ஜெயமோகன்
[ 4 ]
தமிழ்க் கதைசொல்லிகளில் இருந்து அ முத்துலிங்கத்தை பிரித்துக் காட்டும் முக்கிய அம்சம் அவரது புன்னகை . பொதுவாக கதை சொல்லிகள் நகைச்சுவையுணர்வு கொண்டவர்களே.[உடனடியாக என் மனதில் வரும் நகைச்சுவையுணர்வில்லாத முக்கிய கதைசொல்லி ஐசக் பாஷவிஸ் சிங்கர் தான். அதற்கு வரலாற்று ரீதியாக பல காரணங்கள் சொல்லப்படலாம் என்றாலும் நான் ஊகிக்கும் முக்கிய காரணம் சிங்கர் அடிப்படையில் ஒரு ராபி -போதகர் – என்பதுதான்.] புதுமைப் பித்தனின் அங்கதம் கசப்பு நிரம்பியது ,இருண்மை கொண்டது
‘ ‘ ….. …பாட்லிவாலா ,பண்டார சன்னிதி , கங்காரு ,1939 மாடல் மோட்டார் கார்,இரட்டைப்பெண்கள் , சினிமா ஸ்டார் காந்தாமணி பாய் ,உயர் திரு தேசபக்தர் இத்யாதி இத்யாதி ரகத்தை பார்க்க மனுஷருக்கு சுபாவமாக உள்ள ஆசையை …. ‘ ‘ [புரட்சி மனப்பான்மை]
— போன்ற வரிகளில் அவர் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் ஆழமான அங்கதம் குடியேறிவிடுகிறது. அதிலும் மரபு என்றும் , புனிதம் என்றும் , மகத்தானது என்றும் கருதப்படும் விஷயங்கள் குறித்து எழுதப்படும்போது புதுமைப்பித்தன் சிரிப்பு கரிப்பாகவே உள்ளது. கி ராஜ நாராயணனின் சிரிப்பு ஒரு குறிப்பிட்ட புனைவுப்பாவனையின் விளைவு . கிராம வாழ்வை சித்தரிக்கும் போது ஒரு நகரத்து அன்னியனுக்கு அவற்றை சுட்டிக்காட்டும் சிரிப்பாகவும் ,நகரத்து வாழ்வை சித்தரிக்கும்போது அதன் அர்த்தமற்ற சிக்கலின் போலித்தனத்தைஅறியாமலோ அறிந்தோ விமரிசித்து சிரிக்கும் கிராமவாசியின் சிரிப்பாகவும் அது உள்ளது. ஆயினும் பொதுவாக இவர்கள் எழுத்தில் சிரிப்பு ஒரு இன்றியமையாத அம்சமல்ல .அது கதை கூறலின் சமத்காரத்தின் ஒரு பகுதி மட்டுமே .மாறாக அ.முத்துலிங்கத்தின் படைப்புலகில் அவரது அங்கதம் மிக முக்கியமான அம்சம் .அவரது படைப்புலகின் சாராம்சம் பலசமயம் அந்த சிரிப்பினூடாகவே வெளிப்படுகிறது .
