிடையாது. முகமது மாஹ்டி பற்றி கூறியுள்ளதாக பல இஸ்லாமியப்பிரிவுகள் சில ஹதித்துகளைச் சுட்டிக்காட்டி நம்புகின்றன. வஹாபிய சுன்னி இஸ்லாத்தைச்சார்ந்த ஜுஹைமானும் இதனை நம்பினான். இந்நம்பிக்கை வருமாறு:.
“களங்கப்பட்ட இஸ்லாமிய சமூகத்தை தூய்மைப்படுத்தி உலகெங்கும் இஸ்லாத்தை நிறுவுவதற்காக அல்லா மனிதர்களால் 7 வருடங்களுக்கு அழிக்க முடியாத மாஹ்டியை அனுப்பி வைப்பார், இந்த மாஹ்டியின் ஆட்சியை கிறித்துவர்கள் எதிர்த்து பெரும்படையுடன் போருக்கு வருவார்கள் போரில் கிறித்துவ உலகம் அழிவைக் காணும். அந்த நேரத்தில் சைத்தானின் மகன் டஜல் (கிறித்துவின் எதிரி) ஒற்றைக்கண்ணனாக வெளிவருவான். அவனுடன் சேர்ந்து கொண்டு 70,000 யூதர்கள் போருக்கு வருவார்கள். இந்த்ப்படையை சமாளிக்க முடியாமல் இஸ்லாமிய மாஹ்டி டமாஸ்கஸுக்கு தப்பியோடி அங்கு இயேசு கிறித்துவின் வருகைக்காக பிரார்த்திப்பார் (இஸ்லாமிய இறையியலில் இயேசுவும் ஒரு நபியே- ஈசா நபி; ஆனால் கடவுளின் மைந்தன் கிடையாது). கிறித்துவின் மீள் வருகை அப்போது நிகழும். இயேசு கிறித்து சைத்தானின் மகனை இஸ்லாமியர்களிடம் இருந்து பெற்ற ஈட்டியால் குத்திக்கொல்வார். கிறித்துவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள். இந்தத் தீர்ப்பு நாளில் .யூதர்களும் முழுமையாக அழிக்கப்படுவார்கள். இந்த மாஹ்டி உயரமானவராக, நல்ல சிவந்த நிறத்துடன் , கன்னத்தில் பெரியதொரு மச்சமும் இருப்பவராகவும் இருப்பார். இவரது பெயர் முஹம்மது நபியின் பெயரையே தாங்கியிருக்கும்”. இந்த அடையாளங்கள் அனைத்தும் ஹதித்தில் உள்ளபடியே முஹமது அப்துல்லாவிற்குப் பொருந்தி வந்தன.
3). எம்.ஐ.எம் அமைப்பின் அரசியல் வரலாறு, ஹைதராபாத் நிஜாம் காலத்தில் தொடங்குகிறது. ஆனால் அதன் வேர் வஹாபி இஸ்லாத்தில் உள்ளது. ‘இந்து மத தாக்கங்களால் களங்கப்பட்ட இஸ்லாத்தை தூய்மைப்படுத்த வேண்டும்’ என்று 19-ஆம் நூற்றாண்டில் புறப்பட்ட சயித் அஹமத் பரெல்வி என்ற இஸ்லாமிய அடிப்படைவாதியின் வஹாபியக் கருத்துகளால் கவரப்பட்டு உருவாக்கப்பட்ட அரசியல் இயக்கமே எம்.ஐ.எம் ஆகும். இந்திய பிரிவினையின்போது எம்-ஐ-எம் ஹைதராபாத் நிஜாமுக்கு ஆதரவாகப் பிரிவினை கோரியது. இந்தியாவை எதிர்த்து ஆயுதமேந்திய போராட்டம் என்ற பெயரில் ஹைதராமாத் நிஜாமுக்கு ஆதரவாக ரஜாக்கர்கள் என்ற முஸ்லீம் படை, கம்யூனிஸ்டுகள், ஆந்திர மஹாசபைக்காரர்களிலிருந்து ஒன்றுமறியா நாடோடி நரிக்குறவர்கள் வரை அனைவரையும் தாக்கியும், கொன்று போட்டும் பயங்கரவாதச் செயல் புரிந்து கொண்டிருந்தது. இந்த ரஜாக்கர்களின் அரசியல் கட்சிதான் எம்.ஐ.எம். ரஜாக்கர்களுக்கும் எம்-ஐ.எம்முக்கும் தலைவன் காசிம் ரிஸ்வி. ஹைதராபாத் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதும் எம்.ஐ.எம் தடை செய்யப்பட்டு காசிம் ரிஸ்வி சிறை வைக்கப்பட்டான். 1957-இல் எம்-ஐ-எம் மீதான தடை நீக்கப்பட்டது. காசிம் ரஸ்வி பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டான். பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டு 1970களில் அரசியலில் மீண்டும் வளரத்தொடங்கிய எம்.ஐ.எம், 1979-இல் மக்கா மசூதி முற்றுகையைத்தொடர்ந்து நடந்த இந்துக்களுக்கெதிரான கலவரங்களில் முக்கியப் பங்கு வகித்தது. இந்துக்களுக்கெதிரான கொடுமையான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு இந்துக்களின் கடைகள் சூறையாடப்பட்டன. தொடர்ந்த கலவரத்தில் இருதரப்பிலும் பலர் உயிரிழந்தனர். ஆனால் ஹைதராபாத் முஸ்லீம்களுக்கிடையே எம்.ஐ.எம்மின் செல்வாக்கு பலமடங்கு அதிகரித்திருந்தது. அதன்பின் 1984 வரை ஒவ்வொரு வருடமும் வெடித்த மதக்கலவரம் எம்-ஐ.எம்முக்கு மென்மேலும் செல்வாக்கைத் தேடித்தர, 1984-இல் முதல் முறையாக ஹைதராபாத் தொகுதியை எம் ஐ எம் வென்றது. 1984-இல் இருந்து இன்று வரை ஹைதராபாத் லோக்சபா தொகுதி தொடர்ந்து எம்-ஐ.எம் கையிலேயே இருக்கிறது. 1993 வரை ஒவ்வொரு வருடமும் (என்.டி.ஆர் ஆண்ட 1986-89 தவிர) ஹைதராபாத்தில் சிறியதும் பெரியதுமாக இந்து-முஸ்லீம் கலவரங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. 1990-இல் நடந்த கலவரத்தில் 300 பேர் பலியாயினபோது ஹைதராபாத்தில் எம்-ஐ-எம்மின் செல்வாக்கு உச்சகட்டத்தை அடைந்திருந்தது. காங்கிரஸால் அன்று தடை செய்யப்பட்ட எம்-ஐ-எம் இன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கூட்டாளி. எம்-ஐ.எம்மிற்கு இன்று ஆந்திர சட்ட சபையில் 4 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் மூன்று எம்.எல்.ஏக்கள் கடந்த வருடம் பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீனை ஹைதராபாத் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து நாற்காலிகளால் தாக்கினர்.
4. அரசியல் ஆதாயங்களுக்காக இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு வளைந்து கொடுக்கும் செயல் இன்றும் தொடர்கிறது. ஹைதராபாதின் இஸ்லாமிய தீவிரவாதிகளை எதிராக Octopus (Organisation for Counter Terrorist Operations) அமைப்பின் டைரக்டர் ஜெனரலாக திறம்பட செயல்பட்டு வந்த உயர் போலீஸ் அதிகாரி மோஹான்டியை தீவிரவாத எம்-ஐ-எம்மின் அழுத்தத்திற்கு இணங்கி, ஆந்திராவின் சாமுவேல் ராஜசேகர ரெட்டியின் அரசு சமீபத்தில் இடம் மாற்றி சாலைப் பாதுகாப்புத் துறையில் போட்டது.
திருத்தம்:
பகுதி 1-இல் மூன்றாவது பாராவில் “மக்கா மசூதியில்தான் உலகமெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் புனிதமாக வந்து தொழும் காபா என்ற கருப்புக்கல் உள்ளது” என்று இருப்பது “”மக்கா மசூதியில்தான் உலகமெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் புனிதமாக வந்து தொழும் காபாவின் ஹஸ்ருல் அஸ்வத் என்ற கருப்புக்கல் உள்ளது” என்று இருக்க வேண்டும்.

