ஜெயமோகன்
சென்ற இதழ் தொடர்ர்சி
அன்புள்ள ஜெயமோகன்,
பகவத் கீதையைப்பற்றி இப்போது நடந்துவரும் விவாதங்களை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்துமதத்தின் பிரதான நூலான பகவத் கீதை ஒரு சாதிவெறிபரப்பும் நூலா ? சுயநலத்துக்காக கொலை செய்வதை அது வலியுறுத்துகிறதா ? என்னைப்போன்றவர்களுக்கு இந்தவகையான சர்ச்சைகள் மிக்க குழப்பத்தை அளிக்கின்றன. கீதையைப்பற்றி இப்போது தமிழில் மிகவும் எதிர்மறையான பார்வையை அளிக்கும் நூல்கள் பல வந்துள்ளன. அவற்றைப்படித்துவிட்டுச் சிலர் ஏளனமும் கண்டனமும் செய்கிறார்கள். பகவத் கீதை உரைகளில் அதற்கான பதில் உண்டா ? அவற்றில் எது சிறப்பானது ? எப்படி அவற்றைப் படிப்பது ? வழிமுறைகள் என்னென்ன ? உங்கள் பதில் எனக்கு தனிப்பட்டமுறையில் உதவியாக இருக்கும் என்று படுகிறது. ‘இந்துஞானமரபில் ஆறுதரிசனங்கள் ‘ தெளிவான மொழியில் திட்டவட்டமான பார்வையை அளிப்பதாக இருந்தது, அதேபோல விளக்கமாக எதிர்பார்க்கிறேன்.
எஸ். விவேகானந்தன்
சென்னை
கீதை ஏன் மக்களை பகுக்கிறது ?
கீதை ஒட்டுமொத்த மானுடகுலத்துக்கும் ,காலமுழுமைக்கும், பொருந்தக்கூடிய ஒரே மாறா வழிமுறையைச் சுட்டும் மதநூல் அல்ல. அது பிரபஞ்சத்தையும், வாழ்க்கையையும் , மனிதர்களையும் விளக்க முயலும் தத்துவநூல். மனிதர்கள் தங்கள் இயல்பிலேயே பன்மைத்தன்மை கொண்டவர்கள் என்பதும், எந்த ஒரு விஷயமும் ஒருவருக்கு சரியாக இருப்பது பிறருக்கு சரியாக இருக்காது என்பதும் இந்துஞான மரபின் எல்லா கிளைகளுக்கும் எல்லா அறிவியல் கோட்பாடுகளுக்கும் பொதுவாக உள்ள கருத்து. ஆகவே எல்லா தளத்திலும் பன்மைத்தன்மையை வலியுறுத்துவதும் எல்லா கூறுகளையும் பொதுவாக உள்ளடக்க முயல்வதும் இந்துஞானமரபின் எல்லா சிந்தனைகளிலும் காணப்படும் அம்சமாகும். கீதை மட்டுமல்ல பிரம்மசூத்திரமும் உபநிடதங்களும் கூட அப்படித்தான். ‘எல்லா ஆறுகளும் கடலையே சேர்கின்றன எல்லா அறிதல்களும் பிரம்மத்தை ‘ என்ற சாந்தோக்ய உபநிடத தரிசனம் நாம் அறிந்ததே
ஓர் ஆயுர்வேத அல்லது சித்த மருத்துவரிடம் நாம் சென்றால் அவர் முதலில் நம் உடலை அடையாளப்படுத்த முயல்வார். பித்த உடல், வாத உடல், கப உடல் என்று. அதன் பிறகு நம் தொழிலையும் சூழலையும் . ஆயுர்வேதியான என் பெரியப்பா நோயாளியின் இடம் கடற்கரை நிலமா மலைநிலமா வயலா என்ற கேள்வி கேட்காமல் சிகிழ்ச்சையை ஆரம்பிக்கவே மாட்டார். இப்பிரிவினை போன்ற ஒன்றே இயல்பு, செயல் ஆகியவற்றின் அடிப்படையில் கீதை பிரிக்கும் பிரிவினையும்
கீதை காட்டும் வழிகள் பலவாறாகப் பிரிந்து கிடப்பதை இந்நோக்கிலேயே புரிந்துகொள்ள முடியும். கர்ம யோகம் ஒருவருக்கு சரியாகுமென்றால் பக்தியோகம் இன்னொருவருக்கு உவப்பாகும். மோட்ச சன்யாஸ யோகமன்றி எதிலும் முழுமைபெறாதவராக ஒருவர் இருக்கக் கூடும். இது முழுக்க முழுக்க ஒருவரின் இயல்பு மற்றும் அவர் ஈடுபட்டு வரும் துறை ஆகியவற்றைச் சேர்ந்தது. அடங்காத உத்வேகம் கொண்ட ஒரு மன்னனுக்கு மோட்ச சன்யாச யோகம் பொருந்தாது. கீதை வழிகளை ஆணையிடவில்லை, கட்டாயபப்டுத்தவில்லை. சிபாரிசு செய்கிறது. துல்லியமான வழிமுறைகளை அளிக்கிறது. ஏன், அதற்குரிய உணவுமுறை குறித்துகூட அது விளக்குகிறது. இப்படிப்பட்ட மாறுபட்ட வழிகளை சுட்டும்பொருட்டே ; மனிதர்கள் மாறுபட்டவர்கள் , அவர்களின் தேவைகளும் மாறுபட்டவை என்று விளக்கும் முகமாகவே, அந்த சூத்திரம் வருகிறது .அங்கிருந்து கீதையின் விவாதம் மிக மிக விரிவாகப் பரந்துசெல்வதைக் காணலாம்.
