எம். எஸ். அவர்களின் நூல்கள் வெளியீடு, பாராட்டு விழா நிகழ்ச்சிக்காக நஞ்சுண்டன் வாழ்த்து

This entry is part [part not set] of 33 in the series 20030317_Issue

நஞ்சுண்டன்


நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம்.

என் மரியாதைக்கும் அன்புக்கும் உரிய திரு எம்.எஸ். அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெறுவது உள்ளபடிக்கே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அவருடைய புத்தகங்களின் வெளியீட்டு முகாந்திரம் இப்பாராட்டு விழா நடைபெறுவது ஒருவகையான ஈடேற்றமாகவும் அமைகிறது. நான் எம்.எஸ். அவர்களைச் சந்திப்பதற்கு முன்பே அவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தேன். அவர் எழுதியவற்றையும் படித்திருந்தேன். அவை பெரும்பாலும் மொழிபெயர்ப்புகள். நான் கன்னடத்திலிருந்து மொழிபெயர்த்த யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் பிறப்பு நாவலின் வெளஞ்யீடு தொடர்பாக நாகர்கோவில் காலச்சுவடு அலுவலகத்திற்கு வந்திருந்தபோது, கண்ணன் எனக்கு எம்.எஸ். அவர்களை அறிமுகம் செய்துவைத்தார். முதல் சந்திப்பிலிருந்தே என்னுடன் மிகுந்த ப்ரியத்தையும் சினேகிதத்தையும் காட்டி வருகிறார் எம்.எஸ்.

அந்த முதல் சந்திப்பிலிருந்தே மொழி நடை, இலக்கண விதிகள், வார்த்தைகளைப் பிரிப்பது தொடர்பாக நாங்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டோம். ஏதோ பல காலமாக அதைப் பற்றியெல்லாம் விவாதித்துக்கொண்டிருந்து, சிறிது இடைவெளஞ்க்குப் பிறகு மீண்டும் அதைத் தொடருவதுபோலவும் எங்கள் பேச்சு அமைந்திருந்தது. வாக்கியங்களின் அமைப்பு தொடர்பாகச் சில பயனுள்ள குறிப்புகளை அவரிடமிருந்து தெரிந்துகொண்டேன். தன்னை ஒருபோதும் முன்னிறுத்திக் கொள்ளாத எம்எஸ். அவராக முன்வந்து எந்த விதியையோ இலக்கணத்தையோ ஒருவருக்கும் சொல்வதில்லை. ஆனால் கலந்தாலோசனை என்று வரும்போது தெளஞ்வாகவும் மற்றவர்களின் மனம் கோணாதபடியும் தம் கருத்துகளை எடுத்துவைப்பார்.

என் பிறப்பு நூலின் முதல் படியைச் செப்பனிட எம்.எஸ்., தி.அ.ஸ்ரீனிவாசன், மற்றும் நான் திருநெல்வேலியில் ஒரு நண்பர் வீட்டில் சந்தித்து விவாதித்தோம். அவர்கள் இருவருமே வார்த்தைக்கு வார்த்தை படித்துச் சந்தேகங்கள், தவறுகளுக்கு மாற்று யோசனைகள் என்று மிகுந்த சிரத்தையோடு ஹோம்வொர்க் செய்து வந்திருந்தார்கள். சுமார் நான்கைந்து மணிநேரம் நடந்த எங்கள் விவாதத்தால் நான் பெரிதும் பயனடைந்தேன். புத்தகம் வெளஞ்யான பிறகு ஒருமுறை என் நண்பர் ஒருவரிடம் அந்தக் கலந்தாலோசனையால் என்னிடமிருந்தும் நிறையப் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டதாக எம்.எஸ். கூறினார். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாயிருந்தது. அவர் அப்படிச் சொன்னது என்மீது கொண்ட ப்ரியத்தின் காரணமாயிருக்கும்.