அ முத்துலிங்கத்தின் கதைகளில் அதன் ஆழமான அங்கத அம்சத்தால் முதலிடம் பெறும் கதை என்று ‘ ‘ராகு காலம் ‘ என்ற கதையையே கூற வேண்டும் .அதன் சித்தரிப்பு தன் சகஜ நகர்வு மூலம் இந்தியப் பண்பாட்டில் இருந்து மூட நம்பிக்கையை மட்டும் சிந்தாமல் சிதறாமல் பெற்றுக் கொள்ளும் ஆப்ரிக்கனை நம் முன் நிறுத்துகிறது . ஒரு புன்னகையுடன் இக்கதையை வாசிக்க ஆரம்பிக்கும் நாம் அப்புன்னகை முகமெங்கும் விரிய கதையை முடிக்கிறோம் .ஆனால் அடுத்த கட்டத்துக்கு போவோமெனில் ஆழமான சங்கடங்களை உள்ளடக்கிய கதை இது என உணரலாம்.ஏன் அந்த மனிதன் அந்த மூட நம்பிக்கையை மட்டும் பெற்றுக் கொள்கிறான் ? அது அவனது தனி இயல்பல்ல.உதாரணமாக நாம் மேற்கில் இருந்து எவ்வளவோ விஷயங்களை பெற்றுக் கொள்ளவில்லை . ஆனால் எண் சோதிடத்தையும் ,13 என்ற எண் அதிருஷ்டமில்லாதது என்பது போன்ற நம்பிக்கையையும் எளிதாக பெற்றுக் கொண்டிருக்கிறோம் . நாம் பெறுவது ஒரு மானுட மனநிலையை .நம் மனங்கள் பொதுவான ஒரு புள்ளியில் சந்திக்கின்றன.அது நமது பொதுவான கையறு நிலையின் புள்ளி போலும் .இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் மிக எளிதாக விமரிசனம் கலந்த எள்ளல் ஊடுருவக்கூடிய ஒரு கதை இது என்பதும் ,ஆனால் முத்துலிங்கம் இக்கதையை அவ்வாறு அமைக்காமல் அந்த வாழ்க்கை சந்தர்ப்பத்தை அதன் இயல்புகெடாமல் இருக்க விடுகிறார் என்பதும் தான் .ஆகவே தான் இக்கதையில் உருவாகும் நகை சற்றும் எதிர்மறையம்சம் இல்லாததாக , மானுட நிலையில் உள்ள இயல்பான அபத்த அம்சத்தை சுட்டி நம்மை புன்னகை கொள்ள வைப்பதாக உள்ளது .
சுந்தர ராமசாமி ஒருமுறை தனிப்பட்ட உரையாடலில் சொன்னார் , ‘ ‘ மேலான அங்கதக்காரர்கள் பெரும்பாலும் பழைமைவாதிகளாக இருக்கிறார்கள் ‘ ‘ . ‘ ‘ புதுமைவாதிகள் நகைச்சுவை உணர்வற்ற கற்பனாவாதிகளாக இருப்பதை ஈடுசெய்யவா ‘ ‘ என்று நான் வேடிக்கையாக கேட்டேன். சிரிப்பினூடே அந்த அவதானிப்பு உலக இலக்கியத்தின் முக்கியமான பல அங்கத எழுத்தாளர்களை ஊடுருவுவதை நான் வியப்புடன் கண்டேன். புதிய காலம் அவர்களுக்கு ஒத்திசைவை இழந்த ஒன்றாக ,அபத்தமானதாக தெரிகிறது . பல நகைச்சுவையாளர்கள் ஆழமான ஒழுக்க நம்பிக்கை உள்ளவர்கள்,.அமைப்புகளுக்கு விசுவாசம் உள்ளவர்கள் , அனைத்தையும் விட மேலாக மற்ற்வர்கள் [the other ] அவர்கள் பார்வையில் தெள்ள தெளிவாக வரையறுக்கப் பட்டிருக்கும். பொதுவாக நகைச்சுவையின் ஆழத்தில் எப்போதுமே ஒரு துவேஷமும் இருக்கும் என்று படுகிறது . காரணம் நகைச்சுவை என்பது ஒரு மாற்றுவழி . [ஆன்மீகத்தில் உள்ள நகைச்சுவை வேறு விதமானது ,அது ஓர் மாபெரும் அபத்த தரிசனத்தை மனிதமனம் கண்டடைவதன் விளைவு] .