பிரிந்தும் பிரியாத நினைவுகள்

This entry is part [part not set] of 35 in the series 20080821_Issue

கோகுலன்.


இரவின் நீளத்திற்கு
நீண்டிருந்த மழையில்
சாரல் மட்டும் வைத்துக்கொண்டு
மீதியை தொலைத்திருந்தது விடியல்

நீரின் பாரம் தாளாமல்
நிலம்நோக்கியிருந்த மரக்கிளைகள்
நினைவுகளின் உன்னை தாங்கிய
என் போலவேயிருக்கின்றன

அவ்வப்போது அதிர்ந்துவீசும் காற்றுக்கு
திரவப்பூக்கள் சிந்தி
பாரம் குறைக்கும் மரக்கிளைகள்
என்னினும் அறிவார்ந்தவை

நானோ இந்த மழைநேரத்தில்
வழக்கமாய் வாசல்வரும் தேன்சிட்டுக்கும்
ஜன்னலில் கத்தும் குருவிகளுக்கும்
கவலைப்படவேனும் எத்தனிப்பின்றி
வெறுமனே மழையை வெறித்திருக்கிறேன்

நினைவுச்சுமைகளுடனான யதார்த்தப் பயணங்கள்
இன்னும் பழக்கப்படவில்லை எனக்கு
பிரிந்தும் பிரியாத நினைவுகள்
மிகவும் கொடுமைதான்

வழக்கமாய்
இன்றும் பகற்பொழுது மெதுவாய் கழியும்
மாலையில் மீண்டும் பெருமழை பிடிக்க
மரக்கிளைகள் சரியத்துவங்கும்


Series Navigation

கோகுலன்

கோகுலன்