கோமதி நடராஜன்
———————
”அப்பா, சைலு !என்னை எப்படா திருநெல்வேலிக்குக் கூட்டிட்டுப் போகப் போறே.?…அந்த தாமிபரணித் தண்ணியை குடிப்பமான்னு இருக்குடா…”
அம்மாவின் இந்த கோரிக்கை,நெடுநாள் இருந்து வந்தாலும் ,சைலப்பன் காதில் போட்டுக் கொள்ளாதவனாகத்தான் இருந்தான்.
”அம்மா எதுக்கும்மா இப்படிச் சின்ன பிள்ளை மாதிரி அடம் பண்ணீட்டே இருக்கே…பிள்ளைகளுக்குப் பரிட்சை,பரிட்சை முடிஞ்சா லீவு, அதிலேயும் ஸ்பெஷல் கிளாஸ்ன்னு ஓடிட்டு இருக்கேன்..பாக்கலாம் சீக்கிரமா போவோம் உனக்கும் பிராயாணம் செய்ற தெம்பு வேணும்,நீயும்,அடிக்கடி படுத்துக்கிறே…”என்று பதில் கூறினாலும்
அவனுக்கு அம்மாவை திருநெல்வேலி அழைத்துப் போகும் எண்ணம் சிறிது கூட கிடையாது.லஷ்மியும் ,
”உங்களுக்கென்ன பைத்தியமா ,அம்மாவை ஒரு தடவையாவது கூட்டிட்டுப் போனா என்ன…ரொம்பத்தான் காசு பணம்ன்னு பார்த்துட்டு இருக்கீங்க…அல்லது ஆஃபீஸ் லீவு அது இதுன்னு நொண்டிச் சாக்கு சொல்லிட்டு..எனக்கு நீங்க பண்றது பிடிக்கவே இல்லீங்க..”அவனை அவ்வப்போது உசுப்பிக் கொண்டிருப்பாள்.
அம்மாவுக்கு அந்த தாமிரபரணி நதி மேல் உள்ள பாசத்தை ,அவன் அறியாதவன் இல்லை.
அடிக்கடி அம்மாவுக்கு உடல் நலம் குறைவதையும்,மருந்தும் மாத்திரையுமாக பல மாதங்களாகக் குழப்பத்தில் இருந்தவன் ,ஒரு கட்டத்தில்,தாயின் உயிரை நீட்டித்து வைக்கும் ஒரு வழியை உணர்ந்தான்.
ஜோஸ்யத்தில் நம்பிக்கை இல்லாதவன்தான் ,இருந்தாலும் அம்மாவின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஒரு நிபுணரை அணுகினான்.
அவரும் பல நிமிடங்கள் கட்டங்களில் கண்களை ஓடவிட்டபின் ,
”சார் உங்க அம்மாவுக்கு ஒரு ஆசை மனசிலே அடிச்சுட்டே இருக்கு,அது நிறைவேர்ற வரைக்கும் காலன் காத்திருப்பான்.அதுவரை அவங்களுக்கு இப்படித்தான் ….உடம்புக்கு வரும் போகும்..உயிருக்கு ஆபத்தில்லாமல் இருப்பாங்க..”
அவர் சொன்னதைக் கேட்ட அந்த வினாடியே முடிவு செய்து கொண்டான் அம்மாவை திருநெல்வேலிக்கு அழைத்துச் செல்லக் கூடாது என்று.
தான் எடுத்த முடிவை,லஷ்மியிடம் கூட பகிர்ந்து கொள்ளாமல் மனதுக்குள் பூட்டிவைத்தவனாய் ,கஞ்சன்,சோம்பேறி,போன்ற பட்டங்களைச் சுமந்தவனாய் நடமாடிக்கொண்டிருந்தான்.
அம்மா தனக்காக எத்தனை சுமந்திருக்கிறாள்,நாம் ஒன்றிரண்டு தவறான கணிப்பில் வெளியாகும் ,கெட்ட பெயரைத் தாங்கினால் தவறில்லை என்றவனாகத் தன் தாயை பூஜித்து காத்து வந்தவனுக்கு ,அம்மா விடை பெறும் நாள் நெருங்குவது தெரியாமல் போனது வேதனைக்கு உரிய விஷயமாக விரியத் தொடங்கியது.