References:

1. The Siege of Mecca: The Forgotten Uprising in Islam’s Holiest Shrine and the Birth of al-Qaeda by Yaroslav Trofimov
2. “Shadow of Swords -Jihad and the conflict between Islam and Christianity” by MJ Akbar
3. Terrorism Target – Hyderabad- by S. Nagesh Kumar- Available online
4. Holding them captive? News analysis in “The Hindu” Apr 27, 2003 – Available online
5. “Culture and Political History of Kashmir” By Prithivi Nath Kaul Bamzai
6. “When Kashmiri Pandits fled Islamic terror” -Kanchan Gupta http://www.rediff.com/news/2005/jan/19kanch.htm

Series Navigation

அருணகிரி

அருணகிரி

மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 4

This entry is part [part not set] of 37 in the series 20080925_Issue

அருணகிரி


மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 4

“…These are the back-to-the-beginning brigade. They really want to restore the great golden age of Islam. Back to the first four caliphates, over a thousand years ago… There is no such earthly paradise, ofcourse, but fanatics were never deterred by unreality”

– From ‘The Afgan” by Frederick Forsyth
மசூதிப்போர்
மசூதி ஆக்கிரமிப்பின் தொடக்கத்தில் மசூதியில் மாட்டிக்கொண்ட ஹஜ் பயணிகள் குழம்பிப்போயிருந்தனர். இவர்களில் அரபி தெரியாத பலருக்கும், சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே புரியாத நிலை வேறு. இந்நிலையில், முஹமது அப்துல்லா ஹதீதுகளில் உள்ளபடி காபாவின் அருகில் துப்பாக்கியுடன் தோன்றி, ஹதீதுகளில் கூறப்பட்டுள்ள மாஹ்டியாக தன்னை அறிவித்தான். ஷியா பிரிவைச் சேர்ந்தவனா என்ற கேள்விக்கு உறுதியாக இல்லை என்று பதிலுரைத்தான். இதன் பின் ஹஜ் பயணிகள் ஒவ்வொருவரிடமும் விசுவாசப் பிரமாணம் வாங்கப்பட்டது. பின்னர் பலரும் விடுவிக்கப்பட்டனர்.
ஜுஹைமானின் ஆக்கிரமிப்பு ஆரம்பத்திலேயே அனாவசிய உயிரிழப்பில் தொடங்கியது. மசூதிக்குள் இருந்த ஹஜ் பயணிகளின் கவனத்தைக் கவர மேல் நோக்கி சுடப்பட்ட துப்பாக்கி குண்டு ஒன்று வழவழப்பான சுவர்களில் பட்டு திசை திரும்பி ஜுஹைமானின் போராளி ஒருவர் மீதே பாய அது ஆக்கிரமிப்பின் முதல் உயிரிழப்ப்பானது. அவ்வாறு இறந்தவர் மாஹ்டியாக தன்னை அறிவித்துக்கொண்ட முஹமது அப்துல்லாவின் மாமனார்!
மசூதிக்கட்டிடம் பாதிக்கப்படாமல் மசூதி முற்றுகையை முறியடிக்க முதலில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதற்கு பல முட்டுக்கட்டைகளும் ஏற்பட்டன. மாஹ்டி தோன்றி விட்டார் என்பது உண்மையானால் அவரை எப்படி எதிர்ப்பது என்றும் புனித மெக்கா மசூதியில் ரத்தம் சிந்துவதா என்றும் பல இஸ்லாமியப் படைவீரர்கள் தயங்கினர். இந்தப்படைகளுக்கு தலைமைப் பொறுப்பிலிருந்த இளவரசர் புனித மசூதியைக் காக்கும் போரில் இறப்பவர்களுக்கு உடனே சுவனம் கிடைக்கும் என்று கறாராக அறிவித்து, தயங்கிய வீரர்களை போருக்கு அனுப்பினார். இவ்வாறு அனுப்பப்பட்ட வீரர்களில் பெரும்பாலோர் மசூதி வாசலை அடையுமுன்னரே உயரமான மினாரெட்டுகளில் ஒளிந்து கொண்டு தாக்கிய ஜுஹைமானின் படையால் எளிதாக சுட்டு வீழ்த்தப்பட்டனர். மசூதிக்குள் நுழைந்து சண்டையிடவோ கவச வண்டிகளின் மூலமும் ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தவோ சவுதி அரசுக்கு மதத்தலைமையின் ஒப்புதல் தேவைப்பட்டது. இதற்காக பின் பாஜின் அனுமதியைப் பெற வேண்டி, அவசர கூட்டம் ஒன்று கூட்டப்பட்டு, முல்லாக்களுடன் பல மணிநேரம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. வஹாபி இறுக்கத்தை மேலும் நெருக்க இதனை அருமையான சந்தர்ப்பமாகக் கண்ட பின்பாஜ், வஹாபிய அடிப்படைவாதத்தை வலுப்பெறச்செய்யும் பல் கோரிக்கைகளை முன் வைத்து பேரத்தைத் தொடக்கினார். இந்த பேரத்தின் விளைவாக மன்னர் ஃபைசல் தொடங்கிய , பள்ளிகளில் பெண் ஆசிரியைகளுக்கு அனுமதி தரப்பட்டது உட்பட்ட சீர்திருத்தங்கள் பலவும் திரும்பப் பெறப்பட்டன. சவுதியில் மட்டுமே கற்றுத்தரப்பட்ட கடுமையான அடிப்படைவாத வஹாபி இஸ்லாத்தை உலகெங்கும் பரப்பும் விதத்தில், உலக மதராஸாக்களுக்கு நிதி உதவி செய்வதற்கும், பல நாடுகளில் இருந்தும் முஸ்லீம்களை சவுதிக்கு வரவழைத்து கடுமையான வஹாபி இறையியலில் பயிற்சி அளிப்பதற்கும் எண்ணெய்ப் பணத்தை வாரி இறைக்க சவுதி அரசு ஒப்புக்கொண்டது. உலகெங்கும் ஜிஹாதி தொழிற்சாலை நிறுவ நிதியுதவி செய்யும் நாடாக சவுதி அரேபியா இன்று ஆகியிருப்பதற்கான விதை அன்று பின்-பாஜுடனான பேச்சு வார்த்தையின் முடிவில் விதைக்கப்பட்டது. இளகத் தொடங்கியிருந்த ஒரு இடைக்கால இருண்ட சமுதாயம் மீண்டும் மதவாத இருட்டில் சரிந்து இறுகத்தொடங்கியதும் அன்றைய தினத்தில்தான். 1979 நவம்பர் 23, வெள்ளிக்கிழமை மாலை பேரம் முடிந்த போது ஜுஹைமானின் மசூதி ஆக்கிரமிப்பு தொடங்கி மூன்று நாட்கள் முடிந்திருந்தன.
இந்தப் பேரத்தின் விளைவாக, மக்கா மசூதி ஆக்கிரமிப்பானது மார்க்கத்திற்கு எதிரானது என்றும் அதனை விடுவிக்க வேண்டியது அரசின் கடமை என்றும் பின்-பாஜின் மதத்தலைமை ஃபத்துவா விதித்து அறிவிப்பு விடுத்தது. இதற்கு ஆதரவாக “அவர்கள் உங்களோடு போரைத்துவங்கும் வரை நம்பிக்கையற்றோருடன் புனித மசூதியில் போரிடாதீர்கள்; அவர்கள் போரிடத்துவங்கினால் அவர்களை வெட்டி வீழ்த்துங்கள்” என்ற குரான் வரிகள் மேற்கோள் காட்டப்பட்டன. இவை முஸ்லீம்கள் அல்லாதோருக்குத்தான் (“நம்பிக்கையற்றோர்”) பொருந்தும் என்றாலும் நம்பிக்கையற்றவர் போல நடந்து கொண்ட ஜுஹைமான் படைகளும் முஸ்லீம்கள் அல்லாதோராகவே கருத்தப்படுவர் என்று சவுதி மதத்தலைமை விளக்கம் அளித்தது. இந்த விளக்கமே பிற்காலத்தில் அமெரிக்க நட்பு முஸ்லீம் நாடுகளின் மேல் – சவுதி அரசு உட்பட- ஜிஹாதியத் தாக்குதல் தொடுக்க வஹாபி ஜிஹாதிகளாலும் அல்-க்வைதாவாலும் வசதியாக உபயோகப்படுத்திக் கொள்ளப்பட்டது. ஜுஹைமான் போன்ற தீவிர முஸ்லீம் ஒருவனையே அவனது செயல்களின் அடிப்படையில் அவநம்பிக்கையாளன் என்று சொல்ல முடியும் என்றால், கிறித்துவ மேற்குடன் நட்பு பாராட்டும் முஸ்லீம் நாடுகளுக்கும் இது பொருந்தும் என்பதே பயங்கரவாத ஜிஹாதிகள் தரப்பு வாதமாக ஆனது. (இந்த விளக்கத்திற்கே முன்பே இப்படித்தான் நிலைமை இருந்தது என்றாலும், சவுதி மதத்தலைமையே இந்த விளக்கத்தை குரானை அடிப்படையாக்கிச் சொன்னது, இதற்கு மத அங்கீகாரம் த்ந்து உறுதி செய்தது போலாகி விட்டது). மசூதிக்குள் நுழைந்து தாக்க சவுதி அரசு தயாரானது.
