முதலாளித்துவச் சூழலியல் – முதலாளித்துவச் சூழலியற் சிக்கல் – இறால் பண்ணைகள்; (Prawn Farms)

This entry is part [part not set] of 28 in the series 20050826_Issue

ஏ.எம். றியாஸ் அஹமட்


(A.M. Riyas Ahamed, University of Witwatersrand, Johannesburg).

வர்த்தகமயப்படுத்தப்பட்ட முதலாளித்துவ விவசாய (Agriculture), நீர்ியல்வளர்ப்பு (Aquaculture) முறைகள்தான் இன்றைய சூழலின் நிலைத்;த பேணுகைக்கு சவால்விடும் காரணிகளாக இருந்து வருகின்றன. இவைகள் தமது தொழில் நலன்களை மட்டும் கருத்திற் கொண்டு, உணவுப் பொருட்களின் தரம், மதிப்பு, நோய்த் தடுப்புத் திறன், சூழலுக்கு ஏற்ற தன்மை போன்றவற்றை தூர எறிந்த விட்டது. முதலாளித்துவமானது சந்தையைக் கட்டுப்படுத்துவதற்காக வர்த்தகத்தைக் கைப்பற்றியது. பின்னர் விவசாயத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பதில் தனது நுட்பங்களை பயன்படுத்தியது. இதனால் சூழலின் சமனிலை பாதிக்கப்பட்டு, சூழல் மாசடைந்து, பல்தேசியக் கம்பனிகளுக்கு சாதகமான சூழலின் உயிாியலின் எளிமையான தன்மை உதயமானது. மேற் சொன்ன விடயங்களை இலங்கையின் வடமேற்கு, கிழக்கு மாகாணங்களில் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் செய்கைபண்ணப்பட்டுவரும் இறால் பண்ணை- நீாியல் வளர்ப்பு முறைகளுடாக நோக்குவோம்.

நீாியல் வளர்ப்பை (Aquaculture) – நீர்ச் சூழலில் வாழுகின்ற தாவர விலங்குகளை அச் சூழலில் வளர்த்து அறுவடை செய்யும் முறை என வரைவிலக்கணப்படுத்தலாம். இம் முறையில் மீன்கள், (உணவிற்காகவும், மீன்களுக்கான இரைகளாகவும், அலங்கார வளர்ப்பு நோக்கத்திற்காகவும், முத்து, மட்டி, நத்தைகள், கடற் சாதாளைகள், களைகள், முதலைகள் (தோல்களுக்காக), தவளைகள் (உணவிற்காகவும், பாிசோதனைகளுக்காகவும்), கணவாய், ஆமைகள் போன்றவைகளும் வளர்க்கப்படுகின்றன.

Penaeus monodon (வெள்ளை இறால்)ஐ மையமாகக் கொண்ட இறால் வளர்ப்பானது மிகவும் விரைவாக வளர்ந்து வரும், ஏற்றமதி நோக்கான கைத்தொழிலாகவும், இலங்கைக்கு அதிக வெளிநாட்டுச் செலாவணியை பெற்றுக் கொடுக்கும் ஒரு கைத்தொழிலாகவும் வளர்ந்து வருகின்றது. நீாியல் வளர்ப்புப் பொருட்களை ஏற்றுமதி செய்ததில் கிடைத்த வெளிநாட்டுச் செலாவணியில் இறாலானது 48 வீதம் தொடக்கம் 70 வீதம் வரையில் பங்கு வகிக்கின்றது. துரதிருஸ்டவசமாக இறால் வளர்ப்புக்குத் தேவையான நிலமும், உவர் நீர் வசதிகளும் உள்ள பகுதிகள் இலங்கையில் மிகக் குறைவாகும். இதன் காரணமாக இறால் பண்ணைகளின் பரம்பல் இலங்கையில் ஒரு குறித்த பகுதிகளுக்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இறால் வளர்ப்பானது, இலங்கையில் வடமேல் மாகாணத்தின் 120 கிலோமீற்றர் நீள 10 கிலோமீற்றர் அகலப் பரப்பிற்குள் அடங்கும் சிலாபம் கடனீரேரி, டச்சுக் கால்வாய், முந்தல் கடனீரேரி, புத்தளம் கடனீரேரி, மற்றும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு கடனீரோி, வாழைச்சேனை கடனீரோி, வாகரை கடனீரோி பகுதிகளில் இரு ஏக்கா;கள் முதல் 300 ஏக்கா;கள் வரை நூற்றுக் கணக்கணக்கான அனுமதியுள்ளதும் , மற்றும் சட்டவிரோதமானதுமான முயற்சிகள் வர்;த்தக நோக்கில் குறுகிய கரையோர பரப்பில் செய்கைபண்ணப்பட்டு வருகின்றன. வுடமேல் மாகாணத்தின், முந்தல் கடனீரோி, டச்சுக் கால்வாய்ப் பகுதிகளில் மொத்தப் பண்ணைகளில் 70 வீதமான இறால் பண்ணைகள் இருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

இறாலின் தேவையானது ஜப்பான், அமாிக்கா. ஐரோப்பிய நாடுகளில் மிக அதிகம். ‘இறால் வளர்ப்புத் திட்டங்கள் அதிகாித்து வருகின்றபோதும், கடலில் இருந்து பிடிக்கப்படும் இறாலின் அளவு மிகவும் அதிகமாகவே உள்ளது. மேல் நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகாிப்பு இறால் வளர்ப்புத் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக அமைந்துள்ளது. நமது நாட்டின் தற்போதைய ஏற்றுமதி மிகவும் குறைவு. ‘ என்று கருதிய நமது நாட்டுக் கொள்கை வகுப்பாளர்களும், முதலீட்டு அதிகார சபையும் (BOI) இத்தகைய இறால் வளர்ப்புப் போன்ற நீாியல் வளர்ப்பு முறைககள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று பாிந்துரை செய்தனா. இதன் நிமித்தம் அரச, தனியார் வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சிகரமான கடன்களை வழங்கின. வழங்கியும் கொண்டிருக்கின்றன.

