நாகரத்தினம் கிருஷ்ணா
2002ம் ஆண்டு, ஜனவரிமாதம் 21ந்தேதி..பின்னிரவு..
மொரீஷியஸ் நாட்டின் வக்கோஸ் பகுதியிலுள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைமை அலுவலகம். வழக்கம்போல அன்றைய இரவும், நவம்பர்மாதம்முதல் மார்ச்மாதம்வரையிலான நாட்களில் காட்டும் கூடுதல் அக்கறை. அலுவலகமெங்கும் வெப்பமண்டலப்புயல்பற்றிய வரைபடங்கள், தகவல்கள். அவற்றின் பல்வேறு கட்டங்கள், நிலைகள். வெளிச்சமிட்டுக்கொண்டிருக்கும் கணிணித் திரைகள். ஐசோபார்கள் காட்டும் ஏற்ற இறக்கங்களில், எந்த நேரமும் எதுவும் நடக்காலாமென, இரண்டு நாட்களாக உறக்கமின்றி, வரிசையாக ஒன்று, இரண்டு, மூன்று என எச்சரிக்கை எண்களை ஏற்றிவிட்டு, வானிலை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு பயத்துடன் காத்திருக்க, அது நடந்தேவிட்டது.
வாயுபகவானின் வாரிசாக அதீத ரெளத்திரத்துடன் அந்தக் குழந்தை. குழந்தையின் கொடூர உறுமலில், இந்தியப் பெருங்கடலே அழுது ஆர்ப்பரிக்கிறது. மொரீசியஸ் தீவிற்கு வடக்கே உருப்பெற்று, 22ந்தேதி அதிகாலையில், ஆவேசத்துடன் – தீவிலிருந்து 62 கி.மீ. எல்லைக்குள் நுழைந்து – காலை ஆறுமணிக்கு 19.5 டிகிரி தெற்கு அட்சரேகைக்கும், 56.8 டிகிரி கிழக்குத் தீர்க்கரேகைக்கும் இடையிலே மையம்கொண்டு – கர்ஜித்த அந்தப் புயல் குழந்தைக்கு, ‘எச்சரிக்கை எண் நான்கை ‘ ஏற்றிவிட்டு மொரிசியஸ் நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் சூட்டிய பெயர் ‘தினா ‘ (Dina).. ப(பு)யல் ‘தினா ‘ தவழ்ந்த வேகம் மணிக்கு 206கி.மீ…
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநல ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் 2002ம் ஆண்டு ஜனவரி 24ந்தேதியிட்ட அறிக்கை மொரீசியஸ் தீவில் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட புயற் சேதங்களைக் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறது:
மின்சாரம்: மொரீிஷியஸின் வடபகுதி குறிப்பாகத் தலைநகரம் போர் லூயி (Port Louis), பாம்ப்ளிமூஸ் (Pamplemouse), வல்தோன் (Valtone), மொகா(Moka) பகுதிகள் பலத்தசேதங்களை அடைந்துள்ளன. மொரிஷீயஸ் மத்திய மின்சாரவாரியம் 20 சதவீத மக்களின் மின் இணைப்பு, துண்டிக்கப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
குடிநீர்: நாடெங்கும் குடிநீர் விநியோகம் வெகுவாக பாதித்துள்ளது. கிட்டத்தட்ட 70 சதவீத மக்கள் முறையான குடிநீரின்றி அவதிப்படுகின்றனர்.
தொலைபேசி: 400 000 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளுடன் குறிப்பாக பிரான்சுடன் தொடர்பு கொள்வதென்பது முற்றிலும் இயலாது. இதனைச் சரிசெய்ய பதினைந்து நாட்கள் ஆகலாம் என மொரீஷியஸ் தொலைபேசித்துறை அறிவிக்கிறது.
கல்விக் கூடங்கள்: பெரும்பாலான கல்விக்கூடங்கள் சேதமடைந்துள்ளன. மறுதேதி அறிவிக்கப்படும்வரை அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடபட்டுள்ளன. எனினும் அவை எதிர்வரும் ஜனவரி 29ந்தேதி மீண்டும் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடியிருப்பு: புயலால் வீடிழந்த மக்கள் சுமார் 1000பேர் சமூகக் கூடங்களிற் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 360 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக அரசு மறுவாழ்வுத் திட்டத்தின் மூலம் குடியிருப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
விவசாயம்: கரும்பு விளைச்சல் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உற்பத்தியில் 15 லிருந்து 20சதவீதம் சேதமாகியுள்ளது இது சுமார் 650 000டன் ஆகும். தேசிய வருவாயில் 1.2லிருந்து 1.4 பில்லியன் மொரீஷியஸ் ரூபாயாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. நாட்டின் உடனடிக் காய்கற்ித் தேவையைச் சமாளிக்க அடுத்த இரண்டு மாதங்களுக்கு அவற்றை இறக்குமதி செய்ய அரசு உத்தேசித்துள்ளது.