இந்தத் தாக்குதலின் முதல் அம்சமாக அமெரிக்க டவ் (TOW- Tube Launched, Optically Tracked, Wire-command-link guided) வகை ஏவுகணைகள் கொண்டு மெக்கா மசூதியின் மினாரெட்டுகள் தாக்கப்பட்டன. மினாரெட்டுகளில் காவலுக்கு ஒருந்த அத்தனை போராளிகளும் இதில் கொல்லப்பட்டனர். அடுத்ததாக, யந்திரத்துப்பாக்கிகள் கூடிய கவச வண்டிகள் உள்ளே செலுத்தப்பட்டது. இவை ஜுஹைமான் தரப்பில் பெரும் சேதத்தை உண்டுபண்ணின. தன்னை உண்மையிலேயே மாஹ்டி என்றும் கொல்லப்பட முடியாதவன் என்றும் நம்பிய முஹமது அப்துல்லா இந்தச் சண்டையில் பல தீரச் செயல்கள் புரிந்தான். சுற்றிலும் பாயும் குண்டுகளைப் பொருட்படுத்தாது மசூதி வளாகத்திற்குள் புகுந்த கவச வண்டி ஒன்றை நெருங்கி, அதன் மேல் ஏறி பெட்ரோல் ஊத்திக்கொளுத்தினான். கவச வண்டி அவசரம் அவசரமாகப் பின் வாங்கியது. கீழ்த்தளத்தில் இன்னொரு கவச வண்டி குறுகலான நுழைவாயிலில் சிக்கிக்கொண்டு ஜுஹைமானின் ஆட்களால் பெட்ரோல் பாம் கொண்டு கொளுத்தப்பட்டது. சவுதி படைகள் வீசிய கையெறி குண்டுகளை “மாஹ்டி” முஹம்மது அப்துல்லா மிகச்சில நொடிகளில் அநாயாசமாக ஓடிப்பொறுக்கி திருப்பி வீச சவுதி தரப்பில் அவை பெரும் சேதத்தை விளைவித்தன. ஆனால், அவனது அதிர்ஷ்டம் வெகுநேரம் நிலைக்கவில்லை. வீசப்பட்ட கை குண்டு ஒன்றை எடுப்பதற்குக்குனிந்த போது, “மாஹ்டி”யின் கையில் இருக்கிறோம் என்பது தெரியாமல் அது வெடித்து விட, முகமது அப்துல்லாவின் இடுப்பின் கீழ்ப்பாதி கூழாகிப் போனது. அந்நிலையிலேயே அந்த இடத்திலேயே அவன் மேலும் சில நாட்கள் உயிரோடு இருந்து, பிறகு இறந்து போனான். மாஹ்டி வீழ்ந்த செய்தி வதந்தியாய்ப் பரவிய நிலையிலும் கூட ஜுஹைமான், தனது உத்வேகப் பேச்சின்மூலம் படையை ஒருங்கிணைத்துத் தொடர்ந்து போரிட்டான்.
மசூதியின் மேல் தளம் சவுதி அரசின் கட்டுப்பாட்டுக்குள் வர, குறுகிய பாதைகள் நிறைந்த கீழ்த்தளத்தில் ஜுஹைமானின் வீரர்கள் ஒளிந்து கொண்டு போரிடத்தொடங்கினர். கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டபோது துணிகளையும், கார்ப்பெட்டுகளையும் தண்ணீரில் நனைத்து அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, கீழ்த்தளத்தில் நுழைய முற்பட்ட சவுதிப்படைக்கே இந்தப்புகை அதிக பாதிப்பை உண்டுபண்ணியது. மேலும் கீழ்த்தளத்திற்குள் இறங்க முயன்ற சவுதி வீரர்களை ஜுஹைமானின் ஜிஹாதிகள் இருட்டில் இருந்து கொண்டு எளிதாகத் தாக்க முடிந்தது. பெரும் சேதம் இல்லாமல் கீழ்த்தளத்திலிருந்து போரிடுபவர்களை வெளியேற்ற முடியாது என்று சவுதி அரசுக்குப் புரிந்தபோது ஆக்கிரமிப்பு தொடங்கி ஒரு வாரம் கடந்து விட்டிருந்தது. சவுதியின் சிறிய ராணுவம் இதற்குள் ஏகப்பட்ட சேதத்தைக் கண்டு விட்டது. ஆனால் சவுதி அரசோ மெக்கா மசூதி மீட்கப்பட்டது என்று வெளியுலகிற்கு பொய்ச்செய்தி பரப்பத் தொடங்கி விட்டிருந்தது. இந்நிலையில் சவுதியின் எண்ணெய் வளமிக்க கிழக்குப்பகுதியில் உள்ள ஷியாக்கள் வேறு கலகம் செய்யத் துவங்கியிருந்தனர். அதனை அடக்க சவுதி அரசு இன்னொரு முனையில் போராட வேண்டியிருந்தது. 20 ஷியாக்கள் கொல்லப்பட்டு இந்தக் கலகம் அடக்கப்பட்டது.
உடனடியாக மசூதி ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வராவிட்டால், சவுதி அரசின் நம்பகத்தன்மைக்கே கேடு வரும் என்கிற நிலையில், சவுதி மன்னர் வெளி நாட்டார் உதவியை நாட முடிவு செய்தார். யாரிடம் உதவி கேட்பது என்ற கேள்வி எழுந்தபோது, மத்திய கிழக்கின் மற்றொரு முரண்பாடு வெளிச்சத்துக்கு வந்தது. சக அராபிய நாடுகளையோ முஸ்லீம் நாடுகளையோ நம்ப சவுதி அரசு தயாராக இல்லை. ஜோர்டான் அரசு உதவி செய்ய முன் வந்தாலும், சவுதி அதனை மறுத்தது (அன்றைய சவுதி மன்னரின் தந்தை ஜோர்டானின் மீது 1920-களில் படையெடுத்தவர்). ஷியா நாடான ஈரானிடம் உதவி கேட்க முடியாது. பிற எந்த மத்திய கிழக்கு முஸ்லீம் நாட்டிடம் ரகசியமாக உதவி கேட்டாலும் அதனை துருப்பு சீட்டாக வைத்துக்கொண்டு “மெக்காவைக் காக்க முடியாத சவுதி அரசு” என்று எப்போது வேண்டுமானாலும் அவை சவுதி அரசின் கையாலாகாத்தனத்தைக் காட்டிக் கொடுத்து விடக் கூடும். ஆக, எந்த சக அராபிய நாட்டிடமும் மசூதியைக் காப்பதற்காக கடன் பட சவுதி மன்னரின் அரசு தயாராக இல்லை. ஆனால் மேற்கு நாடுகளிடம் உதவி கேட்பதில் இவ்வித சிக்கல்கள் எதுவும் இல்லை, எனவே மேற்கு நாடுகளை அணுக முடிவு செய்யப்பட்டது. நட்பு நாடென்றாலும் அமெரிக்க வெறுப்பு உச்சத்தில் இருந்தமையாலும், வெளியே தெரிந்தால் பல குழப்பங்கள் உண்டாகும் என்பதாலும் அமெரிக்காவை இதில் தொடர்பு படுத்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அன்றைய தேதியில் உலகத்திலேயே சிறந்த ரகசியத் தாக்குதல் படையை (SDECE) வைத்திருந்த ஃபிரான்ஸிடம் உதவி கோருவதென்று தீர்மானிக்கப்பட்டது. ஏகப்பட்ட ராணுவ தளவாடங்களை விற்று வந்ததில் பிரான்ஸ் ஏற்கனவே சவுதிக்கு நெருங்கிய நட்பு நாடாகவும் இருந்தது.
போர்க்கருவிகள் பல தந்து பிரான்ஸ் உதவியது மட்டுமன்றி ப்ரான்ஸ் நாட்டின் சிறியதொரு தாக்குதல் குழுவும் ரகசியமாக சவுதிக்கு அனுப்பப்பட்டது. இந்தக்குழு சவுதி படைக்கு டாயெஃப் பகுதியில் கொரில்லா போர்ப்பயிற்சியும் கருவிப்பயிற்சியும் அளித்தது. இதைத் தொடர்ந்து மசூதியின் மேல்தளத்தில் பல இடங்களில் துளைகள் போடப்பட்டு அதன் வழியே நரம்புகளைச் செயலிழக்கச்செய்யும் சக்தி வாய்ந்த ரசாயன வாயு ஒரே நேரத்தில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து கையெறிகுண்டுகளையும் கண்ணீர்ப்புகை குண்டுகளையும் வீசியபடி சவுதிப்படை உள்ளே நுழைந்தபோது களைத்துப்போயிருந்த ஜுஹைமானின் போராளிகளால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. உள்ளிருந்த ஓர் அறையில் பிற போராளிகளுடன் ஜுஹைமானும் பிடிபட்டான். இறந்து கிடந்த “மாஹ்டி” முகமது அப்துல்லாவின் உடலும் மீட்கப்பட்டது. மாஹ்டியின் இறந்த உடல், சவுதி அரசின் மசூதித் தாக்குதலுக்கு இஸ்லாமிய இறையியல் பூர்வமான நியாயத்தையும் தந்தது.
அடுத்து: பின் விளைவுகள்
(தொடரும்)