பெருகி வரும் இத்தகைய சட்டபூர்வ, சட்டவிரோத இறால் பண்ணைகளே, அதிகாித்து வரும் கடல்நீரேரிகளினதும், அதனை அண்டி வாழும் மக்களினதும், உயிாிகளினதும் சுற்றுச் சூழலுக்கு மிகவும் மாசையும், அபாயத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன என்று ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக செய்யப்பட்டு வருகின்ற ஆய்வுகள் தொிவிக்கி;ன்றன. இலங்கையில் தற்போது நடைமுறையில் இருந்து வருகின்ற இறால் வளர்ப்பு முறைகள் தன்மாசுபடலையும் (autopollution) – அதாவது தானே தனது சுற்றுச் சூழலையும் தன்னையும் மாசுபடுத்திக் கொள்வதுடன் மற்றச் சூழலையும் மாசுபடுத்தச் செய்து கொண்டிருக்கின்றன. வடமேல் மாகாணத்தின் கடனீரேரிகளில் (lagoon)8 இல் செய்யப்பட்ட ஆய்வுகள் அந்த நீரேரிகளை அண்டி வாழ்ந்த மக்களினதும், உயிாிகளினதும், பெளதிக, கலாச்சார, மானிட கூறுகள் இறால் பண்ணைகளினால் எதிர் கொண்ட பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்;தன.

இந்த வெளிப்படுத்தப்படட பிரச்சினைகள் யாவை என்று பர்ர்ப்பதற்கு முன், இறால் பண்ணைகளால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு அரசாங்கம், இறால் பண்ணை செய்கையாளர்களை ஆரம்ப சுற்றாடற் பாிசீலனை (Initial Environmental Examination) செய்ய வேண்டுமென பணிக்கப்படுகின்றது. இந்த பாிசீலனை அறிக்கையானது, இறால் பண்ணைகளினால் சூழலுக்கு ஏற்படக் கூடிய தீய பாதிப்புக்களையும், இவற்றிற்கான பாிகாரங்களையும், அல்லது தீர்வுகளையும் கொண்டிருக்கின்றன. இந்தப் பாிசீலனை அறிக்கையின் பிரதிகள், சில அனுமதிப் பத்திரங்களை வழங்கும் அதிகாரமுள்ள அரச நிறுவனங்களுக்கும், சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் அனுப்பப்படும். இத் திட்டத்தினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதக-சாதகங்கள் மக்களுக்கு தொிவிக்கப்படும். அத்துடன்; முதலாளி அல்லது தொழிலாளி சார்பான முடிவுகளை எடுக்க அல்லது மதில்மேல் பூனையாக இருக்க அரசியல்வாதிகளும், இத்திட்ட அறிக்கைகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். இந்தபாிசீலனை அறிக்கையானது, இத்திட்டங்களை அங்கிகாிக்கும் அதிகாரமளிக்கப்பட்ட சபை அவசியமென்று கருதினால், சுற்றாடற் பாதிப்பு அறிக்கையை (Environmental Impact Assessment) சுருக்கமாக EAIஐத் தொடர்வதற்கான அவசியத்தையும், தேவைகளையும் கொண்டதாக இருக்கும்.

சுற்றாடல், சமூக பொருளாதார பிரச்சினைகள்

இறால் பண்ணைகளிலிருந்து வெளியேறிய கழிவுகளை பாிகாிக்காது நேரடியாக நீர்நிலைகளில் விட்டதன் காரணமாக, நீர்நிலைகளில் வெப்பநிலை, உவர்த்தன்மை, மின்கடத்துகை, பீஎச், BOD, COD, நீர் வன்மை, கல்சியம், மகனீசியம், கட்மியம், இரசம், செம்பு, குளோரைட், சல்பேற், சல்பைற், பொற்பேற், நைத்திரேற், நைத்திரைற் போன்றவற்றின் அளவுகள் நியம அளவைவிட மாறுபட்டுக் காணப்பட்டன. வடமேல் மாகாணத்தில் ஜெயசிங்க குழுவினாின் ஆய்வுகளும் (1995), கிழக்கு மாகாணத்தில் றியாஸ் அஹமட் குழுவினாின் ஆய்வுகளும் (2000) இதே முடிவுகளையே கொடுத்திருக்கின்றன.