கண்டிப்பாக இந்த சூத்திரம் சாதிய மனநிலை கொண்டவர்களால் சாதியை நியாயப்படுத்தும் வரியாக விளக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்படி விளக்கப்படாத நூலே உலகில் இல்லை. ‘ அந்தணர் என்போர் அறவோர் ‘ என்ற வரியும் அதேபோல சாதியவரியாக விளக்கப்பட்டுள்ளது.கீதையின் ஒட்டுமொத்தத்தில் அவ்வரி பெறும் அர்த்தத்தையும் முக்கியத்துவத்தினைக் கொண்டுதான் நாம் அதைப் புரிந்துகொள்ளவேண்டும். அதுவே எந்நூலுக்கும் உகந்ததாகும்.
இன்னொன்றும் சொல்லவேண்டும் . இந்தியாவின் பண்டைய நூல்கள் பல்லாயிரம் வருடப்பழக்கம் உள்ளவை. அவை மீண்டும் மீண்டும் எழுதி பிரதியெடுக்கப்பட்டு சேமிக்கப்பட்டவை. அச்சும் நூலாக்கமும் உருவான பிறகு வந்த நூறுவருடப் பழக்கம் கொண்ட நூல்களிலேயே [ உதாரணம் பாரதி பாடல்கள்] இடைச்செருகல்கள் திரிபுகள் உள்ளன என்னும்போது பண்டைய நூல்களின் ஒருவரியைப்பிடுங்கி ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது ஆபத்தானது.
மேலும் இவை எவையுமே ‘ ஒருவரிகூட மாற்றப்படக் கூடாத ‘ இறைவனின் சொற்கள் அல்ல. ஆகவே இவற்றில் ஒருவர் தனக்கு பொருந்துவதை எடுத்துக் கொள்ளலாம். பிறிதை நிராகரிக்கலாம். ஒட்டுமொத்தமாகக் கூட நிராகரிக்கலாம். ஆனால் வாசித்து ஆராய்ந்து அறிந்தபிறகு அதைச்செய்யவேண்டும் அவ்வளவுதான். கீதைக்கும் , பாதராயணரின் பிரம்மசூத்திரத்துக்கும் , ஆதிசங்கரரின் விவேகசிந்தாமணிக்கும் , உபநிடதங்களுக்கும் உரைகள் எழுதிய நித்ய சைதன்ய யதி கணிசமான இடங்களில் மூல ஆசிரியர்களை மறுத்து வாதாடுவதையும் சில கருத்துக்களை முற்றாக நிராகரிப்பதையும் காணலாம். இந்துஞானமரபு நித்யாவை இன்னொரு குருவாகவே கொண்டாடுகிறது. அவர் கருத்தை சற்றும் ஏற்காத வைதிகர்கூட அவரை அங்கீகரிக்கிறார்கள்.
கீதை ‘ஆயுதமேந்திய பிரதி ‘ யா ? [Text with weapon ]
தெளிவாக அடையாளங்களையும் நெறிகளையும் வரையறை செய்யும் ஒரு நூல் ஒரு தரப்பினரால் முக்கியமான நூலாகக் கருதப்படும்போது அது ஆயுதமேந்திய நூலாக ஆகிறது. மாற்றுத்தரப்புக்கு எதிராக அது அழிவை உருவாக்குகிறது. உலகில் இன்றுவரை உருவான எல்லா மத நூல்களும் ஆயுதமேந்திய நூல்களே. எல்லா நெறிமுறை நூல்களும் ஆயுதமேந்திய நூல்களே. குர் ஆன், மூலதனம், பைபிள் , மனுஸ்மிருதி , காபாலா எல்லாமே ஆயுதமேந்திய பிரதிகளே. பூமி மீது அவை பெரும் மானுட அழிவை உருவாக்கியுள்ளன. கருணையை மட்டுமே சொன்ன புத்தரின் தம்மபதம் கூட ஆயுதமேந்துவதை நாம் இலங்கையில் காண்கிறோம்.
ஆனால் அது அந்நூல்களின் நேரடி விளைவல்ல. திட்டவட்டமாக ஓர் அடையாளம் அல்லது அமைப்பு உருவாக்கப்படுமென்றால் அதை உடனடியாக அதிகாரசக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன. தங்களை ஒருங்கிணைக்கவும் பிறரை வெறுக்கவும் பயன்படும் கருவிகளாக அந்நூல்களை ஆக்குகின்றன. அழிவு தொடங்கிவிடுகிறது. இந்நூல்கள் உருவாக்கும் ஆக்கம் போலவே அழிவும் முக்கியமான சிந்தனைப்பொருளே. ஆகவே அடையாளங்களை வகுத்துரைக்கும் நூல்களை, விதிகளையும் தண்டனைகளையும் குறிப்பிடும் நூல்களை இந்த ஜனநாயக யுகத்தில் கவனமாகவே அணுகவேண்டியுள்ளது.