இல்லம் வெறுமையாக போக இருப்பதை, அறிவிப்பு ஏதுமின்றி அன்றைய பொழுது விடிந்தது.
காலை எழுந்த உடன் சைலப்பன் ,அம்மா காபி சாப்பிட்டாயா …இன்னைக்கு என்னம்மா வேணும்..இட்லியா தோசையா ..பொங்கல் பண்ணச் சொல்லட்டுமா …”தாயைக் குழந்தையாக்கி அவன், தந்தையாக நிற்பது தினமும் காலையில் லஷ்மி காணும் காட்சி,வாடிக்கையான ஒன்று.
லஷ்மியும் தன் பங்குக்கு ,”என்னம்மா செய்யட்டும் “என்றபடி அருகே வந்து கேட்பாள்.
தன்னைப் போலவே தன் தாயை நேசிக்கும் மனைவியை மகிழ்ச்சியுடன் பார்த்தவாறு ,
”பொங்கல் ரெடி பண்ணு…அதான் அம்மாவுக்கு ஃபேவரைட் ..சரியாம்மா ?’
“இல்லேடா தாமிரபரணித் தண்ணிதான் என்னோட ஃபேவரைட்…”காமாட்சியும் தன் ஆசையை அழகாகத் தெரியப்படுத்த..
”விட மாட்டியே…. ”என்றபடி தாயின் உச்சந்தலை முடியை செல்லமாகச் சிலுப்பியவாறு நகர்ந்தான்.
அம்மாவின் சிறுமிப்பிராயத்தில் அவள் எப்படித் தன்னை அந்த நதியோடு ஐக்கியப்படுத்தியிருந்தாள் எனபதைப் பலமுறை சொல்லிக் கேட்டிருக்கிறான்.
“டேய் நான் பெரிவளார வரைக்கும் ,தாமிரபரணி ஆத்திலேதான் கிடப்பேன்,எங்க அம்மா தங்கச்சிகளோட குளிக்கப் போனா வெளியே வர மனசே இருக்காதுடா ,எங்களுக்கெல்லாம் அவ இன்னொரு அம்மாடா ,ஆத்துலே தண்ணி,அலை அலையாய் வரும் போதே, நம்மை ,”எப்படி இருக்கே ,நல்லா இருக்கியா ”,ன்னு ஒவ்வொரு அலையும் கேக்றமாதிரி ஓடும்.
ஆத்துக்குப் போற வழியிலே சங்கரி,ஆறுமுகம்னு பக்கத்து வீட்டு பொம்பளைங்கெல்லாம் ,என்ன குளிக்கப் போறீங்களான்னு கேப்பாங்க ,உங்க பெரிய சித்தி இருக்காளே.”.இல்லை கடைக்குப் போறோம்னு சொல்லுவா…,”அவங்கெல்லாம் ”நல்லாத்தான் தமாசா பேசுது”ன்னு சிரிப்பாங்க..
..
மேலத்தெருவிலே, வீட்டிலே இருந்து இறங்கி நடந்தா பத்தடி தூரத்தில் நடுத்தெருவிலே திரும்பணும்,ரெண்டு தெரு திரும்பினா போதும் சல சலன்னு ஆறு ஓடுற சத்தமும் ,ஜில்லுன்னு,காத்தும் நம்மை வா வா ,ன்னு கூப்பிடும்,
உன்னோட ஆச்சி என் கையிலே ஒரு குடத்தையும் ,உள்ளே கொஞ்சம் புளி,சாம்பல்,தேங்காய் நார்ன்னு எடுத்துட்டுப் போட்டு ,குடுத்து அனுப்பிடுவா… ,நான் கொண்டு போற குடம் எப்படி பள பளன்னு இருக்குன்னு பார்த்த பிறகுதான் என்னை உள்ளேயே விடுவா..
கொண்டுபோற குடத்தைக் கவுத்திப் பிடிச்சு நீச்சலடிச்சு அம்மா மடியிலே குதிச்சு விளையாடுறமாதிரி கும்மாளம் போட்ட பிறகுதான் குளியல்….
