மூன்று பேர்- 2 தொடர் நிலைச் செய்யுள்

This entry is part [part not set] of 23 in the series 20010902_Issue

விக்கிரமாதித்தன்


இந்திரன் கூற்று

குற்றம் புரிந்தவன் சமாதானம்

கூற என்ன இருக்கிறது.

பாவல் செய்தவன் பழி முடித்தவன்

பேசத் தான் முடியுமா ?

தர்மத்தைக் கொன்றவன்

தலை நிமிர்ந்து பார்க்கத் தான் வழியுண்டா ?

மெளனத்துள் புதைந்து

மண்ணாய் இருக்க வேண்டியது தன்

மூண்ட மோகத்தீயில்

மீள முடியாது மாட்டிக் கொண்டேன்.

முன்வினை வந்து சூழ்ந்து

மோசம் போயிற்று எல்லாம்.

இன்யொரு மீட்சியுண்டா

இனிமேலும் உய்வுண்டா

பேதையை பெண்ணரசியை

பிள்ளை மனசை அழித்ததற்குப் பிராயச்சித்தமுண்டா

இந்திரனுக்கு போகம் இயல்பானது தான்

எந்த நாளும் இங்கே உள்ளது தான்

இடம் பார்த்தா ஏகுகிறது ஆசை

இஷ்டப் பட்டதில் விழுகிறது மனசு

தேவர்கள் தலைவன் தான் வெள்ளை யானை சவாரி தான்

திசைகளும் ஏவல் செய்யும் தான் தீயும் வணங்கும் தான்

நடந்து முடிந்த கதைக்குப் பிறகு நானொரு நடைப் பிணம்

நல்லது செய்தாற்கால் நல்லதே விளையும் நான் செய்தது தீவினை

அடிநாளில் ஆசைக்குத் தண்டனை

ஆயிரம் யோநிச்சுமை

ஒருநாள் ஒருபொழுது

உயிரோடு உயிராய் கலந்தது

காலகாலத்துக்கும் பழிபாபம் வந்தது

கூடவே குடி கொண்டது அவமானம்

காதல் காமமான கேவலம்

காமம் கழிவிரக்கமான சோகம்

மனைவியின் மீதுள்ள பாசத்தில்;

மாமுனியும் சாபமிட்டான்

பெரிது பெரிது பெரிதினும் பெரிது

பிறன்மனை நோக்காப் பேராண்மை

எனில் எக்காலத்திலும் இருக்கிறதே

முக்கோண உறவுச் சிக்கல்

பாவம் அகல்யா பாவம் கெளதம முனி

பாவம் பாவம் பரிதாபம் நானும்

காதலித்தேன் காதலித்தேன் ஆழமாய்

கருத்தழிந்தாள், கருத்தழிந்தாள் நிமிஷமாய்

காமமென் ஆவி பற்றியது

கண்மனம் குருடாகிவிட்டது

கைபிடித்தவள் அன்பை கற்பு நெறி வாழ்வை

கண நேரம் மறந்து விட்டேன் கண்ணியம் துறந்துவிட்டேன்

ஆண்டு அனுபவிக்கும் ஆசையெனக்கு

அறியாது இடம் தந்த ஏழை மனசு அவளுக்கு

பேராசையில் போகித்து

பொல்லாக்கு தேடிக் கொண்டேன்

இழக்கக் கூடாததை இழந்து

ஏகாந்தக் கல்சிலையாகி நின்றாள் அவள்

கோபத்தில் சாபமிட்டு

குற்றத்தை உலகுக்கு விளம்பரப் படுத்திவிட்டான் முனிவன்

உடம்பை மறைத்தாலும்

உள்ளத் தீயை அணைக்க முடியாது அலைகிறேன் நானும்

மார்க்கம் வகுத்து வைத்திருப்பதை

மனசு சொன்னால் கேட்கிறதா

வாழ்விலக்கணம் மீறினால்

வருவதெல்லாம் சிக்கல் சிடுக்கு சீரழிவு

உயிரைச் சுடுகிறது

ஒருத்தி பாபம்

ஓடி ஒளீய இடமேது

உய்வடைய வழியேது

தீயெல்லாம் சுட்டெரிக்குமா

திசைகளென்னை விழுங்குமா

காலத்தைச் சங்காரிக்க முடியாது

கழுத்தில் விழுந்த மாலையாய் சுமந்து அலைகிறேன்

கொண்ட கோலம் கெட்ட காலம்

குமைந்து குமைந்து பேதலித்துத் திரிகிறேன்

கண நேரத்து சுகத்திற்காக

சாஸ்வதமும் தண்டனை

எவ்வளவு பெரிய பீடத்திலிருந்து

எவ்வளவு அதல பாதாளத்தில் விழுந்துவிட்டேன்

மனம்போன போக்கில் போனால்

மரணாவஸ்தை நிச்சயம் தானே

கடக்க முடியாத போது

அடித்துச் செல்லப் பட வேண்டியது தான்

ஊர்வசி ரம்பை என்றிருந்தும்

ஊழ்வினை வந்து விழத்தட்டி விட்டதே

ஆசை கொள்வது தப்பா

காமம் கொள்வது குற்றமா

மனசின் குரலை மதிப்பது மாபாவமா

எடாத எடுப்பென்கிறார்கள்

அடாவடி காரியமென்கிறார்கள்

தகாத ஆசையென்று கண்டனம் செய்கிறார்கள்

மனசுக்கு விசுவாசமாயிருந்தது மாபாதகமா

அழிக்க முடியாத சிந்தையை என்ன செய்ய

துடைக்க முடியாத எண்ணத்தை என்ன செய்ய

அடைய முடியாத பொருள் மீது தானே அபிமானம் மாறாதிருக்கிறது

அழிவுதான் முடிவென்று தெரிந்திருந்தும்

அடிமனசில் வேடக் விடுகிறதா தொடர்கிறதே

கற்பென்பதும் ஒழுக்கமென்பதும்

கட்டிவைத்த கதைகள் இல்லையா ஒருவகைக்கு

வானமும் பூமியும் பொது

காற்றும் நெருப்பும் பொது

நீரும் பொது என்பது தானே ஆதிநிலை

இதுபோலத் தானே இருந்தது பெண்கள் நிலை

வகுத்துவைத்த சாத்திரத்திற்கு பின்னே இருப்பது என்ன

தனிமனித சுயநலமல்லாமல் வேறென்ன

நிலத்தைக் கையகப் படுத்தியது போல

பெண்களையும் பந்தப் படுத்தியது யார் எப்படி

ஆடு மடுகளைப் போல அடைத்து வைப்பது எதற்காக

அன்பு பண்பென்ற வார்த்தைகள் எவ்வளவு தூரம் உண்மை

யார் செய்த விதிகள் அவை

யாருக்காய் செய்த திட்டங்கள் இவை

பெண் மனசு போல வாழட்டும் என்றாலென்ன

பூட்டி வைக்கும் புத்தி என்றைக்குத் தோன்றியது

போகட்டும் தோன்றியது செய்தேன்

பிரபஞ்சமுள்ள வரை பிழையென்றே கரிக்கட்டும்

சதுரத்தில் வாழமுடியாதவர்கள் சராசரிகள்

உடைப்பவர்களென்ன சண்டாளர்களா

என்னை முன்னிறுத்தி எத்தனை பேர் கனவைக் கொல்வார்களோ

என்னைக் கொச்சைப் படுத்தி எத்தனை பேர் மனசைக் கொல்வார்களோ

காலத்துக்கும் பழி சுமத்திவிட்டால்

காமத்தைத் தான் கொன்று விட முடியுமா

பிளவுபட்ட மன நிலைக்குப் பெரிதும் காரணமே

போகத்தை ஒடுக்கிப் பெண்ணை அடிமைப்படுத்தியதுதான்

பாலியல் பஞ்சமுள்ள நாடாய்

பாரத நாட்டை ஆக்கிவிட்டுப் பண்பாடு பேசினால் என்ன பலன்

பெண்ணெனும் கடல் பொங்கினால் என்னவாகும்

பெண்ணெனும் சக்தி பீறிட்டு வந்தால் என்னவாகும்

தனிமனிதனாய் நான் செய்வது குற்றமாகவே இருக்கட்டும்

இனி இங்கே இது நிகழாது என்பதற்கு என்ன உத்தரவாதம்

பட்டை போடப்பட்ட குதிரைகள் இல்லையே உயிர்கள்

பார்க்க நேர்வதும் பிறகு அவஸ்தை கொள்வதும் நிகழாதா

வலியவன் எளியவன் பத்தினியை அபகரிப்பது நடக்காதா

இஷ்டப்பட்டே சேர்வதும் இல்லாமல் போய்விடுமா

கோடுகளும் சாஸ்வதம் தாண்டல்களும் சாஸ்வதம்

காலங்காலமாய் காமத்துக்கு உதாரணமாகிவிட்டேன் நான்

இந்திரனையும் அழிக்கமுடியாது

அகலிகையையும் அழிக்க முடியாது

கெளதம முனியையும் அழிக்க முடியாது

பெயர்கள் தான் மாறும் காட்சிகள் மாறா

நிரந்தர நாடகமிது மூன்று பேர்

Series Navigation

விக்கிரமாதித்தன்

விக்கிரமாதித்தன்