arunagiri_123@yahoo.com

Series Navigation

அருணகிரி

அருணகிரி

மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 3

This entry is part [part not set] of 28 in the series 20080918_Issue

அருணகிரி



“The Islamic mind is where the current battle will be fought, and this is why it will be a long war”.
– M.J.AKBAR in “Shades of the Swords”

மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு: உடனடி விளைவுகள்

மசூதி கைப்பற்றப்பட்ட செய்தி வெளியில் வந்ததும் சவுதி அரசு முதல் வேலையாக வெளியுலகுக்கான எல்லா தகவல் தொடர்பு வசதிகளையும் துண்டித்தது. இது பல தவறான யூகங்களுக்கும் பூசல்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமானது.

மெக்கா முற்றுகைக்கு இரு வாரம் முன்புதான் ஈரானில் கொமேனி அரசு அமெரிக்கத்தூதரக மக்களைச் சிறைப்பிடித்திருந்தது. அமெரிக்கர்கள் சவுதியில் இருப்பதற்கும் ஈரான் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. அன்றைய அமெரிக்காவிற்கு சவுதி வஹாபிக்களும், சுன்னிக்களும் மிதவாதிகளாக்வும், (ஈரான் சம்பவங்களின் அடிப்படையில்) ஷியாக்களே தீவிரவாத வில்லன்களாகவும் தெரிந்தனர். இந்நிலையில் நட்பு நாடான சவுதி அரசையும் சங்கடத்துக்குள்ளாகும் விதத்தில் அமெரிக்க அரசு தன்னிடமிருந்த அரைகுறைத் தகவ்ல்களின் அடிப்படையில் மெக்கா ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட விஷயத்தையும் இதற்கு ஈரான் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவசரப்பட்டு வெளியிட்டது. ஈரானை தேவையில்லாமல் இதில் தொடர்புபடுத்தியது மட்டுமன்றி அன்றைய கார்ட்டர் அரசு அவசர அவசரமாக அமெரிக்க போர்க்கப்பல் ஒன்றை சவுதியை நோக்கி அனுப்பி வைத்தது.

சதாமின் வில்லத்தனத்தை வைத்து பேரழிவு ஆயுதங்களை ஈராக் வைத்திருந்ததாக வந்த செய்திகளை தயாராக நம்பி ஈராக் படையெடுப்பை நிகழ்த்திய மேற்கின் அதே தராசுதான் அன்று கொமேனி தலைமையிலான ஈரானை எடைபோடவும் உபயோகப்படுத்தப்பட்டது. அமெரிக்க தூதரக ஊழியர்களைச் சிறைவைத்த கொமேனியின் ஈரான் மேற்குலகின் அன்றைய வில்லன். அமெரிக்க நட்பு நாடான சவுதியில் நடந்த மசூதி ஆக்கிரமிப்பையும் கொமேனியின் ஈரானையும் உடனடியாக முடிச்சுப்போடுவதில் அமெரிக்க நட்பு அரசுகளுக்கோ, ஊடகங்களுக்கோ எந்தத் தயக்கமும் ஏற்படவில்லை. நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை மெக்கா மசூதி இரானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டது. இதனை பிரிட்டனும், இஸ்ரேல் அரசும் ஆதரித்தன. இவையனைத்தையும் அன்றைய சோவியத் யூனியன் உன்னிப்பாகக் கவனித்து வந்தது. காதும் காதும் வைத்தாற்போல முற்றுகை விஷயத்தை முடிக்க நினைத்த சவுதி அரசுக்கு இது பெரும் எரிச்சலைத் தந்தது. ஈரானின் வில்லத்தனத்தை நம்பத் தயாராக இருந்த மேற்குலகைப் போலவே, அமெரிக்க-இஸ்ரேல் வில்லத்தனத்தை நம்ப மத்திய கிழக்கின் இஸ்லாமிய நாடுகளும் தயாராகவே இருந்தன. இதனைச் சரியாகக் கணித்திருந்த அயதுல்லா கொமேனி இந்தச் செய்தியை முதலில் வெளியிட்ட அமெரிக்க அரசுதான் இஸ்ரேல் துணையுடன் இந்த ஆக்கிரமிப்பில் முக்கியப்பங்கு வகித்திருக்க வேண்டும் என்று ஒரே போடாகப் போட்டு பதிலடி கொடுத்தார். அவ்வளவுதான், உலகெங்கும் பற்றிக்கொண்டது ஒரு பெரும் கலவரத் தீ.

பரவிய இஸ்லாமியக் கலவரங்கள்:

பாகிஸ்தானின் அமெரிக்க தூதரகம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது. பத்தொன்பது வயது அமெரிக்க தூதரக பாதுகாப்பு வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் இராணுவ ஹெலிகாப்டர் அமெரிக்க தூதரகத்தின் மேல் பறந்து விட்டு அமைதியாக திரும்பிச் சென்று விட்டது. ராணுவமோ போலீஸோ உதவிக்கு வராத நிலையில் அமெரிக்க ஊழியர்கள் அனைவரும் இரும்பு அறைக்குள் ஒளிந்து கொள்ள, தூதரகமே கொளுத்தப்பட்டது. பல மணிநேரம் புகையிலும், தகிக்கும் அனலிலும் சூழ்ந்த நிலையில் இரும்பு அறையில் தவித்த தூதரக ஊழியர்கள் இன்னும் சில மணிநேரங்களில் உயிரோடு வெந்து சாகும் நிலையில் இரவு கவிழ்ந்தது; சூறையாடிய களைப்பில் வெறிக் கும்பல் கலைந்து செல்ல, தூதரக ஊழியர்கள் ஒவ்வொருவராக வெளி வந்து உயிர் பிழைத்தனர்.

பாகிஸ்தான் மட்டுமல்லாமல், பங்களாதேஷ் டாக்காவிலும் இந்தியாவிலும் மதவெறிக்கும்பல் கலவரத்தில் இறங்கியது. இந்தியாவில் கல்கத்தாவில் அமெரிக்க அலுவலகம் தாக்கப்பட்டது. கடைகள் நொறுக்கப்பட்டு பேருந்துகள் தீ வைக்கப்பட்டன. ஆனால் ஹைதராபாத்தில் நடந்த கலவரங்கள் கிலாபத் இயக்கக் கலவரங்களை நினைவுபடுத்தும் விதத்தில் அமைந்தன.