இறால் பண்ணைகளினால் ஏற்பட்ட சமூக பொருளாதார பிரச்சினைகளைப் பற்றி நோக்குவோம். சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு மூல காரணம் இறால் பண்ணையாளர்களுக்கம் சுற்றயல் மக்களுக்குமிடையே தோன்றும் முரண்பாடுகளே (conflicts)13. வட மேல் மாகாணத்தில் அவதானிக்கப்பட்டதில், இறால் திருடுதல் மிக முக்கிய பிரச்சினையாக இருக்கின்றது. 25 தொடக்கம் 35 கிராம் அளவுள்ள ( 3 தொடக்கம் 4 மாத வயதான ) இறால்களுள்ள குளத்தில் ஒரு வீச்சு வலையின் (உயளவ நெவ) வீச்சில் 2 தொடக்கம் 3 கிலோ கிராம் இறால்கள் அகப்பட முடியும். இது 2500 ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியைக் கொண்டது. ஒரே இரவில் பல்லாயிரக் கணக்கான ரூபா பெறுமதியுள்ள இறால்கள் திருடு போகின்றன. நாள் முழவதும் நதியில் இறங்கி மீன்பிடித்தாலும் ஒரு மீனவனுக்கு 350 ரூபாவிற்கு மேல் கிட்டுவதில்லை. எனவே பணத்தாசை காரணமாக திருட்டுத்தனம் ஊக்குவிக்கப்பட்டு திருடர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் இறால் திருடு போவது சம்பந்தமான முறைப்பாடுகள் அதிகாித்துக் கொண்டே வருகின்றன. ஆராச்சிக்கட்டுவ மதுரங்குளி போன்ற பகுதிகளிலும் மட்டக்களப்பு பகுதிகளிலும் இது நன்கு அவதானிக்கப்பட்டுள்ளது.

யாதாயினும் ஒரு பொருள் விவசாயிக்கு அல்லது பண்ணையாளனுக்கு தொந்தரவை அல்லது விரும்பத்தகாததை செய்யுமாயின் பீடை என்கிறது உயிாியல். மட்டக்களப்பு வாவியைச் சுற்றிச் செய்கை பண்ணப்படும் இறால் பண்ணைகளின் முக்கிய பீடை மனிதன் என்பது எமது அவதானங்களிலிருந்து தொியவந்திருக்கின்றது.

75 வீதமான கிராம மக்கள் இறால் பண்ணைகளினால் தோற்றுவிக்கப்படும் வெள்ளப்பெருக்கு தங்களது வீடுகளையும் விவசாய நடவடிக்கைகளையும் பாதிப்பதால் இந்தப் பண்ணகைளுக்கு எதிராக இருக்கிறார்கள். இதன் காரணமாக, வெள்ளப்பெருக்கு சம்பந்தமான பிரச்சினைகளும் பண்ளையாளர்களுக்கும் கிராமத்தவர்களுக்குமிடையே சமூகவியற் பிரச்சினைகளைத் தோற்றுவித்திருக்கின்றது.

1995ம் ஆண்டு வடமேல் மாகாணத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மக்களில் 2 வீதமான மக்களுக்கு தோல் நோயும், 92 வீதமான மீனவர்களுக்கு மீன்பிடியில் குறைவும், இறால் பண்ணைக் கழிவுநீர் நீர் நிலைகளில் விடப்பட்டதால் ஏற்பட்டதாக தொிய வந்திருக்கின்றது.

இறால் பண்ணைச் செய்கைக்காக கண்டற் சூழற்றொகுதிகளை (காடுகளை) அழித்ததனால், கண்டற் காடுகளை நம்பிய குடிசைக் கைத்தொழிற் துறையானது பிரச்சினைகளை எதிர் கொள்ளத் தொடங்கியது. இதனால் குடிசைக் கைத்தொழிலாளர்களுக்கும் இறால் பண்ணையாளர்களுக்கும் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. அத்தோடு குடிசைக் கைத்தொழிலாளர்களின் வருமானமும் குறைக்கப்பட்டுள்ளது.

முன்பு கண்டல் காடுகள் அரச காணிகளில் இருந்தன. எனவே மக்கள் அதனை இலகுவாக பயன்படுத்தினர். இப்போது இவைகள் தனியார் கம்பனிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால் கண்டல் காடுகளை பாவிக்க முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. கண்டற் காடுகளிலிருந்து பெறப்படுகின்ற பொருட்களால் மீன்பிடி உபகரணங்கள் செய்ய முடியாமற் போனமையும் மீன்கள் இனப்பெருக்கும் இடங்கள் அழிந்தமையும்; கிராமிய மீனவர்கள் வருமானத்தை இழக்க காரணிகளாகியிருந்தன.

ஆடு மாடுகள் மேயும் மேய்ச்சல் நிலங்களிலும் இறாற் பண்ணைகள் அமைக்கப்பட்டதால், பண்ணையாளர்களுக்கும், கால்நடை வளர்ப்போருக்கமிடைியல் முரண்பாடுகள் தோன்றின. இதே போன்று நெற் செய்கையாளர்களுக்கும், தென்னைச் செய்கையாளர்களுக்கும் பண்ணைச் செய்கைக் காரா;களுக்குமிடையே முரண்பாடுகள் தோன்றின.