திரும்பி வரும் போதுதான் கஷ்டம்,ஈரப் பாவாடை நம்மை நடக்க விடாம தடுக்கும்,சுத்தமா குளிச்சுட்டு ரோட்டோரமா நடக்றப்போ…பார்த்து நடக்கணும்…பண்ணிக்குட்டியெல்லாம் இஷ்டத்துக்கு ஓடும்,மேலே வந்து விழுமோன்னு பயந்துட்டே நடப்போம்,
அப்போ எரிச்சலா வந்த சமாச்சாரமெல்லாம் இப்போ நினைச்சுப் பார்த்தா திரும்ப பார்க்க மாட்டோமான்னு இருக்குடா…
இப்படியாக ,
அவ்வப்போது தன்னிடம் ஒரு சிறுமியைப் போல் குழந்தையைப் போல் பகிர்ந்து கொண்ட அம்மாவின் கடந்த கால நினைவுகளோடு ,பேப்பர் வாசித்துக் கொண்டிருந்தவனை,தொலைபேசி மணி எழுப்பியது.
”ஹலோ!…”
யாரு கண்ணனா எங்கேடா இருக்கே…?
என்ன இப்ப வரியா ..வா வா அம்மாகூட உன்னைக் காணோமேன்னு கேட்டுட்டே இருப்பா ..
டூர் போய்ட்டு வரியா ..எங்கேல்லாம் போனே..
சரி நீ வா அதெல்லாம் அப்புறமா பேசிக்கலாம் ….”
”லஷ்மி நம்ம கண்ணன் வரான் உன் ஃப்ரெண்டும் வரா,அந்த வாண்டு அவனும் வரான்..கன்னியாகுமரி போய்ட்டு வராங்களாம். அவன் வந்தா ,அம்மாவுக்கும் ஒரு மாறுதலா இருக்கும்…”
கண்ணன் குடும்பத்தினர் சரியாக 10 மணிக்கு வந்து இறங்கினர்.
“வாடா டூர் எல்லாம் நல்ல எப்படி…வாம்மா ரேவதி…செளக்கியமா..டேய் ஷ்யாம்…நல்ல வளந்திட்டியே இப்போ என்ன படிக்கிறே….”
மனம் நிறைய வாய்மலர வரவேற்று உள்ளே அழைத்து வந்தவன்…,டேய் முதல்ல அம்மாவைப் பார்த்துட்டு வா…நீ வஏன்னு சொன்னதிலேருந்து ,வந்துட்டானா வந்துட்டானான்னு கேட்டுட்டே இருந்தாங்க…அவளுக்குப் பிடிச்சது எதையாவது கொண்டு வரேன்னு சொல்லியிருந்தியா…?”
அம்மா கண்ணன் வந்துட்டான்.
”டேய் கண்ணா எப்படிடா இருக்கே…அவளை எங்கே …”மூவரும் அருகில் வந்தார்கள்.அம்மா வந்தியா ,இது யாரு ராம்தானே ,?
”ஆச்சி நான் ஷ்யாம் …”என்றவனை அணைத்தவாறு …”ஆச்சிக்கு மறந்து போச்சுடா ..இனிமே ஞாபகம் வச்சுப்பேன் சரியாடா …”
அம்மா கோயில் பிரசாதம் எடுத்துக்கோங்க…பகவதி காந்திமதி மீனாட்சி கோயில்ன்னு போய்ட்டு வரோம்மா….”
இன்னைக்கு எனக்கு நல்ல நாள் போலிருக்கு,அத்தனையும் அம்மனும் என்னை ஆசீர்வதிக்க வந்துட்டாங்க…”பூரிப்புடன் பிரசாதத்தை நெற்றியில் இட்ட பின் அனைவருக்கும் நெகிழ்ச்சியுடன் இட்டு ஆசி கூறி மகிழ்ந்தவள்,”என்னமோ தெரியலைடா சைலு ,இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்…”
எங்களுக்கு அதுதானே வேணும்….சரிம்மா கொஞ்சம் படுத்திரு சமையல் முடிஞ்சு எல்லோருமா உக்காந்து சாப்பிடலாம்
அன்றைய பொழுது மகிழ்ச்சி கலந்து ஓடிக்கொண்டிருந்தது…மதியம் உணவு முடிந்து ஹாலில் அமர்ந்து அனைவரும் பேசிக் கொண்டிருக்க ,அம்மாவின் விக்கல் ஒலி கேட்டு லஷ்மி உள்ளே ஓடினாள்,
அங்கே அம்மா வழக்கத்துக்கு மாறாக மூச்சு முட்டலில் சிரமப் படுவதைக் கண்டவள்,உடன் வந்த மகனிடம்,
டேய் டேய் அப்பாவைக் கூப்பிடுடா ஆச்சிக்கு மூச்சு முட்டிட்டு வருது …ஓடு ஓடு ..
