பச்சோந்தி வாழ்க்கை

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

இலெ.அ. விஜயபாரதி



ஏர்பூட்டி காளைகள் உழுத நிலங்களில் இன்று
குதிரைத்திறன் கொண்ட இயந்திரக்கொழு
குழவை போட்ட குரல்வளைகளை நெரித்துவிட்டு
வயல்வரப்பில் பாடும் பண்பலை வானொலி
மாட்டுச் சாணத்தில் பிள்ளையார் பிடித்துவிட்டு
தொழிற்சாலையின் வயிறுகளில் தயாராகும் உரங்கள்
காவிரியாற்று மணலில் வீடுகள் விளைவதால்
வேர்களின் தாகந்தீர்க்க சொட்டுநீர்ப்பாசனம்
கேள்விக்குறியை ஞாபகப்படுத்தும் கதிரரிவாள்களுக்கு
விடை கொடுத்துவிட்டது அறுவடை இயந்திரம்
வைக்கோல்போர் இல்லாத வீட்டில்தான்
வாக்கப்பட வேண்டுமென நினைக்கும் கிராமத்துப் பெண்
தான் பட்டதெல்லாம் போதுமென்று
மகன் படிக்க நிலத்தை விற்கத் துணியும் உழவன்
நேற்றைப் போலவே நேரந்தவறாமல் எல்லோருக்கும்
மூன்றுவேளையும் வயிற்றைக் கிள்ளும் – பசி!

Series Navigation

இலெ.அ. விஜயபாரதி

இலெ.அ. விஜயபாரதி