தொழில்கள்: நாட்டின் 80 சதவீதத் தொழில்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ‘தினா ‘ புயலினால் முடங்கியுள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள ஒரு மணிநேர உற்பத்தி இழப்பு சுமார் 15 மில்லியன் மொரீஷியஸ் ரூபாய்.
உயிர்ச்சேதம்: மொரீஷீஸியஸ் வடக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள இப்புயலுக்கு இதுவரை இருவர் பலியாகியுள்ளதாக அரசின் அதிகாரபூர்வமான தகவல் தெரிவிக்கின்றது. உயிரிழந்தவர்களில் ஒருவர் பிரான்சு நாட்டின் லியோன் நகரைச் சார்ந்த சுற்றுலாப் பயணியான டானியல் ( 30வயது) என்றும், புயலுக்குப் பலியான மற்றொரு உயிர் மொரீஷியஸ் பாம்ப்ளிமூஸ் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பு மொதிலி (முதலி) மகள் சின்னத்தம்பு தெவானை(23 வயது) எனவும் அரசின் முதற் தகவல் அறிக்கை தெரிவித்துள்ளது..
‘காலம் ‘ மூப்பற்றது, ஜனனமும் மரணமும் அறியாதது. ஏழு பிறப்புகளிலும் நம்மீது உழவலன்பு செலுத்துகிற ஒரே ஜீவன். உங்களை, உங்கள் பாட்டனை, உங்கள் கொள்ளுப் பாட்டனை, எள்ளுப்பாட்டனை, எனது பாட்டனை, எனது கொள்ளு அல்லது எள்ளுப்பாட்டனை, நமக்குப் பொதுவான பாட்டன்களை பாட்டிகளை, நமக்குத் தெரிந்த தெரியாத புள்ளினங்களை, தாவரங்களை, விலங்கினங்களை நீர் வாழ்வன, நிலம் வாழ்வன அனைத்தையும், புள்ளியாய் ஜனித்து – கோடாய் வளர்ந்து – புள்ளியாய் மரணிக்கும் வரை உயிர்களின் உயர்வு தாழ்வுகளை, சுக துக்கங்களை, உறவுகள் பகைகளை, பொறுமைகளை ஆற்றாமைகளை, தோல்விகளை வெற்றிகளைக் கண்களில் அயற்சியின்றி, யயாதியோ, மார்க்கண்டேயனோ அல்லது யயாதி மார்க்கண்டேயனோ, ஆத்திகன் நம்புகிற கடவுளோ, ஏதோவொன்றாய் என்றும் இளமையாய் வேடிக்கைபார்க்கிறது, சாட்சியாய் நிற்கிறது. நிகழ்வுகள் அதன் வயிற்றில் சுலபமாய்ச் செரித்துப்போகின்றன. நாம் அதனெச்சத்தில் தப்பி, வேரூன்றி, கிளை பரப்பி, தழைத்து, பழுத்து இன்றோ நாளையோ மீண்டும் மீண்டும் முனை மழுங்காத கோடரியின் வரவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
பிறப்பென்று ஒன்றிருந்தால் இறப்பு இல்லாமலா ? பார்த்திபேந்திரனோ, தேவயானியோ, பெர்னார் குளோதனோ, தெய்வானையோ, நீங்களோ நானோ சந்தித்தே ஆகவேண்டியிருக்கிறது.