கண்ணன் வாசலுக்கு ஓடினான்,
அப்பா அப்பா சீக்கிரம் வா…ஆச்சி…”முடிக்கவில்லை
வந்திருந்த விருந்தாளிகளுடன் பேசிக்கொண்டிருந்த சைலப்பன்..
”என்னடா !!!என்ன?, ஆச்சிக்கு என்ன ஆச்சு ..?பதை பதைப்போடு எழுந்தான்.
”ஆச்சி மூச்சு விட சிரமப்படுறாங்கபா …..”
வாசல்கதவு தட்டி விழாத குறையாக நடுங்கியபடி அம்மா இருந்த அறைக்குள் நுழைந்தான்.
அம்மா காமாட்சி சுவாசம் சீறற்ற நிலையில் திணறிக் கொண்டிருக்க ,. தனக்கே அந்த நிலை வந்தாற்போல் ஆடிப்போனான்
”அம்மா அம்மா என்னம்மா பண்ணுது ”,
”தெரியலையேடா…கடவுள் கூப்பிடுறார்ன்னு நினைக்கிறேன்” என்ற செய்தியை மூச்சுத் திணரலோடு வெளிப்படுத்தினாள்.
”அப்படியெல்லாம் சொல்லாதேம்மா…உனக்கு ஒண்ணும் ஆகாது ..டாக்டரைக் கூப்பிடுறேன்…”
அவன் பின்னாலேயே ஓடிவந்த விருந்தாளிகளும் செய்வதறியாது நிற்கையில்..
கொஞ்சம் குடிக்கத் தண்ணி குடுங்க சைலப்பன்,என்று கூறியவாறு,தன் கையில் எடுத்து வந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து நீட்டினான்.
”அம்மா இந்தா கொஞ்சம் தண்ணி குடிம்மா நான் டாக்டரைக் கூட்டிட்டு வரேன்..”என்றபடி அவள் வாயில் தண்ணீரை மெதுவாக ஊற்றினான்.
”வேண்டாண்டா …இப்போ நீ எங்கேயும் போகாதே என் பக்கதிலேயே இருப்பா…நான் போற நேரம் வந்தாச்சுன்னு நினைக்கிறேன்.நான் உன்னைப் பார்த்துட்டேதாண்டா போகணும்…”
”அம்மா அப்படியெல்லாம் பேசாதேம்மா …”,விம்மலை மறைத்துக் கொண்டவனாய் முடிந்தவரை அம்மாவை ஆசுவாசப் படுத்தினான்.
சிறிது நேரத்தில் அம்மாவின் போராட்டம் அதிகரிக்க ,தேகமெல்லாம் நடுங்க பட படப்போடு தாயைத் தோளில் சாய்த்தவாறு ,
”கடவுளே !கடவுளே ”என்று பதறினான்.
மாமியாரின் நிலைமையும் ,அவருக்காக வருந்தி கணவன் கஷ்டப்படுவதையும் ,சேர்த்து பார்த்தபடி மனம் கலங்க நின்று கொண்டிருந்தாள் லஷ்மி.
நான் வேணா டாக்டருக்கு ஃபோன் போடட்டுமா…
காமாட்சி செய்கையாலேயே வேண்டாம் என்று தடுத்தபடி ,அருகில் இருந்த பேரன் பேத்திகளை இழுத்து அணைத்துக் கொண்டாள், எல்லோரையும் பார்த்தபடி இருந்த சிறிது நிமிடங்களில்,ஒரு சின்ன புன்னகையோடு சலிப்பும் களைப்பும் தீர்ந்த நிலை அடைந்தவள்போல்,கண்கள் நிலைகுத்தி நிற்க..
