புலிச்சவத்தில் கால்பதிக்கும் வேட்டைக்காரர்கள்

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

வெங்கட்ரமணன்


ஈராக் கொடுங்கோலர் சதாம் உசேனின் வாரிசுகள் அமெரிக்க வீரர்களால் வீழ்த்தப்பட்டனர். வீழ்ச்சி சாதாரணமாக ஓடி ஒளிபவர்களுக்கு நேர்வதுபோலத்தான் நிகழ்ந்து முடிந்திருக்கிறது. பதுங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டு, பலத்த ஆயுதங்கள் கொண்டு அழித்தொழித்திருக்கிறார்கள்.

அழித்தொழித்த அடுத்த நிமிடமே அச்சவங்களின்மீது ஏறி நின்று நர்த்தனமாடியிருக்கிறார்கள். கொல்லப்பட்ட உதய், குவெஸேய் உசேன்களின் புகைப்படங்கள் அமெரிக்க அரசாங்க செய்தி நிறுவனத்தின் மூலம் பத்திரிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. இணையத்தின் தொழில்நுட்ப வேகத்துடன் அடுத்த நொடியிலேயே அவை பாக்தாத், பாக்கிஸ்தான், பஹ்ரைன், பாஸ்டன் போன்ற இடங்களில் சராசரி குடிமகன்களின் இல்லத்து வரவேற்பரைகளில் தொலைக்காட்சிகளிலும், கணினித் திரைகளிலும் பளிச்சிட்டிருக்கிறன.

ஜமீன்தார் பலருடைய துணையுடன் அடிபட்ட புலியைச் சுட்டு வீழ்த்தியிருக்கிறார். அண்டையில் போய்பார்த்து மூச்சில்லை என்று தெரிந்தவுடன் புகைப்படக்காரர் வரவழைக்கப்பட்டிருக்கிறார். புலிச்சவம் படமெடுக்கப்பட்டு, இடமும் வலமும் மான்கொம்புகள் அலங்காரத்துடன் வரவேற்பரையில் இடம்பெற்றிருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம்தான், வளர்ச்சியடைந்த தொழில்நுட்பம் புலித்தலையில் கால்பதித்து நிற்கும் ஜமீன்தாரை என் வீட்டு வரவேற்பரைக்கும் அனுப்பியிருகிறது. ஒன்றை அவசியம் சொல்லித்தான் ஆகவேண்டும், இடுப்பிற்குமேல் சட்டையின்றி இரத்த வெள்ளத்தில் கிடக்கும் அந்த சர்வாதிகார வாரிசுகளின் பிணம் அப்படியொன்றும் பார்ப்பதற்கு அழகாக இல்லை.

அழகோ, இல்லையோ, பிணத்தின்மீது நடனமாடுவது காலமும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. மஹிஷனை வதம் செய்த காளி ஆட்டமாடியபின்தான் போரை முடித்திருக்கிறாள். கெளரவர்களைக் கொல்வதுமாத்திரம் பாஞ்சாலிக்குப் போதுமானதாக இருக்கவில்லை, அவளது கூந்தல் முடிக்க அவர்களது உதிரமும் தேவையாக இருந்திருக்கிறது. போருக்குப் பின் அழுத அசோகர்களின் எண்ணிக்கை வரலாற்றில் குறைவாகத்தான் இருந்திருக்கிறது.

தற்காலத்தில் போர் என்பது பொருளாதார நிர்பந்தம் மாத்திரம் அல்ல. இரைக்குக் கொல்லுதல் இறந்தகாலம் ஆகிவிட்டிருக்கிறது. இந்தப் போர்கள் முற்றிலும் குறியீடுகள் சார்ந்தவை. எதிரி நாட்டிலேயே உயரமான இரட்டைக் கட்டிடங்களை நோக்கி விமானத்தில் தற்கொலை வீரர்களைச் செலுத்திய தீவிரவாதிகளின் இலக்கு குறியீடன்றி வேறென்ன ? உலகின் தனிப்பெரும் வல்லரசு பாலைவனத்தில் தன் இளைய வீரர்களை பலிகொடுப்பதை பின் எவ்வாறு நெறிப்படுத்த முடியும் ? இரத்தம் தோய்ந்த அந்தச் சவங்களைக் குறியீட்டாக்கி தனது தனிப்பேராண்மையை அமெரிக்கா உலகிற்கு இன்னமொருமுறை பறைசாற்றியிருக்கிறது. இந்தக் குறியீடுகள் சந்தேகமின்றி போர்க்களம் நகரம் என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

படங்களை வெளியிட்டிருப்பதன் மூலம் போர்நெறிகள் குறித்து அணைத்து நாடுகளாலும் கைச்சாற்றிடப்பட்ட ஜெனிவா ஒப்பந்ததை அமெரிக்கா முற்றிலுமாக மீறுகிறது. அது வென்றவன் தோற்றவனை வெற்றிச்சின்னமாக்குவதையும், சூரையாடுவதையும் எதிர்க்கிறது. ஆனால் சர்வதேச ஒப்பந்தங்களை மீறுவது ஒன்றும் அமெரிக்காவிற்குப் புதியதல்ல. அணுஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம், கன்னிவெடித் தடுப்பு ஒப்பந்தம், கியோத்தோ சுற்றுச் சூழல் ஒப்பந்தம் – இவையெல்லாம ஜமீன்தார் கால்பதித்துக் கெக்கலிக்கும் புலிச்சவங்கள்தானே.

இதே அமெரிக்காதான் இந்தப் பாலைவனப் போர்த் துவக்கத்தில் இராக்கியர்களால் பிடிக்கப்பட்ட அமெரிக்கப் போர்க்கைதிகளை அல்-ஜஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியதை வன்மையாகக் கண்டித்தது. தனக்கு ஒரு நியாயம், மற்றவருக்கு இன்னொன்று என்று வல்லான் வகுப்பதற்கு வரலாற்றில் ஒரு பெயர் உண்டு – பாசிசம். வீழ்ச்சிக்கு முந்தைய பாசிச வரலாற்றுப் போக்குகளை இம்மி பிசகாமல் அமெரிக்கா மறு அரங்கேற்றம் செய்து வருகிறது.

***

vvenkat@pro.on.ca

Series Navigation

வெங்கட்ரமணன்

வெங்கட்ரமணன்