This entry is part [part not set] of 17 in the series 20010715_Issue
லாவண்யா
அந்தக் கட்டிடத்தினுள் எங்கேயோ சங்கரன் தன் டைாியைத் தொலைத்துவிட்டான்.
வீட்டுக்குப்போகிற வழியில்தான் அதை கவனித்தான்., எப்போதும் பான்ட் பாக்கெட்டில் பாரமாக உறுத்திக்கொண்டிருக்கும் டைாி., இன்றைக்கு திடாரென்று ஏதோ குறைபட்டதுபோல் உணர்வோடு கைவிட்டுப் பார்த்தபோது பாக்கெட்டின் வெறுமை கனமாய்த் தோன்றியது. கடவுளே, அதை எப்படித் தொலைத்தேன்.
ரொம்ப முக்கியமான டைாி என்று சொல்வதற்கில்லை. டைாியில் பர்ஸனலாய் ஏதும் எழுதுகிற வழக்கம் அவனுக்கு இல்லை., அவ்வளவு சின்ன டைாியில் ஒரு சமயத்தில் சில வார்த்தைகளுக்கு மேல் நுணுக்கி நுணுக்கி எழுதுவது கஷ்டம், அதுமட்டுமில்லாமல் அவன் வேலையிலும் சாி, வீட்டிலும் சாி ரகசியங்கள் ஏதும் இருக்கவில்லை. நீரோடைபோல தடங்கலில்லாத வாழ்க்கை.
இப்போது புதிதாய் வந்திருக்கிறது இந்த தடங்கல். அந்த டைாியில்தான் நண்பர்கள், உறவினர்கள் என்று பழக்கமான எல்லோருடைய முகவாிகளும், ஃபோன் நம்பர்களும், உபயோகமான, உபயோகமற்ற இன்னும் பலதகவல்களும் இருக்கிறது.
அவனுடைய ஞாபக சக்தியின்மேல் பொிதாய் அவனுக்கு நம்பிக்கை இல்லை. அப்பா உபயோகித்து, இப்போது அவன் ஓட்டிக் கொண்டிருக்கிற பழைய டிவிஎஸ் ஐம்பதின் நம்பரும், வீட்டுத் தொலைபேசி எண்ணும்தவிர வேறெந்த எண்களும் அவன் நினைவில் நிற்பதில்லை. சின்ன வயதிலிருந்தே அப்படிதான், ஐம்பது கிராம் மஞ்சள்தூளும், இரண்டு ரூபாய்க்கு கடுகும் வாங்குவதற்கு அவனை மளிகைக்கடைக்கு அனுப்பினால்கூட கையில் விவரமாய் அதை எழுதிக் கொடுத்துவிடுவாள் அம்மா., என்னதான் முயற்சித்தாலும் பாீட்சை எண்கூட அவன் ஞாபகத்தில் வராது, பலமுறை ஹால்டிக்கெட்டைப்பார்த்துதான் விடைத்தாளில் நம்பர் எழுதியிருக்கிறான். ாிசல்ட் பார்ப்பதும் அவ்வாறே.
‘இனிமேலும் இப்படிப் பொறுப்பில்லாம இருக்காதே ‘ என்று அப்பா அவன் வேலையில் சேர்ந்தபிறகு ஒருநாள் அந்த டைாியை வாங்கிக் கொடுத்தார். அன்றிலிருந்து துவங்கி, எதை மறக்கக்கூடாது என்று நினைத்தாலும் அதில் எழுதி வைத்துக் கொள்வான். அவன் மேனேஜாின் செல்ஃபோன் நம்பர், அவனுடைய பாஸ்போர்ட் எண், போனவாரம் மயிலாப்பூாில் பார்த்துவிட்டு வந்த பெண்ணின் அலுவலக டெலிஃபோன் நம்பர், வீட்டுக்குப் பக்கத்தில் கர்நாடக சங்கீதம் சொல்லித்தரும் முகவாி, கரண்ட் பில் கட்டுவதற்கான கடைசித் தேதியும், தொகையும், கடைசியாய்
வண்டி சர்வீஸ் செய்த நாள், அமொிக்க அக்காவின் ஈமெயில் முகவாி, இன்னும் அவன் மறந்துபோன நிறைய விஷயங்கள் அந்த டைாியில் இருக்கிறது. என்னென்ன இருக்கிறது என்பதுகூட நினைவில் வர மறுக்கிறது.
எது முக்கியம், எது முக்கியமில்லை என்பது எப்படித் தொியும் ? மறந்தபிறகு, அல்லது தொலைத்தபிறகு எல்லாமே முக்கியமாகத்தான் தொிகிறது. மறக்கக்கூடாது என்பதற்காக கவனமாய் எழுதி வைத்த விஷயங்கள் இப்படி மொத்தமாய்த் தொலைந்துபோகும் என்று யார் எதிர்பார்த்தது ? அவனுக்கு அவன்மேலே கோபமாய் வந்தது, அவனுடைய ஞாபகசக்தி இன்னும் குறைந்ததுபோல் இருந்தது.
ஓரமாய் வண்டியை நிறுத்தினான். எங்கே தொலைத்திருப்பேன் ? இன்று முழுக்க ஆஃபீஸை விட்டு எங்கேயும் வெளியே போகவில்லை. மாலையில் விக்ரமுக்கு ஃபோன் செய்வதற்காக டைாியில் நம்பர் பார்த்ததாய் நினைவு, அங்கேதான் எங்கேயாவது மறந்து விட்டிருக்க வேண்டும். மீண்டும் போய்ப்பார்க்கலாமா ? சாலையில் நெடுக நொிசலாய் நீண்டிருந்த வாகனங்களைப் பார்த்ததும் முடிவை மாற்றிக் கொண்டான். என்ன செய்யலாம் ?