புதுமைப்பித்தன் ,கி ராஜ நாராயணன் படைப்புகளை இதற்காக ஆழ்ந்து பரிசோதிப்பது ஒரு தனி ஆய்வு .கி .ராஜநாராயணனின் பெண்கள் [பெண்டுகள் !] குறித்து மட்டும் இப்போது கவனத்தை ஈர்க்க விழைகிறேன். அவ்வகையில் பார்க்கப் போனால் அ.முத்துலிங்கத்தின் உலகம் பலவகைப்பட்ட எள்ளல்களின் பெருந்தொகுப்பாக இருக்க வேண்டும் .அவர் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாணச் சூழலுக்கு முற்றிலும் மாறான கலாச்சாரச் சூழல்களில் அவர் வாழ்கிறார் .யாழ்ப்பாண அற ஒழுக்க மரபுகளை அவர் விட்டுவிடவுமில்லை .சைவ மரபின் மீதான அவரது பிடிப்புக்கும் பயிற்சிக்கும் படைப்புகள் சாட்சியம் வகிக்கின்றன .ஆனால் அவரது படைப்புலகில் ‘ மற்றவன் ‘ என்ற ஒரு அடையாளம் காணப்படவேயில்லை . முற்றிலும் மாறான ஓரு கலாச்சாரத்தை எதிர்கொள்கையிலும்கூட அவரது சுயம் தன் வேலியை உணரவில்லை .ஓர் அன்னியனின் அன்னியத்தன்மை எந்த தருணத்திலும் அவரில் வேடிக்கையுணர்வை தூண்டவில்லை. ‘பிறன் ‘ அவரது அங்கதத்துக்கு இலக்காகவில்லை .இந்த அம்சம்தான் அவரது நகைச்சுவையை பொதுவான நகைச்சுவைகளில் இருந்து மாறுபடச் செய்கிறது.
‘ கம்யூட்டர் ‘ எனும் கதையில் அக்குடும்பத்தில் கணிப்பொறி ஓர் அன்னியனாக ,அன்னியத்தனத்துக்கு உரிய அத்தனை வேடிக்கையுடனும் வருகிறது . அதனுடன் கதைசொல்லிக் கதாபாத்திரம் கொள்ளும் தூரத்துக்கு எத்தனையோ கலாச்சார உளவியல் பின்னணிக் காரணங்கள் உண்டு .இக்கதை இன்னொரு படைப்பாளியிடம் தீர்க்கவே முடியாத ஓர் இடைவெளியைச் சுட்டுவதாகவோ , புதிய காலத்தின் மூர்க்கமான சிக்கலையோ , நம்மை அடிமைப்படுத்தும் இயந்திரஅரக்கத்தனத்தையோ சுட்டுவதாக மாறியிருக்கலாம். உதாரணமாக புதுமைப்பித்தனின் டிராம் . ‘ ‘ டிராம்கலாச்சாரம் ‘ ‘ என்று ஒரு காலகட்டத்தையே அடையாளப்படுத்தி விடுகிறார் புதுமைப்பித்தன். கணிப்பொறிக்காலம் என்று இன்று நாம் அடையாளப்படுத்துவது போல.இயந்திரங்கள் மட்டுமல்ல ,பம்புசெட் கூட கி ராஜ நாராயணன் கதைகளில் அதன் இருண்ட முகங்களுடன் தான் வருகிறது .ஆனால் அ.முத்துலிங்கத்தின் கணிப்பொறி விரைவாக இணக்கமாகிவிடுகிறது. ஊடல் நீங்கி புன்னகைக்கும் தலைவி போல . இந்த சுமுகத்தன்மை அ முத்துலிங்கம் ‘ ‘ பிறிதை ‘ ‘ சந்திக்கும் இடங்களில் எல்லாம் உள்ளது என்று காணலாம். அந்த கதையை கணிப்பொறி திரும்பத் தருவது ஒரு குறியீட்டு வாசிப்பில் அழகான ஒரு மானுடத் தருணமாக உள்ளது.