‘முட்டையை உடைத்துப் பறந்த பறவையும், சட்டையை உரித்துவிட்டுப்போனபாம்பும் எப்படித் திரும்பவும் முட்டையிலும் சட்டையிலும் நுழையாவோ அதுபோல ஸ்தூலத்தை விட்டுப்பிரிந்த சூக்கும உடலும் திரும்ப ஸ்தூலத்தில் பிரவேசிக்காது. நனவு மாறிக் கனவு நிலை அடைவதைப்போல ஸ்தூல உடல்விட்டு சூட்ஷம உடலானது வானினூடு செல்கின்றது. அவ்வாறு சென்றவை புண்ணிய பாவங்களுக்குத் தக்கபடி இன்ப துன்பங்களை நுகர்ந்த பின்னர் ஐசுவரியம் நிரம்பிய மனையிலோ, தரித்திரமிக்கதோர் மனையிலோ வந்து பிறக்கும் ‘ என இந்து மதம் நம்புகிறது.
பிறக்கின்ற இடம் மாத்திரம் உயிர்களின் சுக துக்கங்கங்களைத் தீர்மானிக்க முடியுமா என்ன ?
இப்படியான கேள்விகளுக்கென்றே இயற்கை தனது பதிலை வைத்திருக்கிறது. உயிர்களின் உற்பத்திக்கும், ஜீவிதத்திற்கும் காரணமாயிருக்கும் புவனமும், ஆகாயமும், காற்றும், மழையும், நதியும், கடலும் அவ்வுயிர்களின் அடங்கலுக்கும் பொறுப்பேற்கிறது. நீங்களோ நானோ உறவு பாராட்டுவது எதற்காகவென்று அறிவோம். உறவையும் நட்பையும் நாம் கொண்டாடுவது, பரஸ்பர சுயநலங்களின் தேவைக்காக. எதிர்பார்ப்புகளற்று இயங்கும் பஞ்சபூதங்களுக்கு மானுடத்தின் நேர்த்திகடன் என்ன ? நமது ஆரம்பமும் முடிவும் அதன் தயவிலே உள்ளது என்பதை பெரும்பாலும் மறந்துவிடுகிறோம்.. மெலிந்தவன் புலம்புகிறான், வலிந்தவன், அகங்காரத்தில் மிதக்கிறான், ஆயுதத்தை ஏந்துகிறான், பலமற்ற தேசமென்றால் ராணுவம், பலமிருந்தால் சமாதானம். இயற்கையின் நீதி இப்படியானதல்ல, அதற்கு அமெரிக்காவும் ஒன்றுதான், ஆப்ரிக்காவும் இன்றுதான். இவற்றின் சீற்றங்களுக்கு ஏதோ ஒருவகையிம் மானுடமும் பொறுப்பு. இயற்கையினுடைய கோபத்தின் அளவு சிறியதென்றால் பெயர் சொக்கேசன், பலியாகும் உயிர்கள் பார்த்திபேந்திரன், தெய்வானை. அளவிற்பெரியதென்றால் தினா, சுனாமி. பலியாகின்ற உயிர்கள் ?….
‘நன்றும் தீதும் பிறர் தர வாரா ‘, சத்தியமான வாக்கு.
முற்றும்
நன்றி.
இத்தொடரின் வெற்றிக்கு, மூவர் முக்கியப்பங்கினை ஆற்றியிருக்கிறார்கள்.
1. திண்ணை இதழும், ஆசிரியர் குழுவும்: இத்தொடரைத் திண்ணையில் எழுதுவதற்கு நான் விருப்பம் தெரிவித்தபோது, மனமுவந்து ஏற்றார்கள், முழுச்சுதந்திரத்தோடு என் எழுத்தைப் பதிவுசெய்ய இறுதி அத்தியாயம்வரை அனுமதித்தார்கள். நீலக்கடல் பேசப்படுமானால், திண்ணை இணைய இதழின் அணைப்பும் ஆதரவும் பேசப்படவேண்டும், பேசப்படும்.
2. இடைக்கிடை எனக்கு உற்சாகமளித்த மின் அஞ்சல்கள், அவைகளில் என் மரியாதைக்குரிய எழுத்தாளர்களும் உள்ளனர்.
3. என் படைப்புகளின் முதல்வாசகரும், எழுத்துப்பிழையைக் கூடியவரைப் குறைக்க உதவும் எனதருமை இலங்கை நண்பர் மரியதாஸ். பிறகு எப்போதும் போல எனது அலுவற்பணிகளை குறைத்து எழுத்தில் அக்கரைகொள்ள வைக்கிற என் துணைவியார்.