எனவே இறாற் பண்ணைகளினால் சூழலில் ஏற்படும் தாக்கமானது, ஒரு கைத்தொழில் என்ற வகையில் இறாற் பண்ணைகளின் நிலைபேறான தன்மைக்கே (sustainability) சவால் விடுகின்றன. தரக்குறைவான நீாியற் பண்புகளாலும் சுற்றுச் சூழல் பாதிப்புக்களாலும் இறால் உற்பத்தியில் ஏற்படும் குறைவானது இறாற் பண்ணைகளினால் வரும் வருமானத்திலும் பாாிய குறைவை ஏற்படுத்துகின்றன. இந்தக் காரணிகளுடன் சமூகவியற் காரணிகளும் சேர்ந்து இறால் பண்ணைகளின் தொடர்ச்சியான இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

மக்கள் நலனையும், சுற்றுச் சூழல் நலனையும் முதன்மைப்படுத்திய சூழலுக்கும் சமூகத்திற்கும் சேதத்தை ஏற்படுத்தாத இறால் வளர்ப்புத் திட்டங்கள்தான் இறால் உற்பத்தியைக் கூட்டி அதன் நிலைபேற்றுத்தன்மையையும் மாறாமல் வைத்திருக்கும்.

riyas@gecko.biol.wits.ac.za

Series Navigation

ஏ.எம். றியாஸ் அஹமட்

ஏ.எம். றியாஸ் அஹமட்

முதலாளித்துவச் சூழலியல் – முதலாளித்துவ-சூழலியற் சிக்கல் – 02

This entry is part [part not set] of 22 in the series 20050819_Issue

ஏ.எம். றியாஸ் அஹமட்


(A.M. Riyas Ahamed, University of Wits, Johannesburg)

நாம் எதிர்கொள்ளுகின்ற சூழலியற் சிக்கலானது நாங்கள் வாழ்ந்துகொ;ணடிருக்கின்ற முதலாளித்துவ பொருளாதார உலகத்தின் நேரடி விளைவு என முன்னர் பார்த்தோம். உலகில் இதற்கு முன்னர் வரலாற்று ரீதியாக நிலவிய புராதன பொதுவுடமைசமூக பொருளாதார முறை, ஆண்டான்-அடிமைப் பொருளாதாரமுறை, மானிய பொருளாதார முறை போன்றன சூழலைச் சிதைத்து இயற்கைச் சமநிலையைக் குழப்பிவிட்டு உயிாிகளின் நீடித்த நிலைத்த நிலவுகைக்கு சவாலாக இருந்தது மிகக் குறைவு. ஆனால் வரலாற்று முதலாளித்துவம் ஒன்றுதான் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் உலகைப் பரவி, மனிதனுக்கும் அவனின் பயன்பாட்டுக்குாிய உயிாகளுக்குமான நிலவுகைக்கு அபாயத்தை ஏற்படுத்தியது எனலாம்.

சுற்றுச் சூழல் மாசுபடுத்தப்பட்டு சேதமாக்கப்படுவதன் தீவிரத்தன்மையை உணரும் திறன் ஆளுக்கு ஆள் வேறுபடுகின்றது. சூழலிற்கு ஏற்படுத்தப்படும் சேதத்தின் தன்மையை உயிாியல், பெளதிக, இரசாயன, சமூக, கலாசார பண்பாட்டு, மானிடவியல் ரீதியாக பலமுறைகளில் பகுப்பாயலாம். ஆனால் உண்மையில் சூழலியற் பிரச்சினைகள் இயற்கை விஞ்ஞான பகுப்பாய்வுகளோடு, தற்போதையை உலகின் அரசியற்-பொருளாதார கொள்கைகளோடு பகுத்தாய்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

எங்களுக்கு பல சகாப்தங்களுக்கு முன் வாழ்ந்த எழுத்தறிவில்லாத, கல்வியறிவில்லாத மனிதா;களோடு ஒப்பிடுகையில் நாங்கள் அறிவில் கூடுதலானவர்களாக இருக்கிறோம். முன்பு வாழ்ந்து இறந்தவர்களை விட, எங்களுக்கு தீங்கு தரும் நுண்ணுயிர்கள் பற்றியதும், சுகாதாரப் பிரச்சினைகள் பற்றியதும், சுற்றுச் சூழலில் கலக்கின்ற நஞ்சுகள் பற்றியதும், அதனைத் தடுப்பது பற்றியதும் அறிவு அதிகம் எனலாம். அந்த அறிவினால் நம்மைப் பாதுகாத்தும் வந்திருக்கின்றோம். பாதுகாத்தும் வருகின்றோம். இந்த அறிவினை பல்வேறு வழிகளில் பெற்றிருக்கின்றோம். தனியொரு நபரை எடுத்துக் கொண்டால், முன்பிருந்த சூழலியலின் அரசியல் பிரச்சினை விடயங்கள் பற்றிய அறிவைவிட இப்போது அதிகம். இந்த பிரச்சினை விடயங்களை ஒரு ஆரோக்கிய வழியில் முன்னெடுத்து செல்கிறோமா என்பது கேள்விக் குறியே. நிறைய நேரங்களில் நாம் இந்த முன்னெடுத்துச் செல்கையை நிராகாித்து விடுகிறோம். எனவே இதனைப் பற்றி விவாதிப்பதற்குாிய நேரத்தை நாம் அடைந்துவிட்டோம். ஏனெனில் எம்மைச் சுற்றி அபாயம் அதிகாித்துவிட்டது. சுற்றுச் சூழலின் கூறுகளின் அம்சங்களில் -ஒசோனில் ஓட்டை என்றும், பச்சை வீட்டு தாக்கம் என்றும், அணு உலைக் கசிவுகள் என்றும் அபாயம் அதிகாித்துவிட்டதாக தரவுகளோடும், ஆய்வுகளோடும் நியாயித்து நிறுவப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

உண்மையில், “அபாயம் அதிகாித்து விட்டது, அதற்கு ஒவ்வொருவரும் எதிர்வினை காட்டத்தான் வேண்டும்” என்பதை நாம் ஒரு கருதுகோளாக வைத்துக் கொள்வோம். இந்த அதிகாித்து வரும் அபாயத்திற்கு எதிர்வினை செய்வதற்கு முன், அதன் முன்னே இரு கேள்விகள் உதயமாகின்றன.

