நீ வருவாயென…

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

வேதா


அதிகாலைக் கதிர்களின்
அட்டகாச ஆரம்பம்…
ஆயிரம் விழிகளால் அழுதபடி
அமைதியில் மரணிக்கும் இரவாய்,
என் சிறு சுவாசம்!

இரவும் இன்பமும்
நிலைப்பதே இல்லை….
உன் கனிவும் கருணையும்
எனக்குள் கலைவதே இல்லை…

இன்பம் இறைத்த நாளை
இதுவரை மறந்ததில்லை….
ஈரப் பார்வைக் கதகதப்பை
கனவிலும் இழந்ததில்லை….
இனி, இல்லாமையும் இறைக்குமே..
இயலாமை..என்ன செய்ய ?

உனக்கும் எனக்கும்
உளைச்சலைத் தந்து….
உலகம் மட்டும் இயங்குகிறது!
உண்மையில்
அருகில் நீ இல்லாத
உண்மை சுடுகிறது!

மரத்துப் போன உணர்வுகள்,
மரித்தும்போகுமோ ?
மாற்றம் தந்த மாற்றங்கள்
மாறக்கூடுமோ ?

என்
மனசோடு கரைகின்ற மவுனங்கள்
உன் மடியேறி இடம் சேருமோ ?
தடம் மாறி நிறம் தீருமோ ?

காற்றோடு காற்றாய்
என்னைக்
கலங்க வைத்ததையெல்லாம்
காதோடு கதை சொல்லுமோ ?
உன் கனவோடு, என் நினைவோடு
நம் காலை செல்லுமோ ?

காத்திருந்த காலமெல்லாம்
களைத்துப் போகிறதே!
காணாத ஏக்கத்தில்
இளைத்துப் போகிறதே!

நெஞ்சில் உன்னைத் தாங்கி
நிம்மதியாய் நீரூற்றி
நிறைமாதமாய் ஒரு கர்ப்பம்….
குறையாத கங்கையாய்
என் உயிரோடு ஒரு சொர்க்கம்…

நீ வந்து பார்த்தாலே
விழிக்குடத்தில் உடைந்து பெருகும்!
விம்மித் தீர்க்க விழையும்…
பட்ட துயரெல்லாம் – உன்
பார்வையால் பசி தீர்க்க
உயிர் நிறைந்து உள்ளம் வழியும்!

ஒருமுறை வந்துபோயேன்!
சின்னச் சிரிப்பில்,
சிறகுப் பதத்தில்,
சொந்தமாய் சில வார்த்தை
எனக்கே எனக்காய், கொஞ்சம் தந்துபோயேன்!

piraati@hotmail.com

Series Navigation

வேதா

வேதா