இம்மனோபாவத்தின் மேலும் அழகிய சித்திரத்தைதருவது அ முத்துலிங்கத்தின் முக்கியமான கதைகளில் ஒன்றாகிய ‘ ‘பூமாதேவ ி ‘ ‘ இரு கலாச்சாரங்கள் இங்கு சந்திக்கின்றன– சந்திக்கவில்லை ஒரு அதிவேக நெடுஞ்சாலையில் சேர்ந்து விரைகின்றன . அவை ஒன்றின் மடியில் ஒன்று பிறந்து வளர்ந்தவை என்பது மேலும் முக்கியமனது . தந்தையும் மகளும் . குப்பைக்கூடையிலும் ‘அவசரம் ‘ என தரம் பிரிக்கும் நாட்டின் ‘அடித்தள ‘ த்தில்
இன்னொரு நகல் எந்திரமாக வாழ்ந்து வளர்ந்த முன்னாள் அகதி தந்தை . அவர் மகள் தன் நண்பனைப் பார்க்க தந்தையைத் துணைக்கழைத்துச் செல்லும் உயர்பதவியில் இருக்கும் அதிவேக நங்கை .அவர்களுடைய பொதுவான பழைய காலத்தில் ,இரு உலகங்கள் தற்செயலாக உரசி கொண்ட புள்ளிதான் அது போலும் . இருக்கும் அழுக்ககற்றி இயந்திரம் இக்கதையின் மையம் . அதை பூமாதேவி என்கிறார் தந்தை ,அந்த இனிய பழைய காலத்தில் .அழுக்கை உண்டு செரித்து தூய்மையை பிறப்பிக்கும் பொறுமை. அதை சைவப் பெளராணிக உலகுக்கு கொண்டுவருகிறார். ஆனால் பெண் அந்த பழைய காலத்தை எளிதில் தாண்டி சென்று விடுகிறாள் , பொறுமைதேவிக்கு இடமில்லாத அதிவேக உலகம் அவளுடையது . தந்தை மகள் என்றா உறவின் நுட்பமான சிக்கல் நிரம்பிய ஒரு வாசிப்புத்தளம் இக்கதைக்கு உள்ளது. அதற்கு மேல் இக்கலாச்சாரத் தளம் . எதையுமே பெளராணிக
மயமாக்கும் இந்திய மனதுக்கு வெகுதூரம் தாண்டியுள்ளது மகளின் மனம். ஆனால் இக்கதை அந்த மாறுதலை ஓர் இழப்பாகக் காட்டவில்லை. அந்த மோதலை உக்கிரப்படுத்தவும் இல்லை . எளிதாக அதை அந்த நெடுஞ்சாலையில் சந்தித்து செல்கிறது . வாழ்வின் சகஜத் தருணங்களில் ஒன்றாக மட்டுமே அதை சித்தரிக்கிறது. கதைசொல்லிக்கு முன் உள்ள வழக்கமான இரு வழிகள் உக்கிரப்படுத்தி வாசக மனதைத் தாக்குதல் அல்லது பகடி செய்து அவனது விமரிசனப்பிரக்ஞையை தூண்டுதல் — இரண்டிலுமே அ முத்துலிங்கம் ஈடுபடவில்லை. கதை ஒரு மெல்லிய புன்னகையை தவறவிடவேயில்லை.
இந்த புன்னகை பரவிய சமநிலையை அவ்ரது கதைகளில் அடையாளம் காணும் இன்னும் இரு சந்தர்ப்பங்கள் உண்டு .புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் படைப்புகளில் உள்ள ‘ நினைவிடை தோய்தல் ‘ என்ற அம்சம் அ முத்துலிங்கத்தின் கதைகளிலும் உள்ளது ,ஆனால் அத்தகைய படைப்புகளில் தெரியும் கற்பனாவாதப் பண்புள்ள சோகம் அவரது கதைகளில் இல்லை .அவற்றிலும் தெளிந்த புன்னகையே உள்ளது.உதாரணமாக ‘ ‘வசியம் ‘ ‘ . இன்னொரு சந்தர்ப்பம் மிகக்குரூரமான ,அல்லது குரூரமுரண் மிக்க கதைகளை உருவாக்கும்போது கூட தவறாத புன்னகை .உதாரணம் ‘ ‘ உடும்பு ‘ ‘ .காதல் என்ற மென்மையான ,நுண்மையான உணர்வின் பொருட்டு நடத்தப்படும் அதி குரூரம்தான் இக்கதை .உடலின் ஒருபகுதி கறியாகி வேகும்போது கூட அந்த உடும்பு உயிருடன் அதை பார்த்துக் கொண்டிருக்கும் அந்தச் நம் சித்திரம் மனதை மிக ஆழமான நிலைகுலைவுக்கு உள்ளாக்குவது. அதில் மரணம் குறித்த விபரீதமான ஒரு குறியீடு உள்ளது. [தனிப்பட்ட முறையில் அது எனக்கு இலங்கை அரசியலுடனும் தொடர்பு கொண்டதாகப்பட்டது.] ஆனால் கதை சொல்லியின் மொழி அதை புன்னகை மாறாமல் சொல்வதன் வழியாக இலகுவாக்கிவிடுகிறது .