நீதிநூலாக இருப்பினும் திருக்குறள் அடையாளங்களை உருவாக்குவதல்ல. விதிகளை வகுப்பதுமல்ல. ஆகவேதான் அதை நான் உலகப்பொதுமறை என்று எண்ணுகிறேன். கீதையை நீங்கள் படிக்கலாம். அது ஏற்பவர்கள் ஏற்காதவர்கள். நம்புகிறவர்கள் நம்பாதவர்கள் என்ற இறுதி அடையாளம் எதையேனும் வகுக்கிறதா என்று ஆராயலாம். அது மாறா நெறிகளையும் விதிகளையும் வகுக்கிறதா என்று கவனிக்கலாம். அது சொல்வதெல்லாம் மனிதர்களின் இயல்புகளைப்பற்றியும் , வழிமுறைகளைப் பற்றி மட்டுமே. அதில் உள்ளவை தத்துவ அவதானிப்புகள் மட்டுமே. அப்படி ஏதாவது அடையாளப்படுத்தல் கீதையில் இருந்தால் அதை நிராகரிகக்லாம். நெறிகள் சொல்லப்பட்டிருந்தால் நீங்கள் விரும்பாவிட்டால் மறுக்கலாம். நிராகரிக்கும் உரிமையை அளிக்கும் நூல் அது.
கீதை என்றுமே ஒரு ஆயுதமேந்திய பிரதியாக இருந்தது இல்லை. அது உயர்தத்துவ தளத்தில் மட்டுமே புழங்கியது. அர்ச்சுனனுக்கு ஏற்பட்டதுபோல உண்மையான ஒரு தத்துவவச்சிக்கல் [ விஷாத யோகம்] உருவாகி , தேடி வருபவர்களுக்கு மட்டுமே அது கற்பிக்கப்பட்டது. தமிழ் உள்ளிட்ட பல இந்தியமொழிகளில் அது பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் மொழியாக்கம் செய்யயப்ட்டது, அதாவது இந்து மறுமலர்ச்சியின்போது. இந்து மதமரபுகளில் பல கீதையை நிராகரிப்பவை. உதாரணமாக சாக்தேய மததைச்சேர்ந்த என்குடும்பம் கீதையை ஏற்கக் கூடியதல்ல.
நிராகரிக்கும் உரிமையை வழ்ங்கும் ஒரு நூல் எப்படி ஆயுதமேந்திய நூலாக ஆக முடியும் ? இந்து ஞானமரபில் ஆயுதமேந்திய நூல்கள் நெறிமுறைநூல்களே. அர்த்த சாஸ்திரம். மனுஸ்மிருதி போன்றவைதான்.
கீதை கொலையை நியாயப்படுத்தும் நூலா ?
உலக இலக்கியத்தில் இன்றுவரை எழுதப்பட்ட மாபெரும் படைப்புகளில் பெரும்பாலானவற்றை கொலையை வலியுறுத்துபவை என்று நிராகரிிக்க முடியுமென்றால்தான் இக்கேள்வியை சாதாரணமாகக் கூட கேட்க இயலும். வீரம் என்றுமே பண்டையவாழ்வின் மாபெரும் விழுமியமாக இருந்துவந்துள்ளது. ஒரு மனிதனின் உச்சகட்ட சாத்தியம் வெளிப்படுவது வீரத்திலேயே என்பதனால்தான் அது அத்தனை முக்கியப்படுத்தப்பட்டுள்ளது. தாந்தேயின் ‘டிவைன் காமெடி ‘யை நினைவுகூருங்கள் . துறக்கத்தையும் நரகத்தையும் ஆழக்காணச் செல்வது முற்றும் துறந்த ஞானி அல்ல, கையில் வாளும் நெஞ்சில் தீரமும் கொண்ட பெளராணிக வீரனான யுலிஸஸ்தான். இன்று வீரம் என்பதன் பொருள் மாறுபடக் கூடும். கீதையின் முதல்தளம் அக்கால விழுமியங்களில் வேரூன்றி நிற்கிறது. அது ‘எக்காலத்துக்கும் உரிய வரிகள் மட்டுமே கொண்ட ‘ மதநூல் அல்ல.