1) யாருக்கு அபாயம் காத்துக்கொண்டிருக்கிறது ?

இந்தக் கேள்வி மேலும் இரு கூறுகளையுடையது,

1) மனித குலத்தின் மத்தியில் யாருக்கு அபாயம் காத்துக்கொண்டிருக்கிறது ?

11) உயிர்வாழ் அங்கிகளின் மத்தியில் எவற்றுக்கு அபாயம் காத்துக் கொண்டிருக்கிறது ?

2)அதிகாித்த அபாயம் என்ன கூறுகிறது ? யாருக்கு அபாயம் காத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறது ?

இதில் முதலாவது கேள்வி, முதலாளி-தொழிலாளி, சுரண்டுவோர்-சுரண்டப்படுபவர் வகையான கேள்வியும், இரண்டாவது கேள்வி ஆழமான சூழலியல் சம்பந்தப்பட்ட கேள்வியுமாகும்.

இப்போது விடயத்திற்கு வருவோம். இந்த இரு கேள்விகளும் உதயமானது, முதலாளித்துவ மையவாத நாகாிக வளர்ச்சியின் அடிப்படை, இயற்கைப் பண்புகள், முதலாளித்து பொருளாதார உலகின் தொழிற்பாடுகள் போன்றவைகளே இந்;த வினாக்களுக்கான மூல காரணங்களாகும். இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு “யாருக்கு” என்று முன்பெழுந்த வினாக்களைப் பகுப்பாய்வோம். முதலாளித்துவத்திற்கு இரண்டு அடிப்படைப் பண்புகள் இருக்கின்றன. முதலாவது பண்பு, முதலாளித்துவமானது தனது ஏகாதிபத்திய தேவைகளின் நிமித்தம் அல்லது அதனை விருத்தி செய்வதற்காக மொத்த உற்பத்தியை கூட்டுதல் என்ற பெயாில் தங்களது முக்கியமான நோக்கத்தை அடைவதற்காக புவியியல் பரப்புக்கள் தாண்டி மூடிவற்ற மூலதனங்களைக் குவித்து வைத்தல். இரண்டாவது பண்பு, வரையறை இல்லாத மூலதனங்களாகும். முதலாளித்துவாதிகள், (குறிப்பாக பெரும் முதலாளித்துவவாதிகள்) தங்களது கணக்கு வழக்குகளைக் காட்டுவதில்லை. இது முதலாளித்துவத்தின் “ஊத்தை இரகசியம்” எனப்படும்.

இவ்வாறான வரையறையற்ற மூலதனத்தை குவித்து, உலக முதலாளித்துவத்தை முதலாளித்துவவாதிகள் விாித்து செல்வதற்கான உழைப்பிற்கு, நிலம் தேவைப்படுகின்றது. இங்கே அவர்கள் (சூழலைக் கருதாது) “இயற்கையை வெல்”, “எல்லாம் மனிதருக்காக” என்ற தாரக மந்திரங்களை உருவாக்கி நிலத்தை சுரண்டோ சுரண்டென்று சுரண்டி தங்களது பரந்த ஏகாதிபத்தியத்தின் தேவைகளுக்கான உற்பத்தியைக் கூட்டுகிறார்கள். மேலே கூறிய தாரக மந்திரங்கள் 16ம் நூற்றாண்டில் ஆரம்பித்த முதலாளித்துவ உலக பொருளாதாரத்திற்கு பின்னர் உருவானவைகள்தான். அன்று இதற்கெதிராக கிளம்பிய சமூக எதிர்ப்புக்களையும், கிளர்ச்சிகளையும் அன்றிருந்தே முதலாளித்துவவாதிகள், அடக்கியும், மழுங்கடித்தும் வந்திருக்கின்றார்கள்.

முதலாளித்துவவாதிகளுக்கான வரையறையற்ற மூலதனங்களைக் குவிக்கும், முதலாளித்துவவாதிகளின் நலன்களுக்கே முன்னூிமை கொடுக்கும், இந்த வரலாற்று முதலாளித்துவத்தின், சுற்றுச்சூழற் பிரச்சினை பதினேழாம் நூற்றாண்டில் ஏற்படத் தொடங்கியது. அன்று அயர்லாந்தின் மரங்களை முற்று முழுதாக வெட்டிச் சாய்த்துவிட்டு, இன்று லத்தீன் அமாிக்க நாடுகளின் அமேசன் காடுகளை பாதுகாக்க வேண்டும் என்று முதலாளித்துவம் கூறுகிறது. முதலாளித்துவத்திற்கு புகார் (smog) என்பது 50 வருடங்களுக்கு முன்பு ஒரு புதுச்சொல்லாக லொஸ்ஏன்ஜல்சில் இருந்தது. இன்று பாாிஸ், ஏதென்ஸ் எல்லாம் தாண்டி, முதலாளித்துவத்தின் வேகமான வளர்ச்சியுடன், பல எல்லைகளையும் தாண்டி புகாரானது (smog) எங்கும் பரந்து விரவி, கிழக்கு, தென்கிழக்கு ஆசியா வரை வந்து விட்டது.