.”என் .இறுதி மூச்சு இதுதான் ”என்று ,சொல்லாமல் சொல்லி அடங்கிப் போனாள்.
”அம்மா அம்மா அம்மா ….”.
தன் குரல் ,இனி விண்ணைத் தொட்டால் கூட அவள் செவிகளில் விழாது என்பதை அறிந்தும் ,அடக்கமுடியாமல் விக்கித்துப் போனவன் ,மெதுவாகத் தன் முன் உருண்டுவந்த அந்தத் தண்ணீர் பாட்டிலைப் பார்த்தான்,
’பட படக்கும் குரலோடு ,ஏதுடா இந்தத் தண்ணி?”
திருநெல்வேலியிலே நம்ம மணி ,சாப்பாடி கட்டிக் கொடுத்தான் ,அவன் குடுத்த தண்ணிதாண்டா இது”.
அவன் சொன்னதைக் கேட்டதும் சைலப்பன் இடிந்து போனான்
,போகும் போது கூட தனக்கு சிரமம் வைக்காமல்,தனக்குக் குற்ற உணர்வு ஏற்படுத்தாமல் தன் கடைசி ஆசையை நிறைவேற்றிச் சென்றிருக்கும் அந்த உன்னதமான ஆத்மாவை மீட்டு விடலாம் என்ற வேகத்தோடு
நெஞ்சம் குமுற, தொண்டையில் பாரம் கனக்க ,
”அம்மா ”என்று அலறினான்.
இந்தமுறை அவன் அழைத்த ஒலி
அவனை விட்டுச் சென்ற அந்த உயர்ந்த ஆத்மாவுக்குக் கேட்டிருக்கும்,
“வாழ்க மகனே ”என்று நிச்சயமாக வாழ்த்தியிருக்கும்
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- ஒரு பறவையின் பயணம் பாவண்ணனின் ”ஒட்டகம் கேட்ட இசை”
- இவர்களது எழுத்துமுறை – 30 பிரபஞ்சன்
- பேட்டி : சுப்ரபாரதிமணியனுடன் பாலு சத்யா
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – (1)
- இளங்குருத்தினைக் காக்க உதவுங்கள்…
- திரு மலர்மன்னன் அவர்களுக்கு
- கம்பன் கழகத்தின் இந்த ஆண்டின் விழா 2011
- பூஜ்ஜியத்தின் கால்வாசி!
- அப்பாபோல
- வரிசையின் முகம்
- இதய ஒலி.
- பூர்வீகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி (Supercontinent Split & Drift)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -8)
- மனசாட்சி விற்பனைக்கு
- இனி உங்களைத் தூங்க வைக்க முடியாது
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)
- கடன்
- ஒரு ஊரையே
- போர்ப் பட்டாளங்கள்
- நீ அறியும் பூவே
- பிரியம் சுமக்கும் சொற்களால்…..
- ‘இவை… நமக்கான வார்த்தைகள்…!’
- ஐந்து குறுங்கவிதைகள்
- கபீரின் கனவும் நாம் கட்டமைத்த இந்தியாவும்
- வலை (2000) – 2
- தோட்டத்துப்பச்சிலை
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -2
- முன்னேற்பாடுகள்
- பெண் – குழந்தை … குமரி … அம்மா
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபது
- இரவின்மடியில்
- தாமிரபரணித் தண்ணீர்
- கூடா நட்பினால் விளைவது கேடே
- ஊழிற் பெருவலி யாதுள ?
- நின்று கொண்டே கிரிக்கெட் பார்த்தல் :
- வலை (2000) – 1
- சரஸ்வதி சகாப்தத்தின் நாயகர்.
- (3) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்
- தியான மோனம்
- ஆரம்பம்
- இயல்பில் இருத்தல்
- ப.மதியழகன் கவிதைகள்
- நரம்பறுந்த நிலம்..
- தண்ணீர்க் காட்டில் - 1
- நீ, நான் மற்றும் அவன்
- ஒரு கணக்கெடுப்பு
- முடிவற்ற பயணம் …