போரைப்பற்றிச் சொல்வதனால் நிராகரிப்பதென்றால் முதலில் முற்றாக நிராகரிக்கவேண்டிய நூல் குர் ஆன் தான். அதில் ஏராளமான வரிகள் போரைப்பற்றியவையே. நபி தாமே ஒரு மாபெரும் போராளியாக இருந்தவர். அப்போர் கூட ஒரே இனத்துக்குள் ஒரே இனக்குழுவுக்குள் நிகழ்ந்த போர்தான். ஏசுகூட ‘ ‘ பூமிக்கு சமாதானத்தைக் கொண்டுவந்தேன் என்று எண்ணாதேயுங்கள். சமாதானத்தையல்ல பட்டயத்தையே [பட்டாக்கத்தி] கொண்டுவந்தேன் .எப்படியெனில் மகனை தந்தைக்கும் சகோதரனை சகோதரனுக்கும் எதிராக திருப்பவந்தேன் ‘ ‘ என்று பைபிளில் சொல்கிறார். வாழ்க்கையை ஒரு பெரும்போராக உருவகிக்கும் நோக்கு அக்காலகட்டத்துக்கு உரியது
போரைப்பற்றிப்பேசாத பெரும் ஞானநூல்கள் இரண்டே மதங்களில்தான் உள்ளன. பெளத்த சமண மதங்களில் . ஆனால் அவை ஒருவகையில் வாழ்க்கையின் யதார்த்தத்தை நிராகரிப்பவை. மெய்ம்மையை துறவின்மூலமே அறிய முடியும் என்று அவை கூறியது இதனாலேயே போலும்.
கீதை அதன் அமைப்பில் உபநிடதங்களைச் சார்ந்தது. உபநிடதங்கள் ஓர் அழகிய கதையை முன்னிலைப்படுத்தி அதில் நாடகத்தனமான ஒரு தருணத்தை உருவாக்கி அங்கு தங்கள் தத்துவ விவாதத்தைப் பொருத்தியுள்ளன என்பதைக் காணலாம். போர்முனையில் ஆழ்ந்த தர்மசங்கடத்துக்கு ஆளான பெருவீரனுக்கு கீதை சொல்லப்படுவது என்பது அத்தகைய ஒரு நாடகச் சந்தர்ப்பமே . கீதையை பயிலும் ஒருவர் அதன் மிகச்சிக்கலான, நுட்பமான தத்துவ விவாதத்தை அத்தகைய ஒரு நாடகத் தருணத்தில் பொருத்துவதன் அவசியத்தை புரிந்துகொள்ள முடியும். அதை பிறகு சொல்கிறேன்.
உபநிடதங்கள் ஏற்கனவே சொல்லப்பட்ட வாய்மொழிக்கதைகளில் இருந்து தங்கள் நாடகத்தருணங்களைக் கண்டடைகின்றன. அக்காலத்தில் இதிகாசங்கள் அத்தனை முக்கியத்துவத்துடன் இருந்திருக்காது என்று படுகிறது. கீதையின் காலகட்டம் குறைந்தது ஐந்து நூற்றாண்டு பிந்தையது .அப்போது இதிகாசங்கள் ஆழ வேரூன்றிவிட்டிருந்தன. குறிப்பாக மகாபாரதக்கதை கிராமம்தோறும் நிகழ்த்துகலையாக கொண்டுசெல்லப்பட்டிருக்கக் கூடும். ஆகவே கீதை மகாபாரதத்தின் தருணத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது. மகாபாரதத்தில் கீதைபோலவே பீஷ்மகீதை, விதுர நீதி போல பத்துக்கும் மேற்பட்ட தனித்தனி தத்துவ நூல் இணைப்புகள் உள்ளன. அவற்றில் செளனகன் சொல்லும் நாத்திக நூலும் அடக்கம்.. இந்த உத்தி மிக வெற்றிகரமானது என்பதில் ஐயமில்லை. கீதை இன்று இந்தியாவெங்கும் வேரோடிப் பரவியுள்ளமைக்கு அந்த மகாபாரதச் சந்தர்ப்பம் ஒரு முக்கியமான காரணம்.
உபநிடதங்கள் பொருத்தப்பட்டுள்ள கதைகள் அனைத்துமே அவை பேசும் தத்துவத்துக்கு ஏற்ப குறியீட்டுத்தன்மை கொண்டவை என்பதை சாமானிய கதைகேட்பாளர்கள் கூட அறிந்திருப்பதை நான் நேரில் அறிந்திருக்கிறேன். அச்சந்தர்ப்பத்தின் கவித்துவத்தை உணர்வதற்கு இலக்கிய அறிமுகம் இல்லையென்றால் குறைந்தபட்சக் கற்பனைவளமாவது தேவை. அதை ‘அப்படியே ‘ எடுத்துக் கொண்டு விவாதிக்கும் நம் ‘அறிவுஜீவி ‘கள் ‘ ஏதாவது ஒரு பேரிலக்கியத்தையாவது அதன் செவ்வி உணர்ந்து அனுபவித்தமைக்குத் தடையம் உண்டா என்ன ? கம்பராமாயணத்தை விடுங்கள் , திருக்குறளை அவர்கள் அணுகிய விதம் என்ன ? அவர்களிடம் இதைமட்டும் எப்படி எதிர்பார்க்க இயலும் ?