கண்மூடித்தனமான வஹாபிய வெறுப்பின் உச்சகட்டமாக மக்கா மசூதி ஆக்கிரமிப்ப்ற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத இந்துக்கள்மீது ஹைதராபாதில் கொடுமையான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்துக்களின் கடைகள் சூறையாடப்பட்டன. வெள்ளிக்கிழமை நமாஸ் முடித்து விட்டு வந்தால் கலவரம் என்ற வகையில் வெள்ளிக்கிழமை கலவரங்கள் ஹைதராபாத்தில் வாடிக்கையாகிப்போனது இந்த கலவரத்திற்குப் பிறகுதான். சுதந்திரத்திற்குப்பின் தடை செய்யப்பட்டு 1957 தடை விலக்கப்பட்ட எம்.ஐ.எம் (Majlis-e-Ittehadul Muslimeen) என்ற இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சி இந்தக் கலவரங்களில் முன்னணி வகித்தது. மதக்கலவரங்களைத் தொடர் உரமாக்கி பின்னாளில் இக்கட்சி பெரும் வளர்ச்சி கண்டது (2). இந்த எம்.ஐ.எம் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள் கடந்த வருடம் பங்களாதேஷ் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன் ஹைதராபாத் வந்தபோது அவரை நாற்காலிகளால் தாக்கியது நினைவிருக்கலாம். இதைத்தொடர்ந்து அவருக்கு விடப்பட்ட வெளிப்படையான மிரட்டல்களால் அவர் ஒளிந்தும், இடம் பல மாறியும், ஒரு கட்டத்தில் இந்தியாவை விட்டே வெளியேறி வேற்று நாட்டிலும் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

கொமேனி கொளுத்திப்போட்ட நெருப்பு துருக்கியிலும் பரவியது. வட்டிகனின் அன்றைய புதிய போப் இரண்டாம் ஜான் பால் துருக்கியின் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொள்ளும் பொருட்டு துருக்கிக்கு வரும் திட்டம் இருந்தது. காபா முற்றுகை பல இஸ்லாமிஸ்டுகளை கடுங்கோபத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில் போப்பின் வருகை இந்த வெறுப்பு நெருப்பில் பெட்ரோல் ஊற்றியது போலானது. கொலைக்குற்றத்துக்காக சிறையில் இருந்த மெஹ்மத் அலி ஆகா என்பவன் சிறையிலிருந்து தப்பினான். போப்பின் வருகை விலக்கிக்கொள்ளப்படவில்லையெனில், அவரைக் கொல்லப்போவதாக மிரட்டல் கடிதம் ஒன்றை வெளியிட்டான். 18 மாதங்களுக்குப்பின் ரோம் நகரில் போப் இரண்டாம் ஜான் பால் சுடப்பட்டார். மெஹ்மத் அலி ஆகா சுட்ட மூன்று குண்டுகளில் ஒன்று போப்பின் வயிற்றைத் துளைத்து, அவரை சாவின் விளிம்பிற்குக் கொண்டு சென்றது.

இதற்குள் ஜுஹைமான் குறித்த விவரங்களை அறிந்து கொண்ட சவுதி அரேபிய அரசு, மெக்கா முற்றுகையில் ஷியாக்களுக்கோ, வேற்று நாட்டாருக்கோ எந்த பங்குமில்லை என அறிவிக்க பல நாடுகள் பெருமூச்சு விட்டன. ஆனாலும் உலகின் பல பகுதிகளில் அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்படுவது நின்றபாடில்லை. குவைத்தில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது லிபியாவில் அமெரிக்க தூதரகம் சூறையாடப்பட்டது.

அடுத்து: மசூதிப்போர்

(தொடரும்)


arunagiri_123@yahoo.com

Series Navigation

அருணகிரி

அருணகிரி

மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 2

This entry is part [part not set] of 34 in the series 20080911_Issue

அருணகிரி


2

“What Wahab did was leave behind the seedbed of total intolerance in which today’s terror masters could plant the young seedlings before turning them into killers.”

– From ‘The Afgan” by Frederick Forsyth

வஹாபியிசம் வேர்கொண்டது:

சவுதியின் வஹாபிப்படைகள் துருக்கி மன்னனால் வெல்லப்பட்டு சவுதி மன்னன் கொல்லப்பட்டு ஏறத்தாழ 90 ஆண்டுகளில் துருக்கியின் ஆட்டோமான் பேரரசு தன் அந்திமக்காலத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. 1902-இல் அல்-சவுத் சந்ததியில் வந்த அப்துல் அசிஸ் சவுதியின் தலைநகரான ரியாத்தை ஒரு கலகத்தின் மூலம் எளிதாகக் கைப்பற்றினார். அதன் பின் பல சிறு போர்கள் மூலம் அப்துல் அசிஸ் சுற்றியிருந்த பல பகுதிகளை வென்று வஹாபி அரசை மீண்டும் நிலைநாட்டினார். பிற மதத்தினருக்கு மட்டுமல்ல, இஸ்லாத்தின் பிற பிரிவினருக்கு முகமன் சொல்வது கூட இவர்களால் மறுக்கப்பட்டது. ஷியாக்கள் அதிகமாக வசித்த சவுதியின் வளைகுடாப்பகுதியை அவர் வென்றபோது, கறுப்புத் தங்கமென எதிர்காலத்தில் அறியப்படப்போகும், மாபெரும் எண்ணெய் வளம் நிரம்பிய பகுதிக்கு அதிபராகியிருப்பதை அப்தல் அசிஸ் அன்று அறியவில்லை.

முதல் உலகப்போருக்குப்பின் துருக்கியில் காலிபாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்த நிலையைப்பயன்படுத்தி சவுதி மன்னர் அப்தல் அசிஸ் ஜோர்டானைக் கைப்பற்ற செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் வஹாபியப் படைகள் மெக்காவிற்கு அருகில் உள்ள தாயெஃப் என்ற இடத்தை கொடூரமாகத் தாக்கினர். நூறாண்டுகளுக்கு முன் காபாலா தாக்குதலில் வஹாபிக்கள் செய்த அட்டூழியங்கள் அனைத்தும் – கர்ப்பிணிப்பெண்களின் வயிறு கிழிததுக் கொன்ற கொடூரம் உட்பட- தாயெஃப் நகர அழிப்பிலும் இடம் பெற்றன. 1920-களின் இறுதியில் சவுதி அரேபியா முழுமையும் – இஸ்லாமிய புனித தலங்களான மெக்கா மெதீனா உட்பட- அப்தல் அசிஸின் கீழ் வந்தது. இந்நிலையில், புனித தலங்களுக்கான (ஷியா உள்ளிட்ட) அனைத்து முஸ்லீம்களின் யாத்திரைக்கும் உத்தரவாதம் தர வேண்டிய பொறுப்பும் அவசியமும் இப்போது சவுதி மன்னருக்கு ஏற்பட்டது. மேலும் ஜோர்டான், ஈராக், குவைத் போன்ற பகுதிகள் ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்தன. அன்றைய வல்லரசான பிரிட்டனோடு போரைத்தவிர்க்க வேண்டி, அப்தல் அசிஸ் பிற மத்திய கிழக்கு நாடுகளின் மீதான் போரை நிறுத்திக்கொண்டார். ஆனால் அவரது முந்தைய சகாக்களான தீவிர வஹாபிக்கள் இதனை துரோகச்செயலாகக் கண்டு, ஈராக்கைத் தாக்கத் தொடங்கினர். பிரிட்டனின் உதவியுடன் சவுதி மன்னர் இவர்களை அழிக்கலானார். 1929-இல் நடந்த இறுதிப்போரில், இந்த தீவிர வஹாபிக்களின் தலைவனான பிஜாத் சிறைப்பிடிக்கப்பட்டான். அவனோடு போரிட்டு உயிர்பிழைத்த முகமது பின் செய்ஃப் அல் உத்தய்பி என்பவனுக்குப் பிறந்த மகன்தான் பின்னாளில் மக்கா மசூதியைக் கைப்பற்றப்போகும் ஜுஹைமான் அல் உத்தய்பி.

1938-இல் சவுதியின் முதல் எண்ணெய்க்கிணறு அமெரிக்க கம்பெனி அராம்கோவினால் திறக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப்பின், விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுனர்கள், கட்டிடக்கலைஞர்கள் என ஏகபட்ட அமெரிக்கர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். இது வஹாபிய மதத்தலைவர்களின் கோபத்தைத் தூண்டியது. இஸ்லாமிய இறையியலில் தேர்ச்சி பெற்ற, மதவாதிகளிடம் செல்வாக்கு மிகுந்த பின் பாஜ் என்ற இஸ்லாமிய மதத்தலைவர் இதனை எதிர்த்து, மக்கா மதீனா மட்டுமல்லாமல் அரேபியா முழுமையுமே இஸ்லாமியரல்லாதோர் காலடி வைக்கக்கூடாத புனித பூமி என்று ஒரு ஃபாட்வாவைப் பிறப்பித்தார். (இன்றும் அல் க்வைதாவும் பின்லாடனும் இதனை அடிப்படையாக வைத்தே சவுதி அரசை எதிர்க்கிறார்கள்).இந்த பின் பாஜ் பிற்காலத்தில் சவுதியின் தலைமை முல்லாவாக உயர்வார். ‘பூமி தட்டை வடிவம்தான் என்றும் அதனை மறுப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டிய நாத்திகர்கள்’ என்றும் இவர் விடுத்த ஃபாட்வா, இவரது பல ஃபாட்வாக்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும் .