ஜனநாயமாதலும் அல்லது அதிக ஜனநாயகம் கூட சுற்றுச் சூழல் சிதைவுக்கு ஒரு காரணமாக இன்று கருதப்படுகின்றது. மக்களின் ஆடம்பர, சொகுசு, உல்லாசத் தேவைகள் அதிகாிக்க, அதற்காக அவர்கள் குரல் எழுப்புவார்கள். உடனே அவர்களின் தேவையை நிவர்த்தி செய்ய அதிகமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படும். இதனால் காற்று, நீர், நிலம், போன்றவை மாசடையும். அத்தோடு இந்த அதிகாித்த உல்லாச, சுகபோகப் பொருட்களின் உற்பத்திக்குப் பின்னால் பெருந்தொகையான பாதுகாக்கப்பட வேண்டிய உள்நாட்டுக்குாிய மரங்களும், விலங்குகளும் (உ-ம்: காண்டாமிருகம், யானை- கொம்புகளுக்காக, பாம்புகள,;புலி போன்ற பூனையினங்கள் – தோல்களுக்காக), அவைகள் சார்ந்து வாழும் சுற்றாடலும் சிதைக்கப்படுதல் (உ-ம்: மரங்கள் இல்லாவிட்டால் மழை கிடைக்காது அத்துடன் மண்ணாிமானமும் ஏற்படும். ஓரு விலங்கின் எண்ணிக்கை திடிரெனக் குறைதல் இயற்கைச் சமனிலையை குழப்பி இறுதியில் எல்லாவிலங்கின் அழிவுக்கும் காரணமாகும்) என்பது மிகப் பொிய சோகமாகும்.

முதலாளித்துவவாதிகளின் நோக்கில் அதிகாித்த உற்பத்தி என்பது இலாபத்தை அதிகாிப்பதற்காக. இலாபம் என்பது விற்பனை விலைக்கும், மொத்த உற்பத்திக்கும், செலவுக்கும் இடையே தனியே இயங்கிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ உலக பொருளாதாரத்தின் வரலாற்றின் தொழிற்படையினருக்கான பேரம் பேசும் சக்தி அதிகாித்துக் கொண்டே வந்திருக்கின்றது. அதிகாித்த உற்பத்தி தேவை காரணமாகவும், இலாப நோக்கம் கருதியும், குறைந்த விலையில் ஊழியர்கள் தேவைப்பட்டனர். இதனால் முதலாளித்துவம் பசப்பு வார்த்தை காட்டி கிராமப் புறங்களிலிருந்த, கிராமிய உணவுற்பத்திசார்ந்த விவசாய முயற்சிகளில் வெற்றிகரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த, பல நூற்றுக் கணக்கான தொழிலாளர் படைகளை குறைந்;த ஊதியத்திற்கு நகரங்களை நோக்கி நகரச் செய்தன. இதன் காரணமாக கிராமியப் பிறழ்வு ஏற்பட்டது. நகரத்து வாழ்க்கை பற்றிய கனவுகளுடன் சென்றவர்களுக்கு முதலாளித்துவம் குறைந்த ஊதியம் கொடுத்து, அத் தொழிலாளர்படைகளை நட்டாற்றில் கைவிட்டது. பின்னர் அவர்களை சோிப்புறங்களில் தள்ளிவிட்டது. அதிகாித்த சோிச் சனத்தொகையினரே இன்றைய பெரும் நகரங்களில் சுற்றுச்சூழல் மாசடைதலுக்கு பிரதான காரணிகளும் மிகவும் ஒன்றாக இருக்கிறார்கள். இந்த சோிப்புறங்களால் நீர், நிலம், வளி, சத்தம் போன்ற மாசுகள் ஏற்பட்டது முதலாளித்துவத்தின் கைவாிசைதான் என்றால் அது மிகையாகாது.

இன்று சூழலியல் ஒரு தீவிரமான அரசியல் போக்காக உலகின் பலபாகங்களில் மாறிக்கொண்டிருக்கின்றது. சூழலைப் பாதுகாப்போம் என்ற மையவாதக் கருத்தைச் சுற்றி பல அரசியல் இயக்கங்கள் சூழல் அழிவைத்தடுப்பதற்கும், நல்ல சூழலைக் கட்டியெழுப்புவதற்கும் களத்தில் கச்சை கட்டிக் கொண்டு நிற்கின்றன. இன்று எமது நாட்டில் அல்லது எமது பிரதேசங்களில் இவ்வாறான இயக்கங்களை முன்னெடுத்துச் செல்வதில் அல்லது இவ்வாறான சூழலியல்-அரசியல் போக்கை முன்னெடுத்துச் செல்வதில் எமது பங்கு என்ன என்று ஒவ்வொருவரும் தங்களைப் பார்த்துக் கேட்டுக்கொள்வதும், அதற்கான நடவடிக்கையில் காலம் தாழ்த்தாது இறங்குவதும் மிகவும் முக்கியமானதும், அவசியமானதுமான ஒன்றாக இருக்கிறது.