ஒரு விழியிழந்தவனுக்கு ஒரு சொல்வல்லுநன் உருவாக்கிய ‘சொல்நிலக்காட்சி ‘ யே கீதை என்பதே அதன் முக்கியமான கவித்துவம். இருபக்கமும் விரியும் கோபம் கொண்டு கொந்தளிக்கும் பெரும்படைகளின் சந்திப்பு எல்லைக்கோட்டில் அது சொல்லப்படுகிறது என்பது இன்னொரு முக்கிய படிமம். அந்த ரதம் [ அதை ஓட்டுபவன் எதிலும் எப்போதும் ஈடுபடாதவன், செயலாற்றுபவனுக்கோ ரதம் மீது கட்டுப்பாடே இல்லை] இன்னொரு படிமம். இப்படிமங்கள் அந்நூலின் மையமான நோக்குக்கு எந்த வகையில் ஆழத்தை அளிக்கின்றன என்பது சிறிதளவு இலக்கிய ரசனை இருந்தால்கூட அறிய முடியும்.
கீதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் ‘கொலை ‘ என்பதை இப்பின்னணியில் ஒரு கவித்துவ உருவகமாகவே கொள்ள முடியும். ஆகவேதான் அகிம்சையை முன்வைத்த காந்திக்கும் வினோபாவேக்கும் அந்நூல் வழிகாட்டியாக ஆனது. கீதை சொல்லும் கொலை உண்மையில் என்ன என்பதைப்பற்றி எல்லா கீதை உரைகளிலும் மீண்டும் மீண்டும் பேசபட்டுள்ளது . சுவாமி சித்பவானந்தரின் கீதை உரையில் ‘கொலை நூலா ? ‘ என்ற தலைப்பில் ஒரு கிளைத்தலைப்பே உள்ளது. அவற்றை விடுவோம். கீதையிலேயே மீண்டும் மீண்டும் ‘செயல் ‘ [கர்மம்] என்றே அர்ச்சுனனிடம் சொல்லப்படுகிறது. பொதுவாக மானுடன் செய்யவேண்டிய செயல் என்பதையே அக்கவித்துவச் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப ‘போர் புரிதல் ‘ என்று அது சொல்கிறது என்பதை அறிய கீதையை சாதாரணமாகப் புரட்டிப்பார்த்தாலே போதும்.
மேலும் மானுடன் தன் வாழ்வில் ஆற்றியாகவேண்டிய பல்லாயிரம் செயல்களில் இந்த விவாதத்துக்கு குறியீடாகப் போர் எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பது இரண்டு காரணங்களினால் என்பதை பொதுப்புத்தியினாலேயே உணரமுடியும். போர் ஒரு மனிதனின் உச்சமும் சாரமும் வெளிப்படும் தருணம். கோழைத்தனமோ வீரமோ . மகாபாரதமும், ராமாயணமும், புறநாநூறும், இலியட்டும், ஒடிஸியும் போரை பற்றி பேசுவது இதனாலேயே. போர் என்ற செயலின் விளைவுகள் உடனடியானவை. தீவிரமானவை. வாழ்வா சாவா என்ற தளத்தைச்சேர்ந்தவை. ஆகவே அது ஒட்டுமொத்தமாக செயலாற்றுதலின் குறியீடாக ஆக ஏற்றது.
இரண்டாவதாக போர் என்பதே குறியீட்டு அளவில் முடிவற்ற வாழ்க்கைப்போராட்டத்தின் குறியீடு. உலகின் எல்லா மொழியிலும் வாழ்க்கைப் போராட்டம் இந்த ஜனநாயக யுகத்தில்கூட போர் சார்ந்த தனிச்சொற்களாலேயே குறிப்பிடப்படுகிறது. கீதையை படிக்கும் ஒருவன் செயல் என்று அது குறிப்பிடுவது எந்தெந்த தளங்களில் விரிவுகொண்டு அதன் தரிசனத்தை விளக்குகிறது என்பதை தெளிவாகவே காணமுடியும். அது ஒரு வாசகன் தன் அனுபவங்களை முன்வைத்து சிந்தித்து அறியவேண்டிய ஒன்றாகும்
***
கீதை ஏன் செயலாற்றுதலை முக்கியப்படுத்தவேண்டும் ?
கீதை செயலாற்றுவதை முன்வைப்பதாக உள்ளமைக்கு ஒரு விரிவான தத்துவப் பின்புலம் உள்ளது. அது முத்தத்துவ அமைப்பில் இறுதியானது என்றேன். பிற தத்துவங்களான உபநிடதங்களும் சரி , பிரம்ம சூத்திரமும் சரி வேதாந்தத்தை முன்வைப்பவை. வேதாந்தம் உயர்தத்துவத்தின் சிறப்புண்மையை முன்வைப்பது. ஒட்டுமொத்தமாகப் பிரபஞ்ச இயக்கத்தின் சாரம் நோக்கி கண்திறக்கும் உயர்தத்துவம் எதுவானாலும் அது உடனடியாக நம்மில் நிகழ்த்தும் விளைவு அன்றாட உலகியல் வாழ்வின் சவால்களில் போட்டிகளில் அவநம்பிக்கையை உருவாக்குவதேயாகும். ஆகவே உண்மையை சிறப்புண்மை, பொதுஉண்மை என இரண்டாகப் பிரிப்பது அவசியமாகிறது. உண்மையில் ஆதி உபநிடதங்களில் இப்பிரிவினை தெளிவாக நிகழ்த்தப்படவில்லை. அதைச் செய்தவர்கள் பெளத்தர்கள். குறிப்பாக நாகார்ச்சுனர். விசேஷசத்யம், சாமான்யசத்யம் அல்லது வியவகாரிக சத்யம் பரமார்த்திக சத்யம் என இது குறிப்பிடப்படுகிறது
இதை இன்று விளக்குவது எளிது, காரணம் நவீன இயற்பியல் இதை சாதாரணமான தகவலாக இன்று மாற்றியுள்ளது. பொருள் என்பது உயர்பெளதிக தளத்தில் என்ன அர்த்தம் கொள்கிறதோ அவ்வர்த்தமல்ல அன்றாட வழக்கில். முதலில் உள்ளது சிறப்புண்மை. இரண்டாவது பொது உண்மை. நாகார்ச்சுனர் சொல்லும் சூன்யம் என்பது சிறப்புண்மை. அவரால் சுவடியில் எழுத்தாணி வைத்தே எழுதமுடியும் மூச்சுக்காற்றால் எழுத முடியாது என்பது பொது உண்மை. கீதை பெளத்தத்துக்கு பிறகு உருவானது. பெளத்தம் ஆதிவேதாந்தத்துக்கு அளித்த சவால்களை எதிர்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர முயன்றது அது.