எண்ணெய் வளம் குவியக் குவிய மக்கா மசூதி பெருமளவில் விரிவுபடுத்தப்படத்தொடங்கியது. மக்கா மசூதி விரிவாக்கத்தில் கட்டிடக் காண்ட்ராக்டரான முஹமது பின் லாடன் பெரும்பங்கு வகித்தார். மதத்தலைவர் பின் பாஜ் அவர்களின் செல்வாக்கும் அதிகரித்தது. பின்பாஜின் மதக்கல்லூரியில் கார்ப்போரலாக உயர்ந்த ஜுஹைமான் பின்பாஜுக்கு அறிமுகமானவனாகவே இருந்தான். இப்படி இந்த இஸ்லாமியக்கல்லூரியில் வஹாபிக் கல்வி பெற வந்த ஒருவன்தான், மெக்கா ஆக்கிரமிப்பில் முக்கியப்பங்கு வகிக்கப்போகும் முஹம்மது அப்துல்லா. ஜுஹைமான் முஹம்மது அப்துல்லாவிடம் இஸ்லாமிய மாஹ்டிக்கான பல குணாம்சங்கள் பொருந்தி வருவதைக்கண்டான். (இஸ்லாத்தின் மாஹ்டி இறையியல் குறித்து பின் குறிப்புகளில் மேலதிக விவரங்கள் உள்ளன). தன்னைப்போலவே முஹம்மது அப்துல்லாவும் சவுதி அரசின் மீது அதிருப்தி கொண்டிருந்தது ஜுஹைமானுக்கு வசதியாகிப் போனது. மெக்கா மசூதியைக் கைப்பற்றும் திட்டத்தில் முஹம்மது அப்துல்லா மாஹ்டியாக ஒரு முக்கிய அம்சமாக ஆனான். ஜுஹைமானும் முஹம்மது அப்துல்லாவும் நெருங்கிய நண்பர்களாயினர். ஜுஹைமான் தன் முதல் மனைவியை விவாக ரத்து செய்து விட்டு முஹம்மது அப்துல்லாவின் சகோதரியை மணந்து கொண்டான்.

எகிப்தில் நாசர் பதவிக்கு வந்ததும் அராபிய நிலப்பரப்பில் வாழ்ந்த அனைவரையும் (முஸ்லீம் அல்லாதவரையும் சேர்த்து) அராபிய தேசியவாதம் என்ற பெயரில் மதச்சார்பற்ற அணியில் திரட்ட முற்பட்டார். இது மதவாத சவுதியை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது. எனவே இதற்கு எதிராக உலகளாவிய இஸ்லாமிய உம்மா உருவாக்கப்பட வேண்டும் என்று சவுதி அரசு பிரசாரிக்கத் தொடங்கியது. பெருகி வரும் எண்ணெய்ப்பணமானது, பல இஸ்லாமிய நாடுகளிலும் உலகளாவிய உம்மா என்ற பெயரில் எல்லைதாண்டிய இஸ்லாமிய மதவாதத்தை வளர்க்க வாரியிறைக்கப்பட்டது. மத்திய கிழக்கில் மத அடிப்படைவாதம் குறைந்திருந்த நாடுகளை எதிர்க்க அன்று உருவான முஸ்லீம் சகோதரத்துவம் (Muslim Brotherhood) என்ற அமைப்பு எகிப்திலும் சிரியாவிலும் தடை செய்யப்பட, சவுதி மன்னர் ஃபய்ஸல் (King Faizal) இந்த அமைப்புக்கு அடைக்கலம் தந்தது மட்டுமன்றி இவர்களை சவுதியின் இஸ்லாமிய பல்கலைக்கழகங்களில் பெரும் சம்பளத்தில் வேலைக்கும் அமர்த்தினார். இதில் படித்த பல மாணவர்கள் ஜிஹாதி பயங்கரவாதிகளாக பிற்காலத்தில் உருவெடுத்தனர். அப்படி அங்கு படித்த ஒருவன்தான் சவுதி கட்டிட காண்ட்ராக்டர் முகமது பின் லாடனின் மகனான ஒஸாமா பின் லாடன்.

சவுதி மன்னர் ஃபய்சல் சவுதியில் பல மாற்றங்களைக் கொணர்ந்தார். 1962-இல் அடிமை முறையை சட்ட விரோதமாக்கினார். 1963-இல், பெண் கல்வியை அனுமதித்தார். இச்செயல்கள் பிற்போக்கு மதவாதத் தலைவர்களிடம் அதிருப்தியை படிப்படியாக அதிகரிக்கச் செய்தது. 1965-இல் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியது சவுதியில் பெரும் கிளர்ச்சியை உண்டாக்கியது. தொலைக்காட்சியில் மனித பிம்பங்கள் தெரிவது இஸ்லாத்திற்கு எதிரானது என்றும் தொலைக்காட்சி சைத்தானின் வடிவம் என்றும் மதவாதிகள் தெருக் கலவரத்தில் இறங்கினர். மன்னரின் உறவினரே பங்கெடுத்த இந்தக்கிளர்ச்சி கடுமையாக அடக்கப்பட்டு அந்த உறவினர் கொல்லப்பட்டார். 10 வருடம் கழித்து பொது நிகழ்ச்சி ஒன்றில் இறந்தவரின் சகோதரனால் மன்னர் ஃபைசல் படுகொலை செய்யப்பட்டார்.

உள்ளுறை முரண்கள்:

இந்த இடத்தில் சவுதி அரேபியாவின் உள்ளுறை முரண்பாடுகளைக் கவனிக்கலாம்.

1. சவுதி அரசுக்கான அங்கீகாரமும் சவுதி மீதான அல்-சவுத் பரம்பரையினரின் மேலாண்மையும் மக்கா மதீனா ஆகிய புனித தலங்களின் காப்பாளர்களாவதற்கு ஏற்றவர்கள் இவர்கள் என்ற அடிப்படையில் வந்ததாகும்.

2. இந்த புனித தலங்கங்களை நிர்வாகம் செய்யும் உரிமையை அல்-சவுத் பரம்பரையினர் பெற்றது, இவர்கள் முன் வைத்த தீவிர வஹாபிய அடிப்படைவாதத்தின் மூலம். (அல்-சவுத் பரம்பரை அப்தெல் வஹாபின் அடிப்படைவாதத்தின் மீது கட்டமைக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்க). .

3. ஆக, இஸ்லாமிய அடிப்படையிலிருந்து விலகுவது என்பது அல்-சவுத் மன்னர் பரம்பரைக்கு மெக்கா மெதீனா உள்ளிட்ட (எண்ணெய் வளம் கொழிக்கும்) நிலப்பகுதியை ஆளும் உரிமையை இழப்பதற்கு ஒப்பாகும்.

4. ஆட்சியைத் தக்கவைக்க முல்லாக்கள், மதத்தலைமைகள் ஆகியோரின் அங்கீகாரம் சவுதி மன்னர் பரம்பரைக்கு அத்தியாவசியமான ஒன்று.

5. எனவே வஹாபிய இஸ்லாத்தின் அடிப்படைவாதம், அல்-சவுத் பரம்பரையினரின் ஆட்சி, இந்த ஆட்சிக்கு முல்லாக்களின் அங்கீகாரம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவையாகி, ஒன்றுக்கொன்று உரமாகி வளர்ந்திருக்கின்றன.

6. சவுதியின் எண்ணெய் வளத்திற்கு நவீன கல்வியறிவும், அறிவியல் தொழில்நுட்பமும் மிக அவசியம். ஆனால் நவீன அறிவியல் கூறுகள் பல இஸ்லாத்துக்கு எதிராக வேறு இருப்பதால் மதத்தலைமை இவற்றை அங்கீகரிக்க முடியாது (கவனிக்க: தலைமை முல்லா பின் பாஜின் பூமி தட்டை வடிவம் என்கிற ஃபாட்வா). நவீன உயர்கல்வியறிவோ ஆராய்ச்சியறிவோ தொழிற்கல்வியறிவோ சவுதி அரேபியரிடம் பரவச்செய்யும் வாய்ப்புகள் மிகக்குறைவு என்ற நிலையில் இதற்கு மேற்கு நாடுகளையும், இந்தியா போன்ற நாடுகளையும் சவுதி அரேபியா சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலை அறிவுத்துறைகள் மட்டுமன்றி திறன் உழைப்பு (skilled labor), உடல் உழைப்பு (manual labor) என பல துறைகளுக்கும் விரிந்தது. பொருளாதார வளர்ச்சியில் அவசியமாகிப்போன பல தொழிலாளிகளை (கட்டிடத் தொழிலாளி, தாதிகள் , காரோட்டுனர் இத்யாதி) பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை சவுதிக்கு ஏற்பட்டது.