—-

riyas@gecko.biol.wits.ac.za

Series Navigation

ஏ.எம். றியாஸ் அஹமட்

ஏ.எம். றியாஸ் அஹமட்

முதலாளித்துவச் சூழலியல் – 01 – முதலாளித்துவ சூழலியற் சிக்கல்

This entry is part [part not set] of 25 in the series 20050812_Issue

ஏ.எம். றியாஸ் அஹமட்


(A.M. Riyas Ahamed, University of Wits, Johannesburg)

Oikos (வீடு அல்லது வாழ்வதற்கான இடம்), Logos (கற்றல்) என்னும் கிரேக்க சொற்களிலிருந்து தோன்றியது Ecology என்னும் சூழலியல். இதிலிருந்து சூழலியல் எனப்படுவது உயிாினங்களை அவற்றின் வாழிடங்களில் கற்றல் எனலாம். அதாவது சுற்றுச் சூழலிருக்கும் உயிரற்ற, உயிருள்ள கூறுகளையும், கற்கும் கற்கையாகும். ஜோ;மனைச் சேர்ந்த Hanns Reiter 1885இல் சூழலியல் என்னும் பதத்தை உபயோகித்தார். 1869களில் ஒரு உயிாினத்தின் சேதன, அசேதன சூழல்களுக்கிடையிலான உறவுகளைக் கற்றல் சூழலியல் என Earnest Hackel வரைவிலக்கணப்படுத்தினார். 1963இல்

Eugene Odum , இயற்கையின் அமைப்பையும், தொழிற்பாட்டையும் பற்றிய கற்கை என வரைவிலக்கணப்படுத்தினார். இந்த வரைவிலக்கணமே இன்று மிகவும் பொிதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. பின்னர் இந்தச் சூழலியல் ஒரு வகையில் தற்சூழலியல், ஒன்றிய சூழலியல் என இருவகையாக அணுகப்படும். பின்னர் சாகியம், சமுதாயம், உயிர்க்கோளம் எனப் பல்வேறு மட்டங்களில் உயிருள்ள, உயிரற்ற கூறுகள் ஆராயப்படும்.

பொருளாதார முறைகள் எனப்படும்போது, ஒன்பதாம் வகுப்பு சமூகக் கல்விப் பாடத்தில் தொடங்கி, பல்கலைக்கழகம் வரை, அவைகள் மூன்று வகைப்படும், அவையாவன முதலாளிததுவப் பொருளாதார முறை, சோசலிசப் பொருளாதார முறை, கலப்புப் பொருளாதார முறை எனப் போதிக்கப்படுவகின்றன.

எல்லாச் சமூகமும் எல்லாப் பொருளாதார ஒழுங்கமைப்புக்களும் எதிர்நோக்குகின்ற அடிப்படைப் பொருளாதார பிரச்சினைகள் பொதுவானவையாகவும், அவ்வடிப்படைப் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் (அருமைத்தன்மை (scarcity) பொதுவானதாகவும் காணப்படுகின்றது. ஆயினும் ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு நாடும் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைக்கான தீர்வுகளின் அடிப்படையிலேயே பொருளாதார அமைப்புக்கள் தோற்றம் பெறுகின்றன. அல்லது அவற்றை அடையாளம் காண முடிகின்றது. பொருளாதார முறை என்பது ஒரு சமூகமானது தனது பொருளாதார நடவடிக்கைகளான உற்பத்தி, நுகா;வு, பங்கீடு போன்றவற்றை எந்த அடிப்படையில் ஒடுங்குபடுத்தியுள்ளது என்பதை விளக்கி நிற்கின்றது.

இனி முதலாளித்துவப் பொருளாதாரத்தை நோக்குவோம். பொதுவாக முதலாளித்துவப் பொருளாதாரம் ஒன்றின் நடத்தையை மூன்று முக்கிய மான உாிமைகள் தீர்மானிக்கின்றன. அவையாவன சொத்தூிமை, பொருளாதார உாிமை, உற்பத்தி உாிமை, அதாவது தனியுடமையாளர் தடையற்ற விதத்தில் தாம் விரும்பிய அளவு சொத்துடமைகளைக் கொண்டு, தான் விரும்பிய தொழிலை ஆரம்பிப்பதற்கும், அதன் வழியாக எத்தொழிலிலும் தான் விரும்பிய அளவு பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் உாிய சுதந்திர முயற்சியை இவ்வூிமைகள் குறிக்கின்றன.

முதலாளித்துவப் பொருளாதார அமைப்பினை சந்தைப் பொருளாதாரம், சுதந்திர முயற்சிப் பொருளாதாரம் என்றும் அழைப்பர். இப் பொருளாதார அமைப்பில்; உற்பத்திக் கரணிகள் தனியாருக்கு சொந்தமானவையாக உள்ளன. இவ்வுற்பத்திக் காரணிகளை தனியார் தமது விருப்பப்படி பயனப்படுத்தலாம். இலாப நோக்கத்தினை அடிப்படையாக வைத்தே இங்கு சொத்துடமையாளர்கள் தொழிற்படுகின்றனர். என்ன பொருளை உற்பத்தி செய்வது ? எவ்வாறு உற்பத்தி செய்வது ? யாருக்கிடையே பங்கிடுவது போன்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்கு விலை முறையே தீர்வு காண்கின்றது. சகல முதலாளித்துவப் பொருளாதார அமைப்புக்களிலும் இன்று சில கட்டுப்பாடுகள் அரசாங்கத்தினால் பொது நலன் கருதி விதிக்கப்படுகின்றன. எனினும் இத்தகைய கட்டுப்பாடுகள் தனியார் விரும்பிய தொழிலை தொடங்குவதையோ இலாப நோக்கத்தின் அடிப்படையில் இன்னொருவருடன் சேர்ந்து ஒப்பந்தங்களை மேற்கொள்ளுவதையோ தடை செய்வதில்லை.