நாம் தத்துவசிந்தனை இல்லாதவர்கள் என்றாலும்கூட சிறப்புண்மையின் கீற்றை நம் வாழ்வில் அவ்வப்போது அறியத்தான் செய்கிறோம். மரணங்களில், ஆழ்ந்த தனிமையில், ஏன் சிலசமயம் இசைகேட்கும்போதுகூட . கும்பகோணம் விபத்து நிகழ்ந்தபிறகு ஒரு வாசகர் எனக்கு ஒரு மிக நீண்ட கடிதம் அனுப்பியிருந்தார். வாழ்க்கை குறித்தும் கடவுள் குறித்தும் அவருக்கு இருந்த எல்லா நம்பிக்கைகளும் நொறுங்கி ஆழமான அவநம்பிக்கை ஒன்றை அவர் அறிந்த நேரம் அது. ஈழப்பிரச்சினை சார்ந்து அப்படி ‘ஒன்டுக்கும் ஒரு அர்த்தமும் இல்லை ‘ என்று எனக்கு மனமுடைந்து எழுதியவர்களின் பெரிய பட்டியல் உள்ளது. நான் அவர்களிடம் சொல்வது ஒன்றுதான். ‘ ‘நீங்கள் உணரும் அர்த்தமின்மை எளிய உலகியல் தளத்தில் நீங்கள் உருவாக்கியுள்ள விதிகள் மற்றும் காரண காரிய ஒழுங்குகள் ஆகியவை சிதறுவதன்மூலம் தெரியவரும் அர்த்தமின்மையே. அதற்குமேல் இன்னொரு பெருவிதியும் பேரொழுங்கும் ஏன் இருக்கக் கூடாது ? அதை நீங்கள் உணர்ந்தால் அதன் அடிப்படையில் இவ்வுலகியல் தளத்தை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியுமா ? ‘ ‘. பொதுவாக நான் நூல்களை சிபாரிசு செய்வதில்லை, செய்தால் கீதையையே குறிப்பிடுவேன்.
நான் நாவல் எழுதுகிறேன். அதை ஒரு சாதனையாக எண்ணுகிறேன். அதை பிறர் பாராட்டுகையில் மகிழ்கிறேன். அதில் மேலும் வெற்றிகளுக்கு திட்டமிட்டு முயல்கிறேன். பெரும் கனவுகளுடன் என் உதிரத்தை ஆவியாக்கி உழைக்கிறேன். ஆனால் ஒரு கணம் விலகி இப்பிரபஞ்சப் பெருவெளியை , அதன் ஒரு கொப்புளத்துளியான பூமியை, அதில் குமுறும் உயிர்வாழ்க்கையை, அதன் பிரக்ஞை என்னும் பெரும் பிரவாகத்தை காண்பேன் என்றால் என் செயல் அபத்தமாக, மாயையாகவே தெரியும். அதன் பிறகு நான் எதுவுமே எழுத இயலாது. இந்த உத்வேகம் இல்லாமலாகும். இதுவே உயர்தத்துவ நோக்கு எப்போதும் நிகழ்த்தும் மனநிலையாகும்.
வேதாந்தத்தில் இருந்த முக்கியமான விடுதல் அது உயர்தத்துவ நோக்கை மட்டுமே முன்வைக்கிறது என்பதே. ‘பிரக்ஞையே பிரம்மம் ‘, ‘நானே பிரம்மம் ‘, ‘இவையெல்லாமே இறைவடிவங்களே ‘ போன்ற அதன் அடிப்படைத்தரிசனங்கள் ஓர் உச்சநிலைப் பார்வையைச் சார்ந்தவை. அன்றாட உலகியல் வாழ்க்கையில் அவற்றின் இடம் மிகக் குறைவானதேயாகும். மேலே சொன்னபடி பெரும்பாலான உயர்தத்துவ நோக்க்குகளைப்போல அதுவும் செயலின்மைக்குக் கொண்டுசெல்லக் கூடியது. இக்காரணத்தால்தான் வேதாந்தம் தத்துவஞானிகளுக்கு இடையே ஒடுங்கி நிற்கநேர்ந்தது. சமீபகால ஞானியரில் ஜெ கிருஷ்ணமூர்த்தி அத்தகைய ஒரு செயலின்மையை உருவாக்குவார் என்பது என் அவதானிப்பு.