புன்னகையே அ .முத்துலிங்கத்தின் இலக்கியத்தின் அடிப்படை .ஒரு புன்னகைக்கு அப்பால் போகும் ஏதும் இந்த வாழ்க்கையில் இல்லை என்ற பிரக்ஞையில் இருந்து பிறக்கும் கலை அவருடையது.இது வாழ்க்கையின் உக்கிரத்தையோ ,சிக்கலையோ ,புரிந்து கொள்ள முடியாத முடியாத ஆழத்தையோ பொருட்படுத்தாத மழுங்கலின் விளைவான புன்னகை அல்ல. மாறாக அவர் கதையுலகில் எப்போதும் அடியோட்டமாக அந்த அம்சங்கள் இருந்தபடியேதான் உள்ளன . முரண்பாடுகள் ,குரூரங்கள் ஆகியவற்றால் ஆனவை அவரது பெரும்பாலான கதைகள் என்றுகூட கூறலாம் .இது ஒரு சமநிலை ,ஒரு தரிசனம். வைக்கம் முகம்மது பஷீரின் படைப்புகள் குறித்து ஒருமுறை நான் எழுதியுள்ளது நினைவுக்குரியது. வாழ்வின் அத்தனை கசப்புகள் ,அசிங்கங்கள் ,அபத்தங்கள் ,குரூரங்கள் வழியாகவும் தன் சொந்த வாழ்வில் கடந்து வந்தவர் அவர் .அவற்றில் இருந்து பெற்ற ஓரு அபூர்வமான விவேகத்தினால் அவரது படைப்புலகு தீமையென்ற அம்சமே இல்லாமல் ,எல்லா பகுதியிலும் பேரொளி பரவிய பரப்பாக உள்ளது . இலக்கிய அழகியலின் எளிய தர்க்கங்களினால் அதை முற்றிலும் விளக்கிவிட முடியாது .பஷீரை அறிய நாம் சூஃபி மரபுக்குதான் போக வேண்டும். எந்த இலக்கியப்படைப்பிலும் அதன் சாரமாக உள்ள தரிசனம் [ எளிதாக புரிந்துகொள்ள விரும்பும் யதார்த்தவாதிகளுக்காக அதை ஒட்டுமொத்தவாழ்க்கைப் பார்வை என விளக்குவேன் ] இலக்கியத்தால் புரிந்துகொள்ள முடியாததாகவும் ,ஆன்மீகத்தின்[அனைத்துப் புரிதல்களுக்கும் ஆதாரமாக அமையும் கேள்விகளை உருவாக்கும் தாகம் ,மதம் சார்ந்த பொருளில் அல்ல ] உலகு சார்ந்ததாகவே காணப்படும் என்று எனக்கு படுகிறது .இப்புன்னகையையையும் அங்கு தான் அடையாளம் காண முற்படுவேன் .