ஒரு பிரதியை மிகுந்த சிரத்தையுடன் படித்துப் பிழைகளைத் திருத்தவும் பிரதியை மேம்படுத்தத் தனிநபராக உதவுவதில் எம்.எஸ்.க்கு இணையாக இன்னொரு பெயரை யோசிக்க முற்பட்டால் யோசனை முடிவின்றி நீள்கிறது. எம்.எஸ். அவர்களிடம் நான் கண்டு வியந்தவற்றில் மூன்று முக்கியமான குணங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

முதலில் சலிப்பில்ஞமல் படிக்கும் அவருடைய குணம். காலச்சுவடு அலுவலகத்தில் யார் ஒரு பிரதியை – அது கதை அல்லது கட்டுரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் – அவரிடம் தந்தாலும் சற்றும் சலிக்காமல் அப்புறம் பார்க்கலாமே என்று தள்ளிப் போடாமல் உடனடியாகப் படித்து அதில் திருத்தங்கள் சொல்வதைப் பார்த்திருக்கிறேன்.

இரண்டாவதாக எந்நேரமும் தயாராக இருப்பது. நானும் இன்னொரு நண்பரும் இணைந்து சுந்தர ராமசாமி அவர்களின் ஒரு புரியமரத்தின் கதையைக் கன்னடத்திற்கு மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் முதல் அத்தியாயத்தைக் கன்னடத்திற்கு மொழிபெயர்த்தவுடன் அதைச் சுந்தர ராமசாமி அவர்களுக்குப் படித்துக்காட்டி அவர் கருத்தறிய நாகர்கோவிலுக்கு வந்திருந்தோம். அது எங்கள் இருவருக்கும் வித்தியாசமான, மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தந்த பயணம். ஒரு புளியமரத்தின் கதையின் முதல் அத்தியாயத்தின் கன்னட மொழிபெயர்ப்பைக் கேட்ட திரு சுந்தர ராமசாமி மகிழ்ந்து எங்களை மிகவும் ஊக்கப்படுத்தினார். அவரோடு உடனிருந்து அதைக் கேட்ட எம்.எஸ். அவர்கள் செய்த காரியத்தை உங்களோடு பகிர்ந்துகொள்வது அவசியம் எனக் கருதுகிறேன். ஒரு புளியமரத்தின் கதையில் நாகர்கோவில் வட்டார வழக்குச் சொற்கள் ஏராளமாக இருப்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அவை எனக்கோ என்னோடு இணைந்து மொழிபெயர்க்கும் நண்பர் கனகராஜுவுக்கோ பரிச்சயமற்றவை. எம்.எஸ். உடனே உட்கார்ந்து முதல் பத்து அத்தியாயங்களில் வரும் வட்டாரச் சொற்கனை நிரல்படுத்தி அவற்றின் பொருளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிக் கொடுத்துவிட்டார். சுமார் ஒரு மணி நேரத்திற்குள் அதை அவர் எங்களுக்குத் தயாரித்துத் தந்துவிட்டார். எம்.எஸ். அந்த நாவல் முழுவதையும் மிகச் சுலபமாகத் தன் நினைவுக்குக் கொண்டுவந்து அதிலுள்ள வட்டாரச் சொற்களை நிரல்படுத்தியது அவர் எப்போதும் தயார் நிலையில் இருந்ததை எனக்குக் காட்டியது. இது போன்றவர்களை நாம் அபூர்வமாகத்தான் சந்திக்கிறோம். எம்.எஸ். அவர்கை

அறிய நேர்ந்ததில எனக்கு மகிழ்ச்சி.

மூன்றாவதாக எதையும் அப்போதைக்கு மட்டும் விவாதித்து அதோடு விட்டுவிடாத குணம். என் சமீபத்திய நூலான மரணம் மற்றும்… நூலின் முதல் படிவத்தை எம்.எஸ். அவர்களிடம் படிக்கக் கொடுத்திருந்தேன். அதைச் செம்மைப்படுத்த அவர் பல யோசனைகளைத் தெரிவித்திருந்தார். ஒரு குறிப்பிட்ட வாக்கிய அமைப்பில் மேற்கோள் குறியிடுவது தொடர்பாக நான் ஒரு முறையைப் பின்பற்றியிருந்தேன். எம்.எஸ். அதைத் திருத்தியிருந்தார். அவரது திருத்தங்களைப் பார்த்த நான், மேற்கோள் குறியிடுவது தொடர்பாக என்னளவிலான சில விளக்கங்களை அவருக்கு எழுதிவிட்டு அதை மறந்தும் போனேன். ஒரு வாரம் கழித்து, தன் சார்பை விளக்கி ஒரு விரிவான கடிதம் எழுதியிருந்தார் எம்.எஸ். பல நூல்களிலிருந்து எடுத்துக்காட்டுகளைத் தந்து விளக்கியிருந்தார். அவர் மொழியைக் கையாளும் முறை, மொழி நடை தொடர்பாக எந்தச் சின்ன விஷயமானாலும் வெறுமனே கணநேர ஆர்வத்தைக் காட்டாமல் தொடர்ந்து அவை பற்றிச் சிந்தித்தும் மற்றவர்களுடன் விவாதித்தும் வருகிறவர் எம்.எஸ். என்று அதிலிருந்து அறிந்தேன்.

டி.எஸ்.இலியட் இலக்கியம் படைத்ததற்கு இணையான பங்களிப்பாக ஒரு பதிப்பகத்தின் எடிட்டராகச் செயல்பட்டு ஏராளமான இலக்கியப் பிரதிகள் செம்மையாக வெளஞ்யாகக் காரணராக இருந்திருக்கிறார். தமிழ்ச் சூழலிலும் அதுபோன்ற ஒரு காரியத்தைத்தான் எம்.எஸ். தனி நபராகச் செய்துவருவதாக நான் கணிக்கிறேன்.

மேற்கைப் போலத் தமிழ்ச் சூழலில் எடிட்டர்கள் இல்லை. அவர்களுக்கு அங்கீகாரமும் இல்லை. நான் சொல்வது பொதுவான போக்கு. ஆனால் இப்போது அங்கங்கே சில பதிப்பகங்கள் எடிட்டர்களின் அவசியத்தை அறியத் தொடங்கியுள்ளன. எதிர்காலத்தில் பதிப்பளவில் பிழையற்ற நூல்கள் வெளஞ்யாகலாம் என்ற நம்பிக்கையை இது எனக்குத் தோற்றுவிக்கிறது. அக்காலம் எம்.எஸ். போன்ற எடிட்டர்கள் பலபேர் தேவைப்படுவார்கள். அவர்களுக்கு முன்னோடிகளில் எம்.எஸ். ஒருவர் என்று தமிழ்ப் பதிப்பக வரலாறு கூறும். எனவே, பிரதிகளை மேம்படுத்தியதில் தாம் பெற்ற அனுபவங்களை எம்.எஸ். ஒரு நூலாக எழுதவேண்டும். அது பலருக்கும் பயன்படும். நான்கூட அவரைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் ீசார், நாமிருவரும் சேர்ந்து மொழிச்நடை, இலக்கண நூல் ஒன்று எழுத வேண்டும்ு என்று கூறுவேன்.

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக முக்கியமான எழுத்தாளர்கள் பலருடன் நெருங்கிப் பழகி ஆழமான இலக்கியப் பரிச்சயம் பெற்றவரான எம்.எஸ். தம் நினைவுகளை எழுதினால் பல பயனுள்ள, சுவாரசியமான செய்திகள் நமக்குத் தெரியவரும்.

எம்.எஸ். தமிழாக்கம் செய்துள்ள இரண்டு புத்தகங்கள் வெளிவருவதில் மகிழ்க்சியடைகிறேன். அவருக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். எம்.எஸ். செய்துள்ள ஆங்கிலச் சிறுகதைகளின் தமிழாக்கத்தை மூலப் பிரதிகளோடு ஒப்பிட்டு வாசிக்கும்போது மொழிபெயர்ப்பாளன் என்ற முறையில் நான் நிறையக் கற்றுக்கொள்ள முடியும். எம்.எஸ்.க்கு நடக்கும் பாராட்டு விழாவில் நேரில் கலந்துகொள்ள முடியாதது எனக்கு வருத்தத்தைத் தருகிறது. இருந்தாலும் எம்.எஸ். தொடர்பாக என்னுடைய சில எண்ணங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள இந்த எழுத்து வாசிக்கப்படுவதன் மூலம் வாய்ப்பேற்படுத்தித் தந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களான அருண்மொழி நங்கைக்கும் ஜெயமோகனுக்கும் என் நன்றி.

நஞ்சுண்டன்.

jeyamohanb@rediffmail.com

Series Navigation

நஞ்சுண்டன்

நஞ்சுண்டன்