இந்த குறைபாட்டை கீதை களைகிறது. பெளத்தத்திலிருந்து இருவகை உண்மைகள் குறித்த நோக்கை அது பெற்றுக் கொண்டு அவ்விரு உண்மைகளும் ஒன்றை ஒன்று நிரப்பும் முறையை முக்கியப்படுத்துகிறது. ஒரு நுனியில் பிற அனைத்தையுமே அபத்தமாகக் காணும் அளவுக்கு நுட்பமான உயர்தத்துவ தரிசனத்தைக் கொண்டிருக்கிறது அது . மறு நுனியில் அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளை திறம்படச்செய்வதெப்படி என்ற தளத்தில் நிற்கிறது. இரு எல்லைகளையும் அது இணைக்கிறது. அதன் தத்துவார்த்தமான பங்களிப்பே இவ்விணைப்பு தான். உயர்தள தத்துவ தரிசனம் எப்படி உலகியல்வாழ்க்கையை அர்த்தப்படுத்த முடியும் என்ற கோணம் அதில் அழுத்தம் பெறுகிறது. அதேபோல ஒவ்வொரு உலகியல் தருணத்திலும் உயர்தள தத்துவதரிசனம் உள்ளுறைந்திருப்பதை அது காட்டுகிறது. ஆகவேதான் பிரம்மசூத்திரமோ, எந்த ஒரு உபநிஷத்தோ பெறாத முக்கியத்துவத்தை கீதை பெற்றது. கீதை ஒரு வைணவ நூலாக இருந்திருக்கவேண்டும், ஆனால் வேதாந்தநூலாக அறியப்பட்டு பொதுநூலாக முதன்மை பெற்றது.
கீதையின் நாடக அமைப்பும் குறியீடும் இவ்வகையில்தான் முக்கியமானவை. அதைத்தான் முன்பே சொன்னேன். அர்ச்சுனன் உறவினரைக் கொல்வது தவறு என்று உணர்வது அறியாமை அல்ல. உலகியல் நோக்கில் அது ஒரு விவேகம். அவன் சொல்வது ஒரு பொது உண்மை. அதற்கு எதிராக சிறப்புண்மையை முன்வைக்கிறது கீதையின் மையம். இருவகை உண்மைகளின் உரையாடல் அது. உலகியல் உண்மையை முன்வைப்பவனை ஒரு பெருவீரனாக காட்டுவது கவித்துவமானது மட்டுமல்ல கீதை உருவான காலகட்டத்தின் விழுமியத்துக்கு ஏற்றதுமாகும். அதில் ‘ ‘செயலாற்றுக ! செயலாற்றுக ! ‘ ‘ என்று ஊக்கும் பார்த்தசாரதி ஒரு செயலையும் ஆற்றுவதில்லை, செயலாற்றுபவனின் ரதத்தை ஓட்டுவதைத்தவிர. இதுதான் கீதையின் குறியீட்டமைப்பு. சிறப்புண்மையை அறியும்போது தான் அத்தளத்தில் மட்டும்தான் பொது உண்மை உண்மையல்லாததாக ஆகிறது.
செயலூக்கம் கொண்ட உயர்தத்துவ நோக்கை முன்வைத்த காரணத்தினால்தான் பதினெட்டாம் நூறாண்டு இந்துமறுமலர்ச்சியின்போது கீதை பிற நூல்களைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் பெற்றது என்பதுதான் உண்மை. செயலூக்கம் கொண்ட நவீன வேதாந்தத்தின் நூலாக அது மாறியது. நவீன வேதாந்திகளான விவேகானந்தர் , நாராயணகுரு, தாகூர் , நடராஜ குரு போன்றவர்கள் அந்நூலை முக்கியமானதாக எண்ணியமைக்குக் காரணம் அதுவே. திலகர், காந்தி, வினோபா போன்ற அரசியல் செயல்வீரர்களுக்கு அது வழிகாட்டியாகியது. வேதாந்தத்தின் மாயாவாதத்தை கண்டித்து நிராகரிக்கும் பாரதி கீதைக்கு உரை எழுதினான் என்பது புரிந்துகொள்ளக் கூடியதேயாகும்.
எனக்கு கீதை எப்படி வழிகாட்டியது ?
ஒரு பேரிழப்பின் முன் கையாலாகதவனாக நிற்கையில் உயர்தத்துவம் அளிக்கும் பிரபஞ்ச தரிசனம் எத்தகைய ஆறுதல் அளிக்கும் என என் வாழ்க்கையை முன்வைத்து நான் சொல்ல முடியும். என் பெற்றோரின் மரணம் அளித்த மாபெரும் வெறுமையில் இருந்து வேதாந்தம் வழியாகவே மீண்டேன். வேறு எந்நூலும் அந்த ஊக்கத்தை அளிக்கவில்லை. அதே தரிசனம் அன்றாடவாழ்வில் ஊக்கமில்லாமல் ஒதுங்கவும் செய்யும் என்பதையும் நான்காண்டுகால சொந்த அனுபவத்திலிருந்து நான் சொல்ல முடியும்.