7. இவர்களில் பெரும்பாலோர் முஸ்லீம்கள் என்றாலும், இவர்கள் எல்லோரும் வஹாபிக்களோ சுன்னிக்களோ இல்லை. இது மட்டுமல்லாமல், காஃபிர்களான இந்துக்களின் பங்களிப்பும்கூட – அன்றாட வேலைகளில் மட்டுமல்லாது தகவல் தொழில்நுட்பம், கருவியியல் துறை, மின்னணுவியல் போன்ற அறிவுத்துறைகளிலும் அதிகம் தேவைப்பட்டது. ஆக, “வழி தவறிய” வழிபாட்டாளர்களும் , காஃபிர்களும் இல்லாது தமது ஒரே இறைவன் அளித்த எண்ணெய்ச் செல்வத்தைக்கூடத் துய்க்க முடியாது என்ற இக்கட்டான முரண் நிலை சவுதியின் மதவாத அரசுக்கு உண்டாகிப் போனது.

8. இந்த முரண்பாட்டை சவுதியின் முல்லாக்கள் மிகச்சரியாக உபயோகப்படுத்திக்கொள்ளத் தொடங்கினர். முஸ்லீம் அல்லாத பிற மக்களால் “களங்கப்படும்” புனித நிலத்தை சவுதி மன்னர் தொடர்ந்து அரசாள வஹாபிய மதத்தலைமையின் ஆசீர்வாதம் தேவையாக இருந்தது. சவுதி அரசுக்கு தமது ஆசீர்வாதம் தொடர, மன்னருக்கு சமமாக அமர்ந்து பேசும் அளவுக்கு தலைமை முல்லாவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு சக்தி வாய்ந்ததொரு அதிகார பீடமாக வஹாபியத் தலைமை உருவெடுத்தது. எண்ணெய்ப்பணத்தைக் கொண்டு இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டு வஹாபிய அடிப்படைவாதமும் பிறமதக் காழ்ப்பும் ஒருங்கே கலந்து ஊட்டப்பட்டன. இஸ்லாமிய அறிஞர்களுக்கும் மதவாதிகளுக்கும் பெருமளவு முக்கியத்துவமும் அதிகார பலமும் பண பலமும் இத்தகைய பல்கலைக்கழகங்கள் ஒருங்கே தந்தன.

9. அன்றைய பனிப்போர் யதார்த்தத்தில், இஸ்ரேலுக்கு எதிராகவும் கம்யுனிச சோவியத்திற்கு எதிராகவும் ஜிஹாதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாக சவுதியின் இஸ்லாமிய பல்கலைகள் வடிவெடுத்தன. அமெரிக்காவிற்கு அன்று இவை எதிர்க்கப்பட வேண்டியவைகளாகத் தோன்றாதது மட்டுமல்ல- சோவியத்தின் ஆதிக்கப்பரவலுக்கு எதிரான அவசிய அரணாகவும் தெரிந்தது.

10. வஹாபிய அடிப்படைவாதம் மூலம் சவுதி அரசைக் கட்டமைத்த அல்-சவுத் பரம்பரை; சவுதியின் எண்ணெய் வளத்திற்குத் தேவைப்படுகின்ற – ஆனால் “இஸ்லாத்திற்கு எதிரான” – சக்திகளோடு இணைந்து செயல்பட வேண்டிய சவுதி அரசின் நிலை; இவ்வாறு செயலாற்றும் அரசுக்கு அங்கீகாரம் தர அடிப்படைவாத முல்லாக்களின் ஆதரவு; அந்த ஆதரவை நிலைநிறுத்த வேண்டி வஹாபிய அடிப்படைவாத கல்விப் பரவலுக்கு எண்ணெய்ப்பணத்தை வாரியிறைக்கும் சவுதி அரசு – இப்படியாக பல முரண்பட்ட கூறுகள் ஒன்றோடொன்று சார்ந்த ஒட்டுண்ணிகளாய் வெகு விரைவாக சவுதியில் வளர்ந்து கொண்டு வந்தன.

நெகிழ்ச்சியான ஒரு சமூக அமைப்பில் உள்ளுறை முரண்பாடுகள் சமூகச் சக்கரத்தை முன்னிழுக்கும் உராய்தல் சக்தியாகின்றன. ஆனால் சவுதி போன்ற இறுக்கமான கட்டமைப்புகளிலோ இத்தகைய உள்ளுறை முரண்பாடுகள் பெரும் விரிசல்களாகி சமூகத்தையே உடைத்துப் போடுகின்றன. மன்னர் ஃபைசல் கொல்லப்பட்ட கால கட்டத்தில் சவுதியின் அடிப்படைவாத சமூக அமைப்பில் ஏற்பட்டிருந்த அழுத்தங்கள் பல விரிசல்களை உருவாக்கி தவிர்க்க முடியாத ஒரு பெரும் உடைப்பை நோக்கி சவுதி சமூகத்தை இட்டுச் சென்று கொண்டிருந்தன. இதனை விரைவுபடுத்தும் விதமாக இஸ்லாமிய வருடம் 1400 முஹர்ரத்தின் முதல் நாளன்று – 1979 நவம்பர் 20ஆம் தேதி- ஜுஹைமான் உத்தய்பி மெக்கா மசூதிக்குள் தன் படையுடன் ரகசியமாகப் புகுந்து அதனைக் கைப்பற்றினான்.

அடுத்து: உடனடி விளைவுகள்

(தொடரும்)


Series Navigation

அருணகிரி

அருணகிரி

மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 1

This entry is part [part not set] of 35 in the series 20080904_Issue

அருணகிரி


மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 1

“If you are going where I think you are going, young Mike” said Tamian Godfrey on one of their daily hikes, “you will have to master the various levels of aggressiveness and fanaticism that you will be likely to encounter. At the core is self-arrogated jihad, or holy war, but various factions arrive at this via various routes and behave in various ways.”

– From ‘The Afgan’ by Frederick Forsyth
**************
1979 நவம்பர் 20- இஸ்லாம் காலண்டரில் முஹரத்தின் முதல் தினமான புது வருடத் துவக்க நாள். மக்கா மசூதியில் அன்று தொடங்கி இரண்டு வாரம் நடந்த போரில் சிதறிய உடல்களும் சிந்திய ரத்தமும், வன்முறைக்கும் வெறுப்பியலுக்கும் புனித சாயம் பூசப்படுவதன் விபரீத விளைவை எடுத்துக்காட்டின. அதன் எதிரொலி உலகெங்கும் நடக்கும் இஸ்லாமிய பயங்கரவாத நிகழ்வுகளாக இன்றும் கேட்கின்றன. யராஸ்லோவ் ட்ராஃபிமோவ் என்ற பத்திரிகையாளரின் விடா முயற்சியாலும் உயிர்ப்பயம் இருந்த போதிலும் உண்மை சொல்ல வெளி வந்த சிலராலும் இந்த நிகழ்ச்சிகள் இன்று “The siege of Mecca” என்ற புத்தகமாக வந்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இக்கட்டுரை இப்புத்தகத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் ஆனது.

1979 நவம்பர் 20- மக்கா மசூதி ஜுஹைமான் அல் உத்தய்பி என்ற சுன்னி இஸ்லாமியனின் படையால் கைப்பற்றப்பட்டது. அதனை விடுவிக்க நடந்த போரில் மக்கா மசூதி கவச வண்டிகளால் இடிக்கப்பட்டு, விஷ வாயு பாய்ச்சப்பட்டு, கொலைக்களமாக ஆனது. இந்த போர் மத்திய கிழக்கிலும், குறிப்பாக சவுதியிலும் கருக்கொண்ட பல அடிப்படைவாத இயக்கங்களுக்கும் பயங்கரவாத நிகழ்வுகளுக்கும் உரமானது. அடிப்படைவாத வஹாபியிசம் எண்ணெய் வள பண பலத்துடன் உலகெங்கும் தன் ஜிஹாதி வித்துக்களைப் பரப்பத் தொடங்கியது. மசூதி விரிவாக்கத்தில் முக்கியப்பங்கு வகித்த முகமது பின் லாடன் என்ற சவுதி கட்டிட காண்ட்ராக்டர் மகனான ஒஸாமா என்ற தீவிர இஸ்லாமிய இளைஞன் பின்னாளில் உலகம் வெறுக்கும் பயங்கரவாதியாக மாற உந்துதல் தந்தது.

