திருக்குறள் பற்றிக் கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வது சரிதானா ? -திருக்குறள் ஒரு சமண நூலா ?

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

நா.முத்து நிலவன்


திருக்குறள் ஒரு சமண நூலா ?

‘செம்மலர் ‘ ஜூலை மாதக் கேள்வி பதிலில், ‘திருக்குறள் ஒருசமணநூல் ‘ என்பதாக இளமதி தெரிவித்திருந்தார். இதே மாதிரி ஒரு கருத்தைக் கிட்டத்தட்ட இதேசமயத்தில் சென்னையில்நடந்த அ.மார்க்ஸின் புத்தக வெளியீட்டுவிழாவில் கவிஞர் அப்துல்ரகுமான் அவர்களும்–( ‘…க, வள்ளுவர் சமணமதக் கருத்துக்களை விதைத்தவர் ‘என்று)-தெரிவித்திருப்பதாக ‘நக்கீரன் ‘(ஜூலை 21, 2004)இதழில் படித்தேன். திருக்குறள் பற்றிக் கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வது சரிதானா ? திருக்குறள் ஒரு சமணநூல் தானா ? இதுபற்றி ஒரு விவாதத்தை நடத்துவது நல்லது.

தாம் வாழ்ந்த காலத்தில், பெரிதும் மேலோங்கியிருந்த சமணக்கருத்துக்களை முன்வைத்துச்சென்ற வள்ளுவர், சில இடங்களில் அந்த சமணக் கருத்துக்களையே மீறியும், பல இடங்களில் பெளத்தக் கருத்துக்களை கையாண்டிருப்பதையும் பார்த்தால் அவர் தனது நூலை ‘ஒரு சமண நூல் ‘ என்று முத்திரை குத்தவிடாமல் செய்திருப்பதாகவே எனக்குப் படுகின்றது.

முதலில் ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்:

‘யானையைப் பார்த்த ‘ குருடர்களைப்போல் வள்ளுவரைத் தத்தம் மதத்துக்குள் இழுக்கும் மதவாதியல்ல நான். எனவே, ‘வள்ளுவர் கிறித்துவரே ‘ என்றொரு நூல் எழுதியவரைப் போலவோ, அல்லது ‘அவர் ஒரு சைவ சமயத்தவரே ‘ எனும் திருவாவடுதுறை சைவப் பேராசிரியர்களைப் போலவோ, நான் வள்ளுவரை எந்தச் சமயச் சிமிழுக்குள்ளும் இழுத்தடைக்க விரும்பவில்லை. வள்ளுவரின் மதம் எதுவாயினும், அவர் குறளில் சமணக் கருத்துக்களை மட்டுமே வலியுறுத்தி எழுதவில்லை என்பதே எனது கருத்து.

அதே போல –பாரதிதாசன் போலும் முற்போக்குவாதிகளின் ‘அதீதக் குறளன்பின் ‘ அரசியல் அவசியம் காரணமாக – ‘வெல்லாத தில்லை, திருவள்ளுவன் வாய் விளைத்தவற்றுள்…

இல்லாத தில்லை, இணையில்லை, முப்பாலுக் கிந்நிலத்தே! ‘ என்றும் கவிபாட நான் தயாராக இல்லை.

‘தேவாரம் ஒரு சைவநூல் ‘ எனும் அளவிலான வார்த்தைகளில், ‘திருக்குறள் ஒரு சமணநூல் ‘ என்பது சரிதானா ? அன்றைய சமூக நிலைக்கேற்ப, அவருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு, னால் அதற்குப் பெயர்தந்து, உருவம் தந்து வணங்கும் மதவழி வழிபாட்டை அவர் வற்புறுத்தவில்லை. அவர்காலத்திய வேத வைதீக தெய்வங்களான இந்திரன்,பிரமன் முதலான தேவர்களைப் பல இடங்களில் சுட்டும் அவர், பெயர்சுட்ட வாய்ப்புள்ள கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் அந்தத் தேவர்களைக் ‘கண்டுகொள்ளவில்லையே ‘ ஏன் ?

*புத்தனுக்குரிய ‘பகவன் ‘ எனும் சொல்லை முதல் குறளிலேயே வழங்கியிருக்கும் திருக்குறள் சமண நூலாகுமா ?

‘பகவான் ‘ என்பது, பின்னர் வைணவம் வளர்ந்த பிறகு ‘உட்கவரப்பட்ட ‘ ஒரு சொல். (இதே பெயர் சமணருக்கும் உண்டெனினும், அது புத்தருக்குரியதுபோலப் பிரதானமான பெயரல்ல என்பது கவனிக்கத்தக்கது)

* ‘அறிவன் ‘- எனும் நேரடித் தமிழாக்கமும் புத்தருக்கே உரியது.

* ‘மலர்மிசை ஏகினான் ‘ – என்பதுகூட அப்பட்டமாக புத்தரையே குறிப்பதாகத் தெரிகிறது. (புத்தரின் பாதங்களில் தாமரை மலர் போலும் சக்கரச் சின்னம் இருந்ததான பழங்கதைகள் பலவுண்டு. புத்தரின் பட்டப் பெயரான ‘ததாகதா ‘ என்பதற்கு ‘இவ்விதம் சென்றவன் ‘-ஏகியவன்- என்பது பொருள்)

அடிப்படையில் எனது கேள்விகள் இவைதாம்:

(1)துறவறத்தை வற்புறுத்திய சமணத்துக்கு மாறாக,இல்லறத்தைப் பாடிய திருக்குறள் சமண நூலாகுமா ? குறளில், சமணம் போன்ற ‘கெடுபிடி ‘ நடைமுறை இல்லை. புத்தம் போன்ற ‘ஜனநாயக ‘ மரபே அதிகம். டுமாடுகளைப் பலிகொடுக்கும் வைதீக வேள்விக்கு எதிராக ‘தன்னைக் கட்டும்தவம் ‘ வலியுறுத்தப் பட்டது -சமணத்தில். அதைக்காட்டிலும், குடும்பவாழ்க்கையே பெரிதென்று கூறிய குறள் எப்படி சமண நூலாக முடியும் ? (காதலுக்கென்று மூன்றில் ஒருபகுதி நூலையே ஒதுக்கி காதலைப் பாடியது சமணக் கோட்பாடா என்ன ?)

(2) ‘உழவே செய்யக்கூடாது – செய்தால் அது தொடர்பான உயிர்களை அழிக்கவேண்டி வரும் ‘ என்பது சமணக் கோட்பாடு. எனில், ‘உழவே தலை ‘ என்ற குறள் எப்படிச் சமண நூலாக முடியும் ? இவை போலும் கேள்விகள் ஏராளம் ஏராளம்!

அன்றைய மன்னராட்சிக் காலத்திலேயே,மன்னராட்சிக்கெதிரான சில கருத்துக்களோடு – வேத வைதீக வர்ணாஸ்ரமக் கருத்துக்களை எதிர்த்த குரல்தான் வள்ளுவத்தில் அதிகமே அன்றி, சமணக் கருத்துக்கள் இருப்பதால் அது சமண நூலென்றோ,பெளத்தக் கருத்துக்கள் இருப்பதால் அது பெளத்த நூலென்றோ, சைவக் கருத்துக்கள் இருப்பதால் அது சைவ நூலென்றோ முடிவுக்கு வருவது எப்படிச் சரியாகும் ?

= நா.முத்து நிலவன், புதுக்கோட்டை – 622 004.

மின்அஞ்சல்:

Series Navigation

தகவல்: நா.முத்துநிலவன்

தகவல்: நா.முத்துநிலவன்