அவ்வுயர்தத்துவ தளத்திலிருந்து செயலை நோக்கும்போது உருவாகும் சமநிலை செயலை மேலும் உக்கிரமாகச் செய்யத்தூண்டும் என்பதை கீதை எனக்குச் சொன்னது. சுய உடைவின் எல்லையிலிருந்து மீட்டு என்னை ஆக்கபூர்வமான தளத்துக்குக் கொண்டு வந்தது கீதையே . செயலில் குன்றாத ஆற்றலை எனக்கு அதுவே அளித்தது. நான் கீதையைப்பற்றிச் சொல்வதென்றால் அது மருந்தை உண்டு பயன் கண்டவன் அம்மருந்து குறித்து சொல்வது போன்றதே. குன்றாத செயலூக்கம் பற்றி பேசும் தகுதி கொண்டவர்களில் நானும் ஒருவன் என்பதை அதிகம்பேர் மறுக்கமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.
கீதை நான் செல்லும் பயணத்தில் ஒரு முக்கியமான வழிகாட்டிப்பலகை. எல்லா நூல்களும் வழிகாட்டிப்பலகைகளே. அவற்றையெல்லாம் பெயர்த்தெடுத்துக் கொண்டு நான் நடக்கமாட்டேன். நான் சென்றுசேரும் இடத்தில் வழிகாட்டிகளும் பாதைகளும் இருக்காது. காரணம் அங்கு திசைகளே இருக்காது.
—-
jeyamoohannn@rediffmail.com
- கடிதம் அக்டோபர் 14,2004
- கீதை,வர்ணம் : விளக்கங்கள், வியாக்கியானங்கள், விமர்சனங்கள் – ஒரு குறிப்பு
- உரத்த சிந்தனைகள்- 3
- ஓவியப் பக்கம் : இரண்டு – ஜான் லென்னன் – கலையும் கலகமும்
- கிஷன் பட்நாயக் – 1930 – 2004
- காற்றினிலே வந்த கீதங்கள்
- சுகந்தி சுப்ரமணியனின் ‘மீண்டெழுதலின் ரகசியம் ‘ – சின்னச்சின்ன காட்சிகள்
- அ.முத்துலிங்கம் பரம்பரை -4
- மக்கள் தெய்வங்களின் கதை 5 : சோமாண்டி கதை
- ஆட்டோகிராஃப்- 22 – ‘காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் ‘
- கடிதம் 14,2004
- கடிதம் அக்டோபர் 14,2004
- கீதையை எப்படிப் படிப்பது ? ஏன் ? -பகுதி 2 (நிறைவு)
- அக்டோபர் 14,2004
- ஓவியர் நடிகர் கே கே ராஜா கலந்து கொள்ளும் அரங்கப் பட்டறை – அக்டோபர் 23,2004
- விளையாட ஒரு பொம்மை
- பெரியபுராணம் — 13
- குழந்தைத் தனமாய்..(ஹைக்கூ)
- கவிதைகள்
- என்னிசைக் கீதம் – கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- முன்னைப் பழம் பொருள் வெஃகும் சிறுமை
- பூரணம்
- மெய்மையின் மயக்கம்-21
- பெரிய பாடம்
- பருவக்கோளாறு
- கடல் தாண்டிய உறவுகள்
- நீலக்கடல் – ( தொடர்) – அத்தியாயம் -41
- வாரபலன் அக்டோபர் 14,2004- அருண் கொலட்கர், , மாறாத கர்நாடகம்,கேரளத்தில் மறைவு மரியாதை , தமிழ்நாட்டில் ஜிக்கி மறைவு
- ஆதித்தனார் 100: அஞ்சலி
- டைரி
- விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் ஹாங்காங் தேர்தலும்
- ஹாங்காங்கின் ஜனநாயகக் கிரணங்கள்
- முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு- எனது கேள்விகள்
- யஷ்வந்த்ராவ் ( கவிதை : அருண் கொலட்கர் – மொழிபெயர்ப்ப்பில்)
- தாவோ க்ஷேத்ரத்தில் போகேண்டதெங்ஙனெ ? (சச்சிதானந்தனின் மலையாளக் கவிதை. மொழியாக்கம் )
- ஊனம் உள்ளத்தினுள்ளா ?
- கவிக்கட்டு 31-சத்தமில்லாத சமுதாயச் சரிவு
- தவிக்கிறேன்
- ‘விண் ‘ தொலைக்காட்சி கவிதை – (1)
- என் நிழல்
- குகன் ஓர் வேடனா ? ?..
- கவிதை
- சரித்திரப் பதிவுகள் – 3 : விக்ராந்தும் காஜியும்
- இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (4)
- மறுபிறவி மர்மம்
- கல்விக்கோள் (எதுசாட்) : எதிர்நோக்கும் சவால்கள்