கடிதம் ஆகஸ்ட் 5,2004

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

நாக.இளங்கோவன்


அன்பின் ஆசிரியருக்கு,

திரு.ஞானதேவனின் கேள்விகள் ஞாயமானவை.

50000 உரூவாய் சம்பளம் கொடுக்கக் கூடிய நிலையில்

ஒரு நிறுவனம் இருக்குமென்றால் அங்கு இத்தகு கொடுமை

நடக்க வாய்ப்புக் குறைவு என்று சொல்வது பதிலாக அமையக்கூடும்

என்றாலும், அப்பதிலைச் சொல்லி நானும் என்னை ஏய்த்துக் கொள்ள

விரும்பவில்லை.

அதோடு சில நாள்கள் ஒவ்வொரு மனிதனையும் உலுக்கிப் போட்ட

அந்தக் கொடுநிகழ்வினை வாதப் பொருளாக்க விரும்பவில்லை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வின் வெளிப்பாடு.

என் வெளிப்பாடு இப்படி என்ற மட்டில் நின்று கொள்கிறேன்.

அந்த ஆசிரியர்களுக்குள்,

தங்கள் மனசாட்சிக்கும் தன்-நலத்திற்கும் இடையே

ஏற்பட்டிருக்கக் கூடிய போராட்டம் போல குமுகாயத்தின்

ஒவ்வொருவரின் மனசாட்சிக்கும் தன்-நலத்திற்கும் ஒரு போராட்டம்

ஏற்பட்டிருப்பின் அது பயனைத் தரக்கூடும்.

அண்மைய நக்கீரன் இதழில் ஒரு சேதி போட்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு பள்ளியும் தீஅணைப்புத் துறையிடம் இருந்து

அவர்கள் சோதிப்பிற்குப் பின்னர் தடையில்லாச் சான்றிதழ்

பெற வேண்டும் என்று சட்டம் போட்டிருக்கிறது அரசு.

அந்தச் சான்று பெற, தற்போதைய நிலவரப்படி, 250 மாணவர் படிக்கும் பள்ளி

ஒன்று தரவேண்டிய ‘தரவேண்டியது ‘ உரூவாய் 3000. புதுக்கோட்டை

மாவட்டம் என்று படித்த நினைவு. அங்கு மட்டும் 1500 பள்ளிகள்

உள்ளனவாம்.

இச்சேதி உண்மையெனில், மீண்டும் எண்ணிப் பார்க்கிறேன்;

இந்நிகழ்வு எல்லோரின் மனசாட்சியை சிலநாள்கள் உலுக்கியிருக்கலாம்.

ஆனால், மனசாட்சி மற்றும் தன்-நலத்திற்கான வாதத்தில்

தன்-நலமே வென்றிருக்கிறது. அதுவும் எரிந்த சூடு அணையக்கூட இல்லை.

தன் நலத்தோடு அந்த ஆசிரியர்களும் ஓடியிருந்தால்,

அந்த ஆசிரியர்களை ‘மனிதாபிமானம் இல்லாதது, தன்நலம் மிகுந்தது ‘

என்ற இரண்டு குற்றச்சாட்டுகளுக்காக சட்டம் தண்டித்து விட முடியுமா ?

முடியாது.

ஆனால், சான்றிதழ்களுக்கு விலை வைப்போர்களை சட்டமும் காவலும்

நீதியும் தண்டிக்க முடியும் – இப்பொழுது செயல் பட்டால் கூட!

ஆங்கிலத்தில் ‘Cheap Wickets ‘ என்பார்கள்; அந்த ஆசிரியர்கள்

அப்படித்தான் தெரிகின்றனர் எனக்கு.

ஞானதேவன் அவர்களின் கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

அன்புடன்

நாக.இளங்கோவன்

—-

nelan@rediffmail.com

Series Navigation

நாக.இளங்கோவன்

நாக.இளங்கோவன்