மக்கா மசூதியில்தான் உலகமெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் புனிதமாக வந்து தொழும் காபாவின் ஹஸ்ருல் அஸ்வத் என்ற கருப்புக்கல் உள்ளது.(1) இஸ்லாம் வருவதற்கு முன்பே காபாவும் அதன் தெய்வச்சிலைகளும் அன்றைய அரேபியரால் தொழப்பட்டு வந்தன. மெக்காவைச்சேர்ந்த குரைஷி சமூகத்தினர் காபாவின் காப்பாளர்களாக அன்று இருந்தனர். பிற்காலத்தில் முகமது நபி அங்கிருந்த தெய்வச்சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்று கிளம்பியது குரைஷியரின் கடும் எதிர்ப்பைச் சந்திக்க, மெக்காவிலிருந்து மெதினாவிற்கு முகம்மது தப்பி ஓடினார். இந்நிகழ்வு ஹிஜ்ரா என அரபி மொழியில் வழங்கப்பட்டு, இஸ்லாமிய காலண்டரின் முதல் ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது. பின்பு மெக்கா மேல் படையெடுத்து அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கி, மெக்காவையும் மெதினாவையும் முஸ்லீம்கள் மட்டுமே நுழையக்கூடிய நகரங்கள் என விதித்தார்; அது இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


முன்கதைச்சுருக்கம்:

சவுதி அரேபியாவின் மன்னராட்சி சுன்னி வஹாபிய அடிப்படைவாதத்தில் கட்டமைக்கப்பட்ட ஒன்று என்பது தெரிந்தவர்களுக்கு, மக்கா மசூதி ஆக்கிரமிப்புக்கு அதே சுன்னி வஹாபிய அடிப்படைவாதிகள்தான் காரணம் என்ற செய்தி ஆச்சர்யமாக இருக்கும். இதன் பின்னணி அறிய சவுதி அரேபியா என்ற நாடும் அதன் வஹாபிய உருவாக்கமும் தெரிந்து கொள்ளப்பட வேண்டும்.

அரேபியாவில் அதன் பாரம்பரிய தெய்வங்கள், கோவில்கள், அரேபிய பூர்வீக வழிபாட்டு முறைகள் ஆகியவை நசுக்கப்பட்டு இஸ்லாம் நிறுவப்பட்டாலும், இறந்தவர்களை வழிபடும் தர்கா வழிபாடு, இயற்கை குறியீடுகளை வழிபடுவது போன்ற அரேபிய பாரம்பரிய இயற்கை சார்ந்த வழிபாட்டு முறைகள் முழுவதுமாக அழிந்து விடவில்லை. இவை நாளடைவில் வலுப்பெறவும் தொடங்கின. 18-ஆம் நூற்றாண்டில் எகிப்திய ஆட்டோமான் பேரரசின் பிடி தளரத்தொடங்கி ஷியா ஈரான் (பெர்சியா) வலிமையடையத்தொடங்கியது. அதே நேரத்தில் மத்திய கிழக்கிலும் அரேபியாவிலும் பிரிட்டிஷாரின் ஆதிக்கமும் தாக்கமும் பரவத் தொடங்கியது. இந்நிலையில், இஸ்லாத்தின் அடிப்படைக்கொள்கைகளிலிருந்து முஸ்லீம்கள் விலகிச்செல்கிறார்கள் என்ற் பயம் முஹம்மது இப்னு அப்தெல் வஹாப் என்ற சவுதி அரேபிய இஸ்லாமிய அடிப்படைவாதிக்கு உருவாகத் தொடங்கியது. இடையில் வந்து சேர்ந்த இந்த “களங்கங்களிலிருந்து” இஸ்லாத்தை மீட்டெடுத்து அதன் பழமைவாத அடித்தளத்திற்கு மீண்டும் முஸ்லீம்களை இட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் உருவாக்கிய இயக்கம் வஹாபிய இஸ்லாம் என்றும் அதனைப் பின்பற்றியவர்கள் வஹாபிக்கள் என்றும் அறியப்பட்டனர்.

வஹாபிய இஸ்லாம் கடுமையான மதக் கட்டுப்பாடுகளை உருவாக்கியது. இசை, நடனம், தர்கா வழிபாடு, புகையிலை, பட்டாடை போன்றவை இஸ்லாத்துக்கு எதிரானவையென்று தடை செய்யப்பட்டன. சுன்னிக்களின் ஒரு பிரிவான வஹாபிக்கள் ஷியாக்களை மட்டுமல்லாது தம் கொள்கைகளை ஏற்காத சக சுன்னிக்கள் மீதும் கூட தாக்குதல்களை நிகழ்த்தத் தொடங்கினர். கொள்ளையடித்தலும், கொலைசெய்தலும் கடவுளின் பணியாகவும் மதக்கடமையாகவும் மேற்கொள்ளப்பட்டன. கேள்விகள் எழுந்தபோது குரானும் முகமது நபியின் வாழ்க்கையும், ஹதீதுகளும் ஆதாரங்களாக எடுத்துக் காட்டப்பட்டு நியாயம் கற்பிக்கப்பட்டன. வஹாபியிசத்தின் இறுக்கமான பாதையைப் பின்பற்றாதவர்களை களங்கப்பட்ட கலப்பட இஸ்லாமியர்களாக வஹாபிக்கள் கண்டனர். புனித மெக்கா களங்கப்படக் கூடாது என்றும் இஸ்லாம் அல்லாதோர் உள்ளே வரக்கூடாது என்றும் முகமது விதித்தது எடுத்துக்காட்டப்பட்டு அத்தகைய மண்ணில் கலப்படமாக்கப்பட்டு இஸ்லாம் தன் புனிதத்தை இழப்பதா என்று வஹாபியத்தலைவர்கள் வாதிட்டனர்.

அடிப்படைவாதி அப்தல் வஹாபின் முக்கிய ஆதரவாளராக அன்று இருந்தவர் முஹம்மது அல்-சவுத். அல்-சவுத்தின் பிற்கால சந்ததியினர் இஸ்லாமிய உலகின் அன்றைய தலைவராக -அரேபியாவின் காப்பாளராக தன்னை வரித்துக்கொண்ட- ஆட்டோமான் சுல்தானையே எதிர்க்கவும் துணிந்தனர். 1802-இல் ஷியாக்கள் வசித்த கர்பாலா நகரைத் தாக்கினர். அங்கிருந்த மசூதிகளைக் கொளுத்தி, செல்வங்களைக் கொள்ளையடித்து, ஏறக்குறைய 4000 ஷியாக்களைக் கொன்று போட்டனர். கர்ப்பிணிப்பெண்களின் வயிறு கிழிக்கப்பட்டு அதனுள்ளிருந்த குறைச்சிசு தாய்ப்பிணத்தின் மீது எறியப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன. அடுத்த வருடம் மெக்கா தாக்கப்பட்டது. அங்கிருந்த தர்காக்கள் தகர்க்கப்பட்டன. பிறகு மெதீனா தாக்கப்பட்டு வஹாபிகளின் பிடிக்குள் வந்தது. வஹாபிக்களின் ஆட்சி அடுத்த 9 ஆண்டுகள் தொடர்ந்தது. ஆனால் துருக்கியின் மக்கள் ஹஜ் யாத்திரைக்கு வராமல் சவுதி மன்னன் தடுக்கத்தொடங்கியபோது அது இஸ்லாமிய உலகின் காவலராக இருந்த துருக்கி காலிபாவின் மேலாண்மைக்கே ஒரு சவாலானது. 1813-இல் துருக்கி சுல்தான் படை சவுதி அரேபியாவின் மீது படையெடுத்தது. ஐந்து ஆண்டுகள் நடந்த போரின் முடிவில், வஹாபியப் படைகள் தோற்கடிக்கப்பட்டு, சவுதி மன்னன் சிறைப்பிடிக்கப்பட்டான். இஸ்தான்புல்லுக்கு கூண்டில் கொண்டு வரப்பட்டு, மரண தண்டனையாக தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டான். சவுதி குடும்பம் இடம் பெயர்ந்து காலம் கனியும் என எதிர்பார்த்து வாழத் தொடங்கியது. அந்த எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

அடுத்து: வஹாபியிசம் வேர் கொண்டது

(தொடரும்)

Series Navigation

அருணகிரி

அருணகிரி