[ 5 ]
என் நெருங்கிய நண்பரும் ,மலையாளக் கவி ஞரும் விமரிசகருமான கல்பற்றா நாராயணன் பஷீர் குறித்து எழுதிய கட்டுரை ஒன்றின் தலைப்பு ‘ ‘ எவ்விலையும் தித்திக்கும் பெருங்காட்டில்… ‘ ‘ . பாத்துமாவின் ஆடு பெரும்பசியுள்ளவள் ..என்று துவங்குவது அக்கட்டுரை.ஆகவே அவளுக்கு எதுவும் இனிய உணவுதான்.பலாவிலை ,சாம்பம் பழங்கள் , கஞ்சித்தண்ணி ,பஷீரின் இளம்பருவத்து தோழி என்ற நாவல் ,ஹநிஃபாவின் கால்சட்டை ,அம்மாவின் வேட்டி எல்லாமே. தின்றவை வயிற்றிலும் நினைவிலும் தித்திக்க , தின்னாதவற்றின் இனிப்பால் நிரம்பியிருந்தது உலகம் ,பிரபஞ்சம். பாத்துமாவின் ஆடு முற்றிலும் ‘விடுபட்டது ‘ ,களங்கமின்மையில் இருந்து அடைந்தது அப்பசி ,அவ்வினிப்பு.பஷீரின் இப்பெரும்பசியை ஒரு மானுட உச்சம் என்று கல்பற்றா நாராயணன் காட்டுகிறார் .
எல்லா இலையும் தித்திப்பதுதான் அ.முத்துலிங்கத்தின் காடும் .அவ்வகையில் பஷீரின் எழுத்துடன் ஒப்பிடத்தக்கதும் கூட . பஷீரின் உலகத்துக்கும் இவர் உலகுக்கும் இடையேயான முக்கியமான பொதுமை ஒன்று கவனத்துக்கு வருகிறது.பஷீரின் உலகில் மிருகங்கள் குழந்தைகள் மிக முக்கியமானவர்கள் .அ.முத்துலிங்கத்தின் எழுத்துப் பரப்பில் தான் தமிழ் சிறுகதை உலகில் மிக அதிகமான மிருகங்கள் உள்ளன. மிருகங்கள் பாலான பரிவு அவரது பல கதைகளின் அடித்தளம் [உதாரணம் ரி ,பழி] ஆனால் பஷீரின் உலகுக்கும் இவற்றுக்கும் இடையேயான முக்கிய வித்தியாசம் பஷீரின் விலங்குகள் விலங்குத்தன்மைக்குள் சிறைப்படுத்தப்பட்டவையல்ல.அதே சமயம் அவை குறியீட்டின் சுமையை முதுகிலேற்றியவையுமல்ல . தனித்தன்மை மிக்க ஆளுமைகள் அவை . மனிதர்கள் உலகில் அவை வாழவில்லை ,அவையும் மனிதர்களும் சேர்ந்து வாழ்வு நிகழ்கிறது. இந்த ஒளிமிக்க தளம் பஷீரின் படைப்புலகின் முக்கியமான மகத்துவம் . அ முத்துலிங்கத்தின் உலகில் மிருகங்கள் மிருகங்களே .அவற்றுக்கும் நமக்குமான அந்த திரையை அவர் விலக்கிக் காட்டுவதில்லை.நமது உதாசீனத்தின் மீது மெல்லத் தொட்டு அழைத்துக் காட்டுகிறார்,அவ்வளவுதான். பஷீரின் குழந்தைகள் களங்கமற்ற தேவதைகள் அல்ல . நம் களங்கத்தின் குற்றவுணர்வால் உருவாகும் கற்பிதம் தானா அது ?அவர் குழந்தைகள் பெரியவர்களின் சமத்காரங்கள் இல்லாமல் மனிதர்களின் சிறுமைகளையும் மேன்மைகளையும் வெளிப்படுத்துபவர்கள். அ.முத்துலிங்கத்தின் உலகில் அவரது இளமைப்பருவம் உள்ளதேயொழிய குழந்தைகள் இல்லை .இது ஏன் என்பது ஒரு முக்கியமான கேள்வியே .அவரது உலகின் புன்னகை இயல்பாக குழந்தைகளை நோக்கி நீளக்கூடியதாக உள்ளது .இத்தகைய மர்மங்கள் எந்தப் படைப்பாளியின் படைப்புகளை கூர்ந்து கவனித்தாலும் காணப்படும் . அப்படைப்பாளியின் தனியாளுமையின் உள்ளே பயணப்பட எளிய வழியமைக்கும் வாசல்களே இவை .
முத்துலிங்கம் அடிப்படையில் ஒரு பயணி .அவரது கதைகளில் எப்போதுமே இந்த பயணியின் பாவனை அல்லது தோரணை இருந்தபடியே உள்ளது .இம்மனப்பதிவை இதற்கென்றே கதைகளை கூர்ந்து படித்தபோது மேலும் உறுதி செய்து கொண்டேன் . இப்பயணத்தில் நிலக்காட்சி மாறியபடியே உள்ளது.யாழ்ப்பாணம் முதல் ஆப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் வரை. அந்த வாகனத்தின் சன்னல் வழியே காட்சியாகும் வாழ்வில் கதைசொல்லி
ஒரு கணம் -ஒரு முழுவாழ்வையும் அக்கணம் உள்ளடக்கக் கூடும் – ஈடுபட்டு ,கலந்து வாழ்ந்து தாண்டிச் செல்கிறான்.இந்தப் பயணி மனநிலை காரணமாகவே ஒரு விலக்கம் [இதை ஒட்டுதலின்மை என்று சொல்ல மாட்டேன் ,ஈடுபடும்போது கூட போகிறேனே என்ற உள்ளுணர்வின் எச்சரிக்கை இது ] அவரது கதைகளில் உள்ளது . ‘ ஒட்டகம் ‘ என்ற கதை ஓர் உதாரணம் .மனித ஒட்டகமாக மாறிப்போன சோமாலியா நாட்டுபேண்ணுக்கு அனைத்தையும் விட நீர் முக்கியமாகிப் போன அந்த அவலம் ஒரு சன்னல் காட்சியாகவே நம்மை அடைகிறது .ஆப்கானிஸ்தானின் மூர்க்கத்தையும் முடிவின்மைகளை நேர்த்தியாக எதிர்கொள்ளும் கம்பீரத்தையும் கூறும் ‘யதேச்சை ‘ கதையிலும் இதே விலக்கத்தைக் காண்கிறோம்.
இது இவர் கதைகளில் ஏன் குழந்தைகள் இல்லை என்பதற்கான ஒரு காரணத்தை எனக்கு தருகிறாது . பஷீரின் அலைச்சல் கால கதைகளில் [இளம்பருவத்துத் தோழி ,என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது …] குழந்தைகள் இல்லை . பிறகு தன் சொந்த வீட்டிலும் , போப்பூரில் வீடுகட்டி மணம் செய்து கொண்டும் குடியிருக்க ஆரம்பித்த பிறகு தான் கதைகளில் குழந்தைகள் வரத் தொடங்கின. குழந்தை திரும்பிப் படுக்க பிராயமாகாது கிடக்கையிலும் கூட ஒரு பயணத்தில் தான் இருக்கிறது . நின்றுவிடாத தேடலுடன் அது தன் எல்லைகளை விரித்தபடியே உள்ளது. அது என்குமே ‘ குடியிருப்பது ‘ இல்லை . நம் வீடுகளின் அசைவற்ற நான்கு சுவர்களின் நடுவேதான் நம் குழந்தையின் தீவிரமான பயணம் நமக்கு முக்கியமான எதையோ சொல்வதாக ஆகிறதா என்ன ?குழந்தையல்லாத பஷீரின் கதாபாத்திரங்கள் வற்றிக் கொண்டே இருக்கின்றன .குழந்தைகள் ததும்பிக் கொண்டே இருக்கின்றன .பண்டாரங்களும் , கேடிகளும் ,வேசிகளும் ,பிச்சைக்காரர்களும் இல்லாத வாழ்க்கையின் வெறுமையை பஷீர் குழந்தைகளாஇக் கொண்டு நிரப்புகிறாரா ? அ முத்துலிங்கத்தின் உலகம் மாறி கொண்டே இருக்கும் ஒரு நாடகவெளி ,ஆகவே அங்கு கதாபாத்திரங்களும் புதிய ஒளிகளை பிரதிபலித்துக் கொண்டேயிருக்கிறார்கள் . அங்கு குழந்தை வந்து எல்லாவற்றுக்கும் மறுபக்கத்தைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை –புதுமைப்பித்தனின் ‘ ‘மகாமசானம் ‘ ‘ போலவோ ‘ ‘ நினைவுப்பாதை ‘ ‘ போலவோ.
இந்த பயணிக்கும் கதைசொல்லிக்கு உலகம் தன் இனிப்புகளுடன் திறந்து கிடக்கிறது .
[ஜனவரி 2003 மழை மும்மாத இதழில் வெளிவந்த கட்டுரை.
மழை , ஆசிரியர் யூமா வாசுகி , 30 /2 அவ்வை சண்முகம் சாலை , கோபாலபுரம் , சென்னை 86 ]
- அப்பாஸின் நான்கு கவிதைகள்
- ஆண் என்ற காட்டுமிராண்டி
- விண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா [Kalpana Chawla Ph.D.] (1962-2003)
- ரோட்டி கனாய்
- கோழி பிரியாணி (மலேசியமுறை Beriani)
- சுதந்தரத்துக்கான நாட்டமும் குழந்தைமையும் (ஆறாவது பகல் – அப்பாஸ். கவிதைத்தொகுதி திறனாய்வு)
- மனிதனும் இருப்பும் – மறுபிறப்புப் பற்றி – சாாிபுத்திரருக்கும் மஹாகோத்திதருக்கும் இடையே நடந்த உரையாடல்
- சுருக்கமாகச் சில வார்த்தைகள் (புகைச் சுவருக்கு அப்பால் – கவிதைத் தொகுதியின் முன்னுரை)
- பிள்ளையின் பித்துமனம் (அகிலனின் ‘காசுமரம் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 47)
- சுந்தர ராமசாமியுடன் ஒரு நேர்முகம்
- புன்னகைக்கும் கதைசொல்லி — -அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து…. (இறுதிப்பகுதி)
- நாடுகளில் மக்கள்தொகைப் பெருக்கம் நிலப் பற்றாக்குறைக்கு இட்டுச்செல்கிறது
- முகவரி இல்லாத கடிதம்
- எட்டிப் பாரடி..
- பிப்ரவரி 1, 2003
- ஒரு தந்தையின் கடன்
- எங்கிருந்து வருகிறது ?
- இந்தியாவின் விடிவெள்ளி
- நஞ்சுண்டன் கவிதைகள்
- காகிதங்களாய் நாம்
- தொட்டி(ல்) குழந்தை
- தலைப்புகளற்ற மூன்று கவிதைகள்
- வாழ்வுகள் வாழும்
- குறிப்பு
- சுந்தர ராமசாமியுடன் ஒரு நேர்முகம்
- அணுசக்தியை இந்தியாவின் எரிபொருள் தேவைக்கு பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை
- கடிதங்கள்
- நாடுகளில் மக்கள்தொகைப் பெருக்கம் நிலப் பற்றாக்குறைக்கு இட்டுச்செல்கிறது
- போலந்து தமிழ் மாணவர்களுக்கு உதவுங்கள்
- ஆண் என்ற காட்டுமிராண்டி
- ரஷியாவின் நவீன அறிவியல் மற்றும் கலைத் துறைகளில் பாரதிய மரபின் பங்களிப்பு
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 10 (இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- இந்த வாரம் இப்படி – பிப்ரவரி 9 2003. (பங்களாதேஷ், சாத்தான்குளம், தூதரக சர்க்கஸ்)
- நே வா.
- வாசித்து முடித்த குழு – உரை வெண்பா
- சொல்ல மறந்த கவிதை
- சில குறும்பாக்கள்
- மூன்று கவிதைகள்
- வா கண்ணா
- தேடித் தொலைந்தது
- நல்ல வார்த்தைக் கிளி
- என்னவள்
- அறிவியல் துளிகள்-13
- அணுசக்தியை இந்தியாவின் எரிபொருள் தேவைக்கு பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை