ஒரு குழந்தை மழை.

This entry is part [part not set] of 39 in the series 20110123_Issue

கோநா



வெளிச்சம் நிரம்பியிருந்தயிரவு
நிலவு கண்ணில் படவில்லை
எழுந்து தேடவுமில்லை.
அருகருகே
அம்மா, குழந்தை.
நீண்ட ஒற்றைக்கொம்புடன்
மூன்று கால் மான்,
தும்பிக்கை உயர்த்தியபடி
வலது காலும்
வாலுமற்ற யானை,
அங்கங்கே விரிசலுற்ற
குதிரைகளற்ற தேர்,
களைந்தெறிந்த
குழந்தை உடைகளாய்,
உடைத்த பொம்மைகளாய்
இன்னுஞ் சில
உருவமற்ற குவியல்கள்.
“விர்ர்”ரென்று
விமானமொன்று
அருகில் கடக்க
விருக்கென்று துள்ளிய குழந்தை
தவழ்ந்து செல்கிறது
தாயிடம்.
குளிர்ந்து கனத்த
காற்றொன்றில் கலைந்து
பாம்பாய், புலியாய்,
கரடியாய், யானையாய்,
உருவங்களற்றதுமாய்,
உடைந்து
உருமாறியது அம்மா.
அரவணைத்துக்காக்க அருகே
அம்மா இல்லாதலால்
அனைத்துமே பயமுறுத்த,
முகங்கருத்துக் குழந்தை
பயந்து அழ,
ஆரம்பித்திருக்கிறது
ஒரு குழந்தை மழை.

Series Navigation

கோநா

கோநா