இம்மூவர் அணிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
நீலக்கடல் புதின மாலையில் பூக்கள், இலை, நார், எல்லாம் உண்டு. இங்கே எவர் பூ, எவர் நார் ? என்பதான விவாதங்கள் இல்லை. பார்த்திபேந்திரன், தெய்வானை மாத்திரமல்ல, காத்தமுத்துவும் வேம்புலி நாயக்கருங்கூட கதையின் பங்குதாரர்களே. சொல்லப்போனால் நாரில்லையேல் மாலை ஏது ? பூக்களுக்கல்ல, நாருக்கு என் நன்றி.
கூடியவிரைவில் நீலக்கடல் புத்தக வடிவம்பெறவிருக்கிறது, திருத்தங்களுடன்.
நீலக்கடல் புதினத்திற்கு உதவிய நூல்கள்:
1. Les Tamouls a L ‘Ile Maurice , Ramoo Sooriamoorthy (PortLouis -1977)
2. La Bourdonnais Marin et aventurier, Philippe Haudrere (Paris -1992)
3. Pondichery – 1674 – 1761 -L ‘echec d ‘un reve empire – Dirige par Rose Vincent (editions Autrement Paris -1993)
4. Slaves, Freedmen, And Indentured Laborers in Colonial Mauritus, Richard B. Allen (Cambridge university press-1999)
5. History of the Nayaks of Madura, R. Satyanatha Aiyar, Asian Education Services (Madras-1924)
6. A history of South India, K.A. Nilakanda Sastri, Oxford University press (Newdelhi-1955)
7. Histoire de l ‘Inde -Rev.Pere Vath de la societe de Jesus (Payot, Paris -1937)
8. Histoire de l ‘Inde Moderne 1480 -1950 sous la direction de Claude Markovits, editions Fayard, 1994
9. Les grands reves de l ‘Histoire, Helene Renard et Isabelle Garnier, editions Michel Lafon,(Neuilly-sur-Seine -2002)
10. La Reincarnation J.H. Brennan Edition Grancieere (Paris -1981)
11. L ‘Apprenti sorciere- Au coeur de l ‘Inde mysterieuse -Tahir Shah Editions de Fallois pour la traduction francaise (1998)
12. Une Vie Paria, pays Tamoul, Inde du Sud -Viramma, Josiane et Jean-Luc Racine editions France Loisir (Paris 1995)
13. Lumiere sur la voie Tantrique, Michel Manor -editions Guy Tredaniel (Paris-1996)
14. The Intrepretation of dreams, Sigmund Freud -Avon books (Newyork -1965)
15. Les pirates de Madagascar aux xvii et xviii eme siecle, Hubert jules Deschamps- editions Berger-Levrault (Paris-1972)
16. இந்துமத இணைப்பு விளக்கம், கே. ஆறுமுக நாவலர், நாகர்கோவில்(1963)
17. ஆனந்தரங்கபிள்ளை நாட்குறிப்பு, கலைபண்பாட்டுதுறை, புதுவை அரசு 1988.
18. நகரமும் வீடும் வாழுமிடத்தின் உணர்வுகள், ரொபேர் துய்லோ, பாண்டிச்சேரி பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் (1993)
19. கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணம் மூலமும் தெளிவுரையும், வர்த்தமானன் பதிப்பகம் (1990)
20. கந்தபுராணம் ஒரு பண்பாட்டுக் களஞ்சியம், கலாநிதி நா. சுப்பிரமணியன், கலைஞன் பதிப்பகம் (2002)
21. காஞ்சிபுரம் ஸ்தல புராணமும் முக்கிய பாசுரங்களும், க. ஸ்ரீதரன், நர்மதா பதிப்பகம்
22. சித்தர் தத்துவம், டாக்டர்.க. நாராயணன், மாரிபதிப்பகம் (புதுச்சேரி -1998)
23. சித்தர்களின் சிருஷ்டிரகசியம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
24. பதினெட்டு சித்தர்களின் வாழ்வும் வாக்கும், ஸ்ரீ தேவநாதசுவாமிகள்
25. தமிழகம் புதுவை வரலாறும் பண்பாடும் -முனைவர் சு. தில்லைவனம்.
26. சித்தர்களின் சாகாக்கலை – சி.எஸ் முருகேசன்
27. மரணத்தின் பின் மனிதர்நிலை -மறைமலை அடிகள்
இவற்றைத் தவிர, Bibliotheque National Francois Mitterand -Paris (France), Archives Nationales, Centre des Archives d ‘Outre-Mer, Aix-en-Provence (France), Archives de Maurice, Port -Louis (Ile-Maurice), French Institut- Pondicherry(Inde), எண்ணற்ற இணைய தளங்கள், காஞ்சிபுரம் குமரக்கோட்ட இந்து அறநிலையத் துறை அதிகாரிகள்: திருவாளர்கள் சீனுவாசன், தேவராயன், வைத்தீஸ்வரன்கோவில் நாடி சோதிடர் திரு.கோவிந்தசாமி, நண்பர்கள் புதுச்சேரி ராஜசேகரன், பாரீஸ் முத்துக்குமரன், மொரீஷியஸ் பாவாடைப்பிள்ளை அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
பணிவுடன்
நாகரத்தினம் கிருஷ்ணா
- இயற்கையே என் ஆசான்
- கடிதம் 27, ஜனவரி 05 – ஜெயமோகனின் அறிவியல் புனைகதை 9
- கடிதம் ஜனவரி 27,2005
- கடிதம் ஜனவரி 27 ,2005 – ஜோதிர் லதா கிரிஜா : ஹமீத் ஜாஃபர் : ரஹ்மத் கபீர்!
- கடிதம் ஜனவரி 27,2005
- விடைபெறுகிறேன்
- கடிதத்தின் பொருள்: நாகூர் ரூமியின் கவிதை
- ஒரு மனுதர்மவாதியும், ஒரே பொய்யின் ஆயிரம் வடிவங்களும்
- கடிதம் ஜனவரி 27,2005
- கடிதம் ஜனவரி 27,2005 – பசுமை தாயகம் வேண்டுகோள்
- கழுதையின் காம்போதி !
- தமிழ்
- நேர்முகமும் எதிர்முகமும்
- மீட்டெடுக்கச் சொல்கிறேன்
- கவிதைகள்
- இணக்கு
- கீதாஞ்சலி (12) – விழித்தெழுக என் தேசம்!(மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- கவிக்கட்டு —- 46
- ஓரு உரைநடைச் சித்திரம்.
- கடிதம் ஜனவரி 27,2005 – ஜோதிர் லதா கிரிஜா : ஹமீத் ஜாஃபர் : ரஹ்மத் கபீர்!
- ஓவியக் கண்காட்சி
- கடிதம் ஜனவரி 27,2005 – பெரியார் மதம்
- நபிகள் நாயகம் – ஜைனப் மணம் : சலாஹுதீனுக்குச் சில விளக்கங்கள்
- ராம்தாஸ் – சேது – திருமாவளவன் சூளுரை
- புத்தர் இயல்பு (மூலம் ZEN)
- பூ ை ன சொன்ன க ை த
- ரெக்ஸ் எண்டொரு நாய்க்குட்டி…
- கதறீனா
- அறிவியல் புனைகதை – ஜீன் திருடனின் விநோத வழக்கு (மூலம் நான்ஸி க்ரெஸ்)
- காரின் மனக்கதவுகள்
- குறுநாவல் – து ை ண – 2
- வரலாறும் மார்க்சியமும்
- வீங்கலை விபரீதங்கள்…. என் அனுபவம் – 2
- சுனாமியும்,நிதியுதவியும் உலக நாடுகள் கூறும் மனிதாயமும்- மக்களாண்மை நோக்கிய தேடலும்
- ஒப்பிலான்
- முழுமை
- நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் -56 (முடிவு)
- பலி (மூலம்- MARCOSAN)
- வானம் வசப்படும் (மூலம் – Michaelangelo)
- பெரியபுராணம் – 28 – ( கண்ணப்பநாயனார் புராணம் தொடர்ச்சி )
- சோதி
- ஆதங்கம்
- இளமையும் ஞானமும் (மூலம் – Michaelangelo)
- இந்தோனேசியா தீவுகளில் உண்டாகும் பூகம்பம் இந்து மாக்கடல் அரங்கில் சுனாமியைத் தூண்ட வல்லது (3)
- பெண்ணியம் தொடர்பான வெளியீடுகளின் பின்னணியில் பெண்கள் சந்திப்பு மலர் 2004
- நிஸ்சிம் எஸக்கியல் : பெயர்தலும் அலைதலும்
- மண்ட்டோ படைப்புகள் விமர்சனக்கூட்டம்
- கோவா – கூடியாட்டம் – குட்டிச் சாத்தான்(மஞ்சரி ஃபிப்ரவரி 1955 – பகுதி 2)