பறவைகளைப் போல வாழ்வோம்

This entry is part [part not set] of 39 in the series 20110123_Issue

முனைவர் சி.சேதுராமன்


முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் .கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com

ஓருயிரி இறந்துவிட்டால் புதைப்பதற்கு
உடனுடனே மற்றோர் உயிர்வந்துவிடும்
உலகத்தில் இறைவனவன் வகுத்தளித்த
உன்னதமாம் யாரறிவார் இதனை இங்கே!
உடல்சிறிதாம் கொசுவுமிங்கே இறந்துவிட்டால்
உடனடியாய் எறும்புகளும் வந்தே சேரும்!

எலி,புலியோ இறந்திட்டால் புதைப்பதற்கு
எங்கிருந்தோ பிற உயிர்கள் வந்துவிடும்
காகமொன்று இறந்துவிட்டால் ககனத்தில்
காகம் பல எங்கிருந்தோ பறந்து வந்து
பரிதவித்தே கலங்கியங்கு கரையும் கத்தும்
கடமைதனை முழுமையாகச் செய்துவிட்டு
காகக்கூட்டம் கலைந்திடுமே முழுமையாக!

சகமனிதன் இறக்கின்ற நிலையைக் கண்டும்
சத்தமின்றிச் சென்றிடுவர் எங்கும் என்றும்
எனக்கெதற்கு இந்த வம்பு என்று இங்கே
எல்லோரும் ஒதுங்கி மெல்லச் சென்றிடுவர்!
கூடித்திண்ண வருகின்ற கூட்டமெல்லாம்
கூடாகிப் போனபின்னே வருவதில்லை!
கூட்டாகச் சேர்ந்திருக்கும் கூட்டாளிகள்
கூடானால் கூடாரே..! என்றும் எதிலும்
லாபத்தில் பங்கு கொள்ளும் இந்த மக்கள்
லாபமில்லை என்று சொன்னால் எங்கும் செல்லார்!

இறந்திருப்போன் ஏழையெனில் யாரும் வாரார்
இளக்காரமாகவே அதைப் பார்த்துச் செல்வர்
கொத்துக் கொத்தாய் எல்லோரும் இறந்துவிட்டால்
லாபமது தேடிடுவார் உதவி செய்யார்!

பேருந்து கவிழ்ந் திறந்தால் உதவி செய்யார்
பேதுற்று அங்குவந்து நகைபறிப்பர்
குஜராத்தில் பூகம்பம் வந்தபோது
குலங்கெடுக்கும் விலைமகள்போல் சிலரும் வந்து
குற்றுயிராய்க் கிடந்துதவி கேட்டபேரை
குத்திக்கொன்று நகைகளையும் பறித்துச் சென்றார்!
இறப்பினிலும் வருவாயைப் பார்க்கும் இந்த
இதயமற்ற மனிதர் பற்றி என்ன சொல்வேன்!

இரத்தத்தைப் பாலாகப் பிழிந்து தந்த
தாயுமிங்கே இறந்துவிடில் பிள்ளைகளிங்கே
தங்களுக்குள் சொத்திற்காகச் சண்டையிட்டு
தாய் பிணத்தைத் தெருவிலேயே போட்டு வைத்து
தரங்கெட்டுத் தகுதிகெட்டு நடப்பர்தாமே
தகப்பனார்தாம் தாய்க்கு முன்பே இறந்திட்டாலே
தகப்பன் வைத்த சொத்தினையே கணக்குப்பார்ப்பர்
தகப்பன் எங்கும் கடனேதும் வாங்கிவிட்டால்
எங்கள் தகப்பன் இவரில்லை யாரோ என்பர்
தாயாரோ ஐயோ என்று பரிதவித்தால்
தரதரவென்று கீழே தள்ளி மிதித்திடுவர்!

பொருளினையே முதன்மையாகக் கருதி இங்கு
பொறிகெட்ட விலங்கினைப்போல் வாழ்ந்திடுவர்
போகின்ற பொழுதில் இங்கு பொருளும் வரா…!
பொருப்புடனே நடந்திடுவீர்..! நாளும் நாமும்!
பறவைகளைப்போல இங்கு சேர்ந்து வாழ்வோம்!

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.