இங்கிருந்து முதலாளித்துவ சூழலியற் சிக்கலை நோக்குவோம். இலாப நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்த முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு சூழிலயல் பற்றிய அக்கறை ஒரு போதும் கிடையாது. ஆனால் கடுமையான எதிர்ப்புக் கிளம்பும்போது முதலாளிததுவம் தனக்கும் சூழல்மீது அக்கறை இருப்பதாக பம்மாத்துக் காட்டும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டை கைத்தொழிற் புரட்சியின் பொற்காலம் எனலாம். கிடைக்கக்கூடிய அனைத்து மூலப் பொருட்களையும் உபயோகித்து, உற்பத்தி செய்த பொருட்களை அடுக்கி வைத்து, புதிய வளங்களையும், புதிய சந்தைகளையும், கண்டு பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தி;ற்கு முதலாளித்துவம் தள்ளப்பட்டது. அமாிக்கா, அமாிக்கக் கண்டத்தையும், ஐரோப்பிய முதலாளித்துவம் ஆபிாிக்கக் கண்டத்தையும் சுரண்டுவதற்கு தங்களுக்குள் பிாித்துக் கொண்டன. இவர்கள் தங்களது சொந்தப் கருத்துக்கள் மற்றும் நடைமுறை கலாச்சாரங்களையும் சுதேசிகளின் மீது திணித்து அவர்களின் வேர்களை சிதைப்பதிலும் குறியாயிருந்தார்கள். அந்தச் சுதேசிகளின் மீதான இயற்கைச் சுரண்டல்களும், இயற்கையை அழித்து மேற்கொண்டு உட்கட்டமைப்புக்கள் (வீதிகள், கால்வாய்கள், அணைக்கட்டுக்கள், பாலங்கள், கட்டடங்கள் போன்றன) போன்றவற்றினூடும் முதலாளித்துவ-சூழலியற் சிக்கலின் கடுரத் தன்மை வெளியே தொியத் தொடங்கியது. காலம் காலமாக இயற்கையோடு இணைந்திருந்த பயிர் முறைகளை காலனித்துவம் அடியோடு ஒழித்தது. காலனியவாதிகள் அந்த இடத்தினை பணப்பயிர்களினால் மாற்றீடு செய்து கொண்டார்கள். கலப்புப் பயிர் முறைகளும், ஓாினப் பயிாினால் மாற்றீடு செய்யப்பட்டது. முதலாளித்துவவாதிகளின் சூழலின் மீதான சுரண்டற் போக்கினால் சுதேசிகளின் கிராமங்களின் தீவிர உணவுப் பிரச்சினைகள் ஏற்பட்டன. மக்கள் மேலும் மேலும் வறுமைநிலைக்கு உள்ளாகத் தொடங்கினார்கள்.

உலகப் போர்களுக்குப் பிந்தைய முதலாளித்துவப் பொருளாதாரத்தின் வளர்ச்சி, வரையறையற்ற தொழில்நுட்பத்திற்கும், வரையறையற்ற உற்பத்திக்கும், ஏகபோக நுகா;தலுக்கும் கால்கோளாக அமைந்தது. இதனால் அந்த முதலாளித்துவ நாடுகளே பாதிக்கப்பட்டன. (கிழக்கு ஐரோப்பிய கம்யூனிசநாடுகளும் இதேமாதிாி பாதிக்கப்பட்டன. அதனைப் பின்னர் பார்ப்போம்). முதலாளித்துவம் சுற்றுச் சூழலை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. சூழலை என்றுமே அள்ளக் குறையாத பாத்திரமாகக் கருதியது. சூழலியற் பிரச்சினைகளை ஒரு சிறிய பிரச்சினையாகக் கூட அவர்கள் கருதவில்லை.

இன்றைய முதலாளித்துவத்தின் சிக்கல், சூழலியற் சிக்கலின் ஒரு பகுதியே. முதலாளித்துவம் தனது அபாிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியால் அல்லது தொழில்நுட்பவெறியினால் (technofascism) இறுமாப்புடன் இயற்கையை அலட்சியம் செய்தது. இன்று அதனால் ஏற்பட்ட சூழலியற் சிக்கலுக்கான விலையை முதலாளித்துவத்துடன் இணைந்து எல்லோரும், அமில மழையாய், அணுஉலைக் கசிவாய், ஓசோன் ஓட்டையாய், எல்-நினோவாய், லா-நினோவாய், காட்டுத் தீயாய் விலை கொடுக்கவேண்டியுள்ளது.

riyas@gecko.biol.wits.ac.za

Series Navigation

ஏ.எம். றியாஸ் அஹமட்

ஏ.எம். றியாஸ் அஹமட்