ஃபோன் செய்யலாம். வாட்ச்மேனிடம் பேசி அவன் இடத்தில் டைாி இருக்கிறதா என்று பார்க்கச் சொல்லலாம்.
ஆனால் ஆஃபீஸ் ஃபோன் நம்பரும் அவன் நினைவில் இல்லை., அந்த டைாியில் இருக்கலாம்., ஒன்றரை மாதம் முன்புதான் பழைய ஆஃபீஸிலிருந்து இடம் மாற்றினார்கள். ‘ஐ டி பார்க் ‘ என்று அரசாங்கமே கட்டிக்கொடுத்த மகா பொிய கட்டிடத்தில் ஒரு மாடியை மொத்தமாய் வாடகைக்கு எடுத்து, மூன்று நான்கு இடங்களில் இருந்த அலுவலகங்களையெல்லாம் ஒரே இடத்திற்குக் கொண்டுவந்தார்கள். டெலிஃபோன் இணைப்பு சாியாய் வருவதற்கு ஒன்றிரண்டு வாரங்கள் ஆனது, இன்னும் அந்த எண் பழக்கமாகவில்லை.
ஒரு முட்டுச்சந்தின் இறுதியில் வந்து சிக்கிக் கொண்டதுபோல் உணர்ந்தான். இலக்கில்லாமல் தன்னிச்சையாக சட்டைப்பைக்குள் கைவிட்டபோது விசிட்டிங் கார்ட்கள் தட்டுப்பட்டது. போனவாரம்தான் புதிதாய் அச்சிட்டு வந்தது., இதை எப்படி மறந்தேன், அதில் தொலைபேசி எண் இருக்குமே.
தேடிப் பார்த்து கண்டுபிடித்து, பக்கத்திலிருந்த சின்ன சந்தினுள் ஒரு கடைக்குள் நுழைந்தான்., ‘ஒரு லோக்கல் கால்ம்மா ‘
‘ரெண்ட்ரூவா ‘ என்றது அந்தப் பெண் நிமிர்ந்துபார்க்காமல்.
‘சாி ‘ என்றுவிட்டு முயற்சித்தான். முதல் மணியிலேயே எடுக்கப்பட்டு ஒரு பழைய குரல் வரவேற்பு சொன்னது. ‘நீங்கள் தேடும் நபாின் எண் தொியாவிட்டால், காத்திருங்கள் ‘ என்றது. அவன் காத்திருந்தபோது கத்ாி கோபால்நாத்தோ வேறு யாரோ சப்தமாய் சாக்ஸஃபோன் வாசித்தார்கள். ரொம்பநேரம் கழித்து யாரோ எடுத்தார்கள், கரகரவென்ற குரலில் தடுமாறலாய் ஆங்கிலம் பேசினதைப் பார்க்கிறபோது செக்யூாிட்டியாகதான் இருக்க வேண்டும். தமிழில் விசாாித்து உறுதிப் படுத்திக் கொண்டான்.
நேரடியாக ‘நீ வாட்ச்மேனா ‘ என்று கேட்டதில் கோபமா தொியவில்லை. ‘என்ன விஷயம் சார் ? ‘ என்று கொஞ்சம் அதட்டலாகவே பதில் வந்தது.
அவனிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்வதில் சங்கரனுக்கு தயக்கம் இருந்தது. எப்படிச் சொல்வது ‘என் பேர் சங்கரன்., நம்ம ஆஃபீஸ்லதான் வேலை பண்றேன் ‘ என்று துவங்குவதில் அவனிடம் கருணை எதிர்பார்க்கிறமாதிாியான ஒரு தொனி இருந்ததை அவன் விரும்பவில்லை என்றாலும் வேறு வழியில்லை.
‘சாி, இப்போ என்ன மேட்டர் ? ‘ என்று அவன் அலட்சியமாய்க் கேட்டபோது அதிகம் உாிமை எடுத்துக்கொள்ள விட்டுவிட்டோமோ என்றிருந்தது. ‘ஒண்ணுமில்லை, என் டைாியை அங்கே மறந்து வெச்சுட்டேன், அது இருக்கான்னு பார்க்கணும் ‘ என்றான்.
‘என்ன டைாி ? ‘
அவனிடம் விளக்கிக் கொண்டிருக்க முடியாது. ‘ஒரு சின்ன டைாி, பாக்கெட்ல வெச்சுக்கறமாதிாி டைாி, நம்பர், அட்ரஸெல்லாம் எழுதியிருக்கும் ‘ என்றான் சுருக்கமாய்.
‘அது எல்லார்ட்டயும் இருக்கு சார், எதுனா அடையாளம் சொல்லுங்க ‘ என்றான்.
சிவப்பு வண்ணம், முதல் பக்கத்தில் அவன் பெயர் எழுதியிருக்கும் என்பதைத் தவிர வேறென்ன சொல்வது ?
‘இத வெச்சுகிட்டு எப்படி தேடறது சார் ? எங்க விட்டாங்க, அதையாவது சொல்லுங்க ‘
அவன் உட்கார்ந்திருந்த இடத்தில் ஃபோன் இல்லை. கொஞ்சம் தள்ளி தூண் ஓரமாய் இருந்தது. ஃபோன் செய்யப்போனபோது அங்கேதான் விட்டிருக்க வேண்டும்.
ஆனால் அதை இந்த வாட்ச்மேனிடம் விளக்கிச் சொல்வது சுலபமில்லை. காரணம் அவனுடைய அலுவலகம் ஒரு குழப்பமான வலையாக இருந்தது. ாிசப்ஷனுக்குப் பக்கத்திலிருக்கிற கண்ணாடிக் கதவைத் திறந்து உள்ளே நுழைவது வரை சாியாகவே இருக்கும். அதன்பிறகு எங்கே யார் இருக்கிறார்கள் என்பது தொியாதபடி எங்கே பார்த்தாலும் கேபின்களாய், கம்ப்யூட்டர்களாய், பேப்பர்களாய், மனிதர்களாய்ச் சிதறியிருக்கும். மிகப்பொிய ஹால் ஒன்றை அங்கங்கே மரம்கொண்டு தடுத்து கேபின் கூண்டுகளாய் மாற்றியிருந்தார்கள். இப்படி குறைந்தது ஐநூறு கேபின்களாவது நெருக்கநெருக்கமாய் அங்கே இருக்கும். ஆகவே இவற்றினிடையே நடப்பதற்கான பாதை எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது மிகக் கடினம். அப்படியே கண்டுபிடித்துவிட்டாலும், அது நாம் உட்கார்ந்திருக்கிற இடத்திற்குத்தான் போகிறதா என்பதை ஊகிப்பது அதைவிட கஷ்டமான காாியம். எவ்வளவு கவனமானவர்களாக இருந்தாலும் அங்கே வழிதவறிப் போய்விடுவார்கள்.
சங்கரனைப் பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை. வந்தபுதிதில் ஓாிரு நாள் பாத்ரூம் போவதற்காக எப்படியோ வழி விசாாித்துக் கொண்டு வெளியே வந்துவிட்டான்., ஆனால் அவனுடைய சீட்டிற்குத் திரும்பிப் போவதற்கு வழி தொியாமல் கால் மணி நேரத்துக்குமேல் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருக்க நேர்ந்தது. காபி குடிக்கப்போகும்போதும், மதிய உணவு இடைவேளையின்போதும்கூட இதுமாதிாியான கூத்துக்கள் நடந்ததுண்டு. சில நாட்கள் இதை அனுபவித்தபிறகு, யார்யாாிடமோ கேட்டு அலைந்து அந்த அலுவலகத்தின் மேப் ஒன்று வாங்கிக் கொண்டு அவனுடைய இடத்தை மட்டும் சிவப்பு நிறத்தில் வட்டம் போட்டு எப்போதும் பாக்கெட்டில் வைத்திருக்கிறான். அது பொிதாய் உதவாவிட்டாலும், கால் மணி நேரம் அலைவதை, ஏழு அல்லது எட்டு நிமிடங்களாகக் குறைத்தது., அதைக்காட்டி யாாிடமாவது விசாாிக்கவும் முடிந்தது. இடம் சாியாகப் பழகுகிறவரை இந்தத் தொல்லைதான்.
தன் அலுவலகத்துக்குள்ளேயே இப்படி வரைபடம் வைத்துக்கொண்டு சுற்ற வேண்டியிருப்பது எப்போதும் அவனுக்கு உறுத்தலாகவே இருக்கும். இதற்கு முன் இருந்த அலுவலகத்தில் இப்படி இல்லை. அது சின்ன அலுவலகம் என்றாலும், எல்லாமே நன்றாக இருந்தது, வீட்டுக்குப் பக்கத்திலேயே ஆஃபீஸ், பத்து நிமிடத்தில் போய்விடலாம். அவனுக்கு ஜன்னலோர சீட் கிடைத்தது. ரொம்ப போரடிக்கிறபோது திரையை விலக்கி துணிகாய்கிற மொட்டைமாடிகளையோ அல்லது எப்போதாவது தென்படுகிற பச்சை மரங்களில் குருவிகளையோ பார்க்கலாம். கொஞ்சம் பக்கத்திலேயே காபி மெஷின், ஓய்வு அறை போன்ற வசதிகள் இருந்தன. படியேறி மொட்டைமாடிக்குப் போனால் கூரைவேய்ந்த கேன்ட்டானில் மசால் வடையும், சூடான காப்பியும் எப்போதும் கிடைக்கும். அதை முக்கால் மணி நேரம் சாப்பிட்டுக்கொண்டு மாலை நேரங்களில் சாலையில் பரபரப்பு ட்ராஃபிக் மெல்லமாய் வடிவதை நிதானமாய் வேடிக்கை பார்க்கலாம். அந்த அலுவலகத்திலிருந்த எல்லோரையும் எல்லோருக்கும் தொிந்திருந்தது. வேலைக்கு வந்திருக்கிற உணர்வே இல்லாமல், வீட்டில் இருப்பதுபோல்தான் இருக்கும்.
இந்த ஆஃபீஸ் அதைவிட மிகப் பொியது. பதினாறோ, பதினேழோ மாடிகள், சின்னதும் பொியதுமாய் ஐம்பது கம்பெனிகளுக்குமேல் இருப்பதாய் சொல்கிறார்கள். பிரம்மாண்டம் என்று பத்திாிக்கைகளில் அடிக்கடி படிக்கிற வார்த்தைக்கு அர்த்தம் இந்த கட்டிடத்தைப் பார்த்தால் புாிந்துவிடும். கீழ்த்தளத்தில் வண்ணமயமாய் இறைகிற நீரூற்றில் துவங்கி எல்லாமே பொிது. பேங்க், தபால் ஆஃபீஸ், கேன்டான், ஒரு பொிய புத்தகக்கடை, அங்கங்கே பெப்ஸி, கோக், காபி யந்திரங்கள், டிராவல் ஏஜென்சிக்கள், யூரோ ரெஸ்டாரண்ட் ஒன்று, பூங்கொத்துக் கடைகள் சிலது, நீச்சல்குளம், ஜிம், டென்னிஸ் கோர்ட் இன்னும் நிறைய வசதிகள் இருந்தன. ஒரு பொிய மளிகைக்கடை வரப்போவதாய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டிடத்துக்குள் தேவையான எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்போலும்.
இத்தனை செளகர்யங்கள் இருந்தும், இந்தக் கட்டிடத்தினுள் நுழைகிறபோதும், வெளியிலிருந்து அதைப் பார்க்கிறபோதும் அது ஒரு பொிய சிறைச்சாலையாகவே சங்கரனுக்குத் தோன்றும். ஊருக்கு ரொம்ப வெளியே அது கட்டப் பட்டிருந்ததால், காலை சீக்கிரமே எழுந்து கிளம்பியாக வேண்டும். முக்கால் மணி நேரத்துக்குமேல் நெருக்கித் தள்ளுகிற வாகனங்களுக்கும், கட்டுப்பாடில்லாத ஜனங்களுக்கும் நடுவே வாகனப் புகையில் பத்திரமில்லாமல் பயணித்து – எத்தனை கஷ்டப் பட்டாலும் ஒன்பது மணிக்குள் உள்ளே நுழைந்தாக வேண்டும். மாலையோ, இரவோ வெளியே வருகிற நேரம் நிச்சயமில்லை. எல்லா வேலைகளும் ஒரு கட்டிடத்துக்குள்ளேயே – பெரும்பாலான சமயங்களில் ஒரே கேபினுக்குள். அங்கிருந்த பலர் அவனுக்கு புதியவர்களாய் இருந்தார்கள், பழைய கட்டிடத்தில் அவனோடு பக்கத்திலிருந்த சிநேகிதர்கள் எல்லாம் இந்த ஆஃபீஸ் வந்ததும் வெவ்வேறு முனைகளுக்குத் துரத்தப் பட்டிருந்தார்கள். இங்கே அருகில் அமர்ந்திருக்கிறவர்கள் இன்னும் பழக்கமாகவில்லை. எல்லோருக்கும் அவரவர் கம்ப்யூட்டரே துணை, வேலை முடிந்து கொஞ்சம் வெளியில் எட்டிப் பார்த்தால் பக்கத்தில் அமர்ந்திருப்பவனுக்கு மணி பார்த்துவிட்டு காலை வணக்கங்களோ, மாலை வணக்கங்களோ சொல்லலாம். மற்றபடி உலகத்தோடான தொடர்பு முழுமையும் அற்ற தீவுக்கூட்டமாகவே அந்தக் கட்டிடத்தினுள் எல்லோரும் ஆக்கப்பட்டுவருவதாய் அவன் எண்ணம். அலைந்து, திாிந்து, பழகி, பேசி, கலந்து, பகிர்ந்து வாழ வேண்டிய வாழ்க்கையை, ஒரு கட்டிடத்துக்குள் கட்டிவைப்பது நியாயமில்லைதான்.
அதெல்லாம் இப்போது இரண்டாம்பட்சம், இப்போது அந்த ராட்சசக் கட்டிடத்தில் அவன் உட்கார்ந்திருக்கிற இடத்தை வாட்ச்மேனிடம் சாியாக சொல்ல முடியவில்லை. இதை எப்படி சமாளிப்பது ?
மறுமுனையில் அவன் பொறுமையில்லாமல், ‘சீக்கிரம் சொல்லுங்க சார் ‘ என்றான். ‘ஒரு நிமிஷம் ‘ என்றுவிட்டு பாக்கெட்டிலிருந்து மேப்பை எடுத்துப் பார்த்தான், ஒன்றும் சாியாய் விளங்கவில்லை. இதை எப்படி அவனுக்கு சொல்வது ?
‘எல்லா சீட்டுக்கும் நம்பர் இருக்குய்யா, இதுகூட தொியாதா உனக்கு ‘ என்று அதட்டினான்.
‘அதெல்லாம் எங்களுக்கு தொியாது சார், எங்க வேலை கேட்ல உட்கார்ந்திருக்கிறதுதான் ‘ என்று அவனும் சளைக்காமல் பேசினான்.
இவனிடம் பேசிப் பிரயோசனம் இல்லை. வேலையைத் தள்ளிவிடப் பார்க்கிறான். நோில் போய்தான் பார்த்தாக வேண்டும். என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோதே பீப் பீப் என்று சுவாில் சப்தம் கேட்டது, ‘மூணு நிமிஷம் ஆச்சு சார், எக்ஸ்டென்ட் பண்ணட்டுமா ? ‘ என்றாள் அந்தப் பெண். ‘வேணாம்மா ‘ என்று வைத்துவிட்டான்.
சில்லறை தேடிக் கொடுத்துவிட்டு வெளியே வரும்போது அந்த வாட்ச்மேன் பெயரைக் கேட்காமல் விட்டுவிட்டோமே என்று நொந்துகொண்டான். இப்படியா பொறுப்பில்லாமல் பேசுவது, அவன் மேல் ஒரு புகார் கொடுத்தாக வேண்டும் என்று உறுதியாய் நினைத்துக் கொண்டான்.
இப்போது கம்பெனிக்குப்போவது சாிப்படாது, இந்த டிராஃபிக்கில் மாட்டினால் இரண்டு மணி நேரமாவது இழுத்துவிடும்., அதன்பிறகு திரும்பி வருவது கஷ்டம். நாளை காலையில்தான் சீக்கிரம் போய்ப் பார்க்க வேண்டும்.
அன்று இரவு முழுவதும் சாியாய்த் தூக்கம் இல்லை. அந்த டைாி பத்திரமாய் இருக்க வேண்டுமே.
**********
மறுநாள் காலை வழக்கமாய்க் கிளம்புவதற்கு கொஞ்சம் முன்பே புறப்பட்டான். வீட்டில் சொல்வதற்கு வேறு காரணம் வைத்திருந்தான். அப்பா இப்போதெல்லாம் கோபிப்பதில்லை, ஆனால் டைாி காணாமல் போனதைச் சொன்னால் பொறுப்பில்லை என்று மறுபடி சொல்லக்கூடும்.
அதிகாலையில் சாலையிலும் அவ்வளவாய் கூட்டம் இல்லை., செளகர்யமாய் வண்டியை ஐம்பதில் விரட்டியபோது காதுமடல்களில் குளிர் இதமாய்ப் படபடத்தது. இனி தினமும் இதே நேரத்துக்குக் கிளம்பினால் கஷ்டமில்லாமல் ஆஃபீஸ் போகலாமே என்று நினைத்துக் கொண்டான்.
எட்டே காலுக்கு அந்த பொிய கட்டிடம் பெரும்பாலும் காலியாக இருந்தது. இங்கே வந்த ஒன்றரை மாதத்தில் முதல்தடவையாக நெருக்குதல்கள் எதுவும் இல்லாமல் லிஃப்டில் தன்னந்தனியாக நான்கு மாடிகள் ஏறினான். அலுவலகம் துடைத்து பளபளப்பாக்கப் பட்டிருந்தது. வாசலில் ‘குட்மார்னிங் சார் ‘ என்ற வாட்ச்மேனின் விறைப்பான சல்யூட் கிடைத்தது. இவன்தானா ?
கழுத்தில் தொங்கிய அட்டையை கதவருகிலிருந்த யந்திரத்தினுள் நுழைத்ததும் செல்லமாய்ச் சிணுங்கி உள்ளே அனுமதித்தது. உள்ளே நுழைந்ததும்தான் சீக்கிரம் வந்த காரணமே நினைவுக்கு வந்தது. கதவு மூடுவதற்குள் மீண்டும் திறந்துகொண்டு வெளியே வந்தான்.
அவன் அவசரமாய் எழுந்து நின்றான். ‘என்ன சார் ? ‘
‘நேத்து ஈவினிங் இங்கே ஒரு டைாியைத் தொலைச்சுட்டேன், அதை யாராவது பார்த்து எடுத்துக் கொடுத்தாங்களா ? ‘ என்றான்.
‘ஓ, நீங்கதானா நேத்து ஃபோன் பண்ணினது ? ‘ என்ற அவன் முகத்தில் மலர்ச்சியைப் பார்த்தபோது ஒருநிமிடம் டைாி கிடைத்துவிட்டதைப் போன்ற சந்தோஷம் உண்டானது. ‘ஆமா ஆமா ‘ என்று அவசரமாய்ச் சொன்னான் சங்கரன்.
‘யாரும் எதுவும் கொணாந்து தரலையே சார் ‘ என்றான் அவன். சங்கரன் முகத்தில் ஏமாற்றத்தைப் பார்த்ததும், ‘க்ளீனிங் பண்ணப்போன பசங்களெல்லாம் உள்ளேதான் இருக்காங்க சார், அவங்க வெளியே வந்ததும் கேட்கலாம் ‘ என்றான்.
‘ஒழுங்கா கொண்டு வந்து கொடுத்துடுவாங்களா ? ‘ சந்தேகமாய்க் கேட்டான்.
‘தந்துடுவாங்க சார், அப்படியே எடுத்துட்டுப் போனாலும் செக்கிங் பண்ணிதான் வெளியே விடுவோம், அப்போ பிடிச்சிடலாம் ‘ என்றான்
நம்பிக்கையாய்.
‘சாி, கிடைச்சா எனக்கு உடனே ஃபோன்ல சொல்லுங்க ‘ என்று நம்பர் குறித்துத் தந்துவிட்டு உள்ளே வந்தான்.
சாம்பல் வண்ண சீருடையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து தரை, சுவர், ஜன்னல் என்று சுத்தம் செய்து கொண்டிருந்த பையன்கள் இப்போது விரோதமாய்த் தோன்றினார்கள். அந்த டைாியைக் கொண்டு அவர்கள் செய்யக்கூடுவது ஏதும் இல்லை என்றாலும், யாராவது எடுத்துக்கொண்டு போய்விடுவார்களோ என்கிற பயமும், அவர்களுக்குக் கிடைப்பதற்கு முன்னால் அந்த டைாி அவன் கண்ணில் பட்டுவிடாதா என்கிற நப்பாசையும் அவனுக்குள் இருந்தது. வேகம்கூட்டி நடந்தான்.
கோடு போட்டதுபோல் நேராய் அவன் இடத்துக்கு வந்துவிட்டான். கையிலிருந்த பையை ஓரமாய் வைத்துவிட்டு அவசரமாய் அந்த தூணருகே இருந்த ஃபோன் பக்கம் போய்ப் பார்த்தான். ஒன்றிரண்டு காகிதங்களைத்தவிர ஏதும் இல்லை. அந்த காகிதங்களைக் கலைத்து தேடிப் பார்த்தான். ஃபோனைக் கையில் எடுத்து அதன் அடியில் பார்த்தான்., டேபிளுக்குக் கீழே குனிந்து அங்கே இருந்த புத்தகங்களை நகர்த்திப் பார்த்தான். டைாி இருந்ததற்கான அடையாளமே இல்லை.
ஏமாற்றமாய் திரும்பி வந்து தன் இடத்தில் உட்கார்ந்தான். கம்ப்யூட்டரை இயக்கிவிட்டு மீண்டும் அவன் இடத்திலேயே தேடிப் பார்த்தான். நிறைய புத்தகங்கள், பாதி எழுதி கைவிடப்பட்ட குறிப்பு நோட்கள், உதிாி உதிாியாய் அச்சிட்ட காகிதங்கள், தபாலில் வந்த தள்ளுபடி சலுகைக் கூப்பன்கள், பழைய ரயில் டிக்கெட்கள் என்று நிறைய இறைந்து கிடந்தது, அவற்றினிடையே டைாி விழுந்திருந்தால்கூட ஆச்சாியப் படுவதற்கில்லை. ஒவ்வொன்றாய் எடுத்து கீழே தரையில் வைத்து அடுக்கினான். பல காகிதங்கள் தேவையில்லை என்று குப்பைக்குப் போனதும், மேஜை சுத்தமானதும்தான் மிச்சம், டைாி கிடைக்கவில்லை.
வெகுநேரம் வரையில் வேலையில் கவனமே ஓடவில்லை. ஒன்றிரண்டுமுறை ஃபோனுக்கு அருகில்போய் மீண்டும் தேடிவிட்டு வந்தான். அவன் அடிக்கடி வந்து பார்ப்பதைக் கவனித்து சிலர் விசாாித்தார்கள், ஒவ்வொருவருக்கும் நீளமாய் விளக்கம் சொல்ல வேண்டியிருந்தது. தவறாமல் எல்லோரும் அவனை ஒரு பாிதாபமான பார்வைபார்த்துவிட்டு அவரவர் இடத்தில் ஒருமுறை அவசரமாய்த் தேடிப் பார்த்து உதட்டைப் பிதுக்கினார்கள். அது அவனுடைய சோகத்தை இன்னும் அதிகமாக்கியது.
பதினோரு மணி வரையில் ஏதும் தகவல் வரவில்லை. இன்னொருமுறை வாட்ச்மேனைப் பார்த்து சொல்லிவிட்டு வரலாம் என்று வெளியே வந்தபோது வேறு ஒருவன் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தான். சங்கரன் விஷயத்தைச் சொன்னதும், ‘எனக்குத் தொியாதே சார், என்ன டைாி, எங்கே விட்டாங்க ? ‘ என்றான் அக்கறையாய்.
சங்கரனுக்கு அலுப்பாய் இருந்தது. மீண்டும் துவக்கத்திலிருந்து எல்லாம் சொன்னான். கேட்டுவிட்டு அவனும் உச்சுக்கொட்டினான். ‘கண்டிப்பா பார்க்கிறேன் சார், கவலைப் படாதீங்க கிடைச்சிடும் ‘ என்றான். தோளில் தட்டிக் கொடுக்காதது ஒன்றுதான் குறைச்சல். நம்பிக்கையில்லாமல்தான் சங்கரன் திரும்பிவந்தான்.
பன்னிரண்டு மணிக்கு ஒரு அவசர மீட்டிங் என்று அழைத்துப் போனார்கள், அது மதிய உணவு இடைவேளையையும் தாண்டி நீண்டு கொண்டிருந்ததில் இந்த விஷயத்தை சுத்தமாய் மறந்திருந்தான். கூட்டம் முடிந்ததும் அவனுடைய மேலதிகாாி, ‘உங்க டைாி காணாம
போச்சுன்னு சொன்னீங்களே சங்கர், கிடைச்சதா ? ‘ என்றார்.
‘இல்லை சார் ‘
‘அட்மின்-ல ாிப்போர்ட் பண்ணிட்டாங்கதானே ? ‘ என்றார்.
அவன் திடுக்கென்று நிமிர்ந்து ‘இல்லை சார், வாட்ச்மேன்கிட்டதான் சொன்னேன் ‘ என்றான்.
அவர் பொிதாய் உச்சுக் கொட்டினார், ‘வாட்ச்மேனுக்கு என்ன தொியும் சங்கர் ? சுஜாதான்னு அட்மின்ல ஒரு லேடி இருக்காங்க, அவங்கதான் இதுக்கெல்லாம் பொறுப்பு, அவங்ககிட்டே சொல்லுங்க, போனவாரம்கூட ஒரு செல்ஃபோன் காணாமபோய் திரும்ப கண்டுபிடிச்சுட்டாங்க ‘ என்றார்.
சங்கரனுக்கு திடாரென்று உடலில் பதட்டம் கூடியிருந்தது. இதை செய்யாமல் விட்டுவிட்டேனே.
சாப்பாட்டைக்கூட பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நேராய் ாிசப்ஷன் போய் விசாாித்தான். பக்கத்திலேயே ஒரு அறையில் அந்த சுஜாதா தடிமனான பொிய கண்ணாடிக்குப் பின்னால் இருந்தாள்.
பச்சை நிறத்தில் ஒரு ஃபாரம் எடுத்து ‘இதிலே எல்லா விவரமும் எழுதிக் கொடுங்க, வி வில் ட்ரை அவர் பெஸ்ட் ‘ என்றாள்.
பெயர், முகவாி, டெலிஃபோன் எண், தொலைத்த பொருள், அடையாளங்கள், விலைமதிப்பு, எங்கே தொலைந்தது, எப்போது தொலைந்தது என்று எழுத எழுத விவரங்கள் கேட்டுக் கொண்டே இருந்தார்கள், பொறுமையாய் நிரப்பிக் கொடுத்தான். நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தான்.
வரும்வழியில் மறுபடி அந்த வாட்ச்மேன் கண்ணில்பட்டான், ‘என்னப்பா, எதுனா தொிஞ்சதா ? ‘ போகிறபோக்கில் கேட்டான். அவன் மறுப்பாய்த் தலையாட்டியதை கவனிக்காமல் இடத்துக்கு வந்து டிபன்பாக்ஸை எடுத்துக் கொண்டான், ஏகத்துக்கு பசித்தது.
***********
அன்று முழுவதும் ஏதும் தகவல் இல்லை. மாலை திரும்பிப் போகும்போது வாட்ச்மேன் இருக்கைக்குப் போனான். ஒரு நாளைக்கு எத்தனைபேரை மாற்றுவார்களோ, இப்போது இன்னொருவன் இருந்தான், அவனுக்கும் தொலைந்துபோன டைாி பற்றித் தொிந்திருக்கவில்லை. எல்லோரும் ஓடிப் பிடித்து விளையாடுகிறார்களா என்று கோபமாய் வந்தது.
சுஜாதாவின் அறைக்குள் எட்டிப் பார்த்தபோது அதுவும் காலியாக இருந்தது. மெல்லமாய் ஒரு ஆங்கிலக் கெட்ட வார்த்தையை உச்சாித்துவிட்டு படிகளில் இறங்கினான். இரண்டாவது மாடி கேஸட் கடையில் அதிசயமாய் ‘எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன், விட்டுவிட்டுப் போனானடி ‘ என்று பழைய பாட்டு கேட்டது.
ஒரு சிறிய மைதானம் முழுக்க நின்றிருந்த வண்டிகளில் அவனுடையதைத் தேடிக் கண்டுபிடித்து வெளியே எடுக்கையில் பக்கத்து ஸ்கூட்டாின் தகரம் காலில் கீறிவிட சாக்ஸையும் மீறி எாிந்தது. மனதிலும் உடலிலும் களைப்பும் தளர்வும் ஆக்கிரமிக்க சோகமாய் வண்டியைக் கிளப்பும்போது அந்த கட்டடத்தின் கண்ணாடிப் பளபளப்பை இன்னொருமுறை பார்த்தான். அவ்வளவு சீக்கிரமாய்க் கிளம்பி வந்து என்ன புண்ணியம் ? அவனுக்கே வெட்கமாகவும், கவலையாகவும் இருந்தது. டைாி கிடைக்கும் என்கிற நம்பிக்கை பாதியாய்க் குறைந்திருந்தது.
அதற்குள் மறந்துவிட்டதா என்கிற ஆச்சாியத்தோடு ‘என் பேர் சங்கர், டைாி காணாம போச்சுன்னு நேத்து ாிப்போர்ட் பண்ணியிருந்தேன் ‘ என்றான்.
‘ஓ, இப்போ ஞாபகம் வருது, தகவல் ஏதும் கிடைச்சா கண்டிப்பா உங்களுக்கு இன்ஃபார்ம் பண்றோம் மிஸ்டர். சங்கர் ‘ என்றாள் எப்போதும்போல் சிாித்து.
அவனுக்கு கோபம் வந்தது, ‘ஒரு சின்ன டைாி, அதைக் கண்டுபிடிக்க இவ்வளவு நேரமா ? ‘
அவள் மீண்டும் சிாித்தால், இம்முறை அவளுடைய சிாிப்பு, ‘என்ன இப்படி சின்னப் பிள்ளை மாதிாி பேசுகிறாய் ‘ என்பதுபோல் இருந்தது. ‘நாங்க எங்க முயற்சிகளைச் செஞ்சுட்டுதான் இருக்கோம் மிஸ்டர். சங்கர் ‘ என்றாள். அவன் பதில் ஏதும் பேசவில்லை. அவளே தொடர்ந்து, ‘நீங்களே சொல்லிட்டாங்க சின்ன டைாி-ன்னு, எல்லார்ட்டயும் அந்தமாதிாி டைாி இருக்கு, அதனாலதான் கண்டுபிடிக்கிறது கஷ்டம், இதுவே ஒரு பொிய பொருளா தொலைச்சிருந்தீங்கன்னா ஈஸியா கண்டுபிடிச்சிருப்போம் ‘ என்று ஜோக் அடித்து அவனை இயல்பாக்க முயற்சித்தாள்.
என்ன பேசுகிறாள், இவளுக்காக ஒரு யானையைத் தொலைக்க வேண்டும் என்கிறாளா ? இப்படி நினைத்ததும் அந்த நேரத்திலும் சிாிப்பு வந்தது அவனுக்கு.
அவன் இன்னும் சமாதானமாகவில்லை என்றதும், ‘இதுவரைக்கும் பொருள் காணலைன்னு என்கிட்டே ாிப்போர்ட் பண்ணினவங்களைக் கேட்டுப் பாருங்க, பெரும்பாலான பொருட்களைத் திரும்பக் கண்டுபிடிச்சுக் கொடுத்திருக்கேன் ‘ என்றாள் பெருமையாய்.
‘அதெல்லாம் எனக்கு வேண்டாம் மேடம், என் டைாி திரும்பக் கிடைக்கணும், அவ்ளோதான் ‘ என்றான் அவன். மேடம் என்று அழைத்ததில் அவள்முகம் சற்றே சுருங்கியது. அவனுக்கு சந்தோஷமாய் இருந்தது.
‘யெஸ், இந்த பில்டிங் மொத்தத்துக்கும் அவங்கதான் பொறுப்பு, ரெண்டாவது மாடியிலே அவங்க ஆஃபீஸ் இருக்கு, போய்ப் பாருங்க ‘ என்றுவிட்டு உட்கார்ந்துகொண்டாள். அவளுடைய சிடுசிடுப்பிலிருந்து, இனி அந்த டைாி விஷயத்தில் அவள் ஒரு துரும்பைக்கூட நகர்த்தப் போவதில்லை என்பது புாிந்தது.
அவனும் கோபமாய் வெளியே வந்தான். இன்றைக்கு வேலை தாமதமானாலும் பரவாயில்லை, இந்த டைாி விஷயத்தை ஒரு கை பார்த்துவிட வேண்டும்.
************
நான்கைந்து இடங்களில் விசாாித்தபிறகு அந்த செக்யூாிட்டி அலுவலகத்தைக் கண்டுபிடித்தான். தூசு பறக்கிற ஃபைல்களோடு ஒரு அரசாங்க அலுவலகம்போல் இருந்தது. சுவாில் பொிதாய் அந்த கட்டிடத்தின் வரைபடம் மாட்டப் பட்டிருக்க, இன்னொரு போர்டில் அதிகாாிகள் பெயர் வாிசையாய் பொடி எழுத்துக்களில் இருந்தது.
முதலில் உட்கார்ந்திருந்தவாிடம் விசாாித்தான். அவர் முதல் பேச்சாய்,. ‘உங்க கம்பெனியிலே சுஜாதான்னு ஒருத்தர் இருப்பாங்களே, அவங்ககிட்டேதான் ாிப்போர்ட் பண்ணனும் நீங்க ‘ என்றார்.
‘அவங்கதான் இங்கே அனுப்பினாங்க சார் ‘
‘அடடா, அப்படியா ? ‘ என்று நலம்விசாாிப்பதுபோல் கேட்டுவிட்டு, ஒரு நிமிடம் பொறுத்து, ‘நீங்க நேரடியா ாிப்போர்ட் கொடுக்க முடியாது சார், அவங்கமூலமாதான் வரணும் ‘ என்றார்.
‘என்னசார் இப்படி சொல்றீங்க, அவங்கதான் இங்கே விசாாிக்க சொன்னாங்க ‘ என்றான்.
‘அதெல்லாம் எங்களுக்குத் தொியாது சார், இந்த பில்டிங்ல பத்தாயிரம் பேருக்குமேலே இருக்காங்க, இப்படி ஒவ்வொருவரும் புகாரைத் தூக்கிகிட்டு எங்ககிட்டே வந்துட்டா எங்களால சமாளிக்க முடியாது, அதனாலதான் ஒவ்வொரு ஆஃபீசுக்கும் ஒருத்தரைப் போட்டிருக்கோம், அவங்க விசாாிச்சு, கண்டுபிடிக்க முடியாத புகாரை மட்டும்தான் எங்களுக்கு அனுப்புவாங்க, அதுதான் ப்ரொசீஜர் ‘ என்றார்.
அவன் பேசாமல் நின்றான்.
‘போய் அவங்ககிட்டேயே மறுபடி சொல்லுங்க சார், நல்ல லேடி, கண்டுபிடிச்சுடுவாங்க ‘ என்றுவிட்டு திரும்ப லெட்ஜருக்குள் முகம் புதைத்துக் கொண்டார்.
சோர்வாய்ப் படியேறி மேலே வந்தான்.
************
மறுபடி சுஜாதாவின் அறைக்குப் போனபோது அது சாத்தியிருந்தது. கதவில் தட்டியபோது உள்ளேயிருந்து ஒரு பெண் எட்டிப்பார்த்து, ‘யார் வேணும் ? ‘ என்றாள்.
‘மிசஸ். சுஜாதா ‘
‘உங்க பேர் ‘
‘சங்கர் ‘
‘ப்ளீஸ் வெயிட் ‘ என்றுசொல்லிவிட்டு கதவை சாியாக சாத்தாமல் உள்ளே போனாள். அந்த அறை மிகச் சிறியது, உள்ளே அவள் சுஜாதாவிடம் பேசுவதை நன்றாகக் கேட்க முடிந்தது. சுஜாதா பதிலுக்கு, ‘நான் இப்போ பிஸியா இருக்கேன், அப்புறம் பார்க்கறேன்னு சொல்லிடு ‘ என்று சொல்வதும், ‘உள்ளங்கை சைஸ்ல ஒரு டைாியைத் தொலைச்சுட்டு, ஏதோ பத்து லட்ச ரூபாயைப் பறிகொடுத்தவர்மாதிாி கத்தறார், நாம என்ன பண்ண முடியும் சொல்லு ? ‘ என்று நியாயம் கேட்பதும் தெளிவாக அவன் காதில் விழுந்தது.
உடனே திரும்பி அவன் இடத்துக்கு வந்துவிட்டான்.
************
இது நடந்து பல நாட்கள் ஆகிவிட்டது. சங்கரன் அந்த டைாியைத் தேடும் முயற்சியைக் கைவிட்டுவிட்டான். அவனுடைய அதிகாாி இன்னும், ‘எது தொலைஞ்சாலும் அந்த சுஜாதா கண்டுபிடிச்சுடுவாங்கப்பா, நல்ல திறமைசாலி ‘ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அவன் ஃபோன் செய்யப் போகும்போது பக்கத்தில் இருக்கிறவர்கள் டைாி கிடைத்ததா என்பது பற்றி விசாாிக்கிறார்கள். எல்லாரையும் ஒரு மழுப்பல் புன்னகையில் சமாளித்துக் கொண்டிருக்கிறான். டைாி தொலைந்ததுபற்றி இன்னும் வீட்டுக்கும் சொல்லவில்லை. இன்னொரு டைாி வாங்கிக் கொள்ளுமாறு சிலர் ஆலோசனை சொன்னார்கள், மறுத்துவிட்டான்.
ஆனால் இப்போதெல்லாம் அவன் எந்த எண்ணையும் மறப்பதில்லை – கட்டிடங்களையும், மனிதர்களையும்கூட.