புகழ்ப் பறவை பிடித்த கதை

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

பா. சத்தியமோகன்


எல்லோரது தலைக்கு மேலும்
உயர உயரப் பறக்கும்
புகழ் எனும் பறவையைப்
பிடிக்க முயல்வோர் பலரை கண்டேன்.

அப் பறவை முழுசும் எப்படியிருக்கும் எவரும் அறிகிலர்
ஆயினும் பிடிக்க முயல்வோர் கூட்டம்
நாளுக்கு நாள் அதிகமாச்சு

தனது கண்ணை அப்பறவையின் விழியில் பொருத்த
அலைகின்றார் ஒரு மனிதர்.

தனது களி மண்ணால் அப்பறவையின் உடலுக்கு
] மேனி செய்கின்றார் இன்னொருவர்.

தனது பெருமை பொறித்த தகரம் கொண்டு
அப்பறவைக்கு இறகு செய்கின்றார் இன்னொருவர்.

உமக்கெல்லாம் ஏது அறிவு ! மூடரே நகரும் ! நகரும் !
எனக் கூறும் இன்னொருவன் பறவை பறக்க
வானில் காற்றை நிரப்பும் பணியை செய்ய முற்ப்பட்டான்.

புகழ் இறகு வீழ்ந்தாலோ வெட்டப்பட்டாலோ
நடந்தாவது செல்லுமே என்று
தப்பு கணக்கிட்ட பிறிதொரு மனிதனோ
பறவையின் கால்கள் தயாரிக்க
மரத்திலிருந்து காய்ந்த குச்சி ஒடித்தான்.

‘எதனையும் கொடுத்தால்தான் பெறலாம் ‘
எனும் ஒருவனோ புகழ்ப்பறவைக்கு
தீனி வைக்க தானிய மணிகளை
காசு பணத்தால் செய்து வைத்தான்.

கண், உடல், இறகு, காற்று , கால்கள் செய்து
புகழ் பெறத் தவிக்கும் திருக்கூட்டத்தில் ஒருவன்
பிறிதொரு காரியம் செய்தான்:

பறவைக்குப் பிடித்த இன்னொரு பறவையைச்
சோடி சேர்த்தால் புகழ்ப் பறவை பிடிக்கலாமெனத் திட்டமிட்டான் !

இறந்துபட்டு
மண் தின்னப் போகும் உடலைச் சுமக்கும்
மாந்தர்கள் போட்டியினை
உச்சியிலிருந்து காணும் பறவை
வாய் திறந்து தனது ரகசியம் கூறிற்று.

காசு மொழி மட்டுமே தெரிந்தவர்களுக்கு
பறவை மொழி எப்படித் தெரியும் என்பதால்
புகழ்ப் பறவை தனது குரலை
மனித குலத்துக்குத் தகுந்தபடி மாற்றி
புரியும் குரலில் பேசிற்று.

மனிதர்களே மனிதர்களே புகழ்ப் பறவை எனைப் பெறவே
கண் செய்தீர் கால்கள் செய்தீர் காற்று செய்தீர் சோடியும் செய்தீர் !

புகழ்ப் பறவை எனைச் செய்ய
உமது உயிர் தரும் ஒருவர்க்கே
காலத்தால் அழியாப் புகழ் உண்டு
சம்மதம்தானா ?! என்றே பறவை கேட்டதும்
அதிர்ந்து போன கூட்டம்
காக்கையாய் பறந